தியாஹ்... இஸ்லாமிய சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு அல்லது குடும்பத்துக்கு, கொலை செய்தவரின் சார்பில் உரிய இழப்பீடு கொடுக்கப் பட்டு, அதை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டால் கொலைக் குற்றம் செய்தவருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்படும். அந்த இழப்பீடு தான் 'தியாஹ்'. ஆங்கிலத்தில் 'ப்ளட் மணி'.
அவசரத்தில், ஆத்திரத்தில் நிகழ்ந்துவிட்ட கொலைகளில் குற்றவாளிகளுக்கு ஒரு வாய்ப்பாக வும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தவர் களுக்கு பெரிய உதவியாகவும் இந்த "ப்ளட் மணி' முறை இருக்கிறது. உலகின் சில இஸ்லாமிய நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது. இந்த முறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள படம்தான் 'ப்ளட் மணி'.
ப்ரியா பவானிசங்கர், கிஷோர், மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். "எச்சரிக்கை -இது மனிதர்கள் நடமாடும் இடம்', "ஐரா' ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் சர்ஜுன், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
குவைத்தில் ஒரு பணக்காரரின் வீட்டில் பணி புரியும் தமிழ் சகோதரர்கள் காளியப்பன்- அஞ்சய்யா. அதே வீட்டில் பணிபுரியும் இன்னொரு பணிப்பெண்ணான இலங்கைத் தமிழ்ப் பெண்ணின் கொலை வழக்கில், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குவைத் சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தந்து தங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் இரு ஆண்மகன்களின் உயிரையும் காப்பாற்றுவதற் காக பலரின் உதவியுடன் அந்தக் குடும்பம் போராடுகிறது. ஆனாலும் எங்கேயோ தவறு நடக்க, அவர்களின் மரண தண்டனையை தடுக்க முடியாமல் போகிறது.
மறுநாள் மரண தண்டனை என்ற நிலையில்... இந்தச் செய்தி தெரியவரும் இளம் ஊடகவிய லாளர் ரேச்சல், அந்த இரு உயிர்களை தன் விடாமுயற்சியால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் 'ப்ளட் மணி' படம். இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஸ்பெஷாலிட்டி, பல்வேறு முக்கியமான விஷயங்களை நேர்மையாகத் தொட்டுப் பேசியிருப்பதுதான்.
"ஒரு நேர்மையான ஊடகவியலாளர் தனது ஊடகத்தைப் பயன்படுத்தி எந்த எல்லைக்கு சென்று, தனது உயிரை பணயம் வைத்து இந்த இரு உயிர்களை காப்பாற்றுகிறார்' என்ற அந்தப் பரிமாணம் முக்கியமானது. படத்தில் விறுவிறுப்பைக் கூட்டுவது அதுவே. நிகழ்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினை களுக்கும் அதிவேக தீர்வு கிடைக்க ஊடகங்கள் எவ்வாறு உறுதுணை புரிகின்றன என்பதை நேர்மையாகக் கூறியுள்ளார் இயக்குனர். இது ஒரு பரிமாணம் என்றால், இன்னொரு புறம் விவசாயத்தின் மீது காதல் கொண்டு தங்கள் ஊரில் உழவு செய்துவரும் அண்ணன் தம்பி, சூழ்நிலை தேவை காரணமாக குவைத்துக்கு வேலைக்கு சென்று அங்கு அடிமைகள் போல நடத்தப்பட்டு, தங்கள் பாஸ்போர்ட்டுகள் அவர்கள் கையில் இருப்பதால் விலகி வரவும் முடியாமல் இறுதியில் அநீதியாக ஒரு கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நிலையை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளார். கதைப்படி கொலை செய்யப்படும் இலங்கை தமிழ்ப் பெண் குவைத் முதலாளியால் நடத்தப்படும் விதமும் அவருக்கு நேரும் முடிவும் அதிர வைக்கும் உண்மை கள். இப்படி பல உண்மைகளின் தொகுப்பாக இருக்கும் "ப்ளட் மணி' திரைப்படம் இங்கு நடந்த இரண்டு உண் மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
2013-ஆம் ஆண்டில் தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் சண்முகசுந்தரம் மற்றும் செல்லப்பன் காளிதாஸ் ஆகிய இருவருக்கும் குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட இருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடும் போராட்டம் மற்றும் பலரது உதவியால் இருவரும் காப்பாற்றப்பட்டனர். கொலை செய்யப்பட்டது ஒரு இலங்கை தமிழ்ப் பெண்தான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு "தியாஹ்' என்ற இந்த இழப்பீடு அளிக்கப்பட்டு அவர்களது ஒப்புதல் பெறப் பட்டு இவர்களின் தண்டனை குறைக்கப்பட்டது. இதேபோல 2017-இல் கேரளாவை சேர்ந்த அப்துல் என்பவரின் கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த அர்ஜுனனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. அர்ஜுனன் இல்லையென்றால் அந்தக் குடும்பம் நிர்கதியாகிவிடும் என்ற உண்மை அறிந்து அந்தக் குடும்பத்துக்காக நிதி திரட்டி ப்ளட் மணி எனப்படும் இழப்பீடாக அப்துலின் குடும்பத்துக்கு முப்பது லட்சம் கொடுத்து அர்ஜுனனின் உயிரை மீட்டனர்.
இதில் முக்கிய பங்கு வகித்தது முனவர் அலி எனப்படும் இஸ்லாமியர். இவரது தந்தை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்தவர். இவரது முயற்சி மூலமே அந்தத் தொகை திரட்டி அளிக்கப்பட்டது. இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இருக்கும் இந்த சமபவத்தை மாற்றாமல் படத்தில் வைத்து அதற்கு மரியாதை செய்திருக்கும் இயக்குனரை பாராட்டுவது நம் கடமை.
படத்தில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் குடும்பத்தை தேடிப் பிடித்து அவரது மகளிடம் மன்னிப்புக் கடிதம் தரக் கோரி நாயகி ப்ரியா பவானி கேட்கும்போது, "ஒரு குடும்பத்துக்கு அப்பா, அண்ணன்னு ஆம்பளைங்க இல்லாதது எவ்வளவு கஷ்டம்னு வேற யாரையும் விட எங்க ளுக்கு நல்லா தெரியும்'' என்று கூறு கிறாள் அந்த இளம் பெண். வெறித்த முகத்துடன் அந்தப் பெண் சொல்லும் அந்த வார்த்தைகள் நாம் மெல்ல மறந்துகொண்டிருக்கும் இலங்கை துயரை நினைவுபடுத்துகினறன.
இயக்குனர் சர்ஜுன், தனது "லக்ஷ்மி' குறும் படத்தின் மூலம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியவர். ஒரு குறும் படத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இத்தனை குரல்கள் எழுமா என்ற ஆச்சரியத்தை உண்டாக்கியவர். நயன்தாரா நடிப்பில் அவர் உருவாக்கிய "ஐரா' மூடநம்பிக் கைகளை சாடிய படம். இப்படி ஏதேனும் ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களை கொடுத்து வரும் சர்ஜுனின் இந்த "ப்ளட் மணி' உண்மைகளின் உணர்வுப்பூர்வமான தொகுப்பு!
-வீ.பீ.கே.