(41) பாலகுமாரன் பெயரில் என் வசனம்!
என் நண்பர், புகழ்பெற்ற தயாரிப்பாளர் "நிக் ஆர்ட்ஸ்' சக்கரவர்த்தி. மன்சூரலிகானை எனக்கு அறிமுகம் செய்த தம்பி அயூப்கான்தான், சக்ரவர்த்தியை யும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சக்ரவர்த்தி சாதாரண நிலைமையில் இருந்தபோதிலிருந்து எனக்குப் பழக்கம். அப்பொழுது படத்தின் பாடல்கள் கேசட்களாக வரும். படத்தின் தயாரிப்பாளரிடம் உரிமையை வாங்கி, கேஸட்டுகளாகப் போட்டு விற்பனை செய்யும் வேலை யையும் செய்துவந்தார் சக்கரவர்த்தி. திரைப்படத்துறை யின் மேல் மிகப்பெரிய காதல் அவருக்கு. ஆரம்ப காலங்களில் என்னுடன் பழகியதை மிகவும் பெருமையாக நினைத்தவர். எப்படியாவது தயாரிப்பாளராக வேண்டும், நிறைய படங்கள் தயாரிக்கவேண்டும் என்ற கனவோடு அலைந்தவர். தி.நகர், பாண்டி பஜாரில் கீதா கபே, சாந்தி பவன் (தற்பொழுது பாலாஜி பவன்) போய் என்ன சாப்பிட்டாலும் என்னைக் காசு கொடுக்க விடமாட்டார். "அவரை வைத்து படம் பண்ணலாமா, இவரை வைத்து படம் பண்ணலாமா' என்று ஆலோசனை கேட்பார். நான்கூட காமெடியாகக் கேட்பேன்... "என்னை வைத்து பண்ணமாட்டீர்களா?'' என்று.
அதற்கு அவர் சொல்வார்... "நீங்க விஜயகாந்த்கூட இருக்கீங்க. பெரிய லெவல்ல இருக்கீங்க... நான் சாதாரண சக்கரவர்த்தி'' என்பார்.
அவருக்கு அஜித் சாருடைய நட்பு கிடைத்தது. அஜித் அப்பொழுது வளர்ந்து வரக்கூடிய ஹீரோ. அவரை ஹீரோவாக வைத்து 1997-ஆம் ஆண்டு "ராசி' என்ற படத்தை தயாரித்தார். முரளிஅப்பாஸ் என்ற புதிய இயக்குநர் இயக்கினார்.
1999-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத் தில் அஜித், சிம்ரன் நடித்த "வாலி' படத்தை தயாரித்தார். அஜித் இரட்டை வேடங்களில் கலக்கி யிருப்பார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, வி.இசட்.துரை இயக்கத்தில் அஜித், ஜோதிகா நடித்த "முகவரி' படத்தை தயாரித்தார்.
நிக் ஆர்ட்ஸ் பெரிய பேனராக ஆனது. அவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகமானது. எஸ்.எஸ்.சக்கரவர்த்தி ராசியான தயாரிப்பாளர் என்று பேசப்பட்டார். அதற்கு பெரிய காரணமாக இருந்தது அஜித்துடன் அவருக்கிருந்த நட்பு. அந்த நட்பின் காரணமாக அஜித்தின் ரசிகர் மன்றங் களைக் கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு வந்தது.
தி.நகரில் படப்பிடிப்பு அலுவலகத்தையும், அஜித் தலைமை ரசிகர் மன்ற அலுவலகத்தை நுங்கம்பாக்கத்திலும் அமைத்துக்கொண்டார். ஒரு நண்பனின் வளர்ச்சியை கண் முன்னால் கண்ட மகிழ்ச்சி எனக்கு.
எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, அவர் வழியில் பிஸியானார். நான் விஜயகாந்த்துடன் பிஸியானேன். எந்தச் சூழ்நிலையிலேயும், எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், நானாக யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை.
ஒருநாள் சக்கரவர்த்தியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. தி.நகர் அலுவலகத்தில் போய் பார்த்தேன். ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தி னார்.
"பெயர் சரவணசுப்பையா. அஜித் சாருக்காக ஒரு கதை சொன்னாரு. பண்ணப்போறேன். அந்தக் கதையை நீங்க கேக்கணும்'' என்றார்.
நான் பலரிடம் கதை சொல்லியிருக்கிறேன். பல பெரிய கதாசிரியர்கள், இயக்குநர்கள் கதை சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் இன்றுவரை சரவணசுப்பையா போல யாரும் கதை சொல்லி நான் கேட்டதில்லை.'
அவ்வளவு அழகாக, உணர்வுப்பூர்வமாக, திரையில் படம் பார்த்தால் என்ன பிரமிப்பு ஏற்படுமோ அதே உணர்வு, அவர் கதை சொல் வதில் இருந்தது. அவரை மனம் திறந்து பாராட்டி னேன். "அஜித்துக்கு நிச்சயம் வெற்றிப்படமாக அமையும்' என்று சொன்னேன்.
சரவணசுப்பையாவிடம் சொன்ன தையே சக்ரவர்த்தியிடமும் சொன்னேன். சக்கரவர்த்திக்கு மகிழ்ச்சி.
"அஜித் சாருக்கு வெற்றிப்படமா அமையுமா?'' திரும்பத் திரும்பக் கேட்டார்.
கதை விஷயத்தில் ஒருவரை சந்தோஷப் படுத்துவதற்காக நான் பொய் சொல்லமாட்டேன். அது தெரிந்தும் என்னிடம் கேட்டார்.
படத்திற்குப் பெயர் "சிட்டிசன்' என்றார்.
"வாழ்த்துகள்'' என்று கை குலுக்கிவிட்டு எழுந்தேன்.
"எங்க போறீங்க... இந்தப் படத்துக்கு நீங்க தான் வசனம் எழுதணும். அதுக்காகத்தான் உங்கள வரச்சொல்லி, கதை கேக்கச் சொன்னேன்'' என்றார்.
"நீங்க எழுதுனா நல்லா இருக்கும்ணே. நான்தாண்ணே சொன்னேன்...'' என்றார் சரவணசுப்பையா.
அவரை வியப்புடன் பார்த்தேன்.
"நான் உங்க ரசிகன்ணே'' என்றார்.
சும்மா ஒரு பார்மாலிட்டிக்காக சொல்றாருன்னு நெனைச்சேன். அவர் கல்லூரியில் படித்தபோது நான் எழுதிய படங்களைப் பார்த்துவிட்டு, அவருடைய டைரியில் பாராட்டி எழுதியிருந்ததைக் காட்டினார்.
என்னைப் பற்றி, என்னுடைய வசனங்களைப் பற்றி அவ்வளவு உயர்வாக எழுதியிருந்தார்.
"தம்பிக்காக அண்ணன் எழுதுகிறேன்'' என்று சம்மதித்தேன்.
"அப்போ நண்பனுக்காக சம்மதிக்கலியா'' என்று சிரித்தார் சக்கரவர்த்தி.
நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் சிலநாட்கள் டிஸ்கஷன் முடித்துவிட்டு படத்தின் கோர்ட் க்ளைமாக்ஸ் காட்சியைத் தவிர முழுப்படத்திற்கான வசனங்களையும் எழுதிக்கொடுத்தேன்.
சரவணசுப்பையாவுக்கு "சிட்டிசன்' முதல் படம். அவர் எதிர்பார்த்தது போலவே வசனங்கள் அமைந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. அப்பொழுது சக்கரவர்த்தி ஒரு வார்த்தை சொன்னார். "இந்தப் படத்துக்கு பாலகுமாரனைத்தான் எழுதச் சொல்லலாம்னு நெனச்சேன். அவர்மேல எனக்கு சென்ட்டிமென்ட்டா ஒரு ஈர்ப்பு'' என்றார்.
"பாலகுமாரன் சாரை சென்ட்டிமெண்டா நெனைச்சேன்னு இப்ப சொல்றியே'' என்றேன்.
"முதல்ல சொன்னா, அவரே எழுதட்டும்னு நீங்க போயிருப்பீங்களே'' என்றார் சக்கரவர்த்தி.
"சிட்டிசன்' படப்பிடிப்பு தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்புக்குப் போனேன். தொடர்ந்து போகமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. காரணம்... விஜயகாந்த், ரோஜா கம்பைன்ஸ் கே.காஜாமைதீன், பிரபல மலையாள இயக்குநர் ஷாஜிகைலாஷ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு நான் வசனம் எழுதும் வேலையில் இறங்கிவிட்டேன்.
"சிட்டிசன்' படத்திற்கு எழுதிக் கொடுத்தாகிவிட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாருங்கள் என்று தயாரிப்பாளர் சக்கரவர்த்தியும் அழைக்கவில்லை. சரவணசுப்பையாவிட மிருந்தும் தகவல் இல்லை. க்ளைமாக்ஸ் தவிர மொத்தப் படத் திற்கும் எழுதிக் கொடுத்துவிட்டதால் பிரச்சினையும் இல்லை. எனக்கு விஜயகாந்த் முக்கியம்... அதனால் குருவாயூருக்குப் போனேன்.
அந்த நேரத்தில் தினசரி பத்திரிகைகளில் "சிட்டிசன்' படத்தின் செய்தி வந்திருந்தது... அதைப் பார்த்தேன்.
அதில் வசனம் பாலகுமாரன் என்று வந்திருந்தது.
நான் எழுதிய வசனம் எப்படி பாலகுமாரன் சார் பெயரில்...?
"சிட்டிசன்' படத்திற்காக நான் முதன்முதலில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி யை சந்திக்கும்போது சொன்னார் சென்ட்டிமெண்டாக பாலகுமாரன் சார்தான் எழுதணும்னு நெனச்சேன் என்று... ஆனால் நான் எழுதிக் கொடுத்த பிறகு எப்படி அவர் பெயர் போட்டு செய்தி வருகிறது?
எனக்கு கோபம் வருவதற்குமுன் என் வீட்டு லேண்ட்லைன் போன் ரிங் வந்தது... எடுத்தேன். சக்ரவர்த்திதான் பேசினார்.
"என்ன... செய்தி படிச்சிட்டு கோபமாயிருப்பீங்களே...'' நான் பதில் சொல்வதற்கு முன் அவரே தொடர்ந்தார்.
"உங்களை எழுதச் சொல்றதுக்கு முன்னால அவரை எழுதச் சொல்லியிருந்தேன்... அட்வான்ஸ் வேற குடுத்திருந்தேன். தப்பாயிடக்கூடாதுன்னு தோணுச்சு... அதான் அவர் பேரை போடச் சொன்னேன். உங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கணும்... அதை செய்யாம விட்டுட்டேன். கோபம் குறையலேன்னா இப்ப ஆபீஸ்லதான இருக்கேன். வந்து திட்டிட்டுப் போங்க'' என்றார்.
இப்படிப் பேசுபவரிடம் என்ன சொல்வது? "செய்தி போடறதுக்கு முன்னால நியாயமான்னு கொஞ்சம் யோசனைபண்ணிப் பாத்தீங்களா?'' என்றேன். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறு ஒன்றைச் சொன்னார்.
(வளரும்...)