aa

(22) ரசிப்பார் விஜயகாந்த் சிவப்பார் ராவுத்தர்!

Advertisment

நான் பள்ளி மாணவ னாக, 6-ஆம் வகுப்பு படிக்கும்போது பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். எனது தமிழ் ஆசிரியர் கோபால் சார், அவர்தான் எனக்கு எழுதிக் கொடுப்பார். நான் மனப்பாடம் பண்ணிப் பேசுவேன். அந்த வகையில் என்னை உருவாக்கியது கோபால் சார்.

அது தொடர்ந்தது... உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் புதுமுக வகுப்பு (அப்பொழுது பி.யு.சி. என்று சொல்வார்கள்) படிக்கும் போது பழனியில் அனைத்துக் கல்லூரி பேச்சுப்போட்டி நடந்தது. எங்கள் கல்லூரியின் சார்பில் நான் கலந்துகொண்டு வெற்றிபெற்று பெரிய கோப்பையை வாங்கி வந்தேன். மறைந்த குன்றக்குடி அடிகளார், அமைச்சராகவும், சபாநாயகராகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும் இருந்த காளிமுத்து ஆகியோருடன் ஒரே மேடையில் பேசி கைதட்டல் வாங்கியிருக்கிறேன். அந்தப் பேச்சாற்றல், விஜயகாந்த் ரசிகர் மன்ற விழாவிற்குப் பெரிதும் பயன்பட்டது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் அதை விஜயகாந்திடம் வந்து சொல்வார்கள்.

விஜயகாந்த் ரசிகர் மன்ற விழாவில் நான் முக்கியமாக செயல்பட்டதால், "எங்கிருந்தோ வந்தான் கண்ணன் என்பதுபோல எங்கி ருந்தோ வந்த என் அண்ணன்' என்று என்னைப் புகழ்ந்து பேசுவார் விஜயகாந்த். அப்பொழுதெல்லாம் இப்ராகிம் ராவுத்தர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியும். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த, அவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த எனக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சிலர் பொறாமையில் பேசுவார்கள். அது விஜயகாந்த்தின் காதுக்கும் போகும்.

Advertisment

"அவரும் முஸ்லிம்... இவரும் முஸ்லிம், அதான் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறாரு' என்பார்கள்.

அவர்கள் சொல்லச் சொல்லத்தான் என் மீதான பாசம் அதிகமானது விஜயகாந்த்துக்கு.

"அண்ணே அவனுக கெடக்கானுக... விடுங்கண்ணே'' என்பார்.

"சொல்றவன் சொல்லிட்டுப் போறான் இப்ராகிம். அவனுகளா இவரை மாதிரி என்னோட வளர்ச்சிக்காக அக்கறைப்படறானுக, உழைக்கிறானுக. இப்பவே அவனுகளால தாங்க முடியலே. இவரை வசனகர்த்தா ஆக்குவோம்... அப்போ என்ன பண்ணுவானுக'' என்பார்.

அது எப்படி நடந்தது?

சினிமாவுக்காகவே "பேசும் படம்', "பிலிமாலயா', "ஜெமினி சினிமா' ஆகிய பத்திரிகைகள் வரும். அதில் "ஜெமினி சினிமா' பத்திரிகையில் திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாசலம் அவர்கள் நடுவராக இருந்து ஒரு வசனப் போட்டி வைத்திருந்தார்கள்.

ஒரு காட்சிக்கான சூழ்நிலையை அவரே விவரித்திருந்தார். அந்தக் காட்சிக்கான வசனத்தை எழுதி அனுப்பவேண்டும். "சிறந்த வசனம் எது என்பதை அவரே தேர்ந்தெடுத்து அறிவிப்பார்' என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

அந்த வசனப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து போட்டி முடிவினை அந்தப் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதில் எனக்கு முதல் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. என்னை சிறந்த வசனகர்த்தாவாக பஞ்சு அருணாசலம் அவர்கள் தேர்வு செய்திருந்தார். அதைப் பார்த்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் வசனத்திற்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

dd

"ஜெமினி சினிமா' பத்திரிகையை எடுத்துக்கொண்டு போய் விஜயகாந்த்திடம் காட்டினேன். அவர் அடைந்த மகிழ்ச்சி, நான் அடைந்ததைவிட அதிகமாக இருந்தது. நான் எழுதிய வசனத்தையும் அதில் போட்டிருந்தார்கள்.

"டேய் இப்ராகிம்... அண்ணன் சூப்பரா எழுதியிருக்காருடா, படிச்சுப் பாரு'' என்று அவரிடம் கொடுத்தார். அவரும் படித்துப் பார்த்தார்.

"அண்ணே நல்லா எழுதுவார்னு எனக்குத் தெரியும்பா'' என்றார் அவர்.

அவர் சொன்ன கதை ஐடியாக்களுக்கு நான் ஏற்கனவே எழுதிக் காண்பித்திருக்கிறேன். அதை முந்தைய அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன்.

அன்று முழுவதும் வருவோர், போவோரிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். தற்பெருமையாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து நான்கூட மற்றவர்களிடம் சொல்லத் தயங்கினேன். ஆனால் விஜயகாந்த் சொல்லிக் கொண்டிருந்தார்... அவருக்கே பரிசு கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில்...

"டேய் சுப்புராஜு... உன் மாமனுக்கு (அதாவது எனக்கு) "ஜெமினி சினிமா' வசனப் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்குடா.''

"என்னது செமினி சினிமாவுல கிடைச்சிருக்கா?'' என்றான் சுப்புராஜ். அவனுக்கு ஜ, ஜெ. எல்லாம் வராது. "ச', "செ' என்றுதான் உச்சரிப்பான்.

"மாமன் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள்ல பேசறப்பவே எனக்குத் தெரியும்ணே... நல்லா எழுதுவார்னு'' என்றான் சுப்புராஜ்.

சாரைப்பாம்பு சுப்புராஜ் வெள்ளந்தியானவன். உண்மையை வெளிப்படையாகப் பேசுவான். ஒருவரைப் பொய்யாகப் புகழமாட்டான். பாராட்டிப் பேசமாட்டான். சினிமாவில் அப்படிப்பட்டவர்கள்தான் அதிகம்.

விஜயகாந்த் நடித்த ஒன்றிரண்டு படங்கள் ரொம்ப சுமாராக இருக்கும். படம் வெளியான நாளன்று, பார்க்க வருபவர்களிடம் "படம் எப்படி இருக்கு, கூட்டம் எப்படி இருக்கு?' என்று ஆர்வத்துடன் விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரும் கேட்பார்கள்.

dd

"படம் அருமையா இருக்கு... சூப்பரா இருக்கு... நல்லா இருக்கு' என்று சொல்வார்கள்.

சுப்புராஜ் வருவான், அவனிடம் கேட்பார்கள், "படம் எப்படிடா இருக்கு?''

சுப்புராஜ் திட்டுவான். "இந்த மாதிரி படங்கள்ல ஏன் நடிக்கிறீங்க? ஆடியன்ஸ் திட்டுறானுக'' என்பான்.

"என்னடா இப்படிச் சொல்ற... பாத்துட்டு வந்தவனுக எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றானுக...''

"அவனுக சொன்னா நீங்க நம்பிடுவீங்களா?''

"கூட்டம் எப்படிடா இருக்கு''

"நீ வா... நீ வான்னு கூப்பிட்டு... கூப்பிட்டு டிக்கெட் குடுத்துக்கிட்டிருக்கானுக'' என்பான்.

"பிளாக்ல போகுதுன்னு சொன்னானுக...''

"நீங்க பிளாக்கா இருக்கீங்கள்ல... அதான் அப்படிச் சொல்லியிருப்பானுக'' என்று சிரிப்பான்.

தியேட்டர் ரவுண்ட்ஸ் போய்விட்டு நான் வந்ததும் விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரும் என்னிடம் சொல்வார்கள்.

"சுப்புராஜ் இப்படிச் சொல்றாண்ணே... அப்படியாண்ணே'' என்று கேட்பார்கள்.

படம் நன்றாக இல்லை, வசூலும் பெரிதாக இல்லை என்பதை நான் வேறு மாதிரி சொல்லுவேன். "கதை சொல்றப்ப நல்லா சொன் னாங்க.... ஏன் இப்படி எடுத்து வச்சிருக்காங்க'' என்று உண்மையை ஒளிக்காமல் சொல்வேன், அவர்களுக்கு வலிக்காமல் சொல்வேன்.

சுப்புராஜ் வெளிப்படையாகப் பேசுவதை, குறை சொல்வதை விஜயகாந்த் ரசிப்பார். ஆனால் இப்ராகிம் ராவுத்தருக்கு முகம் சிவந்துபோகும். விஜயகாந்த்தைப் பற்றி யாரும், எந்தக் குறையும் சொன்னால் தாங்கிக்கொள்ள மாட்டார்.

"சுப்புராஜு இனிமே நீ இந்தக் காம்பவுண்ட்டுக்குள்ளேயே வரக்கூடாது... போடா'' என்பார்.

அப்படித் திட்டுவாரே தவிர, அவன் ஒருநாள் வராவிட்டால் கூட தேடுவார்.

"கோவிச்சுட்டு வரலியாண்ணே'' என்று கேட் பேன்.

"அண்ணே நீங்க கோவிச்சா மட்டும் அவனுக்கு சொரணை இருக்காதுண்ணே, வருவாண்ணே'' என்பேன்.

அதேபோல வந்து நிப்பான்... கோவத்தையே காட்டிக்கொள்ள மாட்டான்.

சுப்புராஜ் பற்றிய இந்த சம்பவத்தை நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.

நான் வசனகர்த்தாவாகி, இயக்குநராகி, பல படங்கள் பண்ணிய பிறகு "ஏழை ஜாதி' படத்தை எழுதி இயக்கினேன். விஜயகாந்த்தான் ஹீரோ. அந்தப் படத்தில் உதவி இயக்குநராக என்னிடம் வேலைக்குச் சேர்ந்தார் மணி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் அவருக்கு. மிகவும் சின்சியராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார். நேரம் தவறாமல் குறித்த நேரத்தில் வருவார். ஒரு வேலையை சொல்லிவிட்டு, நான் மறந்தால் கூட செய்து முடித்துவிட்டு என்னிடம் வந்து சொல்வார்.

"அதுக்குள்ள முடிச்சிட்டியா மணி'' என்று ஆச்சரியப்படுவேன். ஷுட்டிங் ஸ்பாட்டில் நான் சொல்வதற்கு முன்னாலேயே சில வேலைகளை செய்து வைத்திருப்பார். தனிப்பட்ட முறையில் என்னையும், என் வேலைகளையும் அக்கறையாகப் பார்த்துக்கொள்வார். நான் நினைத்ததுபோல ஒரு உதவியாளர் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்ராகிம் ராவுத்தரிடமும், மணியைப் பற்றிச் சொல்வேன். வீட்டிலும் பெருமையாகச் சொல்வேன்... "என்னைக் கவனிச்சுக்க மணி இருக்காரு'' என்று. அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது இப்ராகிம் ராவுத்தரும் மணியை கவனிப்பார். அவரிடம் மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்வார் மணி. என்னைவிட இப்ராகிம் ராவுத்தருக்கு மணியை ரொம்பவும் பிடித்துவிட்டது.

ஒன்றிரண்டு மாதங்கள் கடந்தது. முன்னைவிட இப்ராகிம் ராவுத்தரின் பிரியத்துக்குரியவரானார் மணி.

ஒருநாள் இப்ராகிம் ராவுத்தர் என்னை அழைத்தார். "உடனே கிளம்பி வாங்க'' என்றார்.

போனேன்... அவர் முகம் மகிழ்ச்சியாக இல்லை. அது சோகமா, ஆத்திரமா என்று தெரியவில்லை.

(வளரும்...)