dd

(40) ராவுத்தர் கனவு!

ம்.ஜி.ஆருக்கு நெருக்கமான அரசியல்வாதியும் தயாரிப்பாளருமான அண்ணன் கோவை செழியன் படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வந்து, அவருடன் நானும் ராமாவரம் சென்று "மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்ததையும், உணவருந்தியதையும் சொன்னேனில் லையா? சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது என்னை ஆசிர்வதித்தார் எம்.ஜி.ஆர்.

இப்படி அவர் பொற்கரம் பட்டு ஆசிர் வாதமும், வாழ்த்தும் பெற்றவன் நான்.

Advertisment

காரில் திரும்பும்பொழுது கோவை செழியன் கேட்டார். "உனக்கு சந்தோஷமா?''

"நினைச்சுப் பார்த்தா பிரமிப்பா இருக்குண்ணே. உங்ககிட்ட ஆசைப்பட்டுச் சொன்னேன். அவர் கூட சாப்பிடவே வச்சுட்டீங்க.''

"நீ மட்டுமில்ல… உன்னைவிட ரொம்ப சாதாரண ஏழை ரசிகனை, ஒரு சாதாரண கட்சித் தொண்டனையும் தன்கூட உக்கார்ந்து சாப்பிட வைப்பாரு. சாப்பாடு விஷயத்துல அவருக்கு என்னை மாதிரி பெரிய ஆளுங்களும் ஒண்ணுதான்,… சின்ன ஆளுங்களும் ஒண்ணுதான்'' என்றார்.

Advertisment

"பூஜை எப்பண்ணே வைக்கப் போறீங்க''…

"முதல்ல சிம்பிளா பண்ணுவோம்… என் வீட்டுக்கே தலைவர வரவச்சு குத்து விளக்கேத்தச் சொல்லிட்டு அப்புறமா ஸ்டுடியோவுல பெரிசா பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன்.''

"குத்து விளக்கேத்த எப்ப கூப்பிடப் போறீங்க?''

"நல்ல நாள் பாத்துட்டுப் போகணும்'' என்றார்.

அந்த நல்ல நாளுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் மறுநாளே கோவை செழியன் என்னை வரச்சொன்னார்.

"லியாகத் அலிகான், பட்ஜெட் போட்டுப் பாத்தேன். இந்தப் படம் பண்ணா லாபம் வராது போல இருக்கு'' என்றார்.

எனக்கு பகீரென்றிருந்தது.

"எம்.ஜி.ஆர். குத்துவிளக்கு ஏற்ற வரும்போது அவர் கையால் நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கலாம்னு சொல்லியிருந்தார். லாபம் வராம நாம எதுக்கு படம் எடுக்கணும். எதுக்காக உழைக்கணும்… நான் யோசிக்கிறது சரிதானே?'' என்றார்.

சாப்பிடும்போது எம்.ஜி.ஆர். சொன்னாரல்லவா...… "முதலாளி, படம் பண்றது பெரிய விஷயம் இல்ல… லாபம் வர்ற மாதிரி பண்ணணும்' என்று. அவர் சொன்னதை யோசித்து முடிவெடுத்திருப்பார் என்று நினைத்தேன் நான். எம்.ஜி.ஆர். எதற்காக அப்படிச் சொன்னார். அதற் குள் என்ன காரணம் இருக்கிறது என்பது எம்.ஜி.ஆருக்கும் கோவை செழியன் அவர்களுக்கும்தான் தெரியும். ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைத்தேன்.

அவரிடம் அதைப் பற்றி நான் கேட்கவில்லை.

யாருக்கும் அட்வான்ஸ் கொடுக்காததால் கோவை செழியனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்தப் படத்தை எடுத்தால் லாபம் கிடைக்காது என்று முடிவெடுத்து விட்டார் அவ்வளவுதான். படம் தொடங்காமல் போனா லும்கூட எனக்கு லாபம் கிடைத்தது. மிகப்பெரிய லாபம் கிடைத்தது. எம்.ஜி.ஆரைப் பார்த்தது... அவருடன் உணவருந்தியது. அவரிடம் ஆசிர்வாதமும் வாழ்த்தும் பெற்றது. அந்த லாபமே எனக்கு வரப்பிரசாதமாகத் தெரிந்தது. கோவை செழியனிடம் என்னை சிபாரிசு செய்தது விஜயகாந்த்தான்.

dd

"ரொம்ப புதுசா திங்க் பண்றாரு, எழுத றதுக்கு வாய்ப்பு கொடுங்க'' என்றார்.

"பெரிய படமாச்சே தம்பி'' என்றார் கோவை செழியன்.

"இவரு வசனமெழுதுனா அது பெரிய படம் ஆயிரும்ணே'' -இது விஜயகாந்த்.

இது எவ்வளவு பெரிய வார்த்தை. என் மீது எவ்வளவு பெரிய நம்பிக்கை.

"உங்களுக்கு ஓ.கே. என்றால் எனக்கும் ஓ.கே.'' என்றார்.

ஆக,… நான் சிவப்பு எம்.ஜி.ஆரை சந்திப்பதற்குக் காரணமே கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த்தான்.

ராமாவரம் தோட்டத்திற்கு போனபோது நான் பார்த்த வேறு ஒரு காட்சி. அண்ணன் கோவை செழியனும் நானும் வெளியே வரும்போது எம்.ஜி.ஆரைப் பார்க்க பெரும் கூட்டம் நின்றிருந்தது. ஒரு பக்கம் கட்சிக்காரர்கள், இன்னொரு பக்கம் பாமர மக்கள். பார்த்தாலே வித்தியாசம் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். வெளியே வந்தார். எல்லோரும் கும்பிட்டார்கள். வாழ்த்து கோஷங்கள் எழுந்தது.

எம்.ஜி.ஆர். முதலில் பாமர மக்களின் பக்கம் தான் போனார். நலம் விசாரித்தார். குறைகளைக் கேட்டார். மனுக்களை வாங்கினார். அதிகாரிகளிடம் கூறினார். உதவியாளரைக் கூப்பிட்டு, சிலருக்கு பணம் கொடுக்கச் சொன்னார். அவர் கோட்டைக்குப் போவதற்கு முன்பு, ராமாவரம் தோட்டமே செயின்ட் ஜார்ஜ் கோட்டை போலத்தான் இருந்தது.

இவை எல்லாம் என் நினைவுக்கு வந்தது. அந்த விஷயங்களை இப்ராகிம் ராவுத்தரிடமும் விஜயகாந்த்திடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் ஒரு கருத்தும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ராஜாபாதர் தெரு அலுவலகம் சென் றேன். அப்பொழுது எங்களுக்கு தங்கும் இட மும் அதுதான், அலுவலகமும் அதுதான். நான் போனபோது இப்ராகிம் ராவுத்தர் மட்டும் இருந்தார். விஜயகாந்த் ஷூட்டிங் போயிருந்தார்.

கோவை செழியன் பட விஷயம் ஏற்கனவே அவர் அலுவலகம் மூலமாக சொல்லப்பட்டு விட்டது. நான் பேச நினைத்தது எம்.ஜி.ஆரைப் பற்றி.

"அண்ணே உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும்'' என்றேன்.

"நானும் நீங்க எப்ப வருவீங்கன்னுதான் பார்த்துக்கிட்டிருந்தேன்.''

"எதுக்குண்ணே''

"நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்'' என்றார்.

"சொல்லுங்கண்ணே'' என்றேன்.

"நேத்து தூங்கறப்ப ஒரு கனவு.…விஜி எம்.ஜி.ஆர். மாதிரியே ஆயிர்றான். அவனைப் பார்க்க கூட்டம் அலைமோதுது. வர்றவங்களுக் கெல்லாம் சாப்பாடு போடறோம்'' என்றார்.

நான் நினைத்தேன், "அது அவர் கனவில் வந்ததல்ல,… விழித்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய கனவும் அதுதான்...… என்னுடைய கனவும் அதுதான்.'

"அண்ணே அது கனவாயிருக் காதுண்ணே… முழிச்சுக்கிட்டே யோசனை பண்ணிக்கிட்டிருந் திருப்பீங்க'' என்றேன்.

"நீங்க என்னவோ சொல்லணும்னு சொல்றீங்க'' என்றார்.

"நீங்க கனவுல பாத்ததா சொன் னீங்க, நான் அதை நெஜத்துல பார்த் தேன்ணே.… எம்.ஜி.ஆர். .தோட்டத்துல'' என்றேன். அவர் சாப்பாடு போடும் விஷயத்தையும், அவரைப் பார்க்க வந்தவர்களிடம் எம்.ஜி.ஆர். காட்டிய பரிவையும் சொன்னேன்.

dd

"அதேமாதிரி விஜியைப் பார்க்க கூட்டம் வரணும்ணே'' என்றேன்.

அப்பொழுது விஜயகாந்த் மன்ற பொதுச்செயலாளர் ராமுவசந்தன் வந்தார். அவரை எல்லோரும் "அய்த்தான்' என்று அழைப்பார்கள். நான் "ராமண்ணே' என்றுதான் கூப்பிடுவேன். அவர் சொன்னார் "ஸ்டுடியோக்கள்ல ஷூட்டிங்னா, ரசிகர்களால ஈசியா போய்ப் பார்க்க முடியாது.… வெளிப்புறப் படப்பிடிப்புன்னா அந்தப் பகுதியைச் சேர்ந்தவங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வருவாங்க.… அப்பதான், அந்த மக்கள்கிட்டேயும் ரசிகர்கள்கிட்டேயும் பேச முடியும்'' என்றார்.

"அங்ககூட ஃப்ரீயா பேச முடியாது அய்த்தான்'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.

"அண்ணே ஷுட்டிங்க வேடிக்கை பார்க்க வர்றவங்க எல்லாருமே விஜி அண்ணனைப் பார்க்க வர்றவுங்களா இருக்கமாட்டாங்க. அப்படியில்லாம, வர்ற கூட்டமெல்லாம் அவரைப் பார்க்க வர்ற மாதிரியே இருக்கணும்.… பிறந்தநாள் விழா கொண்டாடுவோம். ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவங்கள்லாம் வருவாங்கள்ல'' என்றேன் நான்.

"அண்ணன் சொல்றது நல்ல ஐடியாவா இருக்கு. ஒவ்வொரு வருசமும் மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னைன்னு ஒவ்வொரு ஊர்லயும் பண்ணலாம்'' என்றார் ராமுவசந்தன்.

"அது சரிவராதுண்ணே… சென்னையில இருந்து நாம போய் ஏற்பாடு பண்றதவிட எல்லா ரசிகர் களையும் சென்னைக்கே வரவைக்கலாம். தலைநகர் சென்னையில நம்ம பலத்தைக் காட்டினாத் தான் புரிய வேண்டியவங்களுக்குப் புரியும். மற்ற நடிகர் களோட பிறந்தநாளைக்கு வர்ற கூட்டத்தைவிட நம்ம கூட்டம் பெரிசா இருக்கணும். அதப் பாக்கற வங்க பிரமிக்கணும்… ரசிகர்கள் மட்டுமில்லாம திரை யுலகைச் சேர்ந்தவங்க, அரசியல் பிர முகர்கள் சென்னையில நடந்தாத்தான் வருவாங்க. நாம ஏற்பாடு பண்றதுக்கும் வசதியா இருக்கும்'' என்றேன் நான்.

"அண்ணன் சொல்றது அரு மையா இருக்கு''ன்னு உடனே சொன் னார் இப்ராகிம் ராவுத்தர்.

"எல்லாம் ஓ.கே. பிறந்தநாள் கொண்டாட விஜி சம்மதிப்பானா?'' என்று சந்தேகத்தை எழுப்பினார் இப் ராகிம் ராவுத்தர். அவர் சந்தேகப்பட் டது போலவே பிறந்தநாள் பற்றிச் சொன் னதும் விஜயகாந்த் மறுத்து விட்டார்.

"ஏம்ப்பா இது நல்ல ஐடியா வாத்தான் இருக்கு, ஏன் வேண்டாங் கறே'' என்று கேட்டார் இப்ராகிம் ராவுத்தர்.

"நீங்க ஏண்ணே வேணாங்கிறீங்க'' என்று நான் அவரிடம் கேட்டேன்.

"நம்ம மன்றத்து பசங்க வசதி இல்லாத பசங்க. ஏழைபாழைங்க,… கூலி வேலை செய்யறவங்க. விவ சாய வேலை செய்யறவங்க. சாதாரண தொழிலா ளிங்க… நான் எல்லாரையும் சொல்லல. பெரும்பா லும் அப்படித்தான் இருக்காங்க. அவங்களையெல் லாம் கார், வேன் இதெல்லாம் எடுத்துட்டு சென் னைக்கு வரச்சொன்னா நிறைய செலவாகும்ல.… பஸ், ரயில்ல வர்றவங்க எப்படி ரூம் போட்டுத் தங்கு வாங்க. அவங்களுக்கெல்லாம் நாம சிரமத்தைக் கொடுக்கலாமா?'' என்றார் விஜயகாந்த். எப்படிப் பட்ட சிந்தனை பாருங்கள். ஏழை எளியவர்களின் சிரமத்தைப் பற்றி அப்பொழுதே சிந்தித்தார்.…

விஜயகாந்த்தின் ரைஸ்மில் அனுபவங்களை சொல்வதற்கு முன்... அஜித் நடித்த "சிட்டிசன்' பட விவகாரத்தைச் சொல்கிறேன்!

(வளரும்...)