மிழ்நாடு முழுவதும் விவசாயிகள் வியர்வையில் விளைந்த நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்துவருகிறது. பல கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு அறுவடை செய்யும் நெல்லை, வெளிச்சந்தையில் விற்று கூடுதல் இழப்பைச் சந்திக்காமல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்போனால் அங்கேயும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

ss

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.35 முதல் ரூ.65 வரை கமிசன் என்ற பெயரில் லஞ்சமாக கொடுத்துக்கொண்டிருக் கிறார்கள். விவசாயிகள் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நெல் கொள்முதலில் ஆயிரம் குறை சொல்வதும், கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகையை காலதாமதம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் நிலை என்ன?, ஒரு நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நெல் கொள்முதல் எவ்வளவு? அதற்கு கமிசன் எவ்வளவு என்பதை கணக்குப் போட்டு சொல்கிறார் நெல் கொள்முதலில் அனுபவ முள்ள ஒரு பணியாளர்.

Advertisment

"புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் மொத்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 180. ஒரு நாளைக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சராசரியாக 700. (ஒரு கொள்முதல் நிலையத்தில்) மொத்த மூட்டைகள் 1,26,000 மூட்டைகள். விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டைக்கு வாங்குவது குறைந்தது ரூ.65. ஆக ஒருநாள் கமிசன் ரூ. 81,90,000.

இதில் மண்டல அதிகாரிக்கு, அவர் பி.ஏ.வுக்கு, மாவட்ட அதிகாரிக்கு, மூட்டைக்கு ஒரு ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு தலா ஒருவருக்கு ரூ.1,26,000 போகிறது. அதேபோல ஆளுங்கட்சி சங்கமான எல்.பி.எஃப். சங்க நிர்வாகிக்கு ஒரு மூட்டைக்கு ஒரு ரூபாய். அப்புறம் நெல் கொள்முதல் நிலையம் இயங்கும் ஊருக்கு, அந்தப் பகுதியிலுள்ள ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு மூட்டைக்கு தலா ஒரு ரூபாய். அடுத்து, திடீர் விசிட் வரும் அதிகாரிகளுக்கு டீசல், சாப்பாடு. இதெல்லாம் கொடுத்துட்டு கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை குடோனுக்கு அனுப்ப லாரிக்கு ரூ.4000 மாமூல். இதையெல்லாம் கொடுக்க லைன்னா கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை குடோனுக்கு அனுப்ப காலதாமதம் செய்வாங்க. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொடுக்க ணும் என்று மாதம் தலா ரூ.1000 வாங்குவாங்க. கடைசியில் மிஞ்சும் கொஞ்ச பணத்தை கொள்முதல் நிலைய பணியாளர்கள் பிரிச்சுக்கணும். ஆனால் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் வாங்குறாங்கனு எங்களுக்குதான் கெட்ட பேரு. சங்க நிர்வாகிகளுக்கு லஞ்சப் பணம் வசூல் செய்ய 10 கொள்முதல் நிலையத்திற்கு ஒரு பி.சி.யை நியமித்திருக்காங்க அதிகாரிகள்''’என்றார்.

"கமிஷன் கொடுக்கலைன்னா விவசாயி களுக்கு ஆன்லைன்ல பணம் ஏற்ற காலதாமதம் செய்றாங்க. இதனால விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டக்கூட முடியாமல் தவிக்கிறாங்க. அதனால நடவடிக்கை எடுக்கணும் என்று பாசிப்பட்டி சேகர், அறந்தாங்கி செல்லத்துரை உள்பட பல விவசாயிகள் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்துப் பேசினர்.

Advertisment

ss

"நீங்கள் ஏன் லஞ்சம் கொடுக்குறீங்க'' என்று விவசாயிகளிடம் கேட்க, "நாங்க கமிஷன் தரலன்னா எங்களுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படு கிறது'' என்று விவசாயிகள் கூறியதும், அப்போது அந்த கூட்டத்தில் இருந்த மண்டல மேலாளர் சீத்தாராமனிடம், "விவசாயிகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்றீங்க?' என்று மாவட்ட ஆட்சியர் கேட்டார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மழுப்பலான பதில் சொல்ல, "மாவட்ட ஆட்சியரோ நானே பார்த்திருக்கிறேன்... சரியா செய்ங்க'' என்று கடிந்துகொண்டார்.

அடுத்த நாளே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொடுக் கணும் என்று கூறி ஒவ்வொரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திலும் தலா ரூ.1000 கறந்துள்ளனர்.

ss

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "கடன் வாங்கித்தான் விவசாயம் செய்றோம். விளைஞ்ச நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயி கள் நேரடியாக விற்கப்போனால் இப்படி கமிசன் தலைவிரிச்சு ஆடுது. விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் நாங்க பேசிட்டு வீட்டுக்குப் போகும் போது எங்கள் பகுதி ஆளுங்கட்சி பிரமுகர்கள் வீட்டுக்கு வந்து, "நாங்கதான் நெல் கொள்முதல் நிலையங்களை ரன் பண்றோம். நீங்க ஏன் ஆட்சியரிடம் புகார் சொல்றீங்க. இனிமேல் புகார் கொடுக்காதீங்க'னு "அன்பா' மிரட்டிட்டுப் போறாங்க. நாங்க அதிகாரிகளிடம் வைக்கும் கோரிக்கையை அடுத்த நிமிடமே டி.என்.சி.எஸ்.சி. அதிகாரிகள் ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் போட்டுக்கொடுக் கிறார்கள். இதனால் கேள்வியெழுப்பவே அச்சமா இருக்கு''’என்கின்றனர் விவசாயிகள்.

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிவந்து சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கும் சுமைதூக்கும் பணியாளர்களை தனியார் நிறுவனங்களிடம் டி.என்.சி.எஸ்.சி. நிர்வாகம் ஒப்பந்தம் கோரியிருந்தது. இந்நிலையில் இரு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், ஒரு நிறுவனத்திடம் "ஒப்பந்தம் உங்களுக்குதான், சுமைப்பணியாளர்களை வைத்து வேலையைப் பாருங்கள்' என்று மண்டல மேலாளர் சொன்னார். 2 மாதமாக வேலைசெய்த நிலையில் கடந்த வாரம் வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதாக ஏற்கனவே வேலை செய்துகொண்டிருக்கும் நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளது.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆளும் தி.மு.க. தொழிற்சங்கமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு மண்டல மேலாளர் சீத்தாராமனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, "புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களிலுள்ள நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள் தொழிலாளர், விவசாயி களுக்கு எதிராக செயல்பட்டு ஆட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்துகின்றனர். இந்த மண்டல மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய விழிப்புக்குழு கண்காணிப்பாளர் இளவரசனும் கண்டும்காணாமல் இருக்கிறார். காரணம் இந்த மண்டல மேலாளர்களின் கவனிப்பு அப்படி'' என்று பலரும் பேசினர்.

ஆளுங்கட்சி தொழிற்சங்கமே, அரசு அலுவல ருக்கு எதிராக ஆர்ப்பாட்டமா? என்று ஆர்ப்பாட்டத் தில் நின்ற மாநில நிர்வாகிகளிடம் நாம் கேட்டபோது...

"அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்விதமாக மண்டல மேலாளர் சீத்தாராமன் செயல்படுகிறார். இப்படி செயல்பட்டதால்தான் ஏற்கனவே வருவாய் இல்லாத நிர்வாக மேலாளராக தூக்கியடிக்கப்பட்டார். பிறகு யார் யாரிடமோ போய் இப்போது புதுக் கோட்டை மண்டல மேலாளராகிவிட்டார். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் பட்டியல் எழுத்தர்கள் நெல் கொண்டுவரும் விவசாயிகளிடம் கட்டாய வசூல்செய்து ஒரு மூட்டைக்கு ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை வாங்கி வருகிறார்கள். அதே போல பெண் ஊழியர்களை மாலை 5 மணிக்கு பிறகு அலுவலகம் அழைப்பது பிரச்சனையாகி புதுக் கோட்டை நகரிலுள்ள ஒரு முதுபெரும் தி.மு.க. பிர முகர் பிரச்சனையை பேசி முற்றுப்புள்ளி வைத்தார்.

ss

இப்படி விவசாயிகளின் வயிற்றில் அடித்து லஞ்சமாக வாங்கிய பணத்தில் மண்டல மேலாளரின் சொந்த ஊரான சிதம்பரம் புறநகர் பகுதியிலுள்ள வண்டிகேட் பகுதியில் கோடி ரூபாய் மதிப்பில் வீடு, அதே பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டிவருகிறார். தற்போது ரூ.26 லட்சத்தில் புதிய கார் வாங்கியுள்ளார். இதில்லாமல் பல விவசாய நிலங்கள் என ஏராளமான சொத்துக்களை பினாமி பெயர்களில் வாங்கியுள்ளார். இவர் பணியாற்றிய தேனி உள்பட பல மாவட்டங்களிலும் இவர்மீது ஏராளமான புகார்கள். இந்த பருவத்தில் மட்டும் புதுக்கோட்டை மண்டலத்தில் ஜனவரி முதல் மார்ச் 25ந் தேதி வரை 20 லட்சத்து 60 ஆயிரத்து 40 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மூட்டைக்கு ஒரு ரூபாய் என்றால் சுமார் 20,60,000 ரூபாய் கமிசனாக பெற்றுள்ளார்''’என்றனர்.

இந்த புகார்கள் குறித்து மண்டல மேலாளர் சீத்தாராமனிடம் நாம் விளக்கம் கேட்டபோது, “"அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தி.மு.க. சங்கமே இல்லை. அதனால தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியனே நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்''’என்றார்.

எல்.டி.எஃப். மூர்த்தி நம்மிடம், "நாங்கதான் தி.மு.க. தொழிற்சங்கம், அவர்கள் இல்லை. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கிறார்கள். நெல் கொள்முதலுக்கு பணம் வாங்கக்கூடாதுன்னுதான் சொல்றோம்''’என்றவரிடம், "நீங்கள் மூட்டைக்கு ஒரு ரூபாய் வாங்குவதாக பட்டியல் எழுத்தர்களே சொல்றாங்களே,’என்றபோது... "தவறான தகவல். இந்த சங்கம் பற்றி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கவனத்திற்கு கொண்டுபோயிருக்கிறோம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்''’என்றார்.

விவசாயிகளின் வியர்வையால் விளைந்த நெல்லிலும் கமிஷன் அடிப்பது நியாயமா?