/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan_71.jpg)
(90) அவமானத்திலிருந்து கிடைத்த வெகுமானம்!
நான் வசனம் எழுதி ராம்கி, விஜயசாந்தி நடித்த "தடயம்' படத்தில் பரபரப்பான ஒரு கோர்ட் சீன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெரிய வழக்கறிஞர் என்னைப் பாராட்டியதோடு, "எப்படி சார் உங்களுக்கு இப்படியெல்லாம் புதுசா கேக்கத் தோணுது' என்றார்.
"வசனம் புதுசா இருக்கணும் அரசியல் புதுசா இருக்கணும். நாடு புதுசா இருக்கணும். மக்கள் வாழ்க்கை புதுசா இருக்கணும்னு நினைச்சுத்தான் நான் படங்களுக்கு வசனம் எழுதினேன். புதுசு புதுசா யோசிச்சு எழுதினேன். ஆனா என் வாழ்க்கை புதுசாகறதுக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அதைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன்.
எவ்வளவுதான் பொதுநலமும், மற்றவர் நலமும் நமக்கு முக்கியமாகத் தெரிந்தாலும், அதற்காகவே நம்மை அர்ப்பணித்துக்கொண்டாலும் சுயநலமும் கொஞ்சம் இருக்கவேண்டும். நகை செய்யும் போது தங்கத்தோடு செம்பு கலப்பதைப் போல...''…
இந்த இடத்திலும் "பராசக்தி' படத் திலே கலைஞர் எழுதிய வசனம்தான் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
கோர்ட் சீனில் நடிகர் திலகம் சிவாஜி பேசுவார்... "பசியைத் தீர்த்துக்கொள்வதற் காக அழுக்கைச் சாப் பிட்டு தடாகத் தைச் சுத்தப் படுத்துகிறதே மீன். அதைப் போன்று சுயநலமாவது இருக்க வேண் டும். அவமா னங்களை வெற்றியின் அடையாளங்களாக மாற்றிக்கொள்ள நம்மிடமுள்ள அறிவை நாம்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'
நான் படித்த செய்தி ஒன்று. நீங்களும் படித்திருக்கலாம். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதில் தவறில்லை.
மன்னரின் அரசவைக்கு ஒருவர், தான் ஆரம்பிக்கப்போகும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். அவர் கல்லூரி ஆரம்பிப்பது மன்னருக்குப் பிடிக்கவில்லை. தடுக்க நினைக்கிறார்.
"நிதிதானே இந்தா' என தன் காலில் போட்டிருந்த ஷூவை வந்தவர்மேல் வீசி எறிந்தார்.
எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்து போனாலும், ஒரு பக்கம் அவமானம் அவர் மனதை காயப்படுத்தியது. இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்குத்தானே அவ மானப்படுகிறோம் என மனதைத் தேற்றிக் கொண்டு மன்னருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார் நிதி கேட்டு வந்தவர்.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்னடா நாம் அவனை அவமானப்படுத்த வேண்டும், அவன் கல்லூரி கட்டிவிடக் கூடாது என்று நினைத்துதான் ஷூவை வீசினோம். ஆனால் அவன் நன்றி சொல்லிவிட்டுப் போகிறானே என்று நினைத் தான். ஒருவரை எப்படி அவமானப்படுத்த நினைத்தாலும், எதிரில் இருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாக இருந்தால் என்ன செய்துவிட முடியும்?
தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.
"தான் வீசிய ஷூவை எடுத்துப்போகிறானே... என்ன செய்வான்?' என்று மன்னர் யோசித்துக் கொண்டிருந்தபொழுது அரண்மனைக்கு வெளியே ஒரே சத்தம்.
அமைச்சரை அழைத்த மன்னன் "என்ன அங்கே சத்தம்?'' என்றார்.
"நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான் மன்னா. கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ என்று கூறி மக்களைப் பார்த்து கூவிக் கூவி ஏலம் போடுகிறான்'' என்றார் அமைச்சர்.
"எவ்வளவு தொகைக்கு ஏலம் போகிறது?'' என்று கேட்டார் மன்னர்.
"படுகேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை'' என்றார் அமைச்சர்.
மன்னர் தன்னுடைய மதிப்பு அவ்வளவு கேவலமாக இருக்கிறா என்று பதறிப்போய் "அய்யய்யோ என்ன விலையானாலும் நாமே ஏலம் எடுத்துவிடுவோம், போய் எடுங்கள்'' என்று கூறினார். அவர் சொன்னது போலவே அமைச்சர் போய் ஐம்பது லட்சம் கொடுத்து மன்னர் வீசியெறிந்த ஷூவை ஏலம் எடுத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan1_71.jpg)
கல்லூரி கட்ட நிதி கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.
"மன்னா… நீங்கள் என் மீது வீசியெறிந்த ஷூவை ஏலம் போட்டதில் பாதி கட்டிடம் கட்ட பணம் கிடைத்துவிட்டது. அடுத்த ஷூவை என் மீது எப்போது வீசி எறிவீர்கள்?'' என்று கேட்டார்.
வந்தவரின் சாமர்த்தி யத்தை எண்ணி மன்னரே, அந்த கல்லூரியை கட்டிக் கொடுத்தார்.
அதுதான் தற்போதைய "காசி பனாரஸ் பல்கலைக் கழகம்!'.
அந்தக் காலனி வீசப் பட்டது திரு. மதன்மோகன் மாளவியா அவர்கள்மீது. அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்.
இது நான் படித்த செய்தி.
அவமானத்தால் யார் ஒருவர் உடைந்து போகிறார்களோ, அவர்களால் ஒருநாளும் எதையும் ஜெயிக்க முடியாது. எப்போதும் நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியம் என எண்ண வேண்டும். ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என எண்ணவேண்டும். யாருடைய வளர்ச்சியையும், நீண்டநாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவமானம் என்பது ஒருவிதமான மூலதனம் என எண்ணிக்கொள்ள வேண்டும்.
"ராணி மகாராணி' படத்தில் எனக்கு வந்த பிரச்சினைகளும் ஒருவிதத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானம்தான். அப்பொழுது எனக்கு கிடைத்த வெற்றிக்கான படிக்கட்டுகள்தான் சரத்குமார். அந்தப் படிக்கட்டுகளில் நான் முழுமையாக ஏறியிருக்க வேண்டும். ஏற ஆரம்பித்தவன் அன்பு, பாசம், நட்பு, விசுவாசம் இவற்றிற்காக தடுமாறிவிட்டேன்.
சினிமாவில் நம்மை விட்டு விலகியவர்களும், வெறுத்தவர்களும் நமக்கு வெற்றி கிடைத்தவுடன் ஓடிவந்து கட்டி அணைத்துக்கொள்வார்கள். அந்த உண்மையை உணரத் தவறிவிட்டேன்.
குற்றஉணர்வு சரத்குமார் சாரை பார்க்க விடாமல் தடுத்தது. அவரது அன்பு தடைப்பட்டதன் இழப்பு அவருக் கல்ல, எனக்குத்தான். இதை நான் வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு எந்தவிதக் கூச்சமும் இல்லை. அதை நினைத்து நான் வருந்தாத நாட்களும் இல்லை.
நம்மிடம் பேனா என்ற சிறகுகள் இருக்கிறது. பறக்க வேண்டிய நேரத்தில் பறக்க வண்டும். யாருக்காகவும் சிறகை விரிக்கத் தயங்கக் கூடாது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபொழுது ஒரு சினிமா செய்தியை ஒரு நாளிதழில் பார்த்தேன்.
கின்னஸ் சாதனைக்காக திரையுலகின் பல ஹீரோக்கள், பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க, பதின்மூன்று இயக்குநர்கள் இயக்க "சுயம்வரம்' என்ற படம் ஒரேநாளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிடப் பட்டிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan2_38.jpg)
அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த "காளி' போன்ற பெரிய படங்களைத் தயாரித்த ஹேம்நாத் பாபுஜி அவர்கள்.
முழுப்படத்தின் படப்பிடிப்பும் ஒரே நாளில்.… இந்த அறிவிப்பு வந்தது 1999 ஆம் ஆண்டு. இன்று இருக்கிற அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நேரம்.
ஹேம்நாத் பாபு மிக நல்ல மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். எளிமையானவர். எல்லாவற்றையும் விட என்னிடம் அன்பு கொண்டவர். நெருக்கமாக பழகிக் கொண்டிருப்பவர். அப்படியிருந்தும் "சுயம்வரம்' படம் பற்றிய செய்தியை நான் பேப்பரில்தான் படித்துத் தெரிந்து கொண்டேன். நடிகர், நடிகைகளின் பட்டியலும் படத்தை இயக்கப் போகும் பதின்மூன்று இயக்குநர்களின் பெயர்களும் பேப்பரில் வந்திருந்தது. ஹேம்நாத் பாபுஜி அவர்களுடன் பழக்கமே இல்லாத இயக்குநர்கள் பெயரெல்லாம் அந்த லிஸ்ட்டில் இருந்தது. அவருடன் நன்கு பழகிய என் பெயர் இல்லை.
"சுயம்வரம்' பட விஷயத்தை என்னிடம் அவர் ஏன் சொல்லவில்லை? என்னை, அவர் ஏன் அழைக்கவில்லை? எதற்காக என்னை மறந்துவிட்டார் என்று குழம்பிப் போனேன்.
அடுத்து...
தே.மு.தி.க. உருவான கதை...
(வளரும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/alikhan-t_3.jpg)