s

(74) கவுண்டமணி -செந்திலுக்குப் பதில் மணிவண்ணன் -மண்ணாங்கட்டி

"என்ன சார்… பெரிய ஹீரோவை வச்சு பெரிய படம் பண்ணலாம்னு சொன்னீங்க. இப்போ ஜனகராஜை வச்சு பண்ணச் சொல்றீங்களே?'' என்றேன்.

"ஓடற படம்தான் பெரிய படம். கதை நல்லா இருந்தா ஜனகராஜ் நடிச்சாலும் ஓடும். நல்லா இல்லேன்னா ஜாக்கிசான் நடிச்சாலும் ஓடாது'' என்றார் என்னை வைத்துப் படம் பண்ண விரும்பிய டி.எஸ்.சேதுராமன். "உங்கள நான் விடற மாதிரி இல்ல'' என்றும் சொன்னார்.

Advertisment

சொன்னது "அவர்' அல்ல "விதி' என்பது பின்னால்தான் தெரிந்தது.

"சரி தம்பி. குஷ்பு இப்ப டாப்ல இருக்காங்க. அவங்கள வச்சு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி கதை பண்ணுங்க'' என்றார்.

"மொதல்ல குஷ்பு மேடத்தைப் பார்த்து பேசிட்டு வர்றேன். அவங்க ஓ.கே.ன்னா பண்ணலாம்'' என்றேன்.

Advertisment

குஷ்புவை சந்தித்தேன். அவர் கேட்ட சம்பளத்தை டி.எஸ்.சேதுராமனிடம் வந்து சொன்னேன். அவர் கையில் வைத்திருந்த சிகரெட்டை பதறிப் போய் கீழே போட்டார்.

"அவ்வளவா கேக்கறாங்க''

"மார்க்கெட் இருக்குல்ல. கேப்பாங்கள்ல சார்''

"வேணாம் தம்பி. வேற ஹீரோயின் பார்ப்போம்''

"சார்... "கிழக்குச் சீமையிலே' படம் அருமையா போய்க் கிட்டிருக்கு. ராதிகா மேடம் அசத்தியிருக்காங்க. அவங்கள வச்சுப் பண்ணலாமா''

"நல்ல ஐடியா தம்பி. அவங்களைப் போய்ப் பார்த்து பேசிட்டு வாங்க''

"இல்ல சார். முதல்ல அவங்களுக்கு ஏத்த மாதிரி கதை பண்ணிக்கிறேன். கதையோட போய் பார்த்துப் பேசுனாதான் உடனே ஓ.கே. ஆகும்'' என்றேன்.

சம்மதித்தார்.

ராதிகா மேடத்தை மனதில் வைத்து மூன்றே நாளில் நான் உருவாக்கிய கதைதான் "ராணி மகாராணி'. "நவராத்திரி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்திருப்பார். அதைப்போல "ராணி மகாராணி'யில் ராதிகா மேடத்திற்கு பல வேடங்கள். போய் கதையைச் சொல்லி கால்ஷீட் கேட்டேன்.

ராதிகாவிற்கு என் மீது நம்பிக்கையும் அதிகம், அன்பும் அதிகம். உடனே சம்மதித்தார். அந்த நேரத்தில் ஒரு தெலுங்கு படத்திற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந் தார்கள். அவர்களுக்கு கொடுக்காமல் அவர்கள் தருவதாகச் சொன்ன சம்பளத்தை விட குறைவான சம்பளத்தில் நடிக்க சம்மதித்தார் ராதிகா. எனக்காக சம்பளத்தைக் கூட குறைத்துக்கொண்டார்.

அதை டி.எஸ்.சேதுராமனிடம் வந்து சொன்னேன். "இன்னும் கொஞ்சம் சம்பளம் குறைச்சிக்கலாமே'' என்றார்.

எனக்குக் கோபம் வந்தது. "சார்… அவங்க உங்களுக்குப் பழக்கமே இல்ல. ஓப்பனா சொல்லப் போனா உங்களைப் பத்தி நல்ல அபிப்பிராயம் இல்ல. எனக்காக சம்மதிச் சிருக்காங்க. அட்வான்ஸ் குடுத்தீங்கன்னா போய்க் கொடுக்கிறேன். இல்லேன்னா நாம இப்ப படம் பண்ணவேண்டாம்'' என்றேன்.

ss

அதாவது விதியை மதி வெல்லப் பார்த்தது. ஆனால் விதி விழித்துக் கொண்டது.

"இல்ல...… இல்ல… படம் பண்ண வேண்டாம்னு நீங்க சொல்லக்கூடாது. அட்வான்ஸ் தர்றேன். நீங்களே போய்க் கொடுத்திடுங்க'' என்றார்.

ராதிகா கேட்ட தொகையில் பாதிதான் அட்வான்ஸாக கொடுத்தார். அதுவே எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தேன்.

"ஆரம்பமே சரியா இல்லியே'' என்றார் ராதிகா.

எனக்காக அதையும் வாங்கிக்கொண்டார்.

ஹீரோவாக நடிப்பதற்கு நாசர் சாரை போய்ப் பார்த்து கதை சொன்னேன்.

"ராதிகாவுக்காக கதை பண்ணியிருக்கீங்க. இருந்தாலும் நல்லா இருக்கு. என் கேரக்டரும் பிடிச்சிருக்கு. ஆனா ஒரு விஷயம். நான் ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறேன். அது உறுதியாயிடுச்சுன்னா என்னால பண்ண முடியாது, தப்பா நெனைச்சுக்காதீங்க'' என்றார்.

ராதிகாவிற்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் அப்படிச் சொல்கிறாரோ என்று நினைத்தேன். அந்த ஈகோ அவரிடம் இல்லை என்பதை உணர வைத்தார்.

அவர் படம் இயக்குவது உறுதியானதும் என்னை அழைத்தார்.

"ஒரு நல்ல கதையில் நடிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். படம் வெற்றியடைய வாழ்த்துகள்'' என்றார்.

மறுநாளே நெப்போலியன் அவர்களைப் போய்ப் பார்த்து கதை சொன்னேன். அவர் என்னை கட்டியணைத்துக் கொண்டார். கதைக்காக மட்டுமல்ல. என் மீது கொண்ட பாசத்தாலும்.

ஒரு வாரம் அவரை சந்தித்துக்கொண்டே இருந்தேன். அவர் நடிக்கும் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவேன். அங்கு அவருடன் சாப்பிடுவேன். அவரைப் பார்க்க வீட்டுக்குப் போவேன். அங்கும் அவருடன் சாப்பிடுவேன். சாப்பாடு கொடுத்தார். ஆனால் கால்ஷீட் கொடுக்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் நியாயமாக இருந் தது.

"லியாகத் சார். நான் இப்பத்தான் தனியா ஹீரோவா நடிக்கிறேன். அதுவும் ஆக்ஷன் ஹீரோவா நடிக்கிறேன். உங்க கதையிலே ராதிகா மேடத்துக்குத்தான் நல்ல நல்ல சீனா வச்சிருக்கீங்க. அவங்க அசத்திருவாங்க. அவங்க முன்னால நான் காணாம போயிருவேன். அதனால நான் நடிக்கல'' என்றார்.

ss

வேறு ஹீரோ பார்க்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தேன்.

தயாரிப்பாளர் டி.எஸ்.சேதுராமனிடம் ஒரு முக்கியமான கேரக்டருக்கு அண்ணன் கவுண்டமணி அவர்களும், ராதிகாவின் உதவியாளர் போல வரும் கேரக்டருக்கு செந்தில் அவர்களும் வேண்டும் என்று கேட்டேன்.

"அவர்கள் வாங்கும் சம்பளத்தை என்னால் கொடுக்க முடியாது. அதனால் வேறு நடிகரைப் பாருங்கள்'' என்றார்.

கவுண்டமணிக்குப் பதிலாக யாரைப் போடுவது? என்று நான் யோசித்தபோது என் மனதிற்குள் வந்தவர் மணிவண்ணன். அப்பொழுது அவர் நிறைய படங்களில் நடித்திருக்கவில்லை. புகழ்பெற்ற நடிகராகவும் இல்லை. அவரைப் போய்ப் பார்த்தேன். நான் அவருடைய வசனத்தை ரசிப்பவன். அவர் என்னுடைய வசனத்தை ரசிப்பவர். அதனால் எங்களுக்குள் ஒரு பிணைப்பு உண்டு. "ராணி மகாராணி' படம் சம்பந்தமான அத்தனை விஷயங்களையும் சொன்னேன். அண்ணன் கவுண்டமணி நடிக்கவேண்டிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார்.

"ஹீரோவுக்கு என்ன செய்யப் போகிறாய். நான் ஒரு ஹீரோ சொல்லவா?'' என்றார்.

"சொல்லுங்கள்'' என்றேன்.

"ரகுவரன்''

"ரகுவரனா?'' என்றேன் குழப்பத்துடன்.

அந்த ஒரு கேள்வி யில் பல அர்த்தங்கள் இருப்பதை அவர் புரிந்துகொண்டார்.

"லியாகத்...… ரகுவரன் முன்ன மாதிரி இல்ல. இப்போ நான் டைரக்ட் பண்ணிக்கிட்டிருக்கிற "வீரப்பதக்கம்' படத்துல நடிச்சுக்கிட்டிருக்கார். நல்ல ஒத்துழைப்பு கொடுக்குறாரு. ஆள் வேற ஜம்முன்னு அழகா இருக்காரு'' என்றார்.

"மணிவண்ணன் சாரே இவ்வளவு தூரம் பாராட்டுகிறாரே' என்று நானும் சம்மதித்தேன்.

ரகுவரனுக்கு, மணிவண்ணன் போன் பண்ணிச் சொன்னார். நான் நேரில் போய்ப் பார்த்து கதை சொல்லி அவரும் கால்ஷீட் தேதிகளை கொடுத்துவிட்டார்.

செந்தில் அண்ணன் கேரக்டருக்கு கே.பாக்யராஜ் சார் படத்தில் நடித்திருந்த மண்ணாங்கட்டியை முடிவு செய்தேன்.

படத்தில் ஒரு இளம் காதல் ஜோடி வரு கிறது. அதற்காக அஜித் சாரை மனதில் வைத் திருந்தேன். அது அவருடைய ஆரம்ப காலம்.

விஜயகாந்த் நடித்த "சத்ரியன்' படத்தை இயக்கிய கே.சுபாஷ் டைரக்ஷனில் "பவித்ரா' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் அஜித். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று பார்த்தேன். அழகாக இளம் சூரியன் போல இருந்தார். அவர் அசுர வளர்ச்சி யடைவார் என்பது அவரின் அழகு முகத்தில் தெரிந்தது. "பார்க்க.. பார்க்க' பிடிப்பது போன்று இல்லாமல்... பார்த்ததுமே பிடித்துப் போகிற வராக இருந்தார் அஜித்.

"நான் மணிரத்னம் தயாரிக்கிற "ஆசை' படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். அந்தத் தேதி இல்லாம வேற தேதியா இருந்தா உங்க படத்துல நடிக்கிறேன்'' என்றார் அஜித்.

டி.எஸ்.சேதுராமனிடம் "ஷூட்டிங் தேதியை அஜித்திற்கு தகுந்தது போல கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாமா?'' என்று கேட் டேன்.

"அதெல்லாம் மாற்ற முடியாது. அஜித் வேண்டாம்'' என உறுதியாகச் சொன்னார் தயாரிப்பாளர்.

(வளரும்...)