உயிருக்கு உத்திரவாதமில்லாத பீதியிலிருக்கிறது நெல்லை மாவட்டத்தின் களக்காடு சமீபமிருக்கும் வடக்கு மஞ்சுவிளை கிராமம். கட்டி முப்பதாண்டு காலம் கடந்ததால், இற்றுப் போயிருக்கும் பாலத்தை அச்சத்துடன் ஒரு சாகசம் நிகழ்த்துவதைப் போல் கடந்துவருகிறார்கள் ஊர் மக்கள்.
தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலிருக்கும் மஞ்சுவிளை கிராமத்û தயொட்டி மலையில் உற்பத்தியாகி ஓடுகிற பச்சையாறு ஊடறுத்துச் செல்வதால் இந்த ஆற்றைக் கடந்தால் மட்டுமே களக்காடு நகரையடைகிற நிலையிலுள்ளனர் மஞ்சுவிளை கிராம மக்கள். கிராமத்தின் ஆதாரமே விவசாயம்தான். அதனால் விவசாயக் கூலிகளே அதிகம். பணிக்காக ஊருக்கு வெளியே ஓடுகிற பச்சையாற்றைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயம். வருடந்தோறும் தண்ணீர் ஓடுகிற பச்சையாறு, மழைக்காலங்களிலும், தென்மேற்குப் பருவ மழையிலும் பொழிகிற மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்துவிடும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bridge_2.jpg)
“அதுபோன்ற காலங்களில் முன்னோர்கள், விவசாயம், அது சார்ந்த பிற காரியங்கள் என்று பிழைப்பின்பொருட்டு ஆற்றைக் கடக்கமுடியாமல் முடங்கியிருந்திருக்கிறார்கள். காட்டாறுபோல கரைபுரளும் வெள்ளத்தைக் கடக்க அச்சப்பட்டனர் மஞ்சுவிளையின் முன்னோடிகள்.
அப்போதைய காலத்தில் இங்குள்ளவர்களே ஒன்றுசேர்ந்து, குடும்பத் தேவையை முன்னிட்டு ஆற்றின் ஊடே சிறிய ஓடைப் பாலத்தை அமைத்து கடந்து வந்திருக்கின்றனர். பின் நாங்குநேரி எம்.எல்.ஏ.வான மாணிக்கராஜாவின் காலகட்டத்தில் மஞ்சுவிளை மக்கள் முறையிட, கிராமச் சூழலை ஆய்வுசெய்த எம்.எல்.ஏ., ஆற்றின் குறுக்கே 20 அடி உயரத்திற்கு கான்கிரீட் பில்லர்கள் அமைத்து சிமெண்ட்டினாலான குறுகிய நடைபாலத்தை அமைத்தார். முப்பது வருடத்திற்கு முன் அவர் அமைத்துக்கொடுத்த இந்தப் பாலத்தைதான் நாங்கள் பயன்படுத்திவந்தோம் என்கிறார்கள் கிராமத்தினர்.
"மஞ்சுவிளையிலுள்ள 800-க்கும் மேற்பட்ட ஜனங்களின் ஆதாரமே இந்த நடை பாலம்தான். ஆனாலும் பேருந்துகள், வாகனங்கள், விவசாயப் பணிக்கான தொழில் வாகனங்கள் போன்றவை இந்தக் குறுகிய நடைபாலம் வழியே நுழையமுடியாமல் போனதால், மக்களுக்கான அத்தியாவசியப் பேருந்து போக்குவரத்தும் இன்றுவரை கிட்டவில்லை''’என்றனர் நம்மிடம்.
முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத தால் காலப்போக்கில் இந்தக் குறுகிய பாலத்தின் கான் கிரீட்கள் பெயர்ந்து, பக்க வாட்டுக் கம்பிகள் துருப்பிடித்து இற்றுப்போய் சரிந்ததுடன் பிடிமானம் அற்றுப்போனதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மஞ்சுவிளை பச்சையாறின் மேல், 20 அடி உயரத்தில் அச்சுறுத்தும் மரண பாலம். அதன்மீது தங்களின் பிள்ளைகளைப் பெற்றோர் பாதுகாப்பாக அரவணைத்துக் கொண்டு களக்காடு பள்ளிக்கு அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bridge1_2.jpg)
மஞ்சுவிளையில் நாம் சந்தித்த விவசாயியான முதியவர் சவுந்திரபாண்டியன், "பெரும்பாலும் வாழைதான் பயிர் வைப்போம். நாங்க விவசாயம் செய்ய இந்த நடை பாலத்தை கடக்கணும். முப்பது வருஷம் மராமத்துப் பணி செய்யாததால் பாலம் இத்துப் போயி விரிசல் கண்டுருச்சி. சைடு பட்டைக போனதால பாதுகாப்பில்ல. சாதாரணமாகவே பயத்தில இந்த பாலத்தக் கடந்து போற நாங்க, மழைக்காலத்துல பச்சையாறு வெள்ளமெடுத்ததும் ஊரே முடங்கிடும். வெள்ளம் வடிஞ்சாத்தான் நடமாடமுடியும். பள்ளி, கல்லூரிகள்ல படிக்கிற 300-க்கும் மேலான எங்க புள்ளைங்கள, பெத்தவங்கதான் பாதுகாப்பா கொண்டுபோயி கூட்டி வரவேண்டிய கட்டாயம். இருட்ட ஆரம்பிச்சா பாலம் பக்கம் வரவேமாட்டோம். ஊர்ல யாருக்கும் முடியாமப் போச்சுன்னா, ஆம்புலன்சு கூட வரமுடியாததால பக்கத்தில உள்ள வடகரை அடுத்த கிராமங் கள்னு 12 கிலோமீட்டர் சுத்தித்தான் களக்காடு கொண்டு போவோம். அரை கிலோமீட்டர் தாண்ட 12 கிலோமீட்டர் சுத்த வேண்டியதாயிருக்கு. கவுன்சிலர்ககிட்ட சொல்லிப்பாத்துட் டோம். எங்களோட வாழ்க்கை எப்ப என்ன ஆகுமோன்னு அச்சத்திலயும். பயத்திலயும் கழியுதுய்யா''’என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bridge2.jpg)
கிராமப் பெரியவர் திரவியமோ, “"ரெண்டு வருஷத்துக்கு முன்ன அவசர வேலையா ராவுல களக்காடு போயிட்டு வந்த எங்க ஊர்க்காரர் ஒருத்தர் பாலத்தில வர்றப்ப எப்புடியே பிசகி கீழே விழ, ஆத்தோட அடிச்சிட்டுப் போனவர பொணமாத்தான் தூக்குனோம். விவசாய சரக்குகள டிராக்டர்ல ஏத்திட்டுப் போவமுடியல. இப்படி யிருந்தா, எங்க பொழப்பு என்ன ஆவுறது. நடைபாலம் போச்சி. கிராமம் தனி துண்டாயிருச்சு. ஊருக்குப் புதுசா பெரிய பாலம் கட்டித்தாங்கன்னு நாங்க ஏறாத ஆபீசில்ல. பாக்காத ஆபீஸர்க இல்ல. எம்.எல்.ஏ.ட்டக் கூட முறையிட்டுட்டோம். கவனிப்பாரில்லை. பெரிய அளவுல உயிர்ச்சேதம் உண்டானாத்தான் தீர்வு வரும்போல''’என்றார் சலிப்போடு.
இதுகுறித்து தொகுதியின் எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரனைத் தொடர்பு கொண்டபோது, அவர் அமெரிக்கா போயிருப்பதாக தகவல் சொன்னார்கள்.
வடக்கு மஞ்சுவிளை கிராம மக்களுக்கு தீர்வு வருமா?.
-ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/bridge-t.jpg)