dd

(43) கோவத்தை வீட்ல விட்டுட்டு வாங்க!

விஜயகாந்த் நடிக்க, ஷாஜிகைலாஷ் இயக்கத்தில் ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன் தயாரிப்பில் நான் வசனம் எழுதும் படத்திற்கான வேலைகள் தொடங்கியது.

ஏற்கனவே என்னிடம் ஷாஜிகைலாஷ் சொல்லியிருந்த நான்கு ஸீன்கள் போக மீதி கதையைக் கேட்பதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போனேன். என்னுடன் படத்தின் அஸோசியேட் டைரக்டர் பேப்பர், பேடு எல்லாம் தயாராக வைத்திருந்தார், ஷாஜி கைலாஷ் சொல்லச் சொல்ல கதையின் ஒன் லைன் எழுதுவதற்காக.

Advertisment

"சார் கதைய சொல்லுங்க சார்... எழுதிக்கலாம்'' என்றேன்.

"லியாகத் சார்... நான் சொன்ன நாலு சீனைத் தவிர என்கிட்ட கதை இல்ல...''

"நேத்து அவங்ககிட்ட முழுக்கதை இருக்குன்னு சொன்னீங்களே சார்...''

Advertisment

"இதை கதையா பண்ண முடியாதா லியாகத் சார்?'

"நிச்சயம் பண்ணலாம் சார்... பிரமாதமா வரும்... ஆனா அதுக்கு நேரமில்லையே. உடனே ஷூட்டிங் போகவேண்டிய கட்டாயத்துல இருக்கோம். நீங்க மம்மூட்டி படம் ஷூட்டிங் முடிக்கிற பிஸியில இருக்கீங்க. உங்களால எப்படி இதுக்கு நேரம் ஒதுக்க முடியும்?'' என்றேன்.

யோசித்தார்... "சின்னி கிருஷ்ணாவைச் சமாளிச்ச மாதிரி இதையும் நீங்கதான் சமாளிக்கணும்'' என்றார்.

மலையாளத் திரையுலகில் மிகச் சிறந்த, இயக்குநர், சூழ்நிலைகளால் வந்த சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டு மம்மூட்டி பட ஷுட்டிங் போய்விட்டார். இந்த விஷயத்தை விஜயகாந்த்திடமும் காஜா மைதீனிடமும் எப்படி சொல்வது என்ற தவிப்பு எனக்குள் ஏற்பட்டது. எழுதுவதற்காக எனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸில் இரண்டு நாட்கள் எந்த வேலையும் நடக்காமல் குழம்பிப் போயிருந்தேன்.

ஷாஜிகைலாஷ் சொன்ன கதைக்கு நான் பரபரப்பாக வசனம் எழுதிக்கொண்டிருப்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். திடீரென என்னை அழைத்துக் கேட்டார். "மொத்தக் கதையும் எப்படி இருக்கிறது?' என்று...

உண்மையைச் சொல்ல வேண்டிய சூழ்நிலை... நடந்ததைச் சொல்லிவிட்டேன்.

வேறு ஒரு ஹீரோவாக இருந்தால் கோபத்தில் கொந்தளித்திருப்பார்கள். நான் கொடுத்த தேதிகள் வீணாகிப் போனது என்று அந்தப் படத்தையே வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் பெருந்தன்மைக்கு உதாரண மாகத் திகழ்ந்த விஜயகாந்த்தின் முகத்தில் கோபம் தெரியவில்லை.

"அண்ணே பெரிய டைரக்டர்... என்னை வச்சு ஒரு நல்ல படம் குடுக்கணும்னு நெனைக்கிறாரு. அதனால ஏற்பட்ட குழப்பம். அவரை டென்ஷன் படுத்தவேண்டாம். அவரோட முடிவுக்கே விட்ரலாம்'' என்றார்.

ss

விஜயகாந்த் சொன்னதை ஷாஜிகைலாஷிடம் சொன்னேன். அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மேலும் சில நாட்கள் போனது. கதை கிடைக்கவில்லை.

அப்பொழுது தயாரிப்பாளரிடம் விஜயகாந்த் "லியாகத் அண்ணன்கிட்ட கதை இருக்கான்னு கேளுங்க, இல்ல நல்ல ஐடியா எதாவது இருக்கான்னு கேளுங்க'' என்று சொல்லியிருக்கிறார். என்னிடம் கேட்டார்கள்.

"உடனே ஷுட்டிங் போவதற்குண்டான முழு ஸ்கிரிப்ட் இல்லை. ஒரு போலீஸ் கதைக்குண்டான கேரக்டரும், ஐடியாவும் சொல்றேன். ஓ.கே.ன்னா உடனே பண்ணிரலாம்'' என்றேன்.

விஜயகாந்த், இயக்குநர் ஷாஜிகைலாஷ், தயாரிப்பாளர் காஜாமைதீன், சில முக்கிய நண்பர்கள் எல்லோரிடமும் அதைச் சொன்னேன். உடனே ஓ.கே. சொன்னார்கள். அதை மெருகேற்றி நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உருவான படம்தான் "வாஞ்சிநாதன்'.

என்மீது மிகப்பெரிய அன்பு உண்டானது ஷாஜி கைலாஷுக்கு... என் மீது மட்டுமல்ல எழுத்தாளர்கள் மீது மலையாள இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் எல்லோருமே மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார்கள்.

"வாஞ்சிநாதன்' பட ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு ஷாஜிகைலாஷைப் பார்க்க வரும் மலையாளத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், அவரிடம் கேட்கும் முதல் கேள்வியே "யாரானு ஸ்கிரிப்ட் ரைட்டர்?''

அப்படிக் கேட்டவுடன் ஷாஜிகைலாஷ் உடனே என்னை அழைப்பார்.

"லியாகத் சார்''

நான் வேகமாக அவர் அருகில் போவேன்.

"இவர்தான் ரைட்டர்... லியாகத் அலிகான்... தமிழ்நாட்டு ரஞ்சித் பணிக்கர்'' என்பார். மலையாளத் திரையுலகில் ரஞ்சித் பணிக்கர் என்ற பெரிய டைரக்டர் இருந்தார். அவரோடு ஒப்பிட்டு என்னைச் சொல்வார்.

"வாஞ்சிநாதன்' இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படம். நான் உருவாக்கிய கதையில் தீவிரவாதிகள் கேரக்டரே இல்லை. ஷாஜிகைலாஷுடன் நெருங்கிப் பழகிய முக்கியமான நம் தமிழ் டெக்னீஷியன் ஒருவர், அவரிடம் பேசிப் பேசி அவர் மனதை மாற்றி தீவிரவாதி கேரக்டரை புகுத்த வைத்துவிட்டார். விஜயகாந்த் நடித்து அந்த நேரத் தில் வெளியாகவிருந்த "நரசிம்மா' படத் திலும் தீவிரவாதி கேரக்டர் இருக்கிறது. "வாஞ்சிநாதனில்' வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். நடக்கவில்லை. விதி வலியது. படத்திலே இடைவேளைக்குப் பிறகு தீவிரவாதி வந்தான். எங்களுக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய வெற்றியிலிருந்து கொஞ்சம் அவன் எடுத்துக் கொண்டு போய்விட்டான். தீவிரவாதி கேரக்டர் உள்ளே வந்திருக்காவிட்டால் படம் வேறு மாதிரி வந்திருக்கும். இருந்தாலும் விஜயகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அது அமைந்தது.

"சிட்டிசன்' படத்திற்கு நான் வசனம் எழுதியிருக்க, பாலகுமாரன் பெயரில் வந்ததை ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்தப் படத்தின் தயாரிப் பாளர் சக்ரவர்த்தி அழைத்தபோதும், "வாஞ்சிநாதன்' பட வேலையால் நான் சென்று பார்க்கவில்லை. திடீர் என்று ஒருநாள் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி யிடமிருந்து போன் வந்தது.

"என் மேல உங்களுக்கு இன்னமும் கோபம் இருந்தா அதை வீட்டுலயே வச்சிட்டு என்னை வந்து பாக்க முடியுமா?''

கேட்கும் விதத்திலேயே அவருடைய நட்பு தெரிந்தது. (வாசகர்களுக்கும் புரிந்திருக்கும்)

"வருகிறேன்'' என்று அவரிடம் சொன்னேன். சொன்னது போலவே உடனே போய் பார்த்தேன். கையில் வைத்திருந்த சிகரெட்டை வேகமாக வீசிவிட்டு எழுந்து என் கைகளைப் பிடித்து வரவேற்றார். "என் மேல கோபம் இருக்கா இல்லியா?''

"அதான் வீட்லயே விட்டுட்டு வரச் சொல்லிட்டீங்களே?''.dd

எங்கள் இருவருக்கிடையே சிறிய மௌனம்.

"எதுக்கு வரச் சொன்னீங்க?'' என்றேன்.

"சிட்டிசன் படம் முடிஞ்சிருச்சு. கோர்ட் க்ளைமேக்ஸ் மட்டும்தான் இன்னும் எடுக்கல. எடுத்த வரைக்கும் நீங்க பாக் கணும். ஆதித்யா ஹோட்டல்ல உங்களுக்கு ரூம் போட்டு வச்சி ருக்கேன். டி.வி., டெக் எல்லாமே அரேஞ்ச் பண்ணியிருக்கேன்'' என்றார்.

"நான் எதுக்கு பாக்கணும்'' என்றேன்.

"பாருங்க சொல்றேன்'' என்றார்.

ஆதித்யா ஹோட்டல் அறையில் "சிட்டிசன்' படத்தைப் பார்த்தேன்.

"எப்படி இருக்கு'' என்றார் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி.

"ரொம்ப நல்லா வந்திருக்கு... எங்கே தம்பி சரவண சுப்பையா. என்னிடம் கதை சொல்லியபோதே சரவண சுப்பையாவை பாராட்டினேன். நிச்சயம் இந்தப் படம் வெற்றியடையும் என்று... சொன்ன மாதிரியே ரொம்ப பிரமாதமா டைரக்ட் பண்ணியிருக்காருன்னு'' சொன்னேன்.

எஸ்.எஸ்.சக்ரவர்த்திக்கு மிகவும் மகிழ்ச்சி.

"சரவண சுப்பையா சாங் சூட்டிங்ல இருக்காரு. முடிஞ்சதும் இங்கதான் வருவாரு'' என்றார்.

"சரி... படம் பாத்தாச்சு... என் கருத்தையும் சொல்லியாச்சு... நான் கிளம்பவா'' என்றேன்.

"உங்களை எதுக்கு கூப்பிட்டேன்னு இன்னும் நான் சொல்லவே இல்லையே'' என்றார்.

"படம் பாக்கத்தானே கூப்பிட்டீங்க'' என்றேன்.

"க்ளைமாக்ஸ் கோர்ட் சீன் நீங்கதான் எழுதிக் கொடுக் கணும்'' என்றார். பதில் சொல்லாமல் அவரைப் பார்த்தேன்.

"என்னடா கூச்சமில்லாம கேக்கறானேன்னு பாக்கறீங்களா? நட்புல எதுக்கு கூச்சம்?'' என்றார்.

அஜித் சார் படம் நன்றாக வர வேண்டும் என்ற அக்கறை அவருக்கு, நண்பன் நன்றாக வர வேண்டும் என்ற அக்கறை எனக்கு. எழுதித் தருவதாகச் சொன்னேன். இயக்குநர் சரவண சுப்பையா வந்தார். அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டினேன்.

இரண்டு நாட்கள் ஆதித்யா ஹோட்டல் ரூமில் அமர்ந்து "சிட்டிசன்' கோர்ட் சீன் வசனங்களை எழுதிக் கொடுத்தேன்.

படம் அஜித்துக்கு பெரும் புகழைக் கொடுத்தது. வெற்றிப் படமாக மட்டுமல்ல.. அஜித்தை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றிவிட்ட படமாகவும் அமைந்தது. படத்தின் டைட்டிலில் "வசனம் லியாகத் அலிகான்' என்று பெயர் வரவில்லை. அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதேசமயம் சக்ரவர்த்தி, சரவண சுப்பையா, அஜித் ஆகியோரின் பாராட்டை ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்த பெருமையாக நினைத்தேன்.

சிட்டிசன் வெளிவந்த ஆண்டு 2001...

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கமலா தியேட்டரில் இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

(வளரும்...)