aa

பிரேமலதாவையும் நம்பவைத்தார்கள்! (106)

Advertisment

புரட்சிக் கலைஞரின் கட்டளைப்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகக் கிளர்ந் தெழுந்தார்கள் மன்றத்துத் தம்பிகள். அவர்கள் ஒரு கொடியை வெட்டிச் சாய்த்தால் பதிலுக்கு இவர்கள் இரண்டு கொடியை வெட்டிச் சாய்த்தார்கள். அவர்கள் மன்ற அலுவலகத்தை சூறையாடினால் மன்றத்து தம்பிகளும் அவர் களின் கட்சி அலுவலகத்தை சூறையாடினார் கள். சீறும் சிங்கங்களாக, பாயும் சிறுத்தை களாக மன்றத்து தம்பிகள் அதகளம் பண்ணியதைப் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மட்டும் மிரண்டு போகவில்லை... மற்ற கட்சியினரும் பிரமித்துப் போனார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி சாரைப் போல, விஜயகாந்த்தும் பணிந்து போவார் என்று நினைத்தவர்கள் திகைத்துப் போனார்கள்.

மன்றத்து தம்பிகள் மேல் காவல்துறை யினர் வழக்கு போட்டார்கள். இரண்டாயிரத் துக்கும் அதிகமானோர் சிறைக்குப் போனார் கள். மன்றத்து தம்பிகளின் வீரத்தைப் பார்த்து விசுவாசத்தைப் பார்த்து விஜயகாந்த்தும், பிரேமலதா அண்ணியாரும் வியந்துபோனார் கள். சிறைக்குப் போய் திரும்பிய மன்றத்துத் தம்பிகளுக்கு விஜயகாந்த், தன் கையால் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.

"உங்களுக்காக சிறைக்குப் போவது மட்டுமல்ல உயிரையும் கொடுப்போம்' என்றார்கள் மன்றத்துத் தம்பிகள். மெய் சிலிர்த்துப் போனார் விஜயகாந்த். ரசிகர் மன்றங்களின் பலத்தை அறிந்து அவர்களின் துணிச்சலை அறிந்து கண்கலங்கிப் போனார்.

Advertisment

இவ்வளவு பெரிய விஸ்வரூப விளைவு களுக்கு அடிக்கு அடி, உதைக்கு உதை என்ற லியாகத் அலிகானின் வசனமும் ஒரு காரண மாக இருந்ததை நினைத்து நான் பூரித்துப் போனேன். விஜயகாந்த்துக்காக நான் பேனா வைப் பிடித்தேன். அது வீணாகப் போக வில்லை என்று எனக்கு நானே மகிழ்ந்து போனேன். அந்த நிகழ்வுகளுக்குப் பிறகுதான் விரைவில் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் விஜயகாந்த்துக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்தியது. பிரேமலதா அண்ணியாரும் பச்சைக்கொடி காட்டினார். கட்சி தொடங்குவதற்கான வேலைகள் அதிரடியாக ஆரம்பித்தது.

விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர், மிக அமைதியாக இருந்துகொண்டே தனக்குச் சாதகமாக எல்லாவற்றையும் சாதித்துக் கொள்வார். மன்றத்து தம்பிகளும், மாவட்டச் செயலாளர்களும் என்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. வெளியே தெரியாமலேயே எனக்கு எதிரான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். முக்கிய பொறுப்பில் இருந்ததால் அவரிடம் உள்ள அதிகாரத்தை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார். விஜயகாந்த் என் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தது அந்தச் சுயநலவாதிக்கும், அவருடன் இருந்த சிலருக்கும் பிடிக்கவில்லை.

aa

Advertisment

அவர்களைப் பற்றிய புகார்களை பல மன்றங்களில் பொறுப்புகளில் இருந்தவர்கள் என்னிடம் ஆதாரப்பூர்வமாகத் தெரிவிக்க ஆரம்பித்தனர். எங்கே அவற்றையெல்லாம் விஜயகாந்த்திடம் நான் சொல்லிவிடுவேனோ என்ற பயம் அவர்களுக்கு. தலைமை மன்றத்துக்கு என்னைத் தலைவராக்கலாமா என்று விஜயகாந்த் யோசிக்க ஆரம்பித்தார். அது அவர்களை மேலும் கலக்கமடையச் செய்தது. அதனால் என்னைப் பற்றிய பொய்யான குற்றச்சாட்டுகளை, உண்மையே இல்லாத தவறான கருத்துக்களை நான் இன்றைக்கும் மதித்துக்கொண்டிருக்கின்ற பிரேமலதா அண்ணியாரின் மனதில் விதைக்க ஆரம்பித்தார்கள். இது எனக்கும் புரிய ஆரம்பித்தது.

நாம் எத்தனையோ திரைப்படங்களில், சீரியல்களில் கூடப் பார்த்திருக் கிறோம். வில்லன்கள் நல்லவர்களைப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறி மற்றவர்களை நம்பவைப்பார்கள். அதற்கான சூழ்நிலையை திட்டமிட்டு அவர் களே உருவாக்குவார்கள். யாரை நம்ப வைக்க வேண்டும் என்று நினைத்தார் களோ, அவர்களும் நம்பிவிடுவார்கள். இப்படித்தான் என் விஷயத்திலும் நடந்தது.‘விஜயகாந்த் கட்சி தொடங்கவேண்டும் என்பதற்காக நான் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆனால் அவருடைய ரசிகர் மன்றத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை. ஒரு நண்பனாக ஒரு உடன்பிறந்த சகோதரனாகத்தான் அத்தனையும் செய்தேன்.

கட்சி தொடங்கும் போது நான் அங்கு இருந்தால் இரண்டுவிதமாக நடந்திருக்கும். ஒன்று, சுயமரியாதையோடு நான் வெளியேறியிருப்பேன். இல்லையென்றால் விஜயகாந்த்தை விட்டு என்னைப் பிரிக்க நினைத்தவர்களின் சூழ்ச்சிகளால் நான் வெளியேற்றப்பட்டிருப்பேன். ஏனென்றால் பிரேமலதா அண்ணியாரையும் நம்பவைத்துவிட்டார்களே.… அதனால் கட்சி தொடங்குவதற்கு முன்பு நானே ஒதுங்கிவிட்டேன்.

என்னைப் பற்றித் தவறாகக் கூறி அண்ணியாரை நம்ப வைத்த அந்த நல்லவர்கள் அத்தோடு விடவில்லை. "ரஜினி மன்றங்களை வளைக்கும் விஜயகாந்த்! உதவி செய்யும் ஜெ!' என்ற தலைப்பில் 25.05.2005 தேதியிட்ட நமது நக்கீரன் இதழில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்தக் கட்டுரையில், "கேப்டனுக்கு ஆலோசனை கள் சொல்வது நான்தான், அவரின் மேடைப் பேச்சுக்களை நான்தான் தயாரித்துத் தருகிறேன் என்று வசனகர்த்தா லியாகத் அலிகான் தம்பட்டம் அடிக்க அது விஜயகாந்த் தரப்புக்கு எட்டியதால் லியாகத் அலிகான் இப்பொழுது ஓரங்கட்டப் பட்டிருக்கிறார்' என ஒரு தகவலை என்னைப் பிடிக்காதவர்கள் மிக நம்பகத்தன்மையோடு சொன்னதால், அதில் என்னைப் பற்றியும் வந்திருந்தது.

அதைப் படித்த நான் அப்பொழுது ராயப் பேட்டையில் இருந்த நக்கீரன் அலுவலகத்துக்குச் சென்று அன்பிற்குரிய கோபால் சார் அவர்களை நேரில் சந்தித்து ஒரு மறுப்புக் கடிதத்தைக் கொடுத்தேன். ஆண்டுகள் பல கடந்துவிட்டன. ஆயிரக்கணக்கான நிகழ்வுகளை அவர் சந்தித்திருப்பார். நூற்றுக்கணக்கான சட்டப் போராட்டங் களை நடத்திய போராளி.…நான் அவரை சந்தித்ததையும் கடிதம் கொடுத்ததையும் அவரால் நினைவில் வைத்திருக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அது மறக்க முடியாத நிகழ்வு.

நான் கொடுத்த மறுப்புக் கடிதம் 04.06.2005 தேதியிட்ட நக்கீரன் இதழில் என் புகைப்படத்தோடு "நான் ஒதுங்கிவிட்டேன்' என்ற தலைப்போடு வந்திருந்தது.

"ரஜினி மன்றங்களை வளைக்கும் விஜயகாந்த்!' என்ற கட்டுரையில் கேப்டனுக்கு ஆலோசனைகள் சொல்வது நான்தான், அவருடைய மேடைப் பேச்சுக்களை தயாரித்துத் தருவதும் நான்தான் என்று எனது நண்பர்களிடம் தம்பட் டம் அடித்ததால் நான் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. உண்மையான எழுத்தாற்றல் உள்ள எவனும் தம்பட்டம் அடிக்கமாட்டான். நான் மன்றத்தில் எந்தப் பதவியிலும் இல்லை. எந்தப் பொறுப்பிலும் இருந்ததில்லை.

நட்புக்காக இருந்தேன். நியாயமில்லை என்று தெரிந்ததால் நான்தான் ஒதுங்கிவிட்டேன்.

உண்மை என்பது கிணத்தில் போடப்பட்டுள்ள கல் அல்ல. பூமியில் போடப்பட்ட விதை. அதுவும் வீரியமுள்ள விதை. வெளியே வந்துதான் ஆகும். அதை சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன்.

"ஏண்ணே,… நான்தான்டா விஜயகாந்துக்கு தயாரிச்சு கொடுத்தேன். வேணும்னா ராவுத்தரிடம் போய் கேட்டுப் பாருன்னு தைரியமா சொல்ல வேண்டியதுதானே'' என்று இப்ராகிம் ராவுத்தர் ஆவேசப்பட்டார்.

"அண்ணே நமது கனவு விஜயகாந்த் அவர்கள் கட்சி தொடங்க வேண்டும். அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான். நாமே அதற்காக உழைத்துவிட்டு நாமே அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன்'' என்று சொன்னேன்.

"நீங்கதான் எழுதுனீங்கன்னு விஜயகாந்த்தும் நானும்தான் பல பேர்கிட்ட பெருமையா சொன்னோம். நீங்க சொன்னதே இல்லையே... சரி விடுங்கண்ணே. ஆண்டவன் இருக்காண்ணே'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.

அவர் 2005ஆம் ஆண்டு சொன்னதை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஆம் ஆண்டவன் இருக்கின்றான். அதனாலதான் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே நக்கீரன் இதழில் என் தரப்பு உண்மைகளைச் சொல்ல வைத்திருக்கிறான்.

(வளரும்...)