ss

விஜய்க்கு ஆண்டவன் அருள் இருந்தால்...!

Advertisment

திரைப்படங்களின் வெற்றி தோல்வி மட்டும் ஒரு நடிகரின் புகழை நிர்ணயித்துவிட முடியாது. அதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கிறது. அது விஜய்யிடம் நிறைந்திருப்பதாக நினைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். தமிழர்களின் குடும்பங்களில் ஒரு உறுப்பினர் போல், குழந்தைகளின் தோழனாகவே நினைக்க வைத்துவிட்டார் விஜய்.

எந்த ஒரு ஹீரோவை குடும்பங்கள் ரசிக்கிறதோ, குழந்தைகள் கொண்டாடுகிறார்களோ அந்த ஹீரோ உச்சத்திற்கு போவார் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்வதில் அக்கறைப்பட வேண்டும். வெறும் சினிமா ஹீரோவாக மட்டும் இருந்து விடலாம் என்று நினைப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம். ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால், இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கைக்கு ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக்கொள்ள வேண்டும். இவரிடம் எந்தக் குறையும் இல்லை என்று மக்களை நினைக்க வைக்க வேண்டும். மற்ற தலைவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று இவரிடம் இருக்கிறது என்று மக்களிடம் ஒரு நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

விஜயகாந்த்தின் மன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று நானும் இப்ராகிம் ராவுத்தரும் யோசித்தபொழுது, தி.மு.க. எப்படி அமைப்புகளை உருவாக்கி செயல்படுகிறதோ அப்படி செயல்படலாம் என்று நினைத்தோம். தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு நான்தான் போனேன். வார்டு முதல் கிராமம், நகரம், ஒன்றியம், கிளை, மாவட்டம் என்று எல்லா விபரங்களையும் தெரிந்துகொண்டு வந்தேன். விஜயகாந்த் மன்றங்களை அப்படித்தான் வடிவமைத்தோம், செயல்பட வைத்தோம்.

Advertisment

தம்பி விஜய்க்கு மன்றங்களின் வளர்ச்சி மிகப்பெரிய பலம். அதற்குக் காரணமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்த் நடித்த பல படங்களை இயக்கியவர். அந்த வகையில் விஜயகாந்த்துக்கும் எங்களுக்கும் மிக நெருக்கமானவராக இருந்தார். விஜயகாந்த் மன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை கண்கூடாகப் பார்த்தவர். விஜய்யை அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது அப்பொழுது அவர் மனதில் தோன்றியது. அதனால் விஜய் மன்றங்களையும் மிகச் சிறப்பாக வடிவமைத்து வளர்த்தார்.

விஜய் ரசிகர்கள் வேகமானவர்கள். மிக மிக வேகமான இளைஞர்கள். பொதுப் பணிகளிலும், கல்விப் பணிகளிலும் விஜய் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் இளம்பெண்களின் இதயத்திலும் ஒரு அண்ணனாக இருக்கிறார்.

வேகமான ரசிகர்களை, விவேகமானவர்களாக விஜய் மாற்ற வேண்டும். விஜய் ரசிகர்களால் நன்மைகள்தான் கிடைக்கும், நல்லதுதான் நடக்கும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Advertisment

உளவுத்துறை படத்தில் விஜயகாந்த்துக்காக... "மக்களோட ஆதரவும் ஆண்டவனோட அருளும் இருந்தா நிச்சயமா அரசியலுக்கு வருவேன்'னு ஒரு வசனம் எழுதினேன்.

அது தம்பி விஜய் அவர்களுக்கும் பொருந்தும்.

திரு. ஓ.பன்னீர்செல்வம். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் அன்பைப் பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அப்பொழுது வழக்கு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. அதனால் முதலமைச்சர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. வேறு ஒருவர் முதலமைச்சராக வேண்டும். அ.தி.மு.க.வில் அப்பொழுது பல சீனியர் தலைவர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் முதலமைச்சர் ஆவார் என்று எல்லோருமே நினைத்தார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம், பிரபலமாகாத ஓ.பி.எஸ். முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. அவரை முதலமைச்சராக்கியது சசிகலா, டி.டி.வி.தினகரனின் முயற்சி என்று சொல்லப்பட்டாலும், அதையம் தாண்டி அவருக்கு ஆண்டவனின் அருள் இருந் திருக்கிறது. அதனால்தான் மூன்றுமுறை முதலமைச்சராக இருந்தார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவினால் அவர் முதலமைச்சர் ஆகவில்லை. எல்லாம் வல்ல இறைவனின் அருளால் என்பதை அவர் உணர்ந்ததினால்தான் கோயில் கோயிலாகப் போய்க் கொண்டிருக்கிறாரா?

dd

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா முதலமைச்சர் ஆவார் என்று பேசப்பட்டது. ஆனால் ஆண்டவனின் அருள் அண்ணன் எடப்பாடியாருக்கு இருந்திருக்கிறது. அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சராக கோட்டைக்குச் சென்றார். அந்த வகையில் தம்பி விஜய்க்கு ஆண்டவன் அருள் இருந்தால், அரசியலில் ஜெயிப்பார் என் பது எனது ஆழமான கருத்து.

விஜய் நடித்த "பகவதி' படத்தில் அவரே ஒரு வசனம் பேசுவார்.

"ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆண்டவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது'. திருக்குர் ஆனில் இடம் பெற்ற இந்த வசனத்தைத்தான் தம்பி விஜய்க்கு நினைவுபடுத்த விரும்பு கிறேன்.

ஒரு காலத்தில் அரசியலில் விசுவாசம் இருந்தது. நம்பிக்கை இருந்தது. அர்ப்பணிப்பு உணர்வு இருந்தது. தலை போனாலும் விலை போகமாட்டோம் என்ற உணர்வு இருந்தது. இவையெல்லாம் இப் பொழுது படிப்படியாகக் குறைந்து விட்டது. சர்வ சாதாரணமாக கட்சி மாறிவிடுகிறார்கள்.

அந்த வலையில் சிறு மீன்கள் மட்டுமல்ல, திமிங்கலங்களே சிக்கி விடுகின்றன. தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும், எம்.பி.யாக இருக்க வேண்டும். மந்திரியாக இருக்க வேண்டும் என்று பதவிப் பித்துப் பிடித்து அலைந்துகொண்டி ருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலை யில்தான் தம்பி விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். சினிமாவில் எத்தனையோ வில்லன் களை புரட்டி எடுத்தவர் விஜய். அரசியல் வில்லன்கள் அவர்களைவிட ஆபத்தானவர்கள். அரசியலில் பல நேரங்களில் ஹீரோக்கள் ஜெயிப்ப தில்லை. வில்லன்கள்தான் ஜெயிக் கிறார்கள். எல்லாம் தெரிந்துதான் தம்பி விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார்.

புதிதாக அரசியலுக்கு வரும் தம்பி விஜய் மிரட்டப்படலாம், அச்சுறுத்தப்படலாம். உணர்வுள்ள ரசிகர்களை உரமேற்றி, அவர்களை மெருகேற்றி அநீதிக்கு அஞ்சாத புதிய தலைமுறையை விஜய் உருவாக்க வேண்டும்.

நான் வேறு ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவன். என் தலைவராக ஒருவரை இதயத்தில் வைத்திருக்கிறேன். அதையும் தாண்டி எனக்கு நிறைய சமூக அக்கறை உண்டு. எந்தக் கட்சியையும் சாராமல் நான் இருந்தபொழுது விஜயகாந்த்துக்காக நான் நிறைய எழுதியிருக்கிறேன்.

நான் எழுதிய வசனங்களில் தீப்பொறி பறந்திருக்கிறது. அந்தத் தீப்பொறி சமூக அவலங்களை எரித்திருக்கிறது. சாதி மதப் பிரச்சினைகளை தூண்டி விட்டு அதில் குளிர்காய நினைத்த சுயநல அரசியல் வாதிகளை என் வசனங்கள் சுட்டெரித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு விஜயகாந்த் பேசிய வசனங்களுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பிருந்தது. என் வசனங்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு தம்பி விஜய் வாயிலிருந்து வரும் வசனங்களுக்கு இருக்கிறது.

நான் யாருக்கும் பயப்படாமல், பல உண்மைகளை துணிச்சலாக எழுதியவன். என் அளவுக்கு அரசியலை அக்கு வேறு ஆணிவேறாக அலசி எழுதியது வேறு யாரும் இல்லை என்பது பல சான்றோர்களிடம் இருந்து, பல பெரியவர்களிடமிருந்து, பல அரசியல் தலைவர்களிடமிருந்து, நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்லவர்களிடம் இருந்து, ரசிர்களிடமிருந்து, மக்களிடமிருந்து எனக்குக் கிடைத்த பாராட்டு. இது எனக்குக் கிடைத்த பெருமை என்று நான் நினைக்கவில்லை.

தமிழ் சமுதாயத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை என்றே நினைக்கிறேன். அதனால்தான் அந்தக் கடமை உணர்வோடு அரசியல் களம் இறங்கும் தம்பி விஜய் அவர்களை உற்சாகப்படுத் தும் விதமாக எழுதுகிறேன்.

தமிழ்நாட்டு அரசியல் கருப்பு, சிவப்பு, புரட்சி, கழகம் என்ற வார்த்தைகள் இல்லாமல் எப்பொழுதுமே இயங்காது,…இயங்கியதில்லை.

aa

கருப்பு மேலே இருக்கலாம். அல்லது சிவப்பு மேலே இருக்கலாம். கருப்புக்கும் சிவப்புக்கும் இடையே வெள்ளை இருக்கலாம். மஞ்சள் இருக்கலாம்.

எதிரிகள் யார் வந்தாலும் சரி, அழிக்க நினைத்து அதிகாரத்தோடு வந்தாலும் சரி, எத்தனை படைபலத்தோடு, பணபலத்தோடு வந்தாலும் சரி, எந்தத் துறையை வைத்து நம் மீது கறை பூச நினைத்தாலும் சரி... கருப்பு, சிவப்பு, புரட்சி என்ற மூன்றும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டேதான் இருக்கும். கழகம் என்ற சொல் தமிழர்களின் இதயத்தில் அழியாமல் இருக்கும். யாராலும் அழிக்க முடியாமல் இருக்கும். அந்த வகையிலே தம்பி விஜய் அவர்கள் தொடங்கிய கட்சியிலும் கழகம் இருக்கிறது.

விஜயகாந்த் நடித்த "கஜேந்திரா' படத்தில் ஒரு வசனம் எழுதினேன்.

"தமிழன் பசியோட வந்தவனுக்கு

சோறு போடுவான்

பகையோட வந்தவனை கூறு போடுவான்'

இதை தம்பி விஜய்க்கு நான் எழுதிய வசனமாக நினைத்துக்கொள்ளுங்கள்.

கருப்பு + சிவப்பு = புரட்சி என்ற தலைப்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக நான் எழுதி வந்த தொடரை விஜய் பற்றி எழுதுவதோடு நிறைவு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. அதன்படியே இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

ஓராண்டுக்கும் மேலாக இந்தத் தொடரை வாசித்து, என்னைப் பாராட்டிய நக்கீரன் வாசகர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி!

இந்தத் தொடர் மூலம் லட்சக்கணக் கான அன்புள்ளங்களை நான் சம்பாதிக்கக் காரணமாக இருந்தவர் நான் மிகவும் மதிக்கக்கூடிய மனிதநேயர், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார் என்று உழைத்துக் கொண்டிருக்கும் என் உடன்பிறவா சகோ தரர் நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை. நான் உங்களுக்கு செலுத்தும் நன்றி என்றென்றும் என் இதயத்தில் நிறைந்து வழிந்துகொண்டேயிருக்கும்.…

என்றும் பேரன்புடன்,

லியாகத் அலிகான்