சிதைந்துபோன பாலத்தால் தினமும் திக்... திக்... பீதியில் காலத்தைக் கடத்திவருகிறார்கள் நெல்லை மாவட்டம், மேலச்செவல் பேரூராட்சிக்குட்பட்ட மாணிக்கம் நகரைச் சேர்ந்த மக்கள். தாமிரபரணி ஆறு செல்லும் பழவூரின் அணைக்கட்டையடுத்து அமைந்திருக்கும் மாணிக்க நகர் கிராமத்தை ஒட்டித்தான் பாளையங்கால்வாய் அமைந்திருக்கிறது. சீறிப்பாயும் பரணியாறின் பாளையங்கால்வாய் சுமார் 40 கி.மீ தொலைவிலுள்ள உத்தமபாண்டியன் குளம்வரை சென்று, வேளாண் மக்களுக்கு உதவுகிறது.
விவசாயம், விவசாயக் கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் நகர் கிராமவாசிகள், பாளையங்கால் வாயைத் தாண்டித்தான் அக்கரைக்குச் செல்லவேண்டிய கட்டாயம். நெஞ்சளவு உயரத்துக்கு கடக்கும் தண்ணீரில் செல்லவேண்டிய சூழல். கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் உடலையும் இதன் வழியேதான் கஷ்டப்பட்டு கொண்டுசெல்ல வேண்டும். இல்லையெனில் 2 கி.மீ. தொலைவு கரடுமுரடான பாதைகளைக் கடந்துதான் சென்றடைய முடியும்.
இந்த அவலத்தைப் போக்க, 15 வருடங்களுக்கு முன்பு, கலைஞர் ஆட்சியில், அப்போதைய சேரன்மாதேவி காங் கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரையின் மூலமாக பாளையங்கால் வாயின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்பட்டதும் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் அந்த பாலத்தை தொடர்ச்சியாக சரியாகப் பராமரிக்காததால், பாலத்தின் அடித்தளம் பிடிப்பற்றுப் போக, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் பாலம் உடைந்து தண்ணீரில் மூழ்கியது. அதன்பின், மீண்டும் மறுகரையை அடைவது போராட்டமாகிப் போனது.
சுடலை முத்து, வேல்முருகன், மாரி யப்பன் உள்ளிட்ட ஊர் மக்கள் கூறுகை யில், "எங்கள் மக்களின் விவசாய நிலங்கள் கால்வாயின் மறுகரையில தான் இருக்கு. முன்பு பாலம் வழியா போன நாங்க, இப்ப மரணத்த அடிமடியில கட்டிக்கிட்டுத் தாம்யா கழுத்தளவு தண்ணியக் கடந்து போவணும். அணைக்கட்டை ஒட்டி யிருப்பதால் வருசம் முழுக்க இதுல அதிக தண்ணி ஓடிக்கிட்டேதான் இருக்கும். மழை பெஞ்சா வீடுகளுக்குள்ள வெள்ளம் புகுந்திடும். கிராமத்துல அடிப்படை வசதி யில்லாததால, குளிக்க, இயற்கை கடன் களைக் கழிக்க, மறுகரைக்குத் தான்யா போவணும். வேற வழியில்லாம கழுத்தளவு தண்ணியக் கடந்து தான் போறோம்யா.
உசுரோட இருக்கவங்களுக்கே இந்த சிரமம்னா, உசுரு போனவங்களோட உடல்கள அடக்கம் பண்ண மறுகரைக்கு போறதுக்குள்ள எங்களுக்கு உசுரு போயி வந்துடுது. 1995ல தென்பக்கம் நடந்த கலவரத்தப்ப, எங்க ஊர்க்காரர் ஒருத்தர் காலமாயிட்டார். அவர அடக்கம் பண்ண சுடுகாட்டுக்கு ரோட்டு வழியா போனப்ப, தடுத்து, கால்வாய் வழியா கொண்டு போகச் சொல்லி பிரச்சனை பண்ணிட்டாங்க. அப்போ திருந்து யார் செத்தாலும் அடக்கம் பண்ண கால்வாய் வழி யாத்தான் கழுத்தளவு தண்ணியில பொணத்தத் தூக்கிட்டு போவோம். இப்படி ஒருமுறை பொணத்தைத் தூக்கிட்டு கால்வாயைக் கடக்குறப்ப பாடை சாஞ்சி, பொணம் கால்வாய்க்குள்ள விழுந்து இழுத்துட்டுப் போகப் பார்த்து, கஷ்டப்பட்டு உடலைப் புடிச்சு தூக்கிட்டு மறுகரைக்குப் போனோம். அதனால ஒவ்வொரு முறை பாடையோடு கால்வாய்க்குள்ள இறங்கும்போதும் திக் திக்னு தான் எங்களுக்கு இருக்கும். ஒண்ணரை வருஷம் முன்ன, உடைஞ்ச பாலம் வழியா கடக்கும்போது சின்னப் பையன் ஒருத்தன் தவறி விழுந்து இறந்தும் போயிட்டாம்யா. இந்தக் கொடுமைய வேற எங்கயாச்சும் கேள்விப்பட்டிருக்கிங்களா?.
எங்க குலதெய்வமான சுடலைமாடசாமி கோவில், கால்வாய்க்கு அந்தப் பக்கம்தானிருக்கு. வருஷம் மூணு தடவை கோவில் கொடை விழா தொடர்ச்சியா நாலு நாள் நடக்கும். வெளியூர் சொந்தம்லாம் கூட்டமா வருவாக. அப்பல்லாம் அசம்பாவிதம் நடந்துடக்கூடாதேன்ற பயத்தில சாமிய வேண்டிக்கிட்டுதான் நெஞ்சளவு தண்ணில கால்வாயக் கடந்து குலசாமிய வழிபடுவோம்யா.
கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, மாணிக்கம் நகரில் குலசேகரன் என்கிற முதியவர் மரணமடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய பாடையில் தூக்கிச்சென்ற ஊர் மக்கள், அந்த கால்வாயைக் கடப்பதற்கு பாலத்தின் வழியே செல்ல இயலாததால், பாதுகாப்புக்கு இருபுறமும் கயிறு கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் பாடையையும் சுமந்தபடி, கழுத்தளவு தண்ணீரில் நீந்தியபடியே சுமந்து மறுகரைக்குச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தோம்'' என்றவர்கள், "பாலத்தச் சீரமைச்சுக் குடுங்கன்னு ஊராட்சியில முறையிட் டப்ப, அது பொதுப்பணித்துறை கண்ட் ரோல்ல வருது. அவுகதான் பார்க்கணும் னுட்டாக. போன அ.தி.மு.க. ஆட்சி லருந்தே போராடுறோம். அப்பயிருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ. முருகையாபாண்டி யன் தொட்டு இப்ப உள்ள எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா வரைக்கும் பல தடவ கோரிக்கை வைச்சாச்சு. நடவடிக்கை யில்லய்யா. இப்ப ஆட்சி மாறி தி.மு.க. வந்துருக்கு. ஆட்சியர், அதிகாரிககிட்ட மனு குடுத்துருக்கோம். பாலம் கட்டித்தருவாங்கன்னு நம்புறோம்யா'' என்கிறார்கள் வேதனையோடு.
இந்த மக்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசின் கைகளில்!
-செய்தி மற்றும் படங்கள்: ப.இராம்குமார்