பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு கடந்த மாதம் 27ஆம் தேதி வந்து சென்றபின்பு, தமிழக அரசியல் குறித்து டெல்லி மேலிடம் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்களது இலக்கான தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தல் என்ற நோக்கத்தை நிறைவேறவிடாமல் செய்யும் தி.மு.க.வை நிலைகுலையச் செய்வதற்கு, தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கான பணியைத் தொடங்கிவிட்டது.

Advertisment

தி.மு.க. பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டே தன்னுடைய கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட அமைச்சர் என்றால் அது செந்தில்பாலாஜி தான். தற்போதைய தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் நடந்த நிகழ்வுகளில் அதிக கவனம் ஈர்த்தது அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையும், அவரது ஜாமீனுக்கான தொடர் போராட்டமும் தான். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஒன்றிய அரசின் கவனம், அமைச்சர் செந்தில்பாலாஜியின் மீது திரும்பியதற்கு காரணம், அவரால் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு உருவான செல்வாக்கு தான். தங்களுக்கு சாதகமாக இருந்த பகுதியில், தி.மு.க.வை உற்சாகப்படுத்திய அவரை முடக்குவதற்காக அவர்மீது அமலாக்கத்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யவைத்து, கைது செய்து, அவரது அமைச்சர் பதவியை நீதிமன்றம் மூலம் நீக்கியது. அந்த வழக்கை வைத்தே அவரது ஜாமீனுக்கான போராட் டத்தை ஓர் ஆண்டுக்கும் மேலாக நீட்டிக்க வைத்து சிறைக்குள்ளேயே முடக்கியது.

ministers1

கடந்த 2021, சட்டமன்றத் தேர்தலின்போதே செந்தில்பாலாஜியை கைது செய்யத் திட்டமிட்ட ஒன்றிய அரசால், அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னரே கைது செய்ய முடிந்தது. அதே சமயம், செந்தில்பாலாஜியை மட்டும் குறிவைத்தால் போதாது என்பதால், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், அனிதாராதாகிருஷ்ணன், ஐ.பெரியசாமி  என ஒவ்வொருவரையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரத் திட்டமிட்டு, அவர்கள் அனைவருக்கும் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கணக்கு வழக்குகள் என அனைத்தையும் அமலாக் கத்துறை தோண்டியெடுக்கத் தொடங்கி, அனைத்தையும் சேகரித்து வருகிறார்களாம். 

Advertisment

இதை வைத்து, தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவர்கள் மீதான  நடவடிக்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் தற்போதைக்கு அமைச்சர்களை பா.ஜ.க. விட்டு வைத்துள்ளதாம். இருப்பினும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும், 15 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வழக்குகளை தூசிதட்டி எடுத்து, அவற்றின் அடிப்படையில் எப்படி வழக்கு பதிவு செய்யலாம் என்பது குறித்து ஒரு பெரிய திட்டத்தையும் தீட்டிவருகிறதாம்.

ஒன்றிய அரசு விட்டுவைத்துள்ள டார்கெட்டில், அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோரும் இருக்கிறார்கள். தற்போது இந்த 3 பேரும் ஆக்டிவ் அமைச்சர்கள். அவர்களையும் புலனாய்வு அமைப்புகளின் மூலமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் கூட அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவருடைய மகன் மற்றும் உறவினர்கள், தொழில்கள் என்று எல்லா இடங்களிலும் ஆவணங்களைத் திரட்டினார்கள்.

ஆக்டிவ் அமைச்சர்களில் முதலில் இருக்கும் கே.என்.நேருவுக்கு சொந்தமான பல இடங்களில் தங்களுடைய சோதனையை நடத்திய அமலாக்கத்துறை, பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட கடனை ஆதாரமாகக் கொண்டு, அவற்றை நட்டமாகியதாகக் காட்டியதாக, அந்த தொகையைக் கேட்டு வங்கி அனுப்பிய நோட்டீஸை ஆதாரமாகக்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Advertisment

தற்போது மிஞ்சியிருப்பது அற நிலையத்துறை அமைச்சரும் பொதுப் பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் தான். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி -பிரதமர் சந்திப்புக்கு பிறகுதான் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் உதவியோடு பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களின் திட்டத்திற்கு எதிராக இருக்கும் அமைச்சர்களை மட்டும் குறிவைக்கும் படலத்தை தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில்  இன்றுவரை தி.மு.க. பலமாக இருக்கிறது. அமலாக்கத்துறையின் அதிரடி சோதனைகளால் முதல்வர் முதல், அமைச்சர்கள்வரை ஒருவித எச்சரிக்கை உணர்வுடன், எப்படி சமாளிப்பது என்று பல புதிய யுக்திகளை சளைக்காமலும், ஊ.உ.க்கு அஞ்சாமலும் திட்ட மிட்டு வருவதாக அர சியல் வட்டாரங் களில் கிசுகிசுத்து வருகின்றனர்.