ஊழல் அதிகாரிகளை மிக சொகுசாக ஓய்வு பெற அனுமதித்து விட்டு பிறகு விசாரணைக்கு உத்தரவிடும் அலங்கோலம் எடப்பாடி அரசில் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வில்லங்கத்தில் சிக்கித் தவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை!
மத்திய சென்னை மாவட்ட கல்வித்துறை அதிகாரியாக இருந்த ஜி.பி.சுந்தர்ராஜன், பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றுள்ளார். இவர் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த ஆதாரங்களுடன் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்கண்ணன், உயரதிகாரிகளின் ஊழல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்.
அவரிடம் பேசியபோது,’’""சென்னை கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் பெண்மணி ஒருவர், தனது ஊக்க ஊதிய உயர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிசன் தாக்கல் செய்கிறார். வழக்கை விசாரித்த நீதியரசர் ராஜா, இவரது கோரிக்கையை பரிசீலித்து தகுதி இருந்தால் வழங்குங்கள் என தீர்ப்பளிக்கிறார்.
நீதிபதியின் உத்தரவில் கவனம் செலுத்திய சுந்தர்ராஜன், குறிப்பிட்ட பெண்மணியின் கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பள்ளியின் செயலாளரிடமிருந்து பெற்று, அந்த கோப்புகளை ஆராய்ந்த அவர், சம்மந்தப்பட்ட பெண்மணி பணியில் சேர்ந்தபோது பி.ஏ.பி.எட்.தான் படித்திருக்கிறார்; எம்.ஏ. படித்ததாக சர்வீஸ் புக்ல எண்ட்ரி கிடையாது; எம்.ஏ. எக்ஸாம் எழுதியதாக சொல்லப்பட்ட தேதிகளில் இவர் பணியில் இருந்திருக்கிறார். எக்ஸாம் எழுத அரசிடம் அனுமதி பெறவில்லை என பல்வேறு விதிமீறல்களை சுட்டிக்காட்டி, ஊக்க ஊதிய உயர்வு வழங்கமுடியாது என கோப்புகளை சம்மந்தப்பட்ட பள்ளிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறார் சுந்தர்ராஜன்.
ஆனால், காலதாமதம் செய்ததாக சுந்தர்ராஜனுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார் அந்த பெண் மணி. இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த்வெங்கடேஷ், சுந்தர்ராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப, அந்த பெண்மணிக்கு ஊக்க ஊதியம் தருகிறோம் என கோர்ட்டுக்கு பதில் சொன் னதுடன், அதற்கான உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார் சுந்தர்ராஜன். தகுதியில்லை என்றால் ஏன் இந்த மாற்றம்?
நீதிபதி ராஜா விசாரித்த மூல வழக்கில் சுந்தர் ராஜன் எடுத்த நடவடிக்கைதான் சட்டப்படி சரியானது. ஆனா, அவமதிப்பு வழக்கில் சுந்தர்ராஜன் எடுத்த முடிவு தவறானது.
இதனையறிந்து, பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக இருந்த பிரதீப்யாதவை நான் சந்தித்து, அரசின் அனுமதி பெறாமல் தேர்வு எழுதி பாஸானால் அவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க பின்னேற்பு செய்ய முடியாதுன்னு ஏற் கனவே நீங்கள் உத்தரவு போட்டிருக்கிறீர்கள். அதற்கு மாறாக, சுந்தர் ராஜன் இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறாரே? என கேட்டதும், பதட்டமான அவர், முதன்மை கல்வி அதிகாரி அனிதாவுக்கு எனது புகாரை அனுப்புகிறார். ஆனால், பிரதீப்யாதவின் உத்தரவை கிடப்பில் போட்டு விடுகிறார் அனிதா.
இதற்கிடையே, சுந்தர்ராஜன் செய்துள்ள பல ஊழல்களை கண்டுபிடிக்கிறேன். குறிப்பாக, ரோஸ்டர் சிஸ்டத்தை (இன சுழற்சி முறை) பின்பற்றாமல் ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதியளித்தது, அரசு ஊழியர்களின் பி.எஃப். பணத்தை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எடுக்க ஆசிரியர்களுக்கு அனுமதியளித்தது, விதிகளுக்கு புறம்பாக உருவாக்கப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கு அனுமதியளித்தது, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கணினி ஆசிரியர்களை நியமிக்க அனுமதித்தது, பண விரயங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழல் களையும், இவைகளில் சுந்தர்ராஜன் அடைந்த பலன்களையும் கண்டுபிடித்தேன்.
இந்த ஊழல்களுக்கு எதிராக, முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன், துறையின் கமிஷனர் சுஜிதாமஸ், துறையின் தற்போதைய செயலாளர் தீரஜ்குமார் ஆகியோரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். சட்டப்போராட்டத்துக்கும் தயாராகி வருகிறேன். இதற்கிடையே, என்னிட மிருக்கும் ஆதாரங்களை கைப்பற்ற எனக்கு மிரட் டல்களும் வருகின்றன''’ என்கிறார் மிரட்சியாக.
பள்ளிக்கல்வித்துறை இயக்கக வட்டாரங்களில் விசாரித்தபோது,’’""கடந்த ஏப்ரலில் ஓய்வுபெற்றார் சுந்தர்ராஜன். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் பணிபுரிந்த காலத்தில் நடந்த கோப்புகளை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் என துறையின் இயக்குநருக்கு புகார் வந்தது. ஆனால், சுந்தர் ராஜனை ஓய்வுபெற அனுமதித்துவிட்டு அதன்பிறகு மூன்றுபேர் கொண்ட விசாரணை ஆய்வுக்குழுவை அமைத்துள்ளனர் அதிகாரிகள். 4 மாதங்கள் ஆகியும் விசாரணை நடக்கவே இல்லை. ஊழல் அதிகாரிகளை தப்பவைத்து விட்டு பிறகு விசாரிக்கும் நூதன வழிகளை கையாளுகிறது பள்ளிக்கல்வித்துறை'' என்கிறார்கள்.
இதுகுறித்து கருத்தறிய சுந்தர்ராஜனின் மூன்று மொபைல் எண்களிலும் தொடர்பு கொண்டோம். நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவே இல்லை. முதன்மை கல்வி அதிகாரி அனிதாவிடம் பேசியபோது,’"சம்மந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்பதோடு முடித்துக்கொண்டார்.
பள்ளிக் கல்வி அமைச்சர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் நியாயம் கேட்பவர்கள்.
-இரா.இளையசெல்வன்