மிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் உள்பட சட்டமன்றத் தேர்தல் நடக்கும் 12 மாநிலங்களைக் குறி வைத்து எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக் காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற் கொள்ள வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஞானேஸ்குமார். இதற்கான பணிகளை தமிழகத்தில் தொடங்குகிறது தமிழக தேர்தல் ஆணையம். 

Advertisment

இதன் பின்னணியிலுள்ள ஆபத்தையும் சதிகளையும் உணர்ந்து, வாக்கு திருட்டு நடக்கிறது என்பதை பீஹார் தேர்தல் களத்தில் அம்பலப்படுத்தினார் ராகுல்காந்தி. வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி யின் பரப்புரை தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

இந்த நிலையில், சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தமிழகத்தில் தொடங்கப்படுவதால், வாக்குத் திருட்டு எனும் சதி நடக்காமல் தடுத்து நிறுத்துவதை ஒரு வேள்வி போல கண்காணிக்க வேண்டும் என்பதற்காக, "என் வாக்குச்சாவடி; வெற்றி வாக்குச்சாவடி' எனும் தலைப்பில் தி.மு.க.வினருக்கு பயிற்சியளிக்கும் கூட்டத்தை 28-ந் தேதி தொடங்கிவைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

தி.மு.க.வின் தலைமைக்கழகம் முதல் கடைக்கோடி யில் உள்ள நிர்வாகிகள் வரை ஒருங்கிணைத்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். சென்னை மாமல்லபுரம் அருகே உள்ள கான்ஃபுளூயன்ஸ் அரங்கத்தில் நடந்த இந்த பயிற்சிப் பட்டறையில் தி.மு.க.வின் மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள், மா.செ.க்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர் கள், மாநகர -ஒன்றிய -நகர -பேரூர் கழகச் செயலாளர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  

Advertisment

dmk1

"என் வாக்குச்சாவடி; வெற்றி வாக்குச்சாவடி' எனும் இந்த பயிற்சிப் பட்டறை குறித்து ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள் (பூத் ஏஜெண்டுகள்), பாக உறுப்பினர்கள், பாகத் திலுள்ள இளைஞரணியினர், மகளிரணி யினர், டிஜிட்டல் முகவர்கள், கிளைக்கழக செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர் கள் ஆகிய அனைவரையும் ஒருங் கிணைத்து அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றியை உறுதிசெய்யும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அறி வுறுத்தியிருந்தார். இதனை இலக்காக வைத்து தேர்தல் பணிகளில் வேகம்காட்டி வந்தனர் உடன்பிறப்புகள். 

இந்த நிலையில்தான், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுப்பதால், அதனை எதிர்கொள்ள இந்த பயிற்சிக்கூட் டத்தை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். இந்த கூட்டத்தின் முதல்நிகழ்வாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற் றுப் பேசினார். இதனையடுத்து, வாக்குச் சாவடி பயிற்சி பரப்புரை செய்யப்பட வேண்டிய முறைகள் குறித்து விளக்கிப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "68 ஆயிரம் வாக்குச் சாவடிகளையும் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அனைத்து பொறுப்பிலும் உள்ள நிர்வாகி களை ஒருங்கிணைத்து பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைக்க வேண் டும்'' என்று வலியுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப் பினர்களும், தங்களுக்கு ஒதுக்கப் பட்ட பகுதியில் வாக்காளர்கள் பட்டியலைச் சரிபார்ப்பது எப்படி என்பதற்காக உருவாக்கப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பு செயலியின் செயல்பாடுகள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து காணொளி மூலம் விளக்கப்பட்டது. இந்த காணொளி மூலமாக, சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சியை விளக்கினார் வழக்கறிஞரும் எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ. 

இதன்பிறகு, மா.செ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய -நகர -பகுதி கழகச் செயலாளர்கள் ஆகியோரின் சார்பில் தலா ஒருவர் என 5 நபர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். கட்சித் தலைமையிடமிருந்து ஏற்கனவே அறிவுறுத்தியதன்படி தங்கள் மாவட்டத்தில், தொகுதியில், ஒன்றியத்தில் பகுதியில் நடந்துவரும் பணிகள் குறித்தும், எந்த கட்டம்வரை செய்து முடித்திருக்கிறோம் என்பது பற்றியும் அவர்கள் விளக்கிப் பேசினர். 

கூட்டத்தில் நிறைவுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "ஒவ்வொரு துறையிலும் நாம் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகளும், திட்டங்களும் திராவிட மாடல் அரசின் அடையாளம் என்பதை யும், தி.மு.க. தொண்டர்களின் உழைப்பையும் சுட்டிக் காட்டிவிட்டு ஏழாவது முறையாகவும் நாம்தான் ஆட்சி அமைக்கவிருக்கிறோம். அதற்கான பயிற்சிக் கூட்டம்தான் இது'' என்றும் விவரித்தார். 

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், "ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு செய்துகொண்டிருக்கும் துரோகங்கள், வஞ்சகங்களை எதிர்த்து தமிழ்நாடு போராடும், வெற்றிபெறும். எண்ணற்ற சூழ்சிகளை செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அடுத்தவாரம் தமிழ்நாட்டில் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனை காண்பித்து நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நாம் பணியமாட்டோம். ஆர்.எஸ்.எஸ்.ஸின் பாச்சா இங்கு பலிக்காது.   

இனத்தின் எதிரிகளும் தமிழ்த் துரோகிகளும் தமிழ்நாட்டை அழிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகிறார்கள். இவர்களை வீழ்த்தி மண், மொழி, மானத்தைக் காக்கவேண்டும். தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குல்களை முறியடிக்கும் வல்லமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது. தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் பகல்கனவு நிறைவேறாது. அதனால்தான், எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழி களைத் தேடுகின்றனர். 

இந்த குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பீஹாரில் 65 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளனர். தமிழ்நாட்டிலும் அதனை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணை யத்தை தனது கைப்பாவையாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  இந்த குறுக்குவழியின் மூலம் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வும் வெற்றிபெற கணக்குப் போட்டிருக்கிறார்கள், தேர்தலை நேர் மையாக சந்திக்கும் திராணியற்றவர்கள். இப்படிப் பட்ட ஜனநாயக விரோத சக்திகளைத் தேர்தல் களத்தில் வீழ்த்தும் வல்லமை நமக்கு இருக்கிறது. 

அதனால், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆரை நீங்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். அனைத்து வாக்காளர் களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வது உங்களின் பொறுப்பு. எதிர்க் கட்சியான அ.தி.மு.க., தனது சொந்த கட்சியின் உரிமையை பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டது. மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட அ.தி.மு.க.வுக்கு நேரமில்லை. ஆனால், கவலைப் படவும், காப்பாற்றவும் நமக்கு பொறுப்பு இருப்பதால், தமிழ்நாட்டை தலை குனியவிட மாட்டேன்'' என உறுதியேற்கிறேன். 

2021 என்பது கொத்தடிமையான அ.தி.மு.க. விடமிருந்து தமிழ்நாட்டை மீட்ட தேர்தல் ; 2026 என்பது அ.தி.மு.க. -பா.ஜ.க. கும்பலிடமிருந்து தமிழ் நாட்டை பாதுகாக்கும் தேர்தல். தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேரோடு வீழ்த்தியாக வேண்டும். பெயரளவுக் காவது திராவிடக் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி, 

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை மக்களும் விரும்பவில்லை; அ.தி.மு.க.வினரும் விரும்பவில்லை. எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வருகிறது, கம்யூனிஸ்ட் வருகிறது, வி.சி.க. வருகிறது என தினமும் பழனிச்சாமி சொல்லிப் பார்த்தார். ஆனால், யாரும் அங்கு செல்லவில்லை. தமிழ்நாட் டிற்கு எதிராக கூட்டணி அமைத் திருக்கும் பழனிச்சாமியின் சந்தர்ப்பவாத அரசியலை மக்களிடம் எடுத்துச்சொல்லி மக்களின் வாக்குகளை நமக்கானதாக மாற்றவேண்டும். இன்றைக்கு உங்கள் எல்லோரையும் ஒன்றாகப் பார்க்கும்போது உங்கள் முகங்களில் உதய சூரியனைப் பார்க்கிறேன். அதனை தமிழ்நாட்டின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமை உங்களுக்குத்தான் இருக்கிறது''’என்றார் உணர்ச்சிப் பூர்வமாக.

ஒரு கட்சியின் தலைவர் என்பவர் தொண்டர்களுக்கு கடமையை உணர்த்துவ தோடல்லாமல், அதே கடமை தனக்கும் உண்டு என்பதை நிலைநிறுத்துவது அவசியம். அந்த வகையில், எனது வாக்குச்சாவடியில் நடக்கும் கூட்டத்தில் நான் பங்கேற்று நம் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன் என்று சொல்லி, தனது கடமையையும், இந்த கூட்டத்தில் நிலை நிறுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இந்த பொறுப்புணர்வு, தி.மு.க. உடன்பிறப்புகளை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. 

ஜனநாயக ரீதியாக நேரடியாக தமிழகத்தில் மோத முடியாத பா.ஜ.க., எஸ்.ஐ.ஆர். முகமூடி அணிந்து தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது. இதன் பின்னணியிலுள்ள சதிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது.