dd

(70) சிவாஜியின் அரசியல்!

"மன்னவரு சின்னவரு' படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கியது.

சிவாஜி சாரிடம் "வசனத்தை படிக்கவாண்ணே'' என்றேன்.

Advertisment

"நீ படிச்சுக் கிழிச்சது போதும்... நானே கிழிக்கிறேன் கொடு'' என்றார் சிவாஜி.

அந்தக் காட்சிக்குரிய வசன பேப்பர்களைக் கொடுத்தேன். கையில் வாங்கிப் பார்த்தார். படிப்பதற்கு முன் கேட்டார்.

"ஏண்டா பாய்... இந்தப் படத்துல நான் மட்டும்தான் நடிக்கிறேனா?''

Advertisment

அவர் எதற்காகக் கேட்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமல், "இல்லேண்ணே அர்ஜுன், சௌந்தர்யா, கே.ஆர்.விஜயாம்மா, எஸ்.எஸ்.சந்திரன், விசு சார் இன்னும் நிறைய பேரு இருக்காங்கண்ணே'' என்றேன்.

"ஏண்டா எடைக்குப் போட்டா ஒரு கிலோ இருக்கும்போல இருக்கு. நான் ஒருத்தன் பேசி முடிக்கிறதுக்குள்ள படம் முடிஞ்சிருமேடா'' என்றார், வசன பேப்பர்களை வெயிட் பார்ப்பதுபோல தூக்கிக் காட்டிக்கொண்டே. அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது. நான் நிறைய எழுதியிருந்ததை கிண்டல் செய்கிறார் என்று.

"இல்லண்ணே… நான் குறைவாத்தான் எழுதியிருந்தேன். டைரக்டர் உங்க ரசிகராம். அதனால வசனத்தை இன்னும் ஏத்துங்க... ஏத்துங்கன்னு சொல்லி இவ்வளவு எழுத வச்சிட்டாரு'' என்றேன்.

"இந்தா நீயே படி'' என்று டயலாக் பேப்பரை கொடுத்தார். படித்தேன்.

"நல்லாத்தாண்டா எழுதறே.… சரி ஷாட்ல வச்சுக்கிறேன்'' என்றார். ஏதோ சொல்ல வந்தவர், என்னிடம் சொல்லாமல் ஷாட்டுக்கு வந்தார்.

"டைரக்டரே… இவன் டயலாக்க படிச்சான். இவ்வளவு பேசுனா தியேட்டர்ல இருந்து எந்திரிச்சுப் போயிருவாங்க. தமிழ்ல இப்ப ட்ரண்ட் மாறிப் போச்சு. குறைச்சலா எழுதணும். இவன்தான் அறிவில்லாம நிறைய எழுதறான்னா நீங்க குறைச்சு எழுதச் சொல்ல வேணாமா?'' என்றார்.

என்னைத் திட்டுவது போல டைரக்டரைத் திட்டினார் சிவாஜி. "இனிமே இவனை நிறைய எழுத விடாதீங்க'' என்றார். அந்த ஷாட் ஒரே டேக்கில் ஓ.கே. ஆனது. முதன்முதலில் எனது வசனத்தை நடிகர் திலகம் சிவாஜி பேசினார். அந்த நேர மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

நடிகர் திலகம் என்னைத் திட்டுவது போல திட்டியும், டைரக்டர் மாறவில்லை. இரண்டாவது நாள் ஷூட்டிங். நான் எழுதி கொடுத்ததைவிட இன்னும் கொஞ்சம் அழுத்தமா வேணும் என்று என்னை நிறைய எழுத வைத்தார்.

சிவாஜி வந்தார். டயலாக் பேப்பரை எடுத்துக்கொண்டு அவரிடம் போனேன்.

வாங்கிப் பார்த்தார். பத்து பக்க டயலாக்.

"ஏண்டா பாய்… நீ திருந்தலியா? இல்ல அவன் திருந்தலயா?'' என்றார் கோபமாக.

அவரை விட வயது குறைந்தவராக இருந்ததால் டைரக்டரை உரிமையோடு அதுவும் கோபத்தில் அப்படிச் சொன்னார்.

"நீங்க சொன்னவுடனேயே நான் திருந்திட் டேண்ணே'' என்றேன்.

"அப்ப அவன் இன்னும் ரசிகனாகத்தான் இருக்கான், டைரக்டரா இல்ல'' என்றார்.

"இன்னிக்கும் என்னைத் திட்டுற மாதிரி அவரைத் திட்டப் போறீங்களோண்ணே?'' என்றேன்.

"இல்ல பாய். டைரக்டர்தான் ஒரு படத்துக்கு ஜீவன். அதை நாம மதிக்கணும். நீ டயலாக்க படி'' என்றார். பத்து பக்க டயலாக்கை படித்தேன். யோசித்தார்.

"குறைச்சு எழுதவாண்ணே'' என்றேன்.

"வேணாம். டைரக்டர்கிட்ட நீ எதுவும் சொல்ல வேணாம். ஷாட்ல நானே பேசிக்கிறேன்'' என்று ஷாட்டுக்கு வந்தார்.

"டைரக்டர் சார். இந்த வசனத்தை ஒரு ஷாட்ல எடுத்திரலாம்'' என்றார்.

aa

டைரக்டரும் "ஓ.கே.'' என்றார்.

"ஸ்டார்ட் கேமரா'' என்றதும்...

நான் எழுதிய பத்து பக்க வசனத்தை சிவாஜி பேசவில்லை.

அந்தக் காட்சியின் அழுத்தமும் அழகும் கெடாமல் அவரே ஆழமாகப் பேசி முடித்தார். முடித்துவிட்டுக் கேட்டார். "இதுதான பாய் நீ சொல்ல வந்தது. அதைக் கரெக்டா சொல்லிட்டேனா?'' என்றார்.

அந்த அற்புதக் கலைஞனின் ஆற்றலைக் கண்டு வியந்துபோனேன். அன்று படப்பிடிப்பு முடிந்ததும் அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட் டலுக்கு வரச்சொன்னார். நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவரே கார் அனுப்பி வைத்தார். அன்று இரவு அவருடன் சாப்பிட்டேன். கமலா அம்மாவும் அவருடன் இருந்தார்.

பத்து நாட்கள் பெங்களுரில் படப்பிடிப்பு நடந்தது. பத்து நாட்களில் அவர் வாயிலிருந்து எத்தனை முறை "டேய் பாய்' என்று கூப்பிட்டி ருப்பார் என்று எனக்கே தெரியாது.

ஷாட் முடிந்ததும் என் தோளில் கை போட்டுக்கொண்டு "வா பாய்' என்று அழைத்துப் போவார். பல விஷயங்கள் பேசுவோம். அவருடன் பேசப் பேசத்தான் தெரிந்தது நான் கேள்விப்பட்ட சிவாஜி வேறு,… நான் பழகிக் கொண்டிருக்கிற சிவாஜி வேறு என்று. அவ்வளவு விஷயங்கள் பேசினார். ஒரு சில நாட்களிலேயே என் மீது அவருக்கு ஒரு பாசம். அவர் மீது எனக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டது. ஒருநாள் உரிமையோடு அவரிடம் சொன்னேன்.

"அண்ணே… தப்பா நெனச்சுக்காதீங்க. உங்களுக்கு சினிமாவுல மட்டும்தான் நடிக்கத் தெரியுது. வெளியில நடிக்கத் தெரியல.''

"ஏண்டா...…ஏன் வெளியில் நடிக்கணும்?''

"அண்ணே… வெளியிலன்னு நான் சொன்னது பொது வாழ்க்கையில. குறிப்பா அரசியல்ல''

"ஏண்டா பாய் அரசியல் என்ன சினிமாவா நடிக்கிறதுக்கு?'' என்றார். குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.

பழகிய சில நாட்களிலேயே என்னிடம் மனம் விட்டு பல விஷயங்கள் பேசியதால் நானும் அவரிடம் பயமில்லாமலே பேசினேன்.

"அண்ணே… நீங்க தப்பா நெனைக்கக்கூடாது. நீங்க எனக்கு கொடுத்த உரிமையில் பேசுறேன். 1982ஆம் ஆண்டு உங்கள ராஜ்யசபா எம்.பி.யா ஆக்குனாங்க... கரெக்டா.''

"ஆமா!… காங்கிரஸ் கட்சிக்காக நான் செஞ்ச வேலைகள். பிரச்சாரம், விசுவாசம் இதுக்காக ஆக்குனாங்க.''

"நீங்க டெல்லியில இருந்து சென்னைக்கு வந்த அன்னிக்கு ஓப்பன் ஜீப்ல ஊர்வலமா வந்தீங்க''

"ஆமா வந்தேன்''

"தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ஆபீஸ் பக்கத்துல இருந்து நானும் பார்த்தேன். ரோட்டுல இரண்டு பக்கமும் மக்கள் கூட்டம் உங்களைப் பாக்கறதுக்காக கூடியிருந்தாங்க. மத்த எடத்துல எப்படியோ நான் பார்த்தப்ப ஜனங்க உங்களைப் பார்த்து வணக்கம் சொன்னாங்க. கை அசைச்சாங்க. ஆனா நீங்க கும்பிடாம கை அசைக்காம போனீங்க'' என்றேன்.

சிறிதுநேரம் யோசித்தார். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வு. நினைவுக்கு வந்ததுபோல பேசினார்.

"ஆமா பாய். ஞாபகத்துக்கு வருது. மத்தியான நேரம் சாப்பிடல. பசியோட வர்றேன். சரியான வெயில் வேற. கண் ணெல்லாம் சூரிய வெளிச்சத்துல கூசுது. அதனால அப்படி யிருந்திருப்பேன்... சரியா ஞாபகம் வச்சிருக்கியே'' என்றார்.

"அண்ணே… ஜனங்க என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா? அவரைப் பார்க்க நாம ஆர்வமா நிக்கிறோம். அவரு சந்தோஷமா நம்மளைப் பார்த்து கை அசைக்காம சிரிக்காம போய்கிட்டிருக்காரு அப்படின்னு பேசிக்கிட்டாங்க'' என்றேன்.

என்னைக் கூர்ந்து பார்த்தார்.

"அண்ணே… அரசியலுக்கு வந்துட்டா,… அதுவும் தலைவர் மாதிரி ஆயிட்டா சொந்த விஷயங்களை, பிரச்சினைகளை வெளில காட்டிக்கக்கூடாது. நம்மளோட ஒவ்வொரு செயலும் மக்களுக்கு புடிக்கணும். அட்லீஸ்ட் புடிக்கிற மாதிரி நடிக்கணும்'' என்றேன்.

"நல்லவங்க மாதிரி நடிக்கச் சொல்றியா?''

"இல்லண்ணே… தலைவரா இருக்கிறவங்க நல்லவங்களா இருக்கணும். இல்லேன்னா இருக்கிற மாதிரி நடிக்கணும்'' என்றேன்.

"இப்ப சிலபேரைத் தவிர, நிறையபேரு நல்லவங்க மாதிரி நடிச்சுக்கிட்டுத்தான்டா இருக்காங்க. ஆமா இவ்வளவு தெளிவா பேசுறியே எப்படி?'' என்றார்.

"சிறு வயசுல இருந்தே அரசியலை பார்த்துக்கிட்டிருக் கேண்ணே… நான் எழுதுன படங்கள்ல தவறுகளை துணிச்சலா எழுதியிருக்கேண்ணே.''

அமைதியா என்னையே பார்த்தார்.

"அண்ணே இன்னொண்ணு சொல்லட்டுமா? 1988ஆம் ஆண்டு "தமிழக முன்னேற்ற முன்னணி'ங்கிற பேர்ல தனியா கட்சி ஆரம்பிச்சீங்க.. நீங்க அந்தத் தப்பை பண்ணியிருக்கக் கூடாதுண்ணே. சினிமா வேற அரசியல் வேறேண்ணே'' என்றேன்.

அவர் முகம் சட்டென்று வாடியது.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்