10-வது மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று சாதனை படைத்துவந்த விருதுநகர் கல்வி மாவட்டம், இம்முறை 6-வது இடத்துக்கும் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இம்மாவட்ட கல்வித்துறையின் செயல்பாடுகள்தான் என்று புகார் வாசிக்கும் அத்துறையினர், "சாம்பிளுக்கு ஒரு விஷயம்...'’என்று புதிர் போட்டனர்.

dd""தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகள் சிலர், அரசுப் பள்ளி துப்புரவுப் பணியாளர் ஒருவரின் சேவையில் கட்டுண்டு கிடக்கிறார்கள். விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும் அந்தத் துப்புரவுப் பணியாளரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது''’என்றவர்கள், "வில்லங்கமான அந்தத் துப்புரவுப் பணியாளரின் பெயர் லிங்கம்...'’என்று குறிப்பிட்டனர்.

"திருமங்கலம் ஃபார்முலா'’என, இன்றுவரையிலும் பேசப்படும் அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 2009-ல் திருமங்கலம் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆனார் லதாஅதியமான். அவரிடம், ஏதோ ஒருவகையில் உதவியாளராகப் பணியாற்றினார் லிங்கம். அதன்பிறகு, தான் மேற்கொண்ட முயற்சியால், விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அரசுப் பள்ளியில் சிறப்புக்கால முறை ஊதியமாக ரூ.3,000 பெறும் துப்புரவுப் பணியாளர் ஆனார். துப்புரவாளராக இருந்தாலும், அங்கு பணிபுரிந்தபோது, அவருடைய ‘திறமை’ வெளிப்பட்டது. அதனால், 2013-ல் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த வி.ஜெயகுமாருடன் நெருக்கமானார். அதன்பலனாக, துப்புரவாளர் பணியில் இருந்தும், விதிமீறலாக விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு ‘மாற்றுப்பணி’ என்ற பெயரில், சகல மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரையிலும் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் லிங்கத்தின் ராஜ்ஜியம்தான்.

அப்போது பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநராக இருந்த குப்புசாமியுடன் பழக்கம்’ ஏற்படுத்திக்கொண்டார் லிங்கம். அந்த நட்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள் பலருடனும் அவரால் தொடர்புகொள்ள முடிந்தது. வேறென்ன? ஆசிரியர்கள் பணியிட மாற்றம், பள்ளிகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் போன்ற சமாச்சாரங்களில், சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் வாங்கி அதிகாரிகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் திருப்பணிதான். சென்னையிலிருந்து எக்ஸாம் கோ-ஆர்டினேட்டர்களாக விருதுநகர் மாவட்டத்துக்கு வரும்போது ‘கர்-புர்’ என்றிருப்பார்கள் இணை இயக்குநர்கள். சென்னை திரும்புவதற்குள் அவர்களைக் ‘கூல் பண்ணிவிடுவார் லிங்கம். தற்போதைய விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதனும் லிங்கத்தின் அடாவடி நடவடிக்கைகளுக்குத் தலையாட்டுபவர்தான்.

Advertisment

vv

பரமசிவன் கழுத்து பாம்பாக லிங்கம் இருப்பதால், இரவு நேரங்களில் அவரோடு ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் மாவட்ட கல்வி அலுவலர்களும் உண்டு. அந்தத் தெனாவெட்டில், கல்வி அலுவலர்களை "போய்யா... வாய்யா...' என்று பலர் முன்னிலையில் மரியாதைக் குறைவாக லிங்கம் நடத்துவதுண்டு. “"நான் மந்திரியுடன் பேசுவேன் தெரியுமா? நான் கூப்பிட்டால் அலறியடித்துக்கொண்டு டைரக்டரே என் லைனில் வருவார்'’என்று அவ்வப்போது உதார் விடுவதும் உண்டு. அதிகாரிகள் துப்புரவாளர் லிங்கத்துடன் இத்தனை நெருக்கமாக இருப்பது வெறும் பணத்துக்காக மட்டுமல்ல. அதற்கும் மேலான சேவை கிடைத்து வருவதால்தான். விருதுநகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இத்தனை பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால், பொதுத்தேர்வு தேர்ச்சியில் இந்த மாவட்டம் பின்னுக்குத்தானே போகும்?

ssaநாம் துப்புரவாளர் லிங்கத்திடம் பேசினோம். ""அப்படியெல்லாம் எதுவும் இல்ல. எனக்கு கம்ப்யூட்டர்ல இருந்து எல்லா வேலையும் தெரியும். என்னுடைய வளர்ச்சி பிடிக்காதவங்க திரிச்சி விடறாங்க''’என்றார். அடுத்த சில நொடிகளில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஒருவர் நம் லைனில் வந்தார். ""லிங்கம் ரொம்ப நல்லவன். அதிகாரிகள்கூட பழகுறான்ல. குசும்பு இருக்கத்தான் செய்யும். இனி அவன் திருந்தி நடப்பான்''’என்று லிங்கத்துக்காகப் பரிந்து பேசினார்.

Advertisment

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதனிடம், ‘பெரிய லெவல் புரோக்கர்’ என்று சொல்லப்படும் லிங்கம் குறித்துப் பேசினோம். ""நான் விருதுநகர் மாவட்டத்துக்கு வர்றதுக்கு முன்னாலேயே லிங்கம் இந்த அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறாரு. ஆமா... ஜெயகுமார் சி.இ.ஓ.வா இருக்கும்போதே வந்துட்டாரு. ஆன்-லைன்ல நெறய வேலை இருக்கிறதுனால அவரைப் பயன்படுத்திக்கிறோம். டெபுடேசன்ல லிங்கம் இருக்காரு. அப்பப்ப புள்ளிவிவரங்களை ஆன்-லைன்ல ஏத்துறோம். இன்னும் கொஞ்சம் வேகன்ட் இருக்கு. அதெல்லாம் வந்துட்டா லிங்கத்தை ஆவியூர் பள்ளிக்கே திருப்பி அனுப்பிருவோம். அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இனிமேல்தான் விசாரிக்கணும்''’என்றார் சுரத்தில்லாமல்.

தமிழகத்தில் மாவட்டம்தோறும் கல்வித்துறையில் புரோக்கர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதற்குச் சான்றாக இருக்கிறது பொதுத்தேர்வு தேர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விருதுநகர் கல்வி மாவட்டம்!

-ராம்கி