ளும்கட்சியான அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கோஷ்டி, இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். கோஷ்டி என இரு கோஷ்டிகள் மாநிலம் தழுவிய அளவில் முட்டி மோதிக்கொண்டிருந்தாலும் மாவட்டங்களில் மந்திரி கோஷ்டி, அந்த மந்திரிக்கு எதிரான கோஷ்டிகளின் சண்டைதான் சூடு பறக்கிறது. மதுரையில் மந்திரி செல்லூர் ராஜு கோஷ்டி, அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா கோஷ்டி போல, கடலூரில் பிரபலமானது அமைச்சர் எம்.சி.சம்பத் கோஷ்டியும், அவருக்கு எதிரான மாஜி எம்.பி. அருண்மொழித்தேவன் கோஷ்டியும்.

ஜெ. இருந்தபோதே மேற்படி இருவரும் அரசு நிகழ்ச்சிகளிலும் சரி, கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி, எப்போதுமே முட்டி மோதிக் கொண்டிருப்பார்கள். கிழக்கு மா.செ.வான மந்திரி சம்பத் ஒரு பொதுக்கூட்டம் போட்டால், அடுத்த வாரமே மேற்கு மா.செ.அருண்மொழித்தேவன் ஒரு பொதுக்கூட்டம் போடுவார். அப்போது சைலண்டாக சண்டை போட்டவர்கள், இப்போது நேரடியாக களத்தில் இறங்கி விட்டார்கள்.

cc

இருதரப்பும் அடிதடியில் இறங்கி, ரத்தக்களறியாகி, போலீசில் மாறி மாறி புகார் கொடுக்கும் அளவுக்கு கடலூர் மாவட்ட அ.தி.மு.க. விவகாரம் சந்தி சிரிக்கிறது. சமீபத்தில் மாவட்ட கூட்டுறவு வேளாண் விற்பனைக் கிடங்கின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 21 இயக்குநர்கள் ஓட்டுப் போட்டுத்தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், அருண்மொழித்தேவனின் ஆதரவு இயக்குநர்கள் 5 பேர். தனது ஆதரவாளர் ஒருவரை கிடங்கின் தலைவர் பதவிக்கு நிறுத்திய மந்திரி சம்பத், என்ன மாயம் செய்தாரோ, மந்திரம் போட்டாரோ, அருண் மொழித்தேவன் ஆதரவு இயக்குநர்கள் ஐந்து பேரும் சம்பத் நிறுத்தியவருக்கு ஓட்டுப் போட்டுத் தலைவராக்கிவிட்டார்கள்.

Advertisment

இதனால் கிறுகிறுத்துப்போன அருண்மொழித் தேவன், இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். இது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் பண்ருட்டி அருகே இருக்கும் மேல்குமாரமங்கலம்தான் மந்திரி சம்பத்தின் சொந்த ஊர். ஆனால், தொகுதியின் எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்திற்கும் சம்பத்திற்குமிடையே சமீப காலமாக வார்த்தைப் போர்களும் அக்கப்போர்களும் அதிகளவில் நடக்க ஆரம்பித்தன.

"மா.செ. பதவியிலிருந்து சம்பத்தை தூக்கியே ஆகவேண்டும்' என ஓ.பி.எஸ்.சிடமும் இ.பி.எஸ்.சிடமும் பஞ்சாயத்தைக் கூட்டினார் சத்யா பன்னீர்செல்வம். ஏற்கனவே, ஒரு பஞ்சாயத்து ஓடிக்கிட்டிருக்கு, இதுல இதுவேறயா என ஒருங்கிணைப்பும் இணை ஒருங்கிணைப்பும் மண்டையப் பிய்த்துக் கொண்டிருக்கும் போது கரெக்டாக காய் நகர்த்தினார் அருண்மொழித் தேவன்.

சம்பத், சத்யா பன்னீர்செல்வம், அருண்மொழித் தேவன் ஆகிய மூன்று பேரையும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் உட்கார வைத்து, "உள்ளாட்சித் தேர்தல் வரப்போகும் நேரத்துல இப்படி பண்ணினா எப்படிய்யா. எல்லோரும் ஒத்துமையா போங்க' என பஞ்சாயத்து பேசிப்பார்த்தார்கள் ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும். எதுவும் சரிப்பட்டு வராததால், பிரச்சனையை தீர்க்க ஒரே வழி மாவட்டத்தை மூணா பிரிச்சு, மூணு மா.செ.வா போட்ருலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

Advertisment

cc

அதன்படியே கிழக்கு மா.செ.வாக மந்திரி சம்பத், அவரது மாவட்ட எல்லைக்குள் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கினார்கள். மேற்கு மா.செ.வாக அருண்மொழித் தேவன், அவரது எல்லைக்குள் திட்டக்குடி, விருத்தாசலம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளையும், மத்திய மா.செ.வாக எம்.எல்.ஏ.பாண்டியன், அவரது எல்லைக்குள் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி தொகுதிகளையும் ஒதுக்கி நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நிலையில் மீண்டும் ஒரு சடுகுடு ஆட்டம் ஆரம்பித்தது.

அதாவது சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வான பாண்டியன், சம்பத்தின் எல்லைக்குள் வரும் குறிஞ்சிப்பாடி தொகுதியைத் தாண்டி, பண்ருட்டிக்குள் அரசியல் செய்ய வேண்டும். அதே போல் சட்டமன்றத் தேர்தலில் மா.செ. என்ற கோதாவுடன் விருத்தாசலம் தொகுதியில்தான் அருண்மொழித் தேவன் நிற்க முடியும். ஏனெனில் மற்ற இரு தொகுதிகளும் தனித் தொகுதிகள். விருத்தாசலத்தை பா.ம.க. கண்டிப்பாக விட்டுக் கொடுக்காது என கலங்கிப் போயிருக்கும் அருண்மொழித் தேவன், "புவனகிரிதான் வேண்டும்' என அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

அ.தி.மு.க.வில் மாஜி எம்.எல்.ஏ.க்களான சொரத்தூர் ராஜேந்திரன், எம்.சி.தாமோதரன் ஆகியோர் கட்சியின் அமைப்புச் செயலாளர் களாக உள்ளனர். இவர்கள் இருவருமே வன்னியர்கள். இதேபோல் வட மாவட்டங்களின் மா.செ.க்களாக வன்னியர்களை நியமித்து, அந்த சமூக ஓட்டுக்களை தக்க வைக்க இப்போதே காய்நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள் இ.பி. எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும். இதேபோல் கடலூரில் கட்டப்பட்டுவரும் ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டப திறப்புவிழாவை வெகுவிமரிசையாக நடத்த தயாராகிவருகிறது ஆளும் கட்சி.

இப்படி சகல வழிகளிலும் வன்னியர்களைக் கவரும் அ.தி.மு.க.வின் திட்டத்தினை தி.மு.க. எப்படி சமாளிக்கப்போகிறது என்பதுதான் உ.பி.க்களின் கவலையாக உள்ளது. அதேநேரத்தில், அ.தி.மு.க.வில் தலித் பிரமுகர்கள் புறக்கணிக் கப்படுகிறார்கள் என்ற குமுறலும் ஓயவில்லை.

-எஸ்.பி.சேகர்