ff

(21) முறைத்துப் பார்த்த மூன்றுபேர்!

Advertisment

"தீர்ப்பு என் கையில்' படத்திற்கு ஃபைனான்ஸ் தேடி விஜயகாந்த்துடன் இப்ராகிம் ராவுத்தரும், நானும் ஒரு சாதாரண பஸ்ஸில் பெங்களூருக்கு போய் இறங்கினோம். ஒரு சினிமா விநியோகஸ்தர் எங்களை வரவேற்று "கனிஷ்கா' ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். தமிழர்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருக்கும் லாட்ஜ். அங்கு எங்களுக்கு ரூம் போட்டிருந்தார். அவருக்குத் தெரிந்த இரண்டு, மூன்று நண்பர்களை சந்திக்க வைத்தார். அவர்களிடம் படத்திற்கு ஃபைனான்ஸ் கேட்டுப் பேசினோம்... செட்டாகவில்லை.

இரண்டாவது நாள் இரவு. ஒரு ரெஸ்டாரண்டுக்கு எங்களை அழைத்துப் போனார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எங்கள் டேபிளுக்கு சற்றுத் தள்ளி ஒரு டேபிளில் மூன்றுபேர் அமர்ந்து சாப்பி ட்டுக் கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தார்கள். சரக்கு வேறு அடித்திருந்தார்கள். எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பெங்களூரில் தமிழர்கள், கன்னடர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. தமிழர்கள் குறிவைத்துத் தாக்கப்படு வதும் நிகழும்.

Advertisment

நாங்கள் கொஞ்சம் சத்தமாக தமிழில் பேசிக் கொண்டிருந்தோம். அவர் கள் மூவரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார் கள். அவர்கள் பார்ப் பதை நான் சொன்னேன். விஜயகாந்த்தும் இப்ராகிம் ராவுத்தரும் திரும்பிப் பார்த் தார்கள். அவர்கள் பார்வையே சரி யில்லாத மாதிரி தெரிந்தது. போதையில் வேறு இருக்கிறார் கள். நாம் தமிழர்கள் என்று பார்க்கிறார்களோ...? நாம் தமிழில் பேசுவது அவர்களுக்குப் பிடிக்க வில்லையோ? என்று நினைத்தோம்.

எதற்கு பிரச்சினை, போய்விடலாம் என்று நினைத்தோம். அந்த ரெஸ்டாரன்ட், கன்னடர்கள் அதிகமாக வரும் இடம். எங்களை அழைத்து வந்த நண்பர் "அதெல்லாம் பாத்துக்கலாம்' என்று சொன்னார். அந்த டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூவரும் எழுந்து எங்களை நோக்கி வந்தார்கள்.

அதில் ஒருவர், "சார் நீங்க விஜயகாந்த் தானே?'' என்று தமிழில் கேட்டார்.

"ஆமாம்'' என்றார் விஜயகாந்த்.

"சார் என் பேரு சிவமணி. சொந்த ஊர் விழுப்புரத்துக்குப் பக்கத்துல. பெங்களூர்ல வந்து செட்டிலாகி ரொம்ப வருஷம் ஆச்சு. இவங்க ரெண்டுபேரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ்'' என்றார். மங்கலான லைட் வெளிச்சத்திலும் கண்டுபிடித் திருக்கிறார்.

"நான் உங்கள் ரசிகன். உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் சார்'' என்றார். எங்களுக்கும் சந்தோஷம்தான். ஏனென்றால் நாங்கள் அவர்களை வேறு மாதிரி நினைத்துக்கொண்டிருந்தோம். பிரச்சினை பண்ண வருகிறார்கள் என்று நினைத்தோம்.

ff

சினிமாவில் வரும் ட்விஸ்ட் மாதிரி இருந்தது எங்களுக்கு.

"இங்க ஷூட்டிங் வந்தீங்களா சார்?''

(ஷூட்டிங் இல்லாததுனாலதான்யா வந்திருக்கோம் -இது எங்கள் மைண்ட் வாய்ஸ்)

"இல்ல எங்க நண்பரோட படம்... அதுக்கு ஃபைனான்ஸ் தேடி வந்தோம். யாராவது பார்ட்னரா ஜாயின் பண்ணினாகூட ஓ.கே.ன்னு நெனைச்சோம்'' என்றதும்...

"சார் எனக்குத் தெரிஞ்ச ஃபிரண்ட்ஸ்... தமிழ்க்காரங்க இல்ல... இங்க உள்ளவங்க. சிறுசா ஒரு ஜூவல்லரி மார்ட் வச்சிருக்காங்க. படம் எடுக்கலாம்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்ட பேசிப் பார்க்கலாமா?'' என்றார் சிவமணி.

"இங்க உள்ளவங்க கன்னடப் படம்தான எடுப்பாங்க?''

"இல்ல சார்... அவங்க கன்னடப் படத்தவிட தமிழ் படங்கள்தான் விரும்பிப் பாப்பாங்க. தமிழ்ப்படம் எடுக்கலாம்னுதான் சொன்னாங்க'' என்றார்.

மறுநாள் காலையில் அவர்களைச் சந்தித்தோம். விஜயகாந்த் அவர்களைப் பார்த்ததும் அவர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. திக்குமுக்காடிப் போனார்கள். அவர்களுடைய உபசரிப்பில் நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். மாநிலம் கடந்து, மொழி கடந்து விஜயகாந்த்தை நேசிப்பவர்கள். அவருக்கு ரசிகர்கள் உருவாகியிருப்பதை நினைத்து எங்களுக்கு நெகிழ்ச்சி. "தீர்ப்பு என் கையில்' படத்தை சேர்ந்து தயாரிக்க சம்மதித்தார்கள்.

காரணம் விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதர். அவர்மீது இருந்த ஈர்ப்பு... அதுவும் பெங்களூரில். "நீங்கள் சென்னை போனதும் மறுநாள் நாங்களும் வருகிறோம்' என்றார்கள். அன்று இரவு பெங்களூ ரில் இருந்து பஸ்ஸில் கிளம்பினோம்.

"வேற ஸ்டேட்ல, மங்கலான லைட் வெளிச்சத்துல உங்கள அடையாளம் கண்டுபிடிச் சாங்களே...! பஸ்ல போய் எறங்குறத சென்னையி லேயே யாராவது பாத்தா, "இவ்வளவு பெரிய நடிகர் பஸ்ல வர்றாருன்னு நெனைக்கமாட்டாங்களா?'' என்று நான் கேட்டேன்.

"இப்ப இருக்குற சூழ்நிலையில வேற வழி இல்லையேண்ணே'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.

"நான் அதைப்பத்தியெல்லாம் நினைக்க லேண்ணே. நாம பெரிய பெரிய ஆளு, நம்ம இமேஜ் போயிடும்னு நினைச்சா, நாம கீழ போயிரு வோம்ணே. நாம பெருசா ஜெயிக்கணும் ணே... அது மட்டும் தானே என் மனசுல இருக்கு'' என்றார்.

எளிமை என்பது அவருடன் எப்பொழுதுமே தொடர்ந் தது. அவருடைய உயர்வுக்கு அதுவும் ஒரு காரணம்.

சென்னையில் இறங்கும்போது எங்கள் வற்புறுத்தலுக்காக தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து தலையில் கட்டிக்கொண்டார். பட்டென்று பார்ப்பவர்களுக்கு "விஜயகாந்த்' என்பது தெரியாதது மாதிரி இருந்தது.

காலையில் சென்னையில் ஈகா தியேட்டர் அருகில் இறங்கினோம். அங்கிருந்து ஆட்டோ மூலம் ராஜாபாதர் தெரு ரூமுக்கு வந்தோம். மறு நாள் பெங்களூரில் இருந்து சொன்னது மாதிரியே அந்த ரசிகர்கள் வந்தார்கள். எல்லோரும் அமர்ந்து பேசி முடிவெடுத்து "தீர்ப்பு என் கையில்' படம் தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பமானது.

aa

ஒரு காரியத்தை நினைத்தால், அது வேறு ஒருவருடையது என்றால்கூட முயற்சி செய்து முடிப்பது விஜயகாந்த் அவர்களுடைய உயர்ந்த சிந்தனை. "நினைத்ததை முடிப்பவன்' எம்.ஜி.ஆர். அவரைப் போலவே அவரது ரசிகரும் இருந்தார்.

விஜயகாந்த், அவருடைய திரைப்பயணத்தில் நினைத்ததை முடித்திருக்கிறார். ஆனால் அரசியல் பயணத்தில்...?

கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிந்த வெற்றி, கானல் நீராகிப் போனது எதனால்? கொஞ்சம் பழைய நினைவுகளுக்குப் போய் வருவோம்...!

விஜயகாந்த்தின் மார்க்கெட் இறங்க ஆரம்பித்ததும்... சிலருக்கு மகிழ்ச்சி. ஒருவன் புகழ் பெறுவதும் போற்றப்படுவதும் சிலருக்குப் பொறுக்காது. அது மற்ற துறைகளை விட சினிமா துறையில் அதிகம் என்பது எனது கருத்து.

அப்பொழுது மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் வந்தார். பி.எஸ்.வீரப்பா அவர் கள் தயாரிக்கும் படத்திற்கு கால்ஷீட் கேட்டார். அந்தப் படம்தான் விஜயகாந்த்தின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தப்போகிறது என்று எங்களுக்குத் தெரியாது.

அந்த படம்தான் "சாட்சி'.

"சாட்சி' படம் வேகமாகத் தொடங்கியது. சில படங்கள் எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கூட ரசிகர் மன்றங்கள் வேகமாக வளரத் தொடங்கியது. அதற்கான மும்முரமான வேலை களில் இறங்கினோம்.

ராமுவசந்தனும் நானும் பல மன்றங்களின் திறப்புவிழாவிற்குப் போனதாகச் சொல்லியிருந்தேன். பல நேரங்களில் நான் தனியாகப் போனேன். என்னுடன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கூடவந்தது, இன்றைய நகைச்சுவை நடிகர் சுப்புராஜ். வடிவேலுவுடன் பல படங்களில் நடித்தவர். "சாரைப்பாம்பு சுப்புராஜ்' என்றால் இப்பொழுது ரசிகர்களுக்குத் தெரியும். அப்பொழுது அவர் நடிகராக இல்லை. உதவி இயக்குனராக முயற்சி செய்துகொண்டிருந்தார். ராஜ்கிரண் அவர்கள் படங்கள் இயக்கும்போது, அவரிடம் அஸோசியேட் டைரக்டராக இருந்தார். மன்ற திறப்பு விழாக்களில் எனக்கு முன்னால் அவர் பேசுவார். அவரை நான் "மாப்ளே' என்று அழைப் பேன், அவர் என்னை "மாமா' என்று அழைப்பார்.

அவர் மன்ற விழாவில் பேசும்போது... "மதுரையில் மணக்குது மல்லி... போதை ஏத்துறவங்களுக்கு பிடிச்சது மில்லி... எனக்குப் பின்னால் பேசப்போறவரு லியாகத் அல்லி...'' -என்று நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிப்பார். அப்பொழுது ரசிகர்கள் கை தட்டுவார்கள்.

என்னை விஜயகாந்த்தின் நண்பன் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். மன்ற வேலைகளில் நான் காட்டிய ஈடுபாடு, ரசிகர்களிடம் நான் பழகி அவர்களை ஊக்குவித்த விதம், இவையெல்லாம் விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவருக்குமே பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்