(83) விழித்தார்... சரத்குமார்! தூங்கினேன் நான்!
ரிலீஸ் நேரத்தில் நடந்த பிரச்சினைகளால் "ராணி மகாராணி' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருந்த தயாரிப்பாளர்களை சந்திக்கும் முயற்சியும் சரியாக அமையவில்லை. ரிலீசுக்குப் பிறகுதான் அவர்களைப் பார்த்து அக்ரி மெண்ட் போட்டு பணம் வாங்க வேண்டும், கடன்களை அடைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு ஜெமினி லேப்பில் மேனேஜர் அறைக்குப் போனேன்.
"சார் சென்னை சிட்டிக்கான படப்பெட்டிகளை எடுத்துட்டுப் போகலாமா சார்?'' என்று கேட்டேன்.
அதற்கு அந்த மேனேஜர், "லியாகத் அலிகான் சார். எங்க பக்கம் ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு. கணக்கு பார்த்ததுல நீங்க இன்னும் ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டி இருக்கு. அதைக் கட்டினாத்தான் சிட்டி பிரிண்ட் கொடுப்போம்'' என்றார்.
உடனே சரத்குமார் சாரை தொடர்புகொள்ள முயன்றேன். தொலைபேசி இணைப்பு கிடைக்கவில்லை. நேரமாகிக்கொண்டிருந் தது. மணி பத்தானதும் விநியோகஸ்தர்கள் என் மீது கோபப்பட ஆரம்பித்தார்கள். "இந்த முறையும் எங்களை இப்படி ஏமாத்திட் டீங்களே...' என்று ஏக வசனத்தில் வார்த்தைகளை வீசினார்கள்.
"இந்த முறையும் படம் ரிலீசாகாமல் போய்விடுமோ' என்ற பயம் ஏற்பட்டது எனக்கு. சரத்குமார் சார் வீடு திருவான்மியூரைத் தாண்டி இருக்கிறது. ஜெமினி லேப் அங்கிருந்து வெகு தூரம். நேரில் போய் அவரைப் பார்த்து விட்டு வருவது என்பது ஈஸியாக நடக்கக்கூடியது இல்லை. மீண்டும் மீண்டும் போன் செய்ததில் லைன் கிடைத்தது. சரத்குமார் சாரின் உதவியாளர் எடுத்தார்.
"சாரிடம் பேச வேண்டும்'' என்றேன்.
"சார் இப்பத் தான் தூங்கப் போனார். நீங்க காலையில பேசுங்க'' என்றார்.
"தம்பி ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். படப் பெட்டி போயிருச் சுன்னா அவருக்கு போன் பண்ணி சொல்லச் சொன் னாரு. இங்க சிக்கலாயிருச்சு. தயவுசெய்து சாரை எழுப்பி பேசச் சொல்லுங்க தம்பி'' என்று கெஞ்சினேன்.
அவரை எழுப்பி என்னுடன் பேச வைத்தார் உதவியாளர். நடந்த விபரங்களை அவரிடம் சொன்னேன். போனை லேப் மேனேஜரிடம் கொடுக்கச் சொல்லி சரமாரியாக காய்ச்சி எடுத்துவிட்டார் சரத்குமார்.
அவர் பேசுவது எனக்கும் நன்றாகக் கேட்டது.
"என்ன சார் நெனைச்சுக்கிட்டிருக்கீங்க. நான் உங்ககிட்ட மத்தியானம் பேசுனதுக்கு ஓ.கே.ன்னு சொல்லிட்டு இப்ப முடியாதுன்னா என்ன அர்த்தம். முடியாதுன்னா அப்பவே சொல்லியிருக்க வேண்டியதுதானே. இது நியாயமா சார். நான் ஒண்ணும் சும்மா கேக்கலே. என்னோட படம் "ரகசிய போலீஸ்' உங்க லேப்பிலதான் இருக்கு. லியாகத் சார் கொடுக்க வேண்டிய பணத்தை நான் செட்டில் பண்ணாத்தான் நீங்க அதை ரிலீஸ் பண்ண விடுவீங்க. என்னோட பெரிய சொத்தே உங்ககிட்ட இருக்கு. அப்படி இருக்கிறப்ப...'' என்று ஆரம்பித்தவர் அதற்கும் மேலாக குரலை உயர்த்தி பேசப் பேச.. மேனேஜர் முகம் மாறியது.
"இல்ல சார் முதலாளி...'' என்று மேனேஜர் ஆரம்பிக்க...
"முதலாளிகிட்ட நான் பேசவா... இல்ல இப்பவே லேப்புக்கு கிளம்பி வரவா. வேற எதாவது பேப்பர்ல கையெழுத்துப் போட ணுமா?'' என்று ஆவேச மானார்.
அவர் பேசிய அத்தனையும் எனக்காக, என் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக.
"சாரி சார். மன்னிச் சிடுங்க சார்... பண்ணிக் கொடுத்திடுறேன் சார்...'' என்று மேனேஜர் பணிந்து போகும் அளவுக்கு சரத்குமார் சார் எனக்காக கோபப்பட்டார்.
படப்பெட்டிகள் ஒவ் வொரு ஏரியாவுக்கும் போக ஆரம்பித்தது. சென்னை தியேட் டர்களில் ரிலீஸ் பண்ணவேண்டிய பெட்டிகளை காலையில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டேன்.
ஒரு விநியோகஸ்தர் சொன்னார். "இதே லேப்பில் படப்பெட்டியை குடுக்க முடியாம, படத்தை ரிலீஸ் பண்ணமுடியாம கதறி அழுத தயாரிப்பாளர்களை நான் பார்த்திருக்கிறேன். மனம் உடைஞ்சு கண்ணீர் சிந்தின தயாரிப்பாளர்களை பார்த்திருக்கேன். நீங்க சாதிச்சுட்டீங்க. எப்படியோ படத்தை ரிலீஸ்பண்ண ஏற்பாடு பண்ணிட்டீங்க. சரத்குமார் உங்களை காப்பாத்திட்டாரு'' என்று கூறிவிட்டுப் போனார்.
இரவு எல்லாப் பெட்டிகளையும் அனுப்பிவிட்டு நிம்மதியாக டிபன் சாப்பிடலாம் என்று நினைத்தால், பாக்கெட்டில் பணம் இல்லை. வந்த பணத்தையெல்லாம் லேப்பில் கட்டிவிட்டேன். டிபன் சாப்பிடுவதற்கு எனது மேனேஜர்தான் பணம் கொடுத்தார்.
நாளை காலையில் படம் ரிலீஸ். காலையில் மீண்டும் ஜெமினி லேப்பிற்கு வந்து சென்னை தியேட் டர்களுக்கு படப்பெட்டிகளை அனுப்பவேண்டும்.
சில நாட்களாகவே நடைபிண மாக அலைந்தவன். படம் இன்றும் ரிலீசாகாமல் போயிருந்தால் நிஜ மாகவே பிணமாகக்கூட ஆகியிருக்க வேண்டியவன். சரத்குமார் சார் செய்த மாபெரும் உதவியால் நிம்மதியாகத் தூங்கி எழுந்தேன்.
காலையில் சென்னை தியேட் டர்களுக்கு படப்பெட்டிகளை அனுப்ப ஜெமினி லேப்புக்குப் போனேன்.
சென்னையில் உள்ள தியேட் டர்களில் காலைக் காட்சிகள் நடை பெறும்பொழுது தியேட்டர்களுக்கு சென்று படத்தின் ரிசல்ட் எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வேறு. ஆனால்...
"இன்னும் ஒரு லட்சம் கொடுத்தால்தான் சென்னை சிட்டி தியேட்டர்கள் ரிலீசாகும்' என்ற அதிர்ச்சித் தகவலைக் கேட்டு நான் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் ஆகின.
உடனே சரத்குமார் சாருக்கு போன் பண்ண நினைத்தேன். டெலிபோன் ஸ்டிரைக் நடந்து கொண்டி ருந்ததால் லைன் உடனே கிடைக்கவில்லை.
அவரால் தான் தமிழ்நாடு முழுவதும் படம் ரிலீஸ் ஆகியிருக் கிறது. அவரால்தான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று மனம் உடைந்து போயிருந்த நான் சற்று மனம் நிம்மதியாக இருக்கிறேன். அதையும் தாண்டி சொல்வதென்றால் இன்னும் உயிரோடு இருக்கிறேன். அவரை நேரில் சென்று சந்திப்பதற்கு நேரம் இல்லை. அதனால என் மனதில் ஒரு சிந்தனை இப்பொழுது யாரிடமாவது போய் கடனாக ஒரு லட்சம் கொடுங்கள் என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அதனால் நான்கு பேரிடம் போவோம் இருபத்து ஐந்தாயிரம் கொடுங்கள் என்று கேட்போம். நான்கு பேரும் கொடுத்தால் ஒரு லட்சம் வந்து விடும்.
உடனே காரில் கிளம்பினேன். நான் முதலில் போனது நான் உடன்பிறவா சகோதரராக நினைக்கும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்களிடம். "சிவா, சிட்டி பிரிண்ட் அனுப்பணும். 25 ஆயிரம் வேணும்'' என்றேன்.
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஜெமினி லேப் பெயரில் 25 ஆயிரத்துக்கான செக்கை கொடுத்தார். அடுத்து மதர்லேண்ட் பிக்சர்ஸ் அண்ணன் கோவைத்தம்பி அவர்கள், கே.பி. பிலிம்ஸ் பாலு அவர்கள், நான் வசனம் எழுதிய மக்களாட்சி படத்தின் தயாரிப்பாளர் திருப்பூர் செல்வராஜ் ஆகியோரை சந்தித்தேன். அவர்களும் ஜெமினி லேப் பெயரில் இருபத்தையாயிரம் ரூபாய்க்கான செக்குகளை கொடுத்தார்கள்.
ஒரு லட்சம் ரூபாய்க்கான செக்குகளோடு ஜெமினி லேப் சென்று மேனேஜரிடம் கொடுத்தேன். நான்குபேருமே தயா ரிப்பாளர்கள். ஜெமினி லேப்புடன் தொடர்பு இருப்பவர்கள். அதனால் அந்த செக்குகளை மேனேஜர் உடனே ஏற்றுக்கொண் டார். சிட்டி படப்பெட்டி உடனே அனுப்பி வைக்கப்பட்டன.
நானும் உதயம் காம்ப்ளக்ஸில் காலைக் காட்சி பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்து காரில் ஏறி எங்கே போவது என்று டிரைவரிடம் சொல்லவில்லை. என்னை அறியாமலே அழ ஆரம்பித்தேன். சத்தமாக மனம்விட்டு குமுறிக் குமுறி அழுதேன்.
டிரைவர் அதிர்ச்சியாகி... "சார்... சார்… என்னாச்சு சார்'' என்றார் பதட்டத்துடன்.
என்னுடன் இருந்து "ராணி மகாராணி' படத்தால் நான் அடைந்த வேதனைகளை அறிந்தவர் அவர். அவர் கண்களும் கலங்கியதைப் பார்த்தேன். என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "சரத்குமார் சாரைப் பாக்கணும்'' என்றேன். கார் அவர் வீட்டிற்கு விரைந்தது. விரைந்தது என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதற்கே காரணம் அவரைப் பார்க்க வேண்டும் என்று மனம் விரைந்தது. அதனால் கார் விரைந்தது போல எனக்குத் தெரிந்தது. அவரைப் போய்ப் பார்த்ததும் நான் பேசுவதற்கு முன்னால் அவர் கேட்டார் "எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா லியாகத் சார்.''
"உங்களாலதான் முடிஞ்சது'' என்றேன்.
அந்த ஒற்றை வார்த்தைக்குள் எவ்வளவு அர்த்தங்கள் இருந்தது என்பது எனக்குத்தான் தெரியும்.
(வளரும்...)