மக்களவைப் பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் தஞ்சையில் திராவிடர் கழகம் நடத்திய இரண்டுநாள் சமூகநீதி மாநாடு, திராவிடக் கொள்கைகளுக்கு உரம் சேர்த்து, தி.மு.க. கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் நடந்து முடிந்தது.
தஞ்சை திலகர் திடலில் பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் சமூக நீதி மாநாடு நடைபெற்றது. முதல்நாள் மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன் தொடங்கிவைத்த இரண்டாவது நாள் மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் அருணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ம.ம.க.வின் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான், எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்நாள் மாலை 5 மணிக்கு தஞ்சை ரயில்வே சந்திப்பிலிருந்து பேரணி தொடங்கியது. நகரை குலுக்கிய பேரணி 5 கிலோமீட்டர் தூரம் கொள்கை முழக்கம் எழுப்பியபடி மாநாட்டு திடலை அடைந்தது. வழக்கம்போலவே, தீச்சட்டி ஏந்திய மகளிரும், முதுகில் அலகு குத்தி மாருதி ஆம்னி காரை இழுத்த இளைஞர்களும் பகுத்தறிவு முழக்கங்களை முழங்கியபடி சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது. இவை தவிர பறையிசை, கோலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலைகளுடன் களைகட்டி கட்டுப்பாடு காத்தது பேரணி.
மாநாட்டில் பேசிய வைகோ,…""இந்த சமுதாயத்திற்கு விடுதலை பெற்றுத்தர வந்தவர் தந்தை பெரியார். ஈராயிரம் ஆண்டுகளில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வந்த சிலர் விரட்டியடிக்கப்பட்டனர். பெரியார் மட்டும்தான் நிலைத்து நின்று போராடியவர். பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் வராத மிகக்கொடுமையான ஆபத்துக்கள் வடக்கிலிருந்து வரிசைகட்டி வருகின்றன. பாசிசத்தின் ஒட்டுமொத்த உருவமாக பிரதமர் மோடி இருக்கிறார். டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது மத்திய அரசு. தி.மு.க. தலைமையிலான இந்த அணி வெல்ல வேண்டும். இந்த மண்ணைக் காக்க, திராவிடத்தைக் காக்க, தமிழகத்தைக் காக்க சபதமேற்போம்''’என்று ஆவேசமாக முழங்கினார்.
கவிஞர் வைரமுத்து பேசும்போது, “""பெரியார்-மணியம்மை திருமணம் பற்றி விமர்சனம் எழுந்தது, இந்திய துணைக்கண்டத்தில் பழைய நாகரிகத்தை தூக்கியெறிந்து ஒரு புதிய திருமண உறவு முறையை கற்பித்த தம்பதிகள் இவர்கள். இதுகுறித்து எந்த இடத்திலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்''’என்றார்.
24-ஆம் தேதி இரண்டாவதுநாள் மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய திருமாவளவன்… “""சமூகநீதியை பாதுகாக்க வேண்டுமானால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சனாதன சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும். இன்றைக்கு நம் முன்னால் இருக்கின்ற சவால் ஜனநாயகமா, சனாதனமா என்பதுதான்''’என்றார் ஆக்ரோஷமாக.
பேராயர் எஸ்றா சற்குணம், காங்கிரஸ் அழகிரி உள்ளிட்டோர் நாட்டு நடப்பை விவரித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் பேசுகையில், ""சமூக நீதிக்காக நாம் போராடி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அதை தக்கவைத்துக் கொள்ள மோடியை வீழ்த்த வேண்டும்''’என்றார். எழுத்தாளர் அருணன் பேசும்போது, ""நாடு உள்ளவரை, இந்த தேசம் உள்ளவரை, பார் உள்ளவரை, முத்தமிழ் உள்ளவரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்ற ராமதாஸ், சூட்கேஸ் வந்ததும் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சென்றுவிட்டார்''’என்றார். கே.எம்.காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோரும் சமூகநீதியை பாதுகாக்க மோடியை தோற்கடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ""1976-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட என்னை, சிறையிலேயே கொள்கையாளனாக பயிற்றுவித்தவர் ஆசிரியர் வீரமணிதான். தி.மு.க.வும், தி.க.வும் இருக்கும்வரை, காவிகளால் மட்டுமல்ல திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. மோடி ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது''’என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தனக்குப் பிறகு இந்த இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அடுத்த தலைவராக, இப்போதைய துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார். 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் அறிக்கையைப் போல, சமூகநீதி தத்துவத்தையும் அரசியல் -பொருளாதாரக் கொள்கைகளை முன்னிறுத்தவும் திராவிடர் கழகத்தின் பிரகடனமாகத் தீர்மானங்கள் நிறைவேறின.
மக்களவைத் தேர்தல் வெப்பம் தகிக்கத் தொடங்கியுள்ள நிலையில்... தி.க. மாநாடு சனாதன சக்திகளுக்கு நடுக்கத்தையும், ஜனநாயக சக்திகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
-க.செல்வகுமார்
___________
தி.க.வின் எதிர்காலத் தலைவர்!
1939-ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் கலி.பூங்குன்றனின் இயற்பெயர் கலியமூர்த்தி. பெரியார் மீது ஈடுபாடு கொண்டவர். இவருடைய உழைப்பை வியந்த தந்தை பெரியார், "ஊருக்கு ஒரு கலியமூர்த்தி இருந்தால் எனது வேலை சுலபமாகிவிடும்' என்றார். நெருக்கடிநிலை காலத்தில் ஆசிரியர் கி.வீரமணி சிறையில் இருந்த சமயத்தில் அரசு வேலையை சென்னைக்கு மாற்றி, பெரியார் திடலிலேயே தங்கி விடுதலை நாளிதழை கவனித்து வந்தார். பின்னர் கி.வீரமணி வேண்டுகோளை ஏற்று அரசுப் பணியைத் துறந்து முழுநேர கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார். "விடுதலை' நாளேட்டில் இவர் எழுதும் தலையங்கம், கட்டுரை, ஒற்றைப் பத்தி ஆகியவை வரவேற்பை பெற்றவை. திராவிட இயக்க வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழும் கவிஞர் கலி.பூங்குன்றன், 80 வயதிலும் களப்பணியில் சளைக்காமல் செயலாற்றும் கொள்கை வீரர்.