alikhan

(63) "ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம்'' என சொல்லச் சொன்னார் விஜயகாந்த்!

கோபமடைந்த சத்யராஜ் பட தயாரிப் பாளரையே மாற்றிவிட்டார்.

அந்தப் படத்தை தயா ரிக்கும் தயாரிப்பாளர் என்னைப் பார்க்க வந்ததைச் சொல்கிறேன். பதினோரு மணி இருக்கும். பானுப்ரியாவின் சகோதரர் கோபி வந்தார். "சார் ரொம்ப மகிழ்ச்சி. சத்யராஜ் சார் போன் பண்ணாரு. நம்ம கம்பெனியில் நீங்க படம் பண்றீங்க'' என்று கைகொடுத்தார்.

Advertisment

கே.பி. பிலிம்ஸ் பாலு பண்ண வேண்டிய படம். பானுப்ரியாவின் சொந்தக் கம்பெனிக்கு மாறியது. கம்பெனி மட்டும் மாறவில்லை. படத்தின் பெயரும் மாறியது. "மந்திரிகுமாரி' என்றிருந்த பெயர் "கட்டளை' ஆனது.

திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்டு வசனங்களையும் எழுதிவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். அதை சத்யராஜிடமும் சொன்னேன்.

அவர் சொன்னார். "இல்ல லியாகத் சார். திரைக்கதையை நீங்க எப்படி மாத்தினாலும் சில சீன்களையும், ஒரு சண்டைக் காட்சியையும் ஒரு பாடல் காட்சியையும் மாற்றவே முடியாது. அதை முதல்ல முடிச்சிருவோம். அந்த ஷெட்யூல் முடிஞ்சதும் ஒரு கேப் விடுவோம். நீங்க உக்காந்து திரைக் கதையை முழுமையா முடிச்சிடுங்க. ஷூட்டிங்க சீக்கிரம் ஆரம்பிச்சிருவோம்.'' என்றார்.

Advertisment

அவரே நம்பிக்கையோடு சொல்லிவிட்ட பிறகு நான் மறுக்கவில்லை. பத்து நாள் படப்பிடிப்பிற்கான ஷெட்யூல். என் உதவி யாளர்களை வைத்து தயார் செய்தேன். அடுத்து இளையராஜாவை சந்தித்து பாடல் வாங்க வேண்டும் என்று நினைத்தபொழுதுதான், அந்த இனிப்பான செய்தியை "ஜாக்பாட்' சீனிவாசன் சார் சொன்னார்.

ஜாக்பாட் சீனிவாசன் அப்பொழுது பெரிய தயாரிப்பாளர். சூப்பர் ஸ்டார் நடித்த "தர்ம யுத்தம்', உலக நாயகன் கமல் சார் நடித்த "மீண்டும் கோகிலா' போன்ற படங்களையெல்லாம் தயாரித்தவர். மிகவும் நேர்மையானவர், கண்டிப்பானவர். "கட்டளை' படத்தின் தயாரிப்பு பொறுப்பினை அவரிடம் கொடுத்திருந்தார்கள்.

"தம்பி, உங்க படத்துக்கு மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா?...… ஏ.ஆர்.ரஹ்மான்.… அட்வான்ஸ் குடுத்துட்டோம்'' என்று அளவிட முடியாத மகிழ்ச்சியோடு சொன்னார். அது அவருக்கு மகிழ்ச்சியான செய்தி. எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. காரணம்... அதுவரை நான் இயக்கிய, எழுதிய படங்களுக்கு எல்லாமே அண்ணன் இளையராஜா தான் இசை. ஏ.ஆர்.ரஹ்மான் என்றதும் சத்யராஜுக்கு படத்தின் மீது இன்னும் நம்பிக்கை அதிகமானது.

"லியாகத் சார், நல்ல காம்பினேஷன். எல்லாமே நல்லா அமையுது. ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட ஒரு சாங் கேட்டு வாங்கிட்டு ஷூட்டிங் போயிரலாம். நான் சொன்ன மாதிரி பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் உங்களுக்கு இருபது நாள் டைம் தர்றேன். திரைக்கதையை சரிபண்ணிடுங்க அசத்திடுவோம்'' என்றார்.

தயாரிப்பாளர் கோபியும், "ஏ.ஆர்.ரஹ்மான் கிடைச்சிட்டாரு'' என்று என் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

இந்த மகிழ்ச்சிக்கெல்லாம் காரணம், அப்பொழுது தமிழ்நாட்டில் ஏ.ஆர்.ரகுமான் என்ற இசைப்புயல் மையம் கொள்ள ஆரம்பித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் கால்ஷீட் கிடைத்தால் எளிதாக இயக்குநராகிவிடலாம் என்ற நிலைமை. தயாரிப் பாளர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள். விநி யோகஸ்தர்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டினார்கள். அப்படிப்பட்ட எழுச்சி யான நேரத்தில்தான் மகிழ்ச்சியான அந்த செய்தி எனக்கு சொல்லப்பட்டது.

aa

என் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்கிற செய்தியை விஜயகாந்த்திடமும், இப்ராகிம் ராவுத்தரிடமும் போய்ச் சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, அதிர்ச்சியடைந் தார்கள் என்பது அவர்களது முகத்தில் தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"என்னண்ணே… எதுவுமே சொல்லாம இருக்கீங்க'' என்றேன்.

ராவுத்தர் ஆரம்பித்தார்.

"அண்ணே… நம்ம எல்லா படங்களுக்கும் இசை இளையராஜா அண்ணன்தான்.… இப்ப நாம எடுத்துக்கிட்டிருக்கிற படத்துக்குக்கூட இளையராஜா அண்ணன்தான். அதுல நீங்க டைரக்ட் பண்ற படமும் இருக்கு. இளையராஜா அண்ணன் தப்பா நெனச்சிருவாரு. நம்ம படங்களும் தப்பாப் போயிரும்ணே'' என்றார் படபடப்போடு.

"அண்ணே… நமக்கு எல்லாமே இளையராஜா அண்ணன்தான்னு எனக்கும் தெரியும்ணே. அவரு என்னை ஒரு தம்பியா நெனச்சு அன்பு வச்சிருக்காரு. ஏ.ஆர்.ரஹ்மான் சாரை கேட்கப் போனதோ, அவருக்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனதோ எதுவுமே எனக்குத் தெரியாது. நான் மறுக்கமாட்டேங்கிற நம்பிக்கையில, அவங்களுக் கிருந்த ஆர்வத்துல என்கிட்ட கேக்காமலேயே முடிவு பண்ணிட்டாங்க. அதை எப்படிணே வேண்டாம்னு சொல்றது'' என்று சொல்லிவிட்டு விஜயகாந்த்தின் முகத்தைப் பார்த்தேன்.

"அண்ணே...… இளையராஜா அண்ணனை நாம மியூசிக் டைரக்டரா மட்டும் நினைக்கல. அதையும் தாண்டி நினைக்கிறோம், மதிக்கிறோம். உங்ககிட்ட அவர் பழகறதப் பார்த்து நானே சந்தோஷப்பட்டிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி உங்கள அவரு தம்பியாத்தான் நினைக்கிறாரு. அவரை விட்டுட்டு ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட போனா, நீங்க மட்டும் போனதா நெனைக்க மாட்டாரு, விஜயகாந்த் காம்பவுண்டே போயிருச்சுன்னு நெனைச்சிருவாருணே'' என்றார் விஜயகாந்த். அவர் நினைத்ததில் நியாயம் இருந்தது. அந்த நேரத்தில் அண்ணன் இளையராஜாவின் பாடல்களால் தங்கள் படத்தை வெற்றிப் படமாக்கியய பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஒவ்வொருவராக இளைய ராஜாவை விட்டு ஏ.ஆர்.ரகுமானிடம் போய்க் கொண்டிருந்தார்கள்.

அதற்குக் காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனமே வலிக்கும்போது இளையராஜாவின் மனம் மட்டும் வலிக்காதா? வலித்தது. அது எனக்கும் தெரிந்தது. என்னிடமே அவருடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டி ருக்கிறார் உரிமையோடு. அவருடைய வலி என்னையும் பாதித்தது. எனக்கும் வலித்தது. எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்பதால் பெயரைச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். முதலில் இளைய ராஜாவை விட்டு ஏ.ஆர்.ரஹ் மானிடம் போனவர்கள் இயக்குநர் சிகரம் பாலசந்தரும், மணிரத்னமும்.

அதைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் உயர்வு பெற்றவர்கள் சிலரும் போனார்கள். எத்தனை படங்கள், எத்தனை பாடல்கள், எப்படிப்பட்ட பின்னணி இசை… இவையெல் லாம் கொடுத்து மக்களின் மனம் கவர்ந்தவர் மனம் கலங்கிப் போனதும் தவறில்லை... மனம் கொதித்துப் போனதும் தவறில்லை. அவர் இசைக்கடவுளாக இருந்தார். ஆனால் இயற்கையில் அவரும் மனிதர்தான். அவரது இடத்தில் நாம் இருந்தாலும் அப்படித்தான் இருப்போம். அதைவிட அதிகமாகவே கொதித்துப் போவோம்.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் எனக்கு அப்படிப்பட்ட சிக்கல் வந்தது.

என்னுடைய "கட்டளை' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் என்பதை விஜயகாந்த் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் ஆகியோர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சத்யராஜின் படத்தை இயக்க ஒப்புக்கொண்டதையும் அவர்களின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதை அவர்கள் வெளிப் படையாகச் சொல்லவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் விஷயத்தை வெளிப்படையாகவே சொன்னார்கள்.

"ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம்னு சொல்லிடுங்கண்ணே''.

விஜயகாந்த் அவர்களின் முகத்தையே பார்த்தேன். என் உள்மனம் சொல்லியது. உன்னைக் கடல் அளவு நேசிப்பவர். ஆகாயத்தைப் போல அன்பு செலுத்துபவர். அவர் சொல்தானே உனக்கு சுவாசம்.… அதுதானே உண்மையான பாசம்.

என் உள்மனம் சொல்லியது... வார்த்தைகளாக வெளிவந்தது.

"விஜிண்ணே,… உங்களை மீறி எதையும் செய்யமாட்டேண்ணே'' என்றேன்.

விஜயகாந்த்துக்காகவும் இப்ராகிம் ராவுத்தருக்காகவும் இரண்டு ரஜினி படங்களை இழந்தேன். வேறு சில வாய்ப்புகளையும் இழந்தேன். இப்பொழுது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் வாய்ப்பையும் இழக்க முடிவு செய்துவிட்டேன்.

என்னுடைய கருத்தை தயாரிப்பாளர் கோபியிடமும், ஜாக்பாட் சீனிவாசனிடமும் சொன்னேன்.

"ஏ.ஆர்.ரஹ்மான் வேண் டாம்... இளையராஜா அண்ணன்தான் வேண்டும்.''

நான் சொன்னதுமே கொதித்துப் போய்விட்டார்கள். "உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா...'' என்று கோபமான ஜாக்பாட் சீனிவாசன்... "என்னுடைய சினிமா அனுபவத்துல சொல்றேன். உனக்கு எல்லாமே நல்லா அமையுது. நீயே அதை கெடுத்துக்க நினைக்கிற. இது நீயா எடுத்த முடிவு மாதிரி தெரியல. யார் சொல்லியோ நீ பேசறே'' என்றார்.

இருவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். "எனக்கு இளையராஜாதான் வேண்டும்.''

"உங்களுக்கு வந்த அதிர்ஷ்டத்தை நீங்களே வேண்டாங்கிறீங்க. நாங்க என்ன சொல்றது. சத்யராஜ் சார்கிட்ட பேசுங்க.… அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் எங்களோட முடிவு'' என்றார்கள்.

(வளரும்...)