aa

(46) MGR and SPB!

Advertisment

ஆர்.கே.செல்வமணி ஒரு தீவிரவாதி -எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவதில் படுதீவிரமாக இருப்பவர். அவர் ஒரு எதார்த்தவாதி -அவரைப் பற்றிய எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், அது எதிர்மறை விமர்சனங்கள் என்றாலும் அதை அலட்சியப்படுத்திவிட்டு எளிதாகக் கடந்து செல்பவர்.

அவர் ஒரு அரசியல்வாதி -அவருக்குள்ளே அப்பொழுதே அரசியல் சிந்தனைகள் கொட்டிக் கிடந்தது. காரணம், அவரது குடும்பமே திராவிட உணர்வால் ஈர்க்கப்பட்ட குடும்பம்.

"புலன் விசாரணை' படத்திற்கு அவர் இயக்குநர், நான் வசனகர்த்தா என்ற உறவையும் தாண்டி, நாங்கள் இருவரும் அன்பால், பாசத்தால் இணைந்ததற்கு இருவருடைய சிந்தனைகளும் ஒரே மாதிரியாக இருந்ததும் ஒரு காரணம். அதில் மிகமிக முக்கிய காரணம், இருவரும் திராவிட உணர்வு கொண்டவர்கள் என்பது தான். இன்று அவருக்கு எல்லா அரசியலும் தெரியும். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் தெரியும். ஆர்.கே.செல்வமணி என்றால் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பிடிக்கும்.

Advertisment

அப்படி அவர் தன்னை ஆக்கிக்கொண்டதற்கு காரணம்... இன்று அவர் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர். திரைப்படத் துறையில் இருக்கும் 23 சங்கங்களின் தலை வர். எளிய குடும்பங்களை ஏற்றிவிடுவதற்காக, தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி பெற, மருத்துவ உதவி பெற, குடியிருக்க வீடுகள் பெற... உழைத்துக்கொண்டிருப்பவர்.

தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவருடைய துணைவியார் ரோஜா, இன்று ஆந்திராவில் அமைச்சர். ஆந்திர அரசியலை கலக்கிக்கொண்டிருப்பவர். அங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துகொண்டிருப்பவர். அப்படி அவர் உருவானதில் ஆர்.கே.செல்வமணிக்கு பெரும் பங்கு உண்டு.

"ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்' என்று சொல்வதை கொஞ்சம் மாற்றி, "ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்கிறார்' என்று சாதித்துக் காட்டியவர். இதை செல்வமணி ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ, என் பார்வையில் சில கருத்துக்களைச் சொல்கிறேன்.

Advertisment

திருமதி ரோஜா துணிச்சலான அரசியல்வாதியாக, சுறுசுறுப் பான அரசியல்வாதியாக, தன்னை நம்பியவர்களின் நலனுக்காக உழைக் கின்ற அரசியல்வாதியாக அங்குள்ள மக்களால், அவருடைய தொகுதி மக்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் ஆர்.கே.செல்வமணியிடம் இருக்கும் அத்தனை சிறப்புகளும் அவரிடம் கலந்துவிட்டது என்பதுதான் உண்மை. இதைச் சொல்லும்போது எனக்கு, முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் வரலாறு நினைவுக்கு வருகிறது.

தனது அன்பு மகளை செதுக்கி, செதுக்கி அசைக்க முடியாத அரசியல் தலைவியாக உருவாக்கியவர் ஜவஹர்லால் நேரு. நேருவிடம் கற்ற பாடம்தான், இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக இந்திராகாந்தியை மாற்றியது. அதேபோல ஆர்.கே.செல்வமணியிடம் கற்ற பாடம்தான், ரோஜாவை அரசியலில் ஒரு இரும்புப் பெண்மணியாக மாற்றியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தங்கத்தில்தான் நகை செய்ய முடியும். ஒரு சிங்கப் பெண்ணைத்தான் இரும்புப் பெண்மணியாக மாற்ற முடியும். திருமதி ரோஜா செல்வமணி, ஒரு சிங்கப்பெண். அதாவது, அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பும் சிங்கப்பெண்தான். அதை நாட்டிற்குத் தெரியவைத்தவர் ஆர்.கே.செல்வமணி.

aa

இப்படி இன்றைய செல்வமணியைப் பற்றி சொல்வதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன.

முதலில் அன்றைய செல்வமணியைப் பற்றி தெரிந்துகொள்ள "புலன் விசாரணை' காலத்திற்குப் போகலாம்.

1989ஆம் ஆண்டு. பல கனவுகளோடும், லட்சியங்களோடும் ராவுத்தர் பிலிம்ஸுக்கு வந்தார் ஆர்.கே.செல்வமணி. பெரிய பேனர், பெரிய ஹீரோ விஜயகாந்த்தை வைத்து இயக்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி இருந்தாலும்... இப்ராகிம் ராவுத்தரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதை வேண்டுகோள் என்பதைவிட கண்டிஷன் என்றுகூட சொல்லலாம். பெரும்பாலும் முதல் படம் இயக்குவதற்கு வந்தவர்கள் தயாரிப்பாளர் எது சொன்னாலும் சரி என்று தலையாட்டிவிட்டு, தனியாகப் புலம்புவார்கள். ஆனால் செல்வமணியிடம் ஆரம்பத்திலேயே ஒரு உறுதி தெரிந்தது. "நான் முதல் படம் இயக்கும்போது நீதான் வசனம் எழுதவேண்டும் என்று என் நண்பன் ஆர்.எஸ்.புவன் என்பவருக்கு நம்பிக்கையளித்திருக்கிறேன். அதிலிருந்து நான் மாறமாட்டேன். அதனால் ஆர்.எஸ்.புவன்தான் "புலன் விசாரணை' படத்திற்கு வசனம் எழுதவேண்டும்'' -இதுதான் செல்வமணி சொன்னது.

நான் எழுதவேண்டிய படம், இன்னொருவருக் குப் போகிறதே என்று நான் அதிர்ச்சியோ, வருத்தமோ அடையவில்லை. நட்பிலே உறுதியாக இருந்த செல்வ மணியை நினைத்துப் பெருமையாக இருந்தது.

"என்ன செய்வது'' என்று இப்ராகிம் ராவுத் தரும், விஜயகாந்த்தும் என்னிடம் கேட்டார்கள்.

"செல்வமணியின் நண்பரையே எழுதச் சொல் லுங்கள்'' என்று இதயபூர்வமாகச் சொன்னேன்.

ஆர்.எஸ்.புவன் எழுதட்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். "நீங்கள் என்ன முடிவெடுப்பது... நான் அதை அனுமதிக்க முடியாது' என்று ஆண்டவன் வேறு ஒரு முடிவெடுத்தான்... "புலன் விசாரணை' படத்துக்கு லியாகத் அலிகான்தான் எழுதவேண்டுமென்று.

ஆம்...! சில சூழ்நிலைகளால் நானே வசன கர்த்தாவாக ஆனேன். அதாவது ஆர்.கே.செல்வ மணியையும், என்னையும் ஆண்டவன் இணைத்து வைக்க முடிவெடுத்தான்... அப்படித்தான் நான் நினைத்தேன்.

அந்த மகிழ்ச்சியோடு இப்ராகிம் ராவுத்தர் மதுரை போனார். என்னையும் அழைத்துப் போனார்... எங்களுடன் டி.சிவா.

மதுரையில் விஜயகாந்த் தின் அம்மா-அப்பா பெயரில் "ஆண்டாள் அழகர்' என்ற சினிமா வினியோகக் கம்பெனி தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அந்த ஆபீசின் மொட்டை மாடியில்

அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அங்கிருந்து பார்த்தால் மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் தெரியும். காலை நேரத்திலேயே கதிகலங்க வைக்கும்படியான அந்த அதிர்ச்சி செய்தியைச் சொன்னார் இப்ராகிம் ராவுத்தர்.

"புலன் விசாரணை படத்தை ஆர்.கே. செல்வமணி இயக்க வேண்டாம், "ஊமை விழிகள்' படத்தை இயக்கிய ஆர்.அரவிந்த்ராஜை போடலாம்'' என்றார்.

aa

எங்களுக்கு உடனே என்ன சொல்வதென்று தெரியவில்லை. சில நேரங்களில் அவர் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதில் பிடிவாதமாக இருப்பார். அப்படி ஒரு முடிவாக இருக்குமோ? எனக்கும் சிவாவுக்கும் அதில் உடன்பாடில்லை.

அந்த நேரத்தில் "அடிமைப்பெண்' படத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது

எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்த படம். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த "ஆயிரம் நிலவே வா' பாடலைப் பாடுவதற்கு புதிதாக வந்திருந்த இளைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல் பிடித்துப்போய் அவரையே பாடுவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

ராஜஸ்தான் -ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இயக்குநர் கே.சங்கர், மற்ற நடிகர் -நடிகைகள், டெக்னீஷியன்கள் தங்குவதற்கு ஹோட்டல் அறைகள் எல்லாம் புக் செய்யப் பட்டன. "ஆயிரம் நிலவே வா' பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டு ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ரிகார்டிங் தேதி முடிவு செய்யப்பட்டு அன்று காலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை அழைத்து வர, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கார் போனது. அப்பொழுது எஸ்.பி.பால சுப்பிரமணியம் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்திருந்தார். "என்னால் இப்போது பாட முடியாது. எம்.ஜி.ஆர். அவர்களிடம் என்னை மன்னித்துவிடச் சொல்லுங்கள்' என்று டிரைவரிடம் கூறி காரை திருப்பி அனுப்பினார். ஆனால் அவர் மனம் உடைந்துபோனது... எம்.ஜி.ஆர். படத்துக்குப் பாட முடியாமல் போய்விட்டதே என்று.

சில நாட்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆர். பிக்சர்

ஸில் இருந்து கார் வந்தது. "காய்ச்சல் குறைந்துவிட்டதா? இப்பொழுது பாட முடியுமா? என்று எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு வரச்சொன்னார்'' என்றார் கம்பெனி மேனேஜர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. "வேறு பாடகரை வைத்து படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மறுபடியும் என்னை வந்து அழைக்கிறீர்களே' என்று கேட்டாராம்.

அதற்கு கம்பெனி மேனேஜர், "படப்பிடிப்பு ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். கேன்சல் செய்து விட்டார்'' என்று சொல்லியிருக்கிறார்.

"படப்பிடிப்பு முடிவு செய்து, நடிகர் -நடிகைகள் கால்ஷீட் வாங்கி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹோட்டல் அறைகள் எல்லாம் புக் செய்யப்பட்டு கேன்சல் செய்தால் பல லட்சம் நஷ்டமாகியிருக்குமே' என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கேட்டிருக்கிறார்.

அதற்கு எம்.ஜி.ஆரின் மேனேஜர் சொன்ன பதில்... மனிதநேயமானது...!

(வளரும்...)