/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan_12.jpg)
(30) சந்தோஷப்பட்ட ஓ.பி.எஸ்!
"மாநாடு படத்தின் பூஜை என்று ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன. நான் அழைக்கப்படவில்லை. வெங்கட்பிரபுவிடமிருந்து எனக்கு எந்த தகவலும் வரவும் இல்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
என்னுடைய திரையுலக அரசியல் சம்பந்தமான, மகிழ்ச்சியான, அதிர்ச்சியான தனிப்பட்ட விஷயங்களைக்கூட ஒருவரிடம் பகிர்ந்துகொள்வேன். அவர் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் விஜயபாலாஜி. சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் "கஜேந்திரா' படத்திற்கு நான் வசனம் எழுதியபோது, எனக்கு அறிமுகமானவர்தான் விஜயபாலாஜி. இப்பொழுது அவர் இயக்குநர் -கதை வசனகர்த்தா. மொழி மாற்றப் படங்களுக்குக் கூட நேரடி தமிழ்ப்படங்கள் போல மிகச் சிறப்பாக எழுதியவர். மணிரத்னம் இயக்கி வெளிவந்த "பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களிலும் அவரது உழைப்பும், பங்களிப்பும் இருக்கிறது என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். எனக்கு நண்பராக அறிமுகமாகி, உடன்பிறவா சகோதரர் போலவே ஆகிப் போனவர். நான் மேடையில் பேசுவதற்கோ, எதைப் பற்றியாவது எழுத வேண்டும் என்ற சூழ்நிலை வரும்பொழுதோ அதைப்பற்றிய விவரங்கள் வேண்டும் என்று போன் செய்தால், உடனே அனுப்பி வைப்பார். அறிவாற்றல் மிக்கவர். நக்கீரனில் தொடர் எழுத ஒத்துக்கொண்டபொழுது அவரிடம் சொன்னேன்... "உங்களை நம்பித்தான் எழுதுவதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறேன். தேவையான செய்திகளை எனக்கு அனுப்ப வேண்டும். அடிக்கடி தொந்தரவு கொடுப்பேன்'' என்றேன். அதேபோல இந்த தொடர் எழுதுவதற்கு எனக்கு பேருதவியாக இருந்துகொண்டிருக்கிறார் விஜயபாலாஜி.
அவரிடம்தான் "மாநாடு' படத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னேன். நான் வசனம் எழுத ஒப்புக்கொண்டதிலிருந்து நடந்த அனைத்துமே அவருக்குத் தெரியும்.
"மாநாடு' போலவே ஒரு கசப்பான அனுபவம் இன்னொரு படத்திலும் எனக்கு நடந்தது. அந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் முன்...
நான் அரசியல் கட்சியில் சேர்ந்த அனுபவத்தைச் சொல்லிவிடுகிறேன்.
"எனக்கும் நாலுபேரு வேணாமா மன்சூர்? அதனாலதான் அ.தி.மு.க.வுல சேரணும்னு சொல்றேன்'' என மன்சூரலிகா னிடம் சொன்னேன்.
மறுநாள் காலை மன்சூரலிகான் கார் வந்தது. தயாராக இருந்த நான் காரில் ஏறினேன். கார் கிளம்பியது. ஆனால் கார், கதை விவாதம் நடப்பதற்காக அவன் ஏற்பாடு செய்திருந்த கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் திசையில் செல்லவில்லை... வேறு திசையில் போனது.
"என்ன மன்சூர், வண்டி இந்தப் பக்கம் போகுது. நாம எங்க போறோம்?''
"நான் என்ன உங்கள தப்பான இடத்துக்கா கூட்டிட்டுப் போகப் போறேன்?''
நேற்று சொன்ன அதே டயலாக் கைச் சொன்னான்.
கார் ராஜா அண்ணாமலைபுரம் தாண்டி க்ரீன்வேய்ஸ் சாலை நோக்கிப் போனது.
அமைச்சர், அண்ணன் ஓ.பி.எஸ். அவர்களின் பங்களா முன்னால் போய் நின்றது.
"என்ன மன்சூர்... இங்க எதுக்கு வந்திருக்கோம்?''
"வாங்கண்ணே... இவர்கிட்ட ஒரு வேலை இருக்கு.''
உள்ளே போனோம். அங்கிருந்தவர்கள் மேலே அழைத்துச் சென்று அமர வைத்தார்கள்.
மன்சூரலிகான் புகழ்பெற்ற நடிகன் என்பதால், அதற்கான மரியாதை கிடைத்தது... டீயும் கிடைத்தது. அப்போது காலை 11 மணி இருக்கும். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்தவாறு ஓ.பி.எஸ். அண்ணன் வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan1_12.jpg)
நாங்களும் எழுந்து வணக்கம் சொன்னோம். அமரச் சொன்னார்
எங்கள் தேனி மாவட்டத்துக்காரர்.... பெரியகுளத்துக்காரர். நான் கம்பத்தைச் சேர்ந்தவன், ஒரே மாவட்டம் என்ற உணர்வு. நிச்சயமாக எனது படங்களைப் பார்த்திருப்பார். மென்மையாகப் பேசினார். நலம் விசாரித்தார். திரைப்படப் பணிகள் குறித்து விசாரித்தார்.
நான் ஆர்வத்தோடு பதில் சொன்னேன்.
"நீங்க நம்ம கட்சியில் சேரணும்னு ஆசைப் படறீங்கன்னு மன்சூரலிகான் சொன்னாரு'' என்றார்.
நான் மன்சூரை பார்த்தேன்.
"ரொம்ப சந்தோஷம்... உங்கள மாதிரி ஆளுங்க நம்ம கட்சிக்கு வரணும்'' என்றார் ஓ.பி.எஸ்.
என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியுடன் பார்த்தேன்.
"உங்க தொண்டனா பணிபுரிய விரும்பு றேன்னு அம்மாவுக்கு ஒரு கடிதம் குடுத்துருங்க, நான் அம்மாகிட்ட போய் கொடுக்குறேன்'' என்றார்.
நான் எதற்குமே தயாராகப் போகவில்லை. மன்சூரலிகான் பக்காவாக தயார் செய்து வைத்திருந்தான். ஏற்கனவே அ.தி.மு.க.வில் சேர்ந்த அனுபவம் அவனுக்கு.
"கடிதமா?' என்ற வார்த்தை என் வாயிலிருந்து வருவதற்கு முன், டைப் செய்யப்பட்ட கடிதத்தை எடுத்து மன்சூரலிகான் டேபிளில் வைத்தான்.
"கையெழுத்து மட்டும் போடுங்கய்யா...''
போட்டேன்.
கடிதத்தை வாங்கிக்கொண்டு எங்க ளுக்கு விடை கொடுத்து அனுப்பினார் ஓ.பி.எஸ். வெளியே வந்ததும் காருக்குள் ஏறி அமர்ந்தோம்.
"என்ன மன்சூர் எனக்கே தெரியாம இவர்ட்ட பேசி வச்சிட்டியா?''
"நீங்கதான நேத்து சொன்னீங்க... அ.திமு.க.வுல சேர நினைக்கிறேன்னு.''
"நான்தான் சொன்னேன். யோசிக்க டைம் குடுக்காம... இப்படி அதிரடியா இறங்கிட்டியே மன்சூர்?''
"ஒரு முடிவு பண்ணிட்டா யோசிக்கக் கூடாதுங்கய்யா. அதுவும் நீங்கபண்ணுன முடிவு என்னைப் பொறுத்தவரை நல்ல முடிவு தாங்கய்யா.''
"ஒரு எமோஷன்லதான் உன்கிட்ட நேத்து பேசினேன்.''
"எமோஷன்ல பேசுனாலும்.. உண்மையைத்தான பேசுனீங்க. ஜெயலலிதா அம்மாவோட துணிச்சல ரசிச்சனுனாதலதான பேசுனீங்க. நீங்க துணிச்சலா வசனம் எழுதுறவரு. அதனாலத்தான் உங்களுக்கு அப்படித் தோணியிருக்கு. அவங்க உங்களுக்கு நல்ல பியூச்சர அமைச்சுக் குடுப்பாங்கய்யா.''
"இப்ப பேசிட்டு வந்திருக்கலாம்... கடிதம் கூட அப்புறமா குடுத்திருக்கலாம்...''
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan2_7.jpg)
"குடுத்தாச்சு... முடிச்சாச்சு... இனி அதைப் பத்தி யோசிக்காம பாஸிட்டிவா திங்க் பண்ணுங்க...''
"சரி போகலாம்'' என்றேன்.
"உங்க நல்லது, கெட்டதுக்கு நாலுபேரு வேணும்யா'' என்றான். அதாவது முதல்நாள் நான் அவனிடம் சொன்ன அதே டயலாக்கை எனக்கே சொன்னான்.
"சரி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்று நினைத்தவாறு கெஸ்ட்ஹவுசுக்கு வந்தேன். அன்று பிற்பகல் 4 மணி இருக்கும். ஓ.பி.எஸ். அண்ணனிட மிருந்து போன் வந்தது.
"நாளை காலை 10 மணிக்கு அம்மா அப்பாயின்ட்மென்ட் குடுத்திருக்காங்க. 9 மணிக்கே போயஸ்கார்டன் அம்மா வீட்டுக்கு வந்திருங்க.''
எனக்கு ஆச்ரியம். என்ன, எல்லாம் மின்னல் வேகத்தில் நடக்குது....
"என்ன நடந்தோ அது நன்றாகவே நடந்தது. என்ன நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. என்ன நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற பகவத்கீதை வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது.
எம்மதமும் சம்மதம் என்று என் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவன்... மும்மதமும் ஒன்றுதான் என்று பேனாவை எடுத்தவன், மத வேறுபாடு எங்கும் இருக்கக்கூடாது, எதிலும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன், அதனால் பகவத்கீதை நினைவுக்கு வருவதில் வியப்பில்லை..
மறுநாள் காலை 9:30 மணிக்கே போயஸ்கார்டன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டேன். ஓ.பி.எஸ்.ஸும் வந்துவிட்டார்.
ஒரு அறையில் அமரவைத்தார்கள். எனது வாழ்க்கைப் பயணத்தை மறந்தேன். ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கைப் பயணம் என் மனத்திரையில் ஓடியது.
ஒரு திரைப்பட நடிகையாக வாழ்க்கை யைத் தொடங்கியவர், அந்த இளம் வயதிலேயே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளவர், எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு அரங்கத்திற்குள் நுழை யும்போது, எல்லோரும் "சின்னவர் வந்துட்டாரு' என்று பரபரப்பாக ஒருவித பயத்தோடு தயா ராகும்போது... கொஞ்சம்கூட பயப்படாமல் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவர். அந்தத் தைரியத்துக்காகவே எம்.ஜி.ஆரின் பிரியத்துக்கு ஆளானவர். திரையுலகில் கொடி கட்டிப் பறந்த கதாநாயகி. எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆனவர். தமிழ்நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி. மு.க.வின் வெற்றிக்குப் பாடுபட்டவர். இரட்டை இலை இல்லாமல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர். அதற்குப் பிறகு துணிச்சலான முதலமைச்சர் ஆனவர். இன்னும் எத்தனை, எத்தனையோ நினைவுகள் ஓடியது.
(வளரும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/alikhan-t_3.jpg)