(38) மூன்றெழுத்து
ஜெமினி சினிமா பத்திரிகையில் வசனம் எழுதும் போட்டியில் நான் முதல் பரிசு வாங்கிய அன்றே விஜயகாந்த் தின் மனதில் தோன்றிய எண்ணம்... எங்கள் ஊரைச் சேர்ந்த சிராஜ் அவர் களை விட என்னை பெரிய ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் அது. இல் லாமல் இன்னொரு காரணம் இருந்தது.
விஜயகாந்த் நடித்த "ராமன் ஸ்ரீராமன்' படத்தில் நான் இணை இயக்குநராக பணியாற்றியதைச் சொன் னேன். அந்தப் படத்தின் வசனகர்த்தா புகழ்பெற்ற நாவலாசிரியர் சவீதா. அப்பொழுது அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருந்தது. ஆனாலும் அவருக்கு சினிமாவில் வசனம் எழுத வரவில்லை. சில காட்சிகளுக்கு யோசித்து யோசித்து எழுதி விடுவார். சில காட்சிகளுக்கு யோசித்துக்கொண்டே இருப்பார். ஹீரோவுக்கு எழுதினால் வில்லனுக்கு கவுன்ட்டர் வசனம் எழுத யோசித்துக் கொண்டே இருப்பார். அந்தப் படத்தின் இயக்குநர் டி.கே.பிர சாத் என்னை அனுப்புவார். பக்கத்தில் இருந்து எழுதி வாங்கிவரச் சொல்வார்.
நான் சவீதாவிற்கு உதவுவதற்காகப் போனேன். பெரும்பாலான வசனங்கள் நான் சொல்லி சவீதா எழுதுவார்.
சத்யராஜ் அந்தப் படத்தில் வில்லனாக, ஒரு சில காட்சி களில் வருவார். அவர் பேசிய வசனங்களை அப்பொழுதே எழுதினேன். அதில் நக்கல், நையாண்டி இருக்கும். இந்த விஷயங்கள் எல்லாம் விஜயகாந்த்துக்கு தெரியும். அதனால்தான் விஜயகாந்த் என்னை வசனகர்த்தா ஆக்கினார்.
நான் சொன்னவற்றையும் தாண்டி இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கிய காரணம். நான் ஒரு கற்பனைவாதி. எழுதக்கூடிய திறமை பெற்றவன் என்று அவர் நினைத்ததை விட... அவருடைய வளர்ச்சிக் காக, நான் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண் டேன் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவரை நேசித்து, அவருக்காகவே உழைத்த என்னை அவரும் நேசித்து உயர்த்திவிட முடிவெடுத்தார்.… அதை செய்தும் காட்டினார். விஜயகாந்த்தான் லியாகத் அலிகானின் வளர்ச்சிக்கு காரண மாக இருந்தார் என்ற வரலாறையும் மாற்ற முடியாது. நாங் கள் இருவரும் அன்பினாலும், பாசத்தினாலும், நட்பினாலும் பின்னிப் பிணைந்ததினால் உருவான வரலாறு அது.
"அன்னை என் தெய்வம்' படம் வெளியானது. படமும் பாராட்டைப் பெற்றது. எனது வசனங்களும் பாராட்டைப் பெற்றது. ரிலீசுக்கு முன்பு பிரிவியூ ஷோவில் படத்தைப் பார்த்த விநியோகஸ்தர் ஒருவர் வெளியே வந்து என்னைப் பார்த்து "நீங்களா வசனம் எழுதுனீங்க? ஐம்பது, ஐம்பத்தஞ்சு வயசுக்காரர் எழுதியிருப்பாருன்னு நினைச்சேன். அவ்வளவு மெச்சூரிட்டியா இருக்கு. சென்டிமெண்ட் காட்சிகளெல் லாம் அருமையா எழுதியிருக்கீங்க'' என்றார்.
பக்கத்திலிருந்து என்னை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த், "உங்கள் பயணத்தை தொடங்கி வைத்துவிட் டேன்' என்று சொல்லுவதுபோல இருந்தது.
டைரக்டர் பில்லா கிருஷ்ணமூர்த்திக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம். அவருடைய அனுபவமும், அவர் டைரக்ட் பண்ணிய படங்களும் அதிகம். இருந்தாலும் என்னை ஒரு நண்பனாகவே நினைத்துப் பழகுவார். நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டலும் கேலியும் செய்து கொள்வோம். நான் எழுதிக் கொடுக் கும் வசனத்தை என்னிடம் கேட்காமல் மாற்றவேமாட்டார். ஒருநாள் படப்பிடிப்பில்... "லியாகத் அலிகான் உங்க வசனத்தை உங்க பெர் மிஷன் இல்லாம மாத்திட்டேன்... சாரி'' என்றார்.
"என்ன சார் மாத்தினீங்க'' என்றேன்.
"நீங்க "வெளியே போ' என்று எழுதியிருந் தீர்கள். "அதை போ வெளியே' என்று மாற்றினேன்'' என்று சிரித்தார்.
அவரைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் ஜென்டில்மேன். அவருக்கு "அன்னை என் தெய்வம்' படத்தைத் தொடர்ந்து "தங்கச்சி', "தாய்ப் பாசம்' என்று இரண்டு படங் களுக்கு எழுதினேன்.
தங்கச்சி ராம்கி-சீதா நடித்தது. சீதா நடிக்க வந்து பிஸியாகி இடையிலே சிறிய தொய்வு ஏற்பட்டு, மீண்டும் நடிக்க வந்த படம்தான் "தங்கச்சி'. அதற்குப் பிறகு சீதா பெரிய நடிகையாகி விட்டார். அவரும் அவருடைய அப்பா, அம்மா எல்லோ ருமே என்னுடன் பாசத்துடன் பழகுவார்கள். ஒரு வசனகர்த்தா என்பதைத் தாண்டிய பாசம் சீதாவுக்கு என் மேல் இருந் தது. அவருடைய மகிழ்ச்சி யை, வலிகளைக் கூட என் னிடம் பகிர்ந்துகொள்வார்.
ஒரு காட்சிக்கு அவருக்கு வசனம் சொல்லிக் கொடுக்கப் போனேன். கேமராமேன் லைட்டிங் செய்து கொண்டி ருந்தார். சீதா அவர்களுடன் பத்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். தூரத் தில் அமர்ந்து பில்லா கிருஷ்ணமூர்த்தி பார்த்துக்கொண்டே இருந்தார்.
"லியாகத் சார்…என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க.''
"டயலாக் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக் கேன் சார்''.
"நாலு வரி டயலாக்கையா 10 நிமிஷமா சொல்லிக் கொடுக்கிறீங்க'' என்று ஜாலியாகச் சிரித்தார்.
ஆனால் நான் பேசிய அந்த பத்து நிமிடம் ஜாலியான பேச்சு அல்ல. ஒரு சகோதரி, சகோதரனிடம் பகிர்ந்துகொண்ட வலி.
"தங்கச்சி' படம், சின்ன பட்ஜெட் படம். படம் வெளியாகி வெற்றி பெற்றது. என் வசனங்களும் பேசப்பட்டது. தியேட்டர்களில் கைத்தட்டல்கள். அதைப் பார்த்தபோதும், கைத்தட்டல்களின் சத்தத் தைக் கேட்டபோதும் என் மனதில் விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் வந்து போனார்கள்.
எதைச் சொன்னாலும் புதிதாகச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.
"தங்கச்சி' படத்திலே கூட பல வசனங் களை அப்படி சொல்லலாம். உதாரணத் திற்கு ஒன்றை மட்டும் சொல்ல ஆசைப் படுகிறேன். அனுமதியுங்கள்.
அப்பா, அம்மா இல்லாத தங்கையை அண்ணன் வளர்க்கிறான். அண்ணன் ராம்கி போலீஸ் அதிகாரி. தங்கை சீதா. தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவள் கர்ப்பம் என்று தெரிந்து ஆனந்தத்தில் மிதக்கிறான். குழந்தை பிறந்த பிறகு அதை எப்படி யெல்லாம் வளர்க்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கற்பனையிலேயே வாழ்கிறான். டாக்டர் செக்கப்புக்கு போகி றாள் தங்கை. வில்லனின் ஆட்கள் அவள் போகும் வாகனத்தின்மேல் வேனை ஏற்றி விபத்து ஏற்படுத்தி, அதில் தங்கையின் கர்ப்பம் கலைந்துவிடுகிறது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறாள். செய்தி அறிந்து அண்ணன் துடித்துப் போகிறான். தங்கையைப் பார்க்க விரைந்து வருகிறான். அண்ணனைப் பார்த்ததும் துக்கத்தில் தங்கை கதறி அழுகிறாள். அண்ணன் கண்ணீரை அடக்கிக் கொண்டு தங்கைக்கு ஆறுதல் சொல்கிறான்.
"உன் மடியில தவழ்றதுக்கு ஒரு குழந்தைய பெத்துக் கொடுக்க முடியாம போச்சேண்ணே' என்று அழுவாள் தங்கை.
அப்பொழுது அவளை ஆறுதல் படுத்த அண்ணன் சொல்வான். "ரோஜாப்பூ உதிர்ந்தா என்னம்மா? செடி நீ பத்திரமா இருக்கேல்ல...… மறுபடியும் பூக்காமலா போகும்?'
இதைப்போல பல வசனங்கள் படத்திலே உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம்… அந்தப் படத்திலேயே அரசியல் வசனங்கள் எழுத ஆரம்பித்துவிட்டேன். அண்ணன்கள் ராதாரவியும், எஸ்.எஸ்.சந்திரனும் வில்லன்கள். அரசியல்வாதிகள் அவர்கள் பேசும் அரசியல் வசனங்கள் அப்ளாஸை அள்ளியது.
"வாழைப்பழம் வேணாம்கிற குரங்கும், நகைமேல ஆசைப் படாத பெண்ணும், லஞ்சம் வாங்காத அரசியல்வாதிகளும் இந்த நாட்ல உண்டா?' என்பது போன்ற வசனங்களை அப்பொழுதே எழுத ஆரம்பித்தேன். என் பேனாவில் மைக்குப் பதில் திராவகத்தையும் ஊற்றி எழுத வேண்டும் என்ற உணர்வு எனக்கு அப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. அந்தத் திராவகத்தால் தீமைகள் அழிய வேண்டும். அரசியல் அவலங்கள் மாறவேண்டும் என்று நினைத்தேன். இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருபவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
பில்லா கிருஷ்ணமூர்த்திக்காக நான் "தாய்ப்பாசம்' படம் எழுதிக் கொண்டிருந்தபோது நம்மைவிட்டு எம்.ஜி.ஆர். மறைந்து விட்டிருந்தார்.
"தாய்ப்பாசம்' அர்ஜுன் சார் ஹீரோவாக நடித்த படம். ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, ரூபினி, சார்- ஆகியோர் நடித்த படம். அதுவும் வெற்றிப்படம்தான். அதி லும் அரசியல் வசனங்கள் இருக் கும். சென்டிமெண்ட் காட்சிகள் அருமையாக இருக்கும். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். ஹீரோயின், அர்ஜுன்-சார்- இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அர்ஜுன்-சார்- இருவருக்கும் காட்சியின் ஆரம் பத்தில் வசனம் இல்லை. நான் எழுதவில்லை. அந்த ஷாட்டின் வசதிக்காக கேமரா மூவ்மெண்ட் டுக்காக ஒரு வசனம் தேவைப் பட்டது. டைரக்டர் என்னிடம் அர்ஜுன்-சார்- இருவரும் பேசிக்கொள்வது போல வசனம் வேண்டும் என்றார்.
"ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கணும்' என்றார்.
என்ன எழுதுவது? எம்.ஜி.ஆர். நினைவுக்கு வந்தார். பட்டென்று எழுதினேன்.
சார்- கேட்பார், "ஏ, பி, சி, டி, மொத்தம் எத்தனை எழுத்து?''
அர்ஜுன் சொல்வார், "இது கூடவா தெரியாது… இருபத்தி ஆறு''.
சார்- "இல்ல,… இருபத்து மூணு''…
அர்ஜுன் "என்னது இருபத்து மூணா?''
சார்- "ஆமா மூணு எழுத்து மறைஞ்சிருச்சு எம்.ஜி.ஆர்.'' என்று பேசுவது போல் எழுதிக் கொடுத்தேன்.
படம் ரிலீசானது.…ரிசல்ட் பார்ப்பதற்காக தியேட்டருக்குப் போயிருந்தேன்.
அந்த வசனத்திற்கு கைத் தட்டல்களாலும், விசில்களாலும் தியேட்டரே அதிர்ந்துவிட்டது.
அது என் வசனத்திற்கு கிடைத்த கைத்தட்டல் இல்லை.
(வளரும்...)