விடாது கருப்பு என்பதுபோல ரஃபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
இந்திய ராணுவத்துக்காக ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தைப் புதுப்பித்ததில் ஊழல் நடந்துள்ளதாகவும், இடைத்தரகருக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பான குற்றச்சாட்டை, பிரான்ஸைச் சேர்ந்த மீடியா பார்ட் என்ற புலனாய்வுப் பத்திரிகை கடந்த ஏப்ரல் மாதத்தில் கிளப்பியது. ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கும் டசால்ட் நிறுவனம், இந்தியாவிலுள்ள இடைத்தரகருக்கு 1 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் ரூ 8.60 கோடி லஞ்சமாக அளித்ததாகக் குற்றச்சாட்டு வைத்தது. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகரின் பெயரை வெளிப்படுத்தவில்லை.
அதே மீடியா பார்ட் பத்திரிகை தற்போது, ரஃபேல் ஒப்பந்தத்துக்காக சுஷென் குப்தா என்ற இடைத்தரகருக்கு 7.5 மில்லியன் யூரோ... இந்திய மதிப்பில் சுமார் 64 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியுள்ளதாகப் புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப்போட்டுள்ளது. ரஃபேல் விமானங்கள் வாங்குவதில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுஷென் குப்தா, லஞ்சப்பணத்தை மறைமுகமாகப் பெறுவதற்காகவே மொரீஷியஸ் நாட்டில், இன்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் போலியான நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். அந்த நிறுவனத் தின் மூலமாக தவறான இன்வாய்ஸ் ஆவணங்கள், போலியான ஒப்பந்தங்கள் மூலமாக இந்த தொகை பரிமாற்றம் நடந்துள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பான ஆதாரங்களை அந்நாட்டு அரசாங்கம், சி.பி.ஐ.க்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சி.பி.ஐ. மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இரண்டுமே இதுகுறித்து மவுனம் சாதித்துவருகின்றன.
இந்நிலையில், ஒன்றிய அரசின் இன்னொரு ஊழல் குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில், இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கனிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம், வி.ஐ.பி.க்கள் பயணம் செய் வதற்கான 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர்கள் 450 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம்சாட்டின. அதோடு விடாமல், பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததும் அந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தையே ரத்து செய்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான ஃபின்மெக்கனிக்கா நிறுவனத்திடமிருந்து தளவாடங் களைக் கொள்முதல் செய்வதற்கான தடைகளை மோடி அரசு நீக்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி, "எங்கள் ஆட்சியில் ஊழல் ஊழல்னு குரல் கொடுத்தீங்களே, இப்போ உங்களுக்கும் அந்த நிறுவனத்துக்குமான ரகசிய ஒப்பந்தம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த தேர்தலின்போது, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் ஆட்சியில் ஆயுத ஒப்பந்தம் போடப்படும்போதெல்லாம் குவாத்ரோச்சி மாதிரி ஒரு வேண்டப்பட்ட மாமா இருப்பார். பா.ஜ.க. ஆட்சியில் அத்தகைய மாமாக்கள் யாருக்கும் ஒப்பந்தத்தைக் கொடுப்பதில்லை'' என்று நக்கலாகக் கூறியதை இப்போது நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. ஆட்சிகள் மாறினாலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் லஞ்சம் கொடுக்கும் காட்சிகள் மாறாமலிருப்பது, ராணுவத்துக்கான ஆயுதங்கள் விற்பனை என்ற இருண்மை உலகம் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
ராணுவத்துக்கான ஆயுதங்கள் கொள்முதல் என்பதில், துப்பாக்கிகளிலிருந்து, பீரங்கிகள், போர் விமானங்கள்வரை அடங்கும். இத்தகைய ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் உலகின் முன்னணி 25 நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 361 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆயுத விற்பனை செய்துள்ளன. இது கடந்த 2018-ம் ஆண்டைவிட 8.5 சதவீதம் அதிகமாகும். இதிலிருந்தே இவற்றின் விற்பனை எவ்வளவு பெரிய அளவில் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதனால்தான் இந்நிறுவனங்களுக்கிடையே போட்டியும், வாடிக்கையாளர்களைப் பிடிப்பதில் லஞ்சப் பரிமாற்றமும் நடைபெறுகின்றன.
ராணுவ ஆயுத விற்பனையில் ஈடுபடும் முன்னணி 25 நிறுவனங்களில் இடம்பிடித்துள்ள 12 அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டில் 61% ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா ஆயுத விற்பனையில் முன்னணியில் உள்ளது. சீனாவின் ஆயுத விற்பனை, 2019-ம் ஆண்டில் 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை, ரஷ்யாவின் ஆயுத விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.
ஆயுத விற்பனையில், பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரு நாடு, நேரடியாகத் தனது ராணுவ அமைச்சகம் மூலமாக இன்னொரு நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதங்கள் விற்பனையில் ஈடுபடும். இன்னொன்று, ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களே மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் போடுவது. இது பொதுவாக நடக்கும் வியாபாரம் போன்றதாகும். இதில் ஈடுபடும் சில நிறுவனங்கள், தங்கள் வாடிக்கை யாளர்களைப் பிடிப்பதற்காக இடைத்தரகர்களைப் பயன்படுத்துகின்றன. இடைத்தரகர்களே கமிஷன் அடிப்படையில் அந்த நிறுவனங்களின் சார்பாக, மறைமுக பேரத்தில் ஈடுபடுகிறார்கள். இதையும் தாண்டி, சமீப காலங்களில் ஒவ்வொரு நாட்டு ராணுவமும் கூட்டுப் போர்ப்பயிற்சி எடுக்கும் ஒப்பந்தங்களின் மூலமாகவும், ராணுவத் தளவாட விற்பனை நடைபெறுகிறது. ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதங்களை விற்பனை செய்வதில், ஆயுதத்தயாரிப்பில் ஈடுபடும் நாடுகளுக்கு மத்தியில் பெரும்போட்டியே நடக்கின்றது. சமீபத்தில், 4,000 கோடி டாலர்கள் மதிப்புள்ள அணுவிசை நீர்மூழ்கிக் கப்பலை பிரான்சிட மிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருந்த ஆஸ்திரேலியா, திடீரென அந்த ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த பிரான்ஸ், ஆஸ்திரேலியா -அமெரிக்காவின் இத்தகைய செயல், மிகப்பெரிய மோசடி என்று கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தது. இரு நாடுகளுக்கிடையே போர்த்தளவாடங்கள் விற்பனையிலேயே இத்தகைய சண்டை சச்சரவுகள் ஏற்படுவதிலிருந்தே இதன் பின்னிருக்கும் அரசியலைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு நாடு, ராணுவத் தளவாடங்களை வாங்க முடிவெடுப்பதில் தேசப்பாதுகாப்பு என்பது முன்னிலைப்படுத்துவதால், எதற்கு இந்த வீண் செலவு என்று யாரும் கேள்வி கேட்க இயலாது. அப்படி கேள்வி கேட்பவர்களை எளிதில் தேசத்துரோகி லிஸ்ட்டில் சேர்த்துவிட முடியும். இதுபோல ஆயுதங்கள் விற்பனைக்குப் பின்னே பல்வேறு மறைமுக செயல்பாடுகள் இருப்பதால்தான் ஆயுதக் கொள்முதல் என்பதில் ஊழல் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பிலுள்ள அதிகாரிகளை, தலைவர்களைக் கைக்குள் போட்டு, கமிஷன் பேசி, இப்படியான விற்பனைகள் நடைபெறுவதும் உண்டு. இரு நாடுகளுக்கிடையே போர்ச்சூழலை ஏற்படுத்துவது. போர்க்குழுக்களுக்கு ஆயுதம் சப்ளை செய்து உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவது. இதன் காரணமாக ஆயுதங்களுக்கான தேவையை உருவாக்கி, விற்பனை செய்வதும் உண்டு.
இதில் நடைபெறும் ஊழல்கள் வெளிவந்தால், ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படக்கூடும். தேசத்துக்கே துரோகம் செய்ததாக மக்களால் ஓரங்கட்டப்படக்கூடும் என்பதால், இத்தகைய ஊழல்களை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றன. அதேபோல, இதில் பரிமாறப்படும் லஞ்சப்பணம், ஹவாலா மோசடி உத்தியில் கைமாற்றப்படுவதால் அதனை நிரூபிப்பதும் கடினமாகிறது.
போபர்ஸ் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர் குவாத்ரோச்சி, இயற்கையாக மரணமடையும்வரை குற்றச்சாட்டை நிரூபிக்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. தற்போதும்கூட ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டிலும் பணப்பரிமாற்றம் மொரீஷியஸ் நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தின்மூலம் ஹவாலா முறையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.வசம் ஒப்படைத்துள்ள நிலையில், இந்த ஊழல் விசாரணையும் கிடப்பில் போடப்படவே வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தெரிகிறது. ஆக, தேச பக்தி... எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள்... ராணுவ வீரர்களுடன் தீபாவளிக் கொண்டாட்டம் என்றெல்லாம் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் ஒன்றிய அரசு, அந்த ராணுவ வீரர்கள் தாய்நாட்டைக் காக்கும் பணியில் உயிரைத் துச்சமென மதித்துக் கையாளும் ஆயுதங்களின் தரமும் தராதரமும் மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகின்றன.