(16) பட்டம் கொடுப்பதில் புலி!
"சட்டம் ஒரு இருட்டறை' படத்திற்கு முன் 1979-ல் தொடங்கியது புரட்சிக்கலைஞரின் திரைப்பட வாழ்க்கை. மதுரையிலிருந்து அவரை சிபாரிசு செய்து நடிப்பதற்காக அனுப்பி வைத்தது மன்சூக் என்னும் விநியோகஸ்தர். அவர் அனுப்பி வைத்தது எம்.ஏ.காஜா என்ற இயக்கு நரிடம். அவர் வாய்ப்புக் கொடுத்தது "இனிக்கும் இளமை' என்ற படத்தில்.
விஜயகாந்த் அவர்கள், அவருக்குத் துணையாக அழைத்துக்கொண்டது இப்ராஹிம் (ராவுத்தர்) அவர்களை. அதற்குப் பிறகு அவருடன் வந்து இணைந்தது லியாகத் அலிகான்.
அவர் வாழ்வில் மறக்க முடியாதவர்களாக, அவரது வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களில் முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். அது மட்டுமல்ல, அவரது ரசிகர்களும், அவரை நேசிக்கும் தமிழக மக்களிலும்கூட இஸ்லாமியர்கள் அதிகம்.
ஆனால் மூன்று மதங்களும் கொண்டாடும் சொக்கத்தங்கமாகத்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது இதயத்தில் எப் பொழுதும் மூன்று மதங்களின் துஆவும், மந்திரங்களும், ஜெபமும் ஒலித்துக்கொண்டே யிருக்கும். அவர் விரலில் நீண்ட காலமாக "786' என்று போட்ட மோதிரம் அணிந்திருந்தார்.
1979-ல் இருந்து 1980-வரை "அகல் விளக்கு', "இனிக்கும் இளமை', "நீரோட்டம்', "சாமந்திப்பூ' படங்கள் விஜயகாந்த் நடித்து வெளியாகின. விஜய காந்த் என்ற நடிகர் புதிதாக தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கிறார் என்று சொல்லும் படங்களாக மட்டுமே அவை இருந்தன.
இந்த அறிமுகப் படங்களில் அவர் முகத்தைக் காட்டு வதற்கே அவர் சந்தித்த அவமானங்கள் அதிகம்.
"கருப்பு' என்ற காரணத்திற் காகவே அவமானப் படுத்தப்பட்டார், உதாசீனப் படுத்தப்பட்டார், வாய்ப்புகள் மறுக்கப்பட்டார்.
ரோகிணி லாட்ஜ் காம்பவுண்டில் தங்கியிருந்த ஆரம்பகாலங்களில் அங்கே இருந்தவர்கள், வந்து போனவர்கள் அவரை அலட்சியப்படுத்திப் பேசுவதைக் கேட்டு அவர் மனம் நொந்த தில்லை.
"தம்பி கருப்பா இருந்தா ஹீரோவா ஆக முடியாது...''
"சினிமாவுல ஹீரோவா இருக்க ணும்னா அழகா இருக்க ணும்... கலரா இருக்கணும் கிறது கூட தெரியாதா உனக்கு...''
"மதுரையிலதான் சொந் தமா ரைஸ்மில் இருக்குல்ல... அதை கவனிச்சுட்டு அங்கேயே இருக்க வேண்டியதுதானே...?''
"வசதி இருக்குல்ல... அதான் கையில காசு இருக்கு, அது தீர்ந்ததும் ஊருக்குப் போயிருவான்''
"தம்பி, ஏற்கனவே நீ ரொம்ப கருப்பு. சான்ஸுக்காக அலைஞ்சா இன்னும் கருப்பாயிருவ... அதுக்கப்புறம் நீ மதுரைக்கு போனா உன் வீட்டுல இருக்கிறவர் களுக்கே உன்னை அடையாளம் தெரியாமப் போயிரும், அதுக்கு முன்னாலேயே போயிரு...''
-இப்படி ஏளனம் பேசிய வர்கள் எல்லாருமே சினிமாவில் இருந்த வர்கள். சினிமாவுக்கு முயற்சி செய்துகொண்டி ருந்தவர்களே. ஆனால் அவர்களில் ஒருவர்கூட சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை... காணாமலே போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் எள்ளி நகையாடிய "கருப்பு'தான் வைரமாக மாறி ஜொலித் தது. அந்த கருப்புதான் "புரட்சிக் கலைஞர்' ஆனது. அந்தக் கருப்புதான் "எழுச்சிக் கலைஞர்' ஆனது. அந்தக் கருப்புதான் "கேப்டன்' ஆனது. அந்தக் கருப்புதான் "கருப்பு எம்.ஜி.ஆர்.' ஆனது.
"கருப்பு எம்.ஜி.ஆர்' என்று அழைக்கப்பட்டது எப்படி என்று சொன்னேன். "கேப்டன்' என்று அழைக்கப்பட்டது எப்படி என்று ரசிகர் களுக்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும் .
"புரட்சிக் கலைஞர்' என்ற பட்டம் யார் கொடுத்தது எப்படி வந்தது?' என்று சொல்கிறேன் "கலைப்புலி' தாணு சார், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத பெயர். பிரமாண்ட தயாரிப்பாளர். விநியோகஸ்தராக இருந்து தயாரிப் பாளராக உயர்ந்தவர். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார்... இன்னும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். தாராள மனதுக்காரர். அவரை நான் அண்ணன் என்று அழைப்பேன். அவர் "தம்பி' என்று என்னை அழைப்பதிலே பாசம் மட்டுமல்ல... உரிமையும் இருக்கும்.
ஒருநாள் அவருடன் இப்ராகிம் ராவுத்தர், நான், விஜயகாந்த் மன்ற பொதுச்செயலாளர் மூவரும் வடசென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு காரில் போய்க்கொண்டிருந் தோம்.
தாணு சார் விளம்பரம் பண்ணுவதில் அசத்துவார். இன்னொரு வகையில் அவர் ராசிக்காரர். "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்கள்... இன்றுவரை அவர் தான் சூப்பர் ஸ்டார். ஒரே சூப்பர் ஸ்டார் அவர்தான்' என்றெல்லாம் பலவித கருத்துகள் அவ்வப்போது திரையுலகில் பேசப்படும். விஜய், அஜித் படங்கள் பெரிய வெற்றி பெறும்போது, வசூலில் சாத னை படைக்கும்போதெல் லாம் "சூப்பர் ஸ்டார் யார்?' என்று சிலர் கருத்துக்கள் சொல்வார்கள் இருந்தாலும், சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினி சார்தான். நீடித்து நிலைத்து நிற்கும் அந்த சூப்பர் ஸ்டார் பட்டம், அவருக்கு கிடைப் பதற்குக் கார ணமே கலைப் புலி தாணு சார்தான். அவர்தான் "சூப்பர் ஸ்டார்' என்று முதன்முதலில் விளம்பரங் களில் போட்டார்.
"ஆக்ஷன் கிங்' அர்ஜுன். இந்தப் பட்டமும் தாணு சார் கொடுத்ததுதான். அர்ஜுன் சாரை முதலில் "ஆக்ஷன் கிங்' என்று அழைத்தவர், விளம்பரப்படுத்தியவர் தாணு சார்தான். இது புதிய செய்தி அல்ல. எல்லோருக்கும் தெரிந்தது தான், இருந்தாலும் இந்த இடத்தில் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பட்டம் கொடுப்பதில் ராசிக்காரரான தாணு சார் அவர்களால்தான் விஜயகாந்த் அவர்கள் "புரட்சிக் கலைஞர்' என்று அழைக்கப்பட்டார்.
"கூலிக்காரன்' படம் விஜயகாந்த் அவர் களை வைத்து பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படம் ரிலீஸாவதற்கு தயாராகிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுதுதான் தாணு சாருடன் வட சென்னை நிகழ்ச்சிக்கு நாங்கள் போய் கொண் டிருந்தோம்.
தாணு சார் சொன்னார்: "இப்ராகிம் சார், விஜி சாருக்கு டைட்டில் போடறதுக்கு ஒரு யோசனை பண்ணி வச்சிருக்கேன்... சொல்லவா சார்.''
"சொல்லுங்க சார்.''
"புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்...''
சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தார். எங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"எம்.ஜி.ஆரிடம் இருந்து புரட்சியை எடுத்துக்கிட்டேன். அதோட கலைஞரை சேர்த்துட்டேன்... எப்படி சார்?'' என்றார்.
தாணு சார், கலைஞர் அவர்களிடத்தில் நெருக்கமானவராகவும் அவருக்கு மிகவும் பிடித்தமானவராகவும் இருந்தார்.
"சூப்பர் சார்'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.
"லியாகத் எப்படி இருக்கு?''
"அருமையா இருக்கு அண்ணே... உங்க ராசி "புரட்சிக் கலைஞர்'ங்கிற இந்தப் பேரு அவருக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா நிலைச்சு நிற்கும்ணே'' என்றேன் நான். அதேபோல் நிலைத்தது.
திரைப்பட நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் மன்ற திறப்பு விழா நிகழ்ச்சிகளில், விஜயகாந்த் பிறந்தநாள் விழாக்களில் நான் எத்தனை ஆயிரம் முறை சொல்லியிருப்பேன் என்று கணக்கே இல்லை.
என் வாழ்க்கையில் நான் அதிகமாக உச்சரித்த வார்த்தைகளில், என் உணர்வுகளோடு கலந்துவிட்ட வார்த்தை "புரட்சிக் கலைஞர்.'
இப்படிப்பட்ட பெருமைகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் "சட்டம் ஒரு இருட்டறை.'
விஜயகாந்த் அவர்கள் வெற்றிப் பட ஹீரோ ஆனார். ஆக்ஷன் ஹீரோவாக ஆனார். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவில்... ஏன் உலக அளவில்கூட ஆக்ஷன் ஹீரோக்கள்தான் அதிகம் பேசப்படுவார்கள். அவர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள் அவர்கள் படங்களுக்குத்தான் வசூலும் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டில் இது கொஞ் சம் அதிகமாகவே இருக்கும்.
விஜயகாந்த் அவர்களுக்கு ஆரம்ப கால படங்கள் வெற்றி படங்களாகவும் இல்லை, ஆக்ஷன் படமாகவும் இல்லை.
ஆரம்பகால படங்களைப் பற்றி விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஒருவர், என்னிடம் ஒருவரி விமர்சனம் செய்திருந்தார். அது நினைவுக்கு வருகிறது.
அகல் விளக்கு -எரியவே இல்லை
இனிக்கும் இளமை -இனிக்கவே இல்லை
நீரோட்டம் -தெளிவாக இல்லை
சாமந்திப்பூ -மணக்கவே இல்லை
தூரத்து இடிமுழக்கம் -கேட்கவே இல்லை
"பேரறிஞர் அண்ணா சொன்ன வார்த்தை "சட்டம் ஒரு இருட்டறை'. இருட்டுல இருந்து ஒளி விளக்கா வந்திருக்காரு விஜயகாந்த்'' -இது அந்த ரசிகர் சொன்னது.
இந்த இடத்தில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பற்றிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்