(54) "செருப்புக்கேத்த காலு' -சினிமாவுல சகஜம்!
"விஜயகாந்த்தின் கால்ஷீட் வீணாகக்கூடாது' என ராவுத்தர் சொன்னதால்... "பாட்டுக்கொரு தலைவன்' படப்பிடிப்பு முன்கூட்டியே தொடங்கியது. இதனால் ரேவதி கால்ஷீட் கிடைக்கவில்லை. "இது நம்ம ஆளு' ஷோபனாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தோம். ஹீரோயினுக்காக கதையை மாற்றியதால், கதையில் சில குறைபாடுகள் உண்டாவதை என்னால் உணர முடிந்தது. இருப்பினும் நான் இயக்குநராகும் படம் என்பதால் நம்பிக்கையோடு வேலையைத் தொடங்கினேன்.
படத்தின் தயாரிப்பாளர் டி.சிவாவின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் படப்பிடிப்பு நடந்த நாட்களில், விஜயகாந்த், ஷோபனா, நான் உட்பட பெரும்பாலும் டி.சிவா வின் வீட்டில்தான் சாப்பிட் டோம். அந்த சாப்பாட்டின் ருசிக்கும் அளவில்லை, டி.சிவாவின் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தங்கை ஆகியோரின் அன்புக்கும் அளவில்லை. "இப்படியொரு ருசியையும், அன்பையும் எங்கும் பார்த்ததில்லை' என்று ஷோபனா என்னிடம் சொன்னார்.
திரைக்கதையை சொல்லும் போது நிறைய நகைச்சுவை, சென்டிமெண்ட் காட்சிகளை சொல்லியிருந்தேன் இப்ராகிம் ராவுத்தரிடம். ஷூட்டிங்கின்போது "அதில் சிலவற்றை குறைத்துக் கொள்ளலாம்… திரைக்கதை நீளமாக இருக்கிறது'' என்று சொன்னேன்.
"எதையுமே குறைக்க வேண்டாம். அப்படியே எடுங்கள்'' என்று கூறிவிட்டார் இப்ராகிம் ராவுத்தர்.
கோபிசெட்டிபாளையத்தில் பதினாறு நாட்கள் படப்பிடிப்பு. படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து அதை எடிட் செய்து பார்த்தபோது கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தின் நீளம் இருந்தது. எதை வெட்டுவது, எதை வைத்துக் கொள்வது என்று இப்ராகிம் ராவுத்தரால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எல்லாக் காட்சிகளையுமே ரசித்தார்.
சினிமாவில் சில நேரங்களில் காலுக்கேற்ற செருப்பு என்பதைத் தாண்டி செருப்புக்கேற்ற கால் என்று முடிவெடுக்க வேண்டியதாகிவிடும். அப்படி ஒரு நிலைமை ‘"பாட்டுக்கு ஒரு தலைவன்'‘ படத்திற்கும் ஏற்பட்டது.
திரைக்கதையில் மேலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. படத்தில் பிரமாண்டம் இல்லை. ரிச்சாக இல்லை என்பதற்காக படத்தின் ஆரம்பத்தில் ஒரு மார்க்கெட் ஃபைட், கிளைமாக்ஸ் காட்சியில் கார் ஃபைட் சேர்க்கப்பட்டது. மன உறுதியாக உள்ளவர்கள் கூட திரைப்படத் துறையில் சில நேரங்களில் மன உறுதியை இழந்துவிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இப்பொழுது படம் இயக்கும் புது இயக்குநர்களுக்கும் புதிதாக படம் இயக்கப் போகிறவர்களுக்கும் எனது அனுபவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் எழுதுகிறேன்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்து ரீ-ரிகார்டிங் பண்ணுவதற்கான டபுள் பாசிட் டிவ்வை அண்ணன் இளையராஜா பார்த்து விட்டு...
"என்ன கதை சொன்ன...… என்ன எடுத்து வச்சிருக்க'' என்றார்.
எனக்கேற்பட்ட சூழ்நிலைகளைச் சொன் னேன். அப்பொழுது விஜயகாந்த், இளையராஜா வை பார்க்க வந்தார்.
"ஏன் விஜி, இவன் சொன்ன கதைய ஏன் அப்படியே எடுக்க விடல.… எளிமையான காதல் கதையா இருந்திருந்தாலே நல்லா இருந் திருக்குமே''“என்றார்.
"இல்லண்ணே… பிஸினஸுக்காக சில விஷ யங்கள் வேணுமே... அதனாலதாண்ணே'' என்றார்.
"படம் நல்லா இருக்கு,…சொன்னதை மாத்தாம எடுத்திருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்கும்'' என்றார்.
என்னை அவருடைய அறைக்கு வரச் சொன்னார், போனேன்.
"டேய் அங்க பேசுனதெல்லாம் உன் மேல உள்ள அக்கறையிலதான். மத்தபடி படம் நல்லா இருக்குடா''“என்றார் அண்ணன் இளையராஜா.
பெரிதாக பிரேம் போட்டிருந்த நாகூர் தர்கா படம் அங்கே இருந்தது. அதை எடுத்தார்.
"உனக்கு குடுக்குறதுக்காகவே ரெடிபண்ணச் சொன்னேன்''“என்று கூறி என்னிடம் கொடுத்தார்.
"நீ நல்லா வர்றதுக்கு அந்த அல்லா துணையிருக்கணும்''னு வாழ்த்தினார்.
"பாட்டுக்கு ஒரு தலைவன்'‘படம் வெளியாகி நூறு நாட்கள் ஓடியது.
"ரேவதி மேடம் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ' என்று என் மனம் சொல்லியது... இப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கிறது.
"பாட்டுக்கு ஒரு தலைவன்' நேரத்தில் எனக்கும் அண்ணன் இளைய ராஜாவுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடித்த “"ராஜாதி ராஜா'“ படம் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பு. இளையராஜா வின் சகோதரர் பாஸ்கர்தான் தயாரிப்பாளர். கதை, திரைக்கதை, வசனம் ஆர்.சுந்தர் ராஜன். பல வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர்.
இளையராஜா அண்ணனிடம் நான் சொன்னேன். “"அண்ணே ராஜாதி ராஜா“ படத்துக்கு நீங்க போட்டிருக்கிற பாட் டெல்லாம் சூப்பர்ணே.''
"அப்போ உன்னோட பாட்டுக்கு ஒரு தலைவன் படத்துக்கு நான் சரியா போடலியா''“ என்றார்.
"நான் அப்படி சொல்லலண்ணே…"பாட்டுக்கு ஒரு தலைவன்'‘ படத்துக்கு போட்ட பாட்டை விட ‘"ராஜாதி ராஜா'‘ பாட்டெல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னேன்.''
பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் "நினைத்தது யாரோ நீதானே' என்ற பாடல் மனோலிஜிக்கி பாடியது. இப்பொழுது கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.…அப்படி ஒரு சுகம் இருக்கும் அந்தப் பாடலில்.
அப்பொழுது இரண்டு படங்களுமே ரிலீசாகவில்லை.
"நீ வேணும்னா பாரு "ராஜாதி ராஜா' பாட்டைவிட உன் பட பாட்டுக்கள்தான் சூப்பர் ஹிட் ஆகும்''“என்றார் இளையராஜா.
இரண்டு படங்களும் ரிலீசானது. "பாட்டுக்கு ஒரு தலைவன்'‘பாடல்களை விட ‘ராஜாதி ராஜா‘ படப் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது.
இளையராஜா அண்ணனிடம் ஜாலியாக, காமெடியாக பேசுவேன். உண்மைகளையும் வெளிப்படையாகப் பேசுவேன். அது அவருக்குப் பிடிக்கும். அவரிடம் சொன்னேன். "ஏண்ணே… நான் சொன்னது மாதிரியே ஆயிருச்சுல்ல.… எங்க பார்த்தாலும் ‘"ராஜாதி ராஜா'‘ பாட்டெல்லாம் பட்டைய கிளப்புது''ன்னேன்.
"நான் ஒரு இசையமைப்பாளனா என்னோட கருத்தைச் சொன்னேன். இதுதான் நடக்கும்னு சரியாக் கணிச்சு சொல்றதுக்கு நான் என்ன கடவுளா?'' என்றார்.
ஆனால் அவர் கடவுள்தான். இசைக்கடவுள். இசையை ஆண்டவர். தமிழர்களின் இதயங்களை ஆண்டவர். அவரது விரல் வித்தையில் எத்தனை மெட்டுக்கள். அவரது திருவாயிலிருந்து கொட்டிய பல்லவிகள் எத்தனை, எத்தனை. வெறும் மெட்டுக்குப் பதில் வார்த்தைகளால் பாடி அதையே கவிஞர்கள் பல்லவியாக ஏற்றுக்கொண்டு வெற்றியடைந்த பாடல்கள் கணக்கில்லாதவை.
"படைச்சவனாலயும் கணிக்க முடியாததுதாண்டா இசையும், சினிமாவும்'' என்றார்.
அது எவ்வளவு பெரிய உண்மை.
"நீ ஹீரோயின மாத்தியிருக்கக் கூடாது. அதனாலதான் கதையிலயும் மாற்றம் வந்துச்சு. இனிமே ஆர்டிஸ்ட் செலக்ஷன்ல கவனமா இரு''“என்றார்.
ஆனால் அவர் சொன்னது போல என்னால் இருக்க முடிய வில்லை. விதி வலியது.
விஜயகாந்த் நடித்த "ஏழை ஜாதி' படத்தில் நடந்ததை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் என்று நான் சொல்வது வாசகர்களை மட்டுமல்ல...… இளம் தலைமுறை இயக்குநர்களையும்தான்.
"ஏழை ஜாதி' படத்தில் நான் முதலில் எழுதிய கதையில் இரண்டு கதாநாயகிகள். பானுபிரியாவும், கஸ்தூரியும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, பானுபிரியாவிடம் சம்மதம் பெற் றாகிவிட்டது. கஸ்தூரியை சந்தித்து அவரது கேரக்டரை சொல்லி சம்மதம் வாங்கியாகிவிட்டது. பூஜைக்கு முன் அட்வான்ஸ் தருவதாக சொல்லிவிட்டு வந்தேன்.
"ஏழை ஜாதி' படத்தின் தயாரிப் பாளர் கர்நாடக காங்கிரஸ் அமைச்ச ரவையில் ஒரு அமைச்சராக இருந் தார். விஜயகாந்த்துடன் அவருக்கிருந்த நட்பின் காரணமாக அவரை ஹீரோவாக வைத்து தமிழில் படம் எடுக்க முடிவு செய்தார். அவர் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். பூஜைக்கு முதல்நாள் என்னை அழைத்தார்.
"ஏழை ஜாதி படத்தோட ஹீரோயின் யார் தெரியுமா?''“ என்று கேட்டார்.
"என்ன சார் இப்படி கேக்க றீங்க. நான் ஏற்கனவே சொன்னபடி பானுப்பிரியாவும், கஸ்தூரியும்தான். அவங்க ரெண்டுபேரும்தான் கதைக் குப் பொருத்தமா இருப்பாங்க'' என்றேன்.
ஆனால் தயாரிப்பாளர் எனக்கு பெரிய ஷாக் கொடுத்தார்.
(வளரும்...)