"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்கி வருவதால் இந்த முறை தமிழகத்தில் எப்படியாவது அதிகார தர்பாருக்கு அச்சாரம் போட்டுவிடும் தீவிரம் டெல்லியிடம் தெரிகிறது.''”
"ஆமாம்பா, அ.தி.மு.க.வை உடைத்தாவது தங்கள் பக்க பலத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் பலவிதமாக உருட்டிக்கொண்டு இருக்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த முறை தமிழகத்தில் அதிகார ஆதிக்கம் செய்யத் துடிக்கும் பா.ஜ.க., அதற்கு முதற்கட்டமாக அ.தி.மு.க.வை தங்கள் கூட்டணியில் சேர்க்கும் முனைப்பில் உடும்புப்பிடி போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் உள்துறை அமைச்சர் அமித்சாவோடு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தீவிரம் காட்டிவருகிறார். எடப்பாடியை டெல்லிக்கு அழைத்துப் பேசியபோதும் அவர் மீது பா.ஜ.க. தரப்பிற்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வராததால்தான், அடுத்ததாக, கே.டி.ராகவன் மூலமாக செங்கோட்டையனையும் அழைத்து, ஏராளமான வாக்குறுதி களைக் கொடுத்து, அவரை அனுப்பிவைத்தார் நிர்மலா. இந்த நிலையில் 2ஆம் தேதி அ.தி.மு.க.வின் சீனியர்களான தம்பிதுரையை யும், சி.வி.சண்முகத்தையும் அழைத்து, அவர் தீவிரமாக விவாதித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து சி.வி.சண்முகத்தை அமித்ஷாவிடமும் அனுப்பி, அவரை சந்திக்க வைத்திருக்கிறார். ஏற்கனவே பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனின் பெயர் அடிபட்டதால்தான், அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க அதீத ஆர்வம் காட்டுவதாக பா.ஜ.க. தரப்பிலேயே பேச்சு எழுந்திருக்கிறது. நிர்மலா முதல்வர் பதவியைக் குறி வைத்திருப்பதால்தான் மிரட்சியில் தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.''”
"இந்த நேரத்தில் தமிழகம் வரும் பிரதமர் மோடியின் வருகை, பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?''”
"ராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ரயில்வே பாலத்தைத் திறந்து வைக்க 6ஆம் தேதி வரும் பிரதமர் மோடியை, தமிழக பா.ஜ.க.வினர் பிரமாண்டமாக வரவேற்கத் தயாராகி வரு கிறார்கள். மோடியை வரவேற்க யார், யாருக்கு அனுமதி என்கிற ஃபைனல் லிஸ்ட் 4ஆம் தேதிதான் டெல்லியில் தயாராகுமாம். கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகொண்டிருப்பதால் அ.தி.மு.க.வில் இருக்கும் சீனியர்கள் சிலர், இந்த வரவேற்புப் பட்டியலில் இடம் பிடிக்க விரும்புகிறார்களாம். அதேபோல் மோடியிடம் தங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவதற் காக சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரும் முண்டியடிக்கிறார்களாம். இவர் களோடு, பா.ஜ.க.வின் தோழ மைக் கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார் கள்.”
"ஐ.பி.எல். வழக்கம் போல் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறதே?''”
"மார்ச் 22ல் ஆரம்பித்த ஐ.பி.எல் கிரிக்கெட் மேட்ச் இப்போது சென்னையை அதகளப்படுத்தி வருகிறது. மே 25 வரை நடக்கும் இந்த ஐ.பி.எல். காலகட்டத்தில், புதிய திரைப்படங்களை வெளி யிடக்கூட திரை நிறுவனங்கள் தயங்குகிறதாம். அந்த அளவிற்கு அனைவரின் ஆர்வமும் மேட்ச் சின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கவுண்ட்டர்களில் மட்டுமல்லாது ஆன்லைனிலும் போதுமான அளவிற்கு ரசிகர்களுக் குக் கிடைக்கவில்லை. பணம் கொடுத்தாலும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்கிற குமுறல் அவர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதிய அன்று, கள்ளத்தனமாக ஒரு டிக்கெட் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டிருக்கிறதாம். இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தினரே இதைச் செய்வதுதான் என்கிறது ரசிகர்கள் தரப்பு. ஆனால் வாரியத் தரப்போ எங்களுக்குத் தெரியாமல் புரோக்கர் தரப்பு இப்படி செய்கிறது என்கிறதாம். கிரிக்கெட் ஸ்டேடியத்தை மையமாக வைத்து சர்ச்சைப் புயல் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.'' ”
"சரிப்பா, ஆ.ராசாவை முதல்வர் ஸ்டாலின் கடிந்துகொண்டதாகச் சொல்கிறார்களே?''”
"தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா, மீண்டும் இந்து மதம் பற்றிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த ஒன்றாம் தேதி நீலகிரியில் நடந்த தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘"தி.மு.க.காரன் பொட்டு வைத்து, கையில் கயிறு கட்டி வரலாமா? அவன் அப்படி வரும்போது, எவன் தி.மு.க.காரன், எவன் சங்கி என்ற வித்தியாசம் தெரிவதில்லை. அதனால், கரை வேட்டி கட்டும்போது, பொட்டு வைக்கா தீங்க, கயிறு கட்டாதீங்க'’என்று அதிரடி காட்டி யிருக்கிறார். இதுதான் தி.மு.க.வுக்குள்ளேயே பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. காரணம், தி.மு.க.வில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, கட்சியின் சீனியரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி பிரபலங்கள் பலரும்கூட தங்களை ஆன்மீக நம்பிக்கையாளர்களாக வெளிப்படை யாகவே காட்டிவருகின்றனர். முதல்வரின் வீட்டிலேயே இந்த நம்பிக்கை இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, ’தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஆ.ராசா இப்படிப் பேசி, இறை நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தலாமா?’என்கிற புகார், ஸ்டாலின்வரை கொண்டு செல்லப் பட்டதாம். அதனால்தான் அவர், ராசாவைக் கடிந்துகொண்டார் என்கிறார்கள்.''”
"இதே ஆ.ராசாவை பா.ஜ.க. எம்.பி. ஒருவர் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறாரே?''”
"கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.யும், அக்கட்சியின் இளைஞரணி தேசியச் செயலாளரு மான தேஜஸ்வி சூர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த பிரபல கர்நாடகப் பாடகி சுபஸ்ரீக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதன்பின் டெல்லி சென்ற தேஜஸ்வி, தனது மனைவியுடன் சென்று ஆ.ராசாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றி ருக்கிறார். இது பலரையும் திகைக்க வைத்திருக் கிறது. காரணம், இந்து மதத்தையும், இந்துத்துவா வையும் மிக உயர்வாகத் தூக்கிப் பிடிப்பவர் தேஜஸ்வி. அதோடு இந்துத்துவாவை விமர்சிப் பவர்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்றுவதி லும் அவர் முன்னணியில் இருப்பவர். இவரது அதிரடி வாதங்களை பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க.வின் சீனியர்களே ரசிப்பார்களாம். அப்படிப்பட்ட தேஜஸ்வி, தி.மு.க. எம்.பி. ராசாவிடம் வாழ்த்து பெற்றதுதான் பா.ஜ.க. தரப்புக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம். அதே சமயம், ஆ.ராசாவுக்கும் தேஜஸ்விக்கும் சில மாதங்க ளாகவே அழுத்தமான நட்பு இருந்துவருகிறது. அவர்மூலம் ஆ.ராசாவை பா.ஜ.க. ஹேண்டில் செய்து வருகிறது. ராசா மூலம் தி.மு.க.வின் அரசியலை மோடி தெரிந்துகொள்கிறார்’என்கிற டாக்கும் கிளம்பி, இரு தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”
"அமலாக்கத்துறைக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறதே?''
"டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டுக்கு எதிராகவும், இந்த ரெய்டை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி யும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் 3 ரிட் மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை விசாரித்து வந்த நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், அந்த வழக்கிலிருந்து கடந்தவாரம் திடீரென விலகிக்கொள்ள, இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில். இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றி னார். இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஒன்றாம் தேதி இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், 47 பக்க பதில் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது அமலாக்கத் துறை. இதற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் 9ஆம் தேதி, இதன் விசாரணை வரவிருப்பதால், இது தொடர்பான தயாரிப்பில் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் தீவிரமாகியிருக்கிறார்களாம். இது தொடர்பாக முதல்வர் தரப்பிலிருந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறதாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். நாம் ஏற்கனவே பலமுறை பேசிக்கொண்டவாறு, செல்வப்பெருந்தகையைக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கச் செய்யும் முயற்சிகள் காங்கிரஸில் தீவிரம் பெற்றிருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். அக்கட்சியின் எம்.பி.க்களான கார்த்திக் சிதம்பரமும், சசிகாந்த் செந்திலும் இது தொடர்பாகப் பேச ராகுல்காந்தியிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறார்களாம். இவர்களின் முயற்சி எந்த அளவிற்கு பவர்ஃபுல் என்பது விரைவில் தெரிந்துவிடும்.''’
_______________
இறுதிச் சுற்று!
வக்ஃப் திருத்த சட்டம்! தி.மு.க. வழக்கு!
நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். இதனை சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும்போது தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், "லோக்சபாவில் வக்ஃப் சட்டம் நிறை வேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத் திருத்த மசோதா விற்கு எதிராக 232 எம்.பி.க்கள் ஓட்டளித்துள்ளனர். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எதிர்த்து ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 232 என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல. இந்த சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாக திரும்பப் பெறவேண்டியது. அதைத்தான் நாம் இந்த சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.
பெரும்பான்மையான கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஒருசில கூட்டணிக் கட்சிகளின் தயவால், அதிகாலை 2 மணியளவில் வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியிருப்பது இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்'' என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். சட்டமன்ற நுழைவு வாயிலின் முன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
-இளையர்