"உலக செஸ் ஒலிம்பியாட் 44' விளையாட்டுப் போட்டி முதல்முறையாக இந்தியாவில், நம் தமிழ்நாட்டில் நடந்துவருகிறது. இது குறித்த விழிப்புணர்வை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்விதமாக பல்வேறு விழிப்புணர்வுப் பதாகைகள், சுவர் விளம்பரங்கள், செஸ் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இலக்கிய போட்டிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், "உலக செஸ் ஒலிம்பியாட் 44' போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் உலக சாதனையாக்க நினைத்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுடன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் ஆலோசித்தது. கலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, 1088 மாணவ, மாணவி களைக் கொண்டு 8 மணி நேரத்தில், 2003 செஸ் ஒலிம்பியாட் பற்றிய தகவல்களை வெளிக்காட்டும் நடன நிகழ்ச்சியை மருத்துவக்கல்லூரியில் நடத்துவது குறித்து திட்டமிட்டுச் செயல்படுத்தி னார். மருத்துவக்கல்லூரி டீன் பூவதி உள்பட ஏராளமான அதிகாரிகள் முன்னின்று நிகழ்ச்சியை நடத்தினார்கள். குறிப்பிட்ட 8 மணி நேரம் வரை 'ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நடுவர் விவேக் நாயர் கண்காணித்து, மாலையில் அதற்கான சான்றிதழை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவிடம் வழங்கினார். உலகப் போட்டிக்கான விழிப்புணர்வையே உலக சாதனையாக்கிய மாவட்ட நிர்வாகத்தை அமைச்சர்கள் உள்பட மாவட்ட மக்களும் பாராட்டினர்.
மற்றொரு பக்கம், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கும் முதல் நாளில், 3 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ஒரு விழிப்புணர்வு குறும்படம், இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பேச்சு இல்லை.. இசையும் வேகமான வீரக்கலைகளும் இணைந்து மிரட்டியது. செஸ் ஆட்டக்காய்களுக்கு உயிரோட்டம் கொடுத்து, நாட்டுப்புறக் கலைகளையும் வீரத்தையும் கலந்து செய்யப்பட்ட அந்த ஒளிப்பதிவும் இயக்கமும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத் தளப் பக்கங்களில் அந்த குறும்படத்தைப் பகிர்ந் துள்ளார். மஹிந்திரா நிறுவனமும் அதனைப் பாராட்டியுள்ளது. இந்த விழிப்புணர்வுக் குறும் படத்துக்காக தமிழகம் முழுவதும் கலைஞர்களைத் தேடித்தேடிச் சேகரித்து, சத்தமில்லாமல் காட்சிப்படுத்தியவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுதான்.
மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.. "இயக்குநர் தொடங்கி ஒவ்வொரு கலைஞரையும் தேர்வு செய்து, பார்த்துப் பார்த்து ஒளிப்பதிவு செய்து, செஸ் காய்களுக்கு உயிரோட்டம் கொடுக்கப் பட்டது'' என்றார்.