பொன்பரப்பி கலவரத்தின் வேகமே தணியாத நிலையில், கருவேப்பிலங்குறிச்சி மாணவி திலகவதி மரணம் வன்னிய -தலித் சமூகத்தினரிடையே இயல்புநிலை திரும்புவதில் தடைக்கல்லாக மாறியுள்ளது.
விருத்தாசலம் அருகேயுள்ள தே.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (45), இவரது மனைவி கொளஞ்சி (43). சுந்தரமூர்த்தி கருவேப்பிலங்குறிச்சியில் கூலி வேலை செய்துவருகிறார். இவரது மகள் திலகவதி (19), விருத்தாசலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 08-ஆம் தேதி சுந்தரமூர்த்தி வேலை காரணமாக வெளியில் சென்றிருந்தார். கொளஞ்சியும் சீர்காழி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
கல்லூரியில் கடைசித் தேர்வு எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார் திலகவதி. மாலை ஆறரை மணியளவில் அதே பகுதியில் கார் ஓட்டுநராக இருந்த அவரது தாய்மாமன் மகேந்திரனுக்கு போன் செய்த திலகவதி, தன்னை யாரோ ஒருவர் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்..’ என கூறியுள்ளார். அதையடுத்து மகேந்திரன், திலகவதியின் தந்தை சுந்தரமூர்த்திக்கு தகவல் கொடுத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு சென்று பார்க்க வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் திலகவதி உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
உடன் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க போலீசார் திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்துபார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து திலகவதியின், உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.
கொலையான திலகவதி சடலமாகக் கிடக்க பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்தன. விருத்தாசலம் ஏ.எஸ்.பி. தீபாசத்யன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியபோது அங்கிருந்த திலகவதியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பேரளையூரை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(19) என்பவரிடம் கடைசியாக பேசியது தெரிந்தது.
ஆகாஷை தேடிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், ""நானும், திலகவதியும் கருவேப்பிலங்குறிச்சியில் ஒரே வகுப்பில் படித்தோம். பழக்கம் காதலாக மாறியது. அவர் கல்லூரிக்கு சென்றதிலிருந்து முன்புபோல் பேசுவதில்லை. இதனால் எங்களுக்குள் மனக்கசப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக என்னுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்தார். அன்றைக்கு மாலையில் வீட்டில் யாருமில்லாததைத் தெரிந்துகொண்டு வீட்டிற்கு சென்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. "உனக்கு என்னைவிட பிரண்ட்ஸ்ங்கதான் முக்கியம்னா என்னை மறந்துடு, என்னிடம் பேசாதே' என்றார். இதில் தகராறு ஏற்பட... நான் ஆத்திரமாகி அவரது வயிற்றில், மார்பில் கத்தியால் குத்தினேன்''’என்று கூறியுள்ளார்.
09-ஆம் தேதி காலையில் திலகவதி கொலையில் ஆகாஷ் கைது செய்யப்பட்டது தெரிந்ததும் பா.ம.க. வட்டாரத்தில் ‘ஃபயர்’ பற்றிக்கொண்டது. "நாடக காதல் கும்பலின் அட்டூழியம்'’என விடுதலை சிறுத்தைகள் கட்சியை குறிவைத்து அறிக்கை வெளியிட்ட டாக்டர் இராமதாஸ், கட்சிக்காரர்களை கருவேப்பிலங்குறிச்சிக்கு அனுப்பினார்.
"திலகவதியின் கொலைக்கு நீதி கிடைக்காமல் சடலத்தை வாங்கமாட்டோம்' என பதற்றம் அதிகரித்தது. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அடுத்த நாள் காலையிலேயே விருத்தாசலம் வந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சவக்கிடங்கில் வைக்கப்படிருந்த திலகவதியின் உடலை பார்வையிட்டு, அவரது வீட்டிற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
ஜி.கே.மணி தலைமையில் தலைவர்கள் ஒருபக்கம் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க பா.ம.க.வினரும், கிராம மக்களும் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். "கொலையாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும், கொல்லப்பட்ட திலகவதியின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி இருவரும் இந்த சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், திருமாவளவனையும் தொடர்புபடுத்தி பேசவே, அன்று மதியம் சேத்தியாத்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ""திலகவதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷோ, அவரது குடும்பத்தினரோ விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களல்ல. அவர்தான் கொலை செய்தாரா என்கிற சந்தேகத்தையும், அது ஆணவக் கொலையாக இருக்கலாமோ எனவும் ஆகாஷின் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். தேவையில்லாமல் தொடர்ந்து எங்களை தொடர்புபடுத்தி இராமதாஸ் இனியும் பேசுவாரானால் அவர்மீது உயர்நீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு போடுவோம்''’என்றார்.
திலகவதி மரணத்தையடுத்து ஊடகங்களுக்கு ஆய்வாளர் ஷாகுல்அமீது தவறான புகைப்படத்தைக் கொடுத்துவிட, அதை ஊடகங்கள் பிரசுரித்தும் காட்சி ஊடகங்களில் காட்டியும்விட, பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர் ஊடகங்களை குற்றம்சாட்டுவதோடு நஷ்ட ஈடும் கேட்டு வழக்குப் போட்டிருக்கிறார்களாம்.
-எஸ்.பி.சேகர், சுந்தரபாண்டியன்