பள்ளி வளாகத்திலிருந்த மரங்களை வெட்டியது, முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தது, பள்ளி வளாகத்திலுள்ள ஆற்று மணலைத் திருடி விற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் மீது, போக்சோ வழக்கினைப் பாய வைத்துள்ளது பள்ளி நிர்வாகம். இவ்வேளையில், போக்சோ வழக்கில் சாட்சியமாகச் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர், "அப்படியொன்றும் நடக்கவில்லை'' என பூமராங்காகத் திரும்ப சர்ச்சையில் சிக்கியுள்ளது சிவகங்கை மறை மாவட்டத்திற்குட்பட்ட திருவரங்க 'திரு இருதய மேல்நிலைப்பள்ளி'.
முதுகுளத்தூர் தாலுகாவிற்குட்பட்ட திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப் பள்ளியானது, சிவகங்கை மறை மாவட்டத்தி லிருந்து சிறுபான்மையினர் நலப்பள்ளியாக 1908ம் ஆண்டு துவங்கப்பட்டு, 1968 முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, அரசின் முழுமையான உதவிபெறும் பள்ளியாக வருடத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாணாக்கர்களுக்கு கல்வி போதித்து வருகிறது. அருகிலுள்ள சாம்பகுளம், பிரக்கலூர், முத்துச் செல்லபுரம், முத்துவிஜயபுரம், திருவரங்கம், செல்லூர், சிங்கர்படை, முத்துராமலிங்கபுரம் பட்டி, சிறுதலை, பட்டணம், மகிண்டி, மிக்கேல்பட்டிணம், செம்பொன்குடி, செங்கப்படை, கொழுந்துறை, பாம்பூர், குருவிபொட்டல், பொசுகுடி உள்ளிட்ட கிராம மக்களுக்கு இந்த பள்ளி தான் வரப்பிரசாதமாகத் திகழ்கின்றது என்றால் அது மிகையல்ல. அத்தகைய சிறப்புமிகு பள்ளியில், ஊழலை எதிர்த்து நடந்த போரில், போக்சோ வழக்கு பதியப்பட்டிருக்கின்றது. இதனால் நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளது என முதல்வர் தனிப்பிரிவு தொடங்கி, கல்வி அமைச்சர், மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனுவை அனுப்பிவிட்டு வேதனையுடன் காத்திருக்கின்றனர் திருவரங்க கிராம மக்கள்.
பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களோ, "இப்பள்ளியின் தாளாளராக சிங்கராயர் ஆரோக்கியம் பதவியேற்றதிலிருந்து தான் பிரச்சனையே ஆரம்பித்தது. இப்பள்ளியில் பயிலும் எளிய மாணாக்கர்களுக்காக முழுமையாக அரசு உதவி அளித்து வருகின்றது. சிங்கராயர் பதவியேற்ற பின்பு தான் இப்பள்ளியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. வகுப்பிற்கு ஏற்றாற்போல் ரூ.1,500 முதல் ரூ.3,800 வரை என 900த்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான மாணக்கர்களிடம் கட்டாயக் கல்விக் கட்டணம் பெறுவதால், அரசை ஏமாற்றி ஆண்டுக்கு எத்தனை லட்சங்கள் கிடைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வாங்கிய கட்டணம் பள்ளி மராமத்திற்கோ, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுக்கோ பயன்படவில்லை என்பது கண்கூடான உண்மை. இதுகுறித்து பள்ளித் தாளாளருக்கும், தலைமை ஆசிரியருக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த மோசடி வெளியே தெரிய வந்ததால் தாளாளர், தலைமை ஆசிரியரைப் பழிவாங்க நினைத்து பள்ளிக்கு பிரச்சனை கொடுக்கின்றார் என மாவட்டக் கல்வி அதிகாரியிடம் புகார் கொடுக்காமல், தன்னுடைய செல்வாக்கை வைத்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக தாளாளருக்கு வேண்டாத ஆசிரியர்களை அச்சுறுத்தும் எண்ணத்தில், இந்தாண்டு (2022) ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்து பள்ளிக்கு போலீசார் நேரடியாக வருவதும், ஆசிரியர்களை காவல் நிலையம் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகம் வரை நேரடியாக அழைத்து அலையவிடுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. சரி, இதுதான் வாடிக்கை என்றால் இப்பொழுது தனக்கு வேண்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வைத்து ஆசிரியர் மீது போக்சோ பழி போடுகின்றது தாளாளர் தரப்பு. இதனால் பள்ளியில் என்ன நடக்குமோ? என்கின்ற அச்சம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது'' என்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று, 10-ஆம் வகுப்பு "ஈ' பிரிவில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது, தேர்வுக் கண்காணிப்பாளராக வந்த ஆசிரியர் அருள் தாமஸ் என்பவர், மாணவி ஒருவரின் தலை, முதுகைத் தட்டி, கையைப் பிடித்து, உன்னை எனக்குப் பிடிக்கும் என்று கூறிய தாக மாணவி புகார் அளித்த தாகவும், இதனைத் தாங்கள் கண்கூடாகப் பார்த்ததாக அருகி லிருந்த 4 மாணவிகளிடமிருந்து கடிதங்கள் பெறப்பட்டதாகவும் கூறி, பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், அருள் தாமஸ் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
"அன்றைய தினத்தில் 10ஆம் வகுப்பு "ஈ' பிரிவிற்கு தேர்வு கண்காணிப்பாளராக கணித ஆசிரியரான அருள் தாமஸ் வந்திருக்கின்றார். 20 மாணவர்கள் தேர்வெழுதிக் கொண்டிருந்த நிலையில், ஒரு மாணவி மட்டும் (ஆசிரியர் மீது புகார் கூறியவர்) தேர்வினை எழுதாமல் ஜாமண்ட்ரி பாக்ஸிலிருந்த தன்னுடைய போட்டோவில் கிறுக்கிக் கொண்டி ருக்க, "ஏம்மா இதைச் செய்கிறாய்? தேர்வு எழுதவில்லையா?' என ஆசிரியர் அருள் தாமஸ் கேட்க, அதற்கு அந்த மாணவியோ, "என்னை எனக்குப் பிடிக்கவில்லை' எனக் கூற, அதற்கு அந்த ஆசிரியர், அந்த மாணவியின் தலையில் தட்டி, கையையும் தட்டி விட்டு, “"போட் டோவை கிறுக்காதே, ஏன் உன்னை உனக்குப் பிடிக்கவில்லை என்று கூறுகிறாய். உன்னை இங்குள்ள எல்லோருக்கும் பிடிக்கும். உன்னை எனக்கும் பிடிக்கும்'’என்று கூறியிருக் கின்றார். ஒரு வகையில் பார்த்தால் அந்த மாணவி அவளையே அவளுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறுகிறாள் என்றால், அவள் ஏதோ ஒரு விதத்தில் மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றாள் என்றுதானே அர்த்தம்? இதை முறையாக வகுப் பறையில் தேர்வெழுதச் செல்லும்முன் கவனித்திருக்க வேண்டியது ஒரு வகுப்பாசிரியரின் கடமையல்லவா? மன அழுத்தம் மாறும் வகையில் நேர்மையாக, “உன்னை எனக்குப் பிடிக்கும்” என ஆசிரியர் அருள் தாமஸ் கூறியதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதுபோல் அந்த மாணவிக்கு அவ்வாறு நடந்திருந்தால் யார் விசாரிக்க வேண்டும்? யார் உடனிருக்க வேண்டும்? மகளிர் காவலர்கள் விசாரிக்கும்போதும், குழந்தைகள் நலக்குழுவினர் நடத்திய முறையற்ற விசாரணையிலும், ஆணாகிய பள்ளித் தாளாளர் ஏன் அங்கு இருக்க வேண்டும்? இதன் மூலம் இது பழிவாங்கல் நடவடிக்கை என்று தெரியவில்லையா? பள்ளி வளாகத்திலிருந்த மரத்தை வெட்டியும், மணலைக் கடத்தியும் தாளாளர் பணம் பார்த்தபோது அதனை எதிர்த்தவர்களில் அருள் தாமஸும் ஒருவர். பழிவாங்குதல் என்றால் இப்படியா இருக்க வேண்டும்? இதற்கு அவரைக் கொலை செய்திருக்கலாமே?'' என்கிறார் அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர் ஒருவர்.
இது இப்படியிருக்க, போக்சோ வழக்கில் சாட்சியமாகச் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர், ஆசிரியர் அருள்தாமஸ் அப்படி நடந்து கொள்ளவில்லை என யூ டர்ன் அடிக்க, அந்த வகுப்பின் ஆசிரியையான சகாய அமுதா அம்மாணவியை அழைத்து, சாட்சியத்தை மாற்றினால் தான் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ள சம்பவமும், நீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்தறிய, ஆசிரியை சகாய அமுதாவை அழைத்தோம். போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பள்ளித் தாளாளர் சிங்க ராயரோ, "பள்ளி வளாகத்தில் எப்படி மணல் இருக் கும்?'' எனக் கேள்வியைக் கேட்டுவிட்டு, "சம்பவம் நடந்தது குறித்து ஈஈபய காட்சிகள் இருக்கு. அதனை காவல்துறையிடம் சமர்ப்பித்துவிட்டோம். அதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்? தான் சிக்கிக்கொண்டதனால் இப்படி ஊழல் புரளி கள் கிளப்பிவிடப்படுகின்றது. அதைவிட முக்கியம், நீதிமன்றத்தில் இது விசாரணையில் இருப்பதால் மேலும் இதனைப் பற்றி கூற முடியாது'' என்றார்.
உண்மை விரைவில் வெளிவரட்டும். பள்ளியில் நிம்மதி திரும்பட்டும்.
படங்கள்: விவேக்