எட்டு ஆண்டுகளாக தேடப் பட்டு வந்த தீவிரவாதி கவுசர் (எ) ஜஹிதுல் இஸ்லாம் கடந்த மாதம் 7-ஆம் தேதி கர்நாடக மாநிலம் ராம்நகரில் பிடிபட்டான். 2014-ஆம் ஆண்டின் புர்ட்வான் வெடிகுண்டு வழக்கு, 2018-ஆம் ஆண்டின் போத்கையா வெடிகுண்டு வழக்கு, சோலதேவன ஹள்ளியில் வெடி குண்டுகள் தயாரித்த வழக்கு என பல்வேறு வழக்குகளில் கவுசரை கைது செய்தனர் தேசிய புலனாய்வுப் போலீசார்.
விசாரணையில், ராம்நகர் மாவட்டம் திப்பு நகரில் உள்ள சாக் கடையில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டான். இந்த வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார், அந்த வெடிகுண்டுகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன? என்று விசாரித்ததில், கிருஷ்ணகிரியில் உள்ள ஷயத்பாஷா மலையில் தயாரிப்பதாக கூறியுள்ளான் கவுசர். இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி. சிவி.சுப்பையா ரெட்டி தலைமையில் 25 கர்நாடக போலீசார் கவுசரை, ஷயத்பாஷா மலைக்கு அழைத்துச்சென்றனர்.
அந்த மலையில் கவுசர் காட்டிய இடத்தில், வயர்களும், வெடிகுண்டு துகள்களும் இருந்துள்ளன. வெடிகுண்டுகள் தயாரிக்க இந்த இடத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? என்று போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு கவுசர், ""இந்த மலையைச் சுற்றியிலும் கிரானைட் வெட்டி எடுக்கப்படுகின்றன. அதற்காக வெடிகளை பயன்படுத்தும்போது அதிக சத்தம் வருகிறது. இந்த சத்தத்தை, நாங்கள் தயாரிக்கும் வெடிகுண்டு சோதனைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள் கிறோம். மேலும், கீழிருந்து இத்தனை சிரமப்பட்டு யாரும் வந்துவிடப் போவதில்லை. அதனால்தான் நாங்கள் இங்கே தங்கியிருந்து வெடிகுண்டுகள் தயாரித்தோம்'' ’என்று கூறியுள்ளான்.
கிருஷ்ணகிரி காவல்துறையின் வாக்கிடாக்கிக்கான ஒட்டுமொத்த கண்ட்ரோல் அறையும் அந்த மலையில்தான் இருக்கிறது. அந்த அறைக்கு மிக அருகிலேயே இப்படி ஒரு தீவிரவாத முகாமும் இருந் துள்ளதை நினைத்து அதிர்ந்து போனார்கள் போலீசார்.
வெடிகுண்டுகள் தயாரிப்ப தோடு மட்டும் அல்லாமல், கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளிக்கவும் அந்த மலையை கவுசர் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
""ஜமாதத் உல் முஜாஹிதின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று, கடந்த 28-11-2011-ல் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் பீகாரைச்சேர்ந்த கல்லூரி மாணவர் கள் 4 பேர், வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர் களுக்கு பயிற்சிகொடுத்தவர்களில் கவுசரும் ஒருவர்.
இவனுக்கு உடந்தையாக அந்த மலையின் கீழ் வாழ்ந்துவந்த இரு முஸ்லிம் இளைஞர்கள், ஆம்பூரில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞரையும் போலீசார் விசாரணை வளையத்திற் குள் கொண்டு வந்துள்ளனர். இவர்களுடனான விசாரணைக்குப் பின்னர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு குறிவைத்தே தொடர்ந்து வெடிகுண்டு கள் தயாரிக்கப்பட்டுள்ளதும், தெரிய வந்துள்ளது''’என்று அதிரவைக்கிறார் சி.வி.சுப்பையா ரெட்டி.
கவுசரால் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இப்போது எங்கெல் லாம் பதுங்கியிருக்கிறார்கள் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் தேசிய புலனாய்வு போலீசார்.
-அ.அருண்பாண்டியன்