(6) நான் உன் ரசிகன்டா!
"உன்னை நெனைச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு. எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பே... அதை உடைச்சுட்டேனே லியாகத் அலிகான்'' என்றார் கே.பாலசந்தர்.
நான் சற்று ஷாக் ஆனேன்... அவரைப் புரியாமல் பார்த்தேன்.
"என் வீட்டில் என்னை நாடகம் போட வேண்டாம் என்று சொல்கிறார்கள்'' என்றவர்... "என்னைப் பத்தி நீ கேள்விப்பட்டிருப்பே. நான் நெனைச்சது சரியா வரலேன்னா ரொம்ப கோபப்படுவேன். அதனால... "நீங்க மறுபடியும் நாடகம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சா, இப்ப இருக்கிற மாதிரி அமைதியா இருக்கமாட்டீங்க, கோபப்படுவீங்க, டென்ஷன் ஆவீங்க... உடம்பு கெட்டுப்போகும், நாடகம் எல்லாம் வேணாம். எவ்வளவோ சாதனை பண்ணிட்டீங்க... அதை நெனச்சுட்டு சந்தோஷமா வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்க. வெளியில நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டு வாங்க. எல்லாரையும் பாருங்க, பேசுங்க... எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்'னு சொல்றாங்க'' என்று கூறினார். பாலசந்தர் இப்படிச் சொன்னது எனக்கு வருத்தமாகவும் இருந்தது, நியாயமாகவும் இருந்தது.
"இனிமே நீங்க சாதிக்கிறதுக்கு என்ன இருக்கு... அதான் நெறைய சாதிச்சுட்டீங் களேன்னு கேக்கறாங்கப்பா'' என்றார்.
"உண்மைதான் சார். இனிமே நீங்க சாதிக்கிறதுக்கு என்ன இருக்கு. தமிழ் சினிமா இருக்கிற வரைக்கும் உங்க சாதனையை மறக்க முடியாது சார். நீங்க எப்பவும் பேசப்படக்கூடிய ஆளாத்தான் சார் இருப்பீங்க'' என்றேன்.
"உன்னை நெனைச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு. எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்ப... அதை உடைச்சுட்டேனே லியாகத் அலிகான்'' என்றார்.
"சார், அதெல்லாம் இல்ல சார். தமிழ் சினிமாவோட லெஜண்ட்... 100 படங்களுக்கு மேல எழுதி இயக்குன சாதனையாளர். வசனங் களால ரசிகர்களக் கட்டிப்போட்டவரு, கைதட்ட வச்சவரு. நீங்க என்னைக் கூப்பிட்டு, உங்க கதைக்கு வசனம் எழுதச் சொன்னதே எனக்குக் கிடைச்ச பெரிய விருதா நெனைக்கிறேன் சார்'' என்றேன்.
"எழுதுடா... நல்லா எழுது, நிறைய எழுது. நான் உன் வசனத்துக்கு ரசிகன்டா'' என்று என்னைக் கட்டியணைத்து, என் தோள் களைத் தட்டிக்கொடுத்து கண்கலங்க அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்தை நக்கீரனில் எழுதப்போறேன் என்று பாலசந்த ரின் மேனேஜராக இருந்த தம்பி மோகன் அவர்களிடம் சொன் னேன். (தற்பொழுது என் அன்புச் சகோதரர் சமுத்திரக் கனியிடம் மேனேஜராக இருக்கிறார் மோகன்)
நான் சொன்னவுடனே "எழுதுங்க சார்... அந்த சந்திப்பு சாதாரண சந்திப்பு இல்ல. அது மட்டும் நடந்திருந்தா... நாடகம் நடந்து, அது படமாகி யிருந்தா... உங்களுக்கு இன்னும் எவ்வளவோ பேர் கிடைச் சிருக்கும் சார்'' என்றார்.
நினைப்பது மட்டும்தான் நாம், ஒன்றைத் தொடங்கி வைப்ப தும், அதை முடித்து வைப்பதும் இறைவன்...!
இந்த இடத்தில் இன்னொரு சந்திப்பையும் சொல்ல வேண்டும். அதற்குப் பொருத்தமான இடம் இதுதான்.
ஆர்.பார்த்திபன். இப்பொழுது ராதா கிருஷ்ணன் பார்த்திபன். தமிழ் சினிமாவுக்கு "புதிய பாதை' போட்டவர். அந்தப் பாதையிலேயே இப்பொழுதும் நடைபோட்டுக்கொண்டிருப்பவர். சமீபத்தில் அவர் எழுதி, இயக்கி, நடித்த "ஒத்த செருப்பு' திரைப்படம் உலகப் புகழ்பெற்றது. அவர் ஒரு புதுமைப்பித்தன். பல புதுமை களுக்குச் சொந்தக்காரர். எந்த விஷயத்தைச் சொன்னாலும், புதிய கோணத்தில் சொல்லவேண்டும் என்று நினைப்பவர். எப்பொழுதும் புதிதாகவே சிந்தித்துக் கொண்டி ருப்பவர்.
எனக்கு வருடம் சரியாக நினைவில்லை. 90-களின் கடைசியில் என்று நினைக்கிறேன். நான் பிஸியாக இருந்த நேரம். ஆர்.பார்த்திபன் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே சென்று சந்தித்தேன்.
"சார், இப்ப நீங்க பிஸியா இருக்கீங்க. எனக்காக ஒரு நாலஞ்சு நாள் ஒதுக்க முடியுமா?'' என்று கேட்டார்.
"நீங்க கேட்டு நான் இல்லேன்னு சொல்ல முடியுமா? என்ன விஷயம்னு சொல்லுங்க சார்'' என்றேன்.
"நான் புதுசா ஒரு படம் பண்ண ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன். டைட்டில் "சோத்துக் கட்சி'. எப்படி இருக்கு சார்?''
"ரொம்ப நல்லா இருக்கு சார். அரசியல் இருக்குமோ?'' என்றேன்.
"எல்லாருக்கும் சோறு கிடைக்கிறதுக்கான அரசியல் இருக்கும் சார். ஒரு அஞ்சுநாள் நீங்க என்கூட டிஸ்கஷன்ல இருக்கணும்'' என்றார்.
நான், திரு.கலைமணி, திரு.இராம.நாராயணன் அவர்களுடைய டிஸ்கஷனுக்கு மட்டும்தான் போவேன். பணத் துக்காகப் போகமாட்டேன். அவர்களுடைய அன்புக்காக மட்டுமே போவேன். என்னை விரும்பிக் கூப்பிடுவார்கள். மற்றபடி யாருடைய டிஸ்கஷனுக்கும் போகமாட்டேன்.
என்னைத் தேடிவந்து, எனது வீட்டிலோ, நான் இருக்கும் அலுவலகத்தி லோ வந்து கதையைச் சொல்லி கருத்துக் கேட்கும் எத்தனையோ நண்பர்களுக்கு உதவியாக இருக்கிறேன். அவர்களின் கதையைப் பற்றி கருத்துக் களைச் சொல்லி அவர்களுக்கு பலம் சேர்த்திருக்கிறேன். ஆனால் நான் போய் அவர்களுடன் நான்கைந்து நாட்கள் தங்கி டிஸ்கஷனில் இருந்தது இல்லை, இருக்க விரும்பியதுமில்லை.
பாத்திபன் கேட்கிறார். என்னால் மறுக்க முடியவில்லை. காஞ்சிபுரம் அருகே ஒரு கெஸ்ட்ஹவுஸில் தங்கினேன். பாலு ஜூவல் லர்ஸ் பாலசுப்பிரமணியன் சாருக்கு சொந்தமான கெஸ்ட்ஹவுஸ். பாலு ஜூவல்லர்ஸ் என்றால் அப்பொழுது மிகவும் பிரபலம். அவரைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக சினிமாக்காரர்களுக்கு...!
தொழிலில் அவர் வளர்ச்சியடைந்தது யாரால், வீழ்ச்சியடைந்தது யாரால் என்பதெல்லாம் தனிக் கதை.
அவருடைய கெஸ்ட்ஹவுஸில் போய் தங்கினோம். அருமையான இடம்... அருமையான உபசரிப்பு. "சோத்துக் கட்சி' கதை அருமையாக இருந்ததா?
"சொன்னால்தானே தெரியும். கதையைச் சொல்லுங்க சார்'' என்று பார்த்திபன் சாரிடம் கேட்டேன்.
"மொதல்ல, இவங்க போடற சோறு எப்படின்னு சொல்லுங்க.''
"பிரமாதமா இருக்கு சார்''.
"கதையைக் கேட்டா அப்படிச் சொல்லுவீங்களா?''
"கேக்காமலே சொல்றேன் சார்... கதை பிரமாதம்.''
"அதெப்படி கேக்காமலே சொல்றீங்க?''
"நீங்க கதை பண்ணா அது பிரமாதமா இருக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கு சார். டைட்டில் வேற "சோத்துக் கட்சி'ன்னு இருக்கு. அதுலயே பெரிய எதிர்பார்ப்பை குடுத்துட்டீங்க'' என்றேன்.
"தேங்க்ஸ்...''
"எதுக்கு சார் தேங்க்ஸ்''
"என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கைக்கு நான் மட்டுமில்ல சார், ரசிகர்களும் உங்கமேல பெரிய நம்பிக்கை வச்சிருக்காங்க. நீங்க கூப்பிட்டதும் நான் டிஸ்கஷனுக்கு வந்திருக்கேன்னா, நீங்க நடிகர்ங்கிறதுக்காக இல்ல. நீங்க ஒரு கிரியேட்டர், நல்ல கதை சொல்றவரு, சூப்பரா வசனம் எழுதுறவரு அதனாலத்தான் வந்தேன்.''
"நீங்க ரொம்ப ஓப்பனா பேசுறீங்க சார். சினிமாவுல ஓப்பனா பேசறவங்களும், கதையைப் பத்தியோ, படத்தைப் பத்தியோ உண்மையைப் பேசறவங்களும் ரொம்ப கம்மி சார். நம்மகிட்ட பாராட்டிட்டு, வெளிய போய் தப்பா பேசுறவங்கதான் அதிகமா இருக்காங்க.''
"ஆனா நான் அப்படி இல்ல சார்'' என்றேன்.
எங்கள் உரையாடல் இப்படிப் போய்க்கொண்டிருந்தது. அதை பார்த்திபன் சாருடைய அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் இரண்டு பேர் கவனித்தபடி அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கரு.பழனியப்பன். இன்னொருவர் பூபதி பாண்டியன்.
இன்றைய கரு.பழனியப்பன் மிகச்சிறந்த எழுத்தாளர், இயக்குநர், நடிகர், சமூக சிந்தனையாளர், தொலைக்காட்சி களில் பல விவாத மேடை நிகழ்ச்சிகள் நடத்திக் கலக்கிக்கொண்டிருப்பவர். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் திராவிட உணர்வுள்ளவர், சிறந்த பேச்சாளர்.
பூபதி பாண்டியன், பிந்தைய நாட்களில் தனுஷ் நடித்த "தேவதையைக் கண்டேன்', "திருவிளையாடல் ஆரம்பம்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர், எழுத்தாளர். குறிப்பாக அவருடைய வசனங்கள். கைத்தட்டல் வாங்குவதற்காகவே எழுதினாரா என்று எனக்குத் தெரியாது.
அந்த எனது இரண்டு தம்பிகளும் அன்று பார்த்திபன் சாருடைய உதவி இயக்குநர்களாக இருந்தார்கள்.
கதைக்கு வருவோம்...
"சோத்துக் கட்சி' கதையை பார்த்திபன் சொல்ல ஆரம்பித்தார்.
(வளரும்...)
(வளரும்...)