பா.ஜ.க. அண்ணாமலையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வரிந்து கட்டுகின்றன அரசியல் கட்சிகள். இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எதிரொலிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர் பா.ஜ.க.வினர். இந்தியா முழுவதும் இதற்காக சிறப்புக் கூட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
அந்த வகையில் மோடியையும் அவரது ஆட்சியையும் பாராட் டும் விதமாக ட்வீட் செய்த அண்ணாமலை, "பறையாவில் இருந்து விஷ்வகுருவாக உயர்ந்தவர்' என்று புகழ்ந்து பதிவு செய்திருந்தார். "பறையா' என்று அவர் பயன்படுத்தியது தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.
விடுதலை சிறுத்தைகள் வன்னி யரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடங்கி தாழ்த்தப்பட்டோர் சமூகத்துக்காக போராடும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் என பலரும், அண்ணாமலையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இப்படிப் பட்ட புகார்கள் குவியும் நிலையில், இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதா? வேண்டாமா? என்று தங்களின் உயரதிகாரிகளிடம் கேட்டு வருகின்றனர் காவல்துறையினர். உயரதிகாரிகளோ தி.மு.க. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் அதிர்வுகளை ஏற்படுத்திவரும் நிலையில், "தனது பதிவில் எந்தக் குற்றமும் இல்லை' என்கிற ரீதியில், மீண்டும் ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, "கத்தியை விட நம் புத்தி கூர்மையானது. உங்களுக்காக ஆங்கில -தமிழ் அகராதியை வாங்கி அனுப்பு கிறேன். நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தைப் பார்க்கவும்'’என்று பதிலடி கொடுக்க, தலித் அமைப்புகள் மேலும் டென்சனாகியிருக்கின்றன.
"வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கூடிய அளவிலான குற்றமா இது?' என்று தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வும் இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான டாக்டர் செ.கு.தமிழரசனிடம் நாம் பேசியபோது,’"பறையர் சமூகம் ஒரு இழிவான, கீழ்நிலையான சமூகம் என்பதுதான் அண்ணாமலை பதிவு செய்த வார்த்தையின் அடிநாதம். இருளிலிருந்து ஒளி, கீழிருந்து உயர்வு என்று சொல்லி வருகின்ற மோடியை, "பறையா டூ விஷ்வகுரு' என்று சொல்கிறார் அண்ணாமலை.
அதாவது, பறையர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், எந்த உயர்வுக்கும் தகுதியில்லாதவர்கள் என்கிற உணர்வுகளை பிரதிபலிக்கிற வகையில்தான் அண்ணாமலை பதிவு செய்திருக்கிறார். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கவே முடியாது. அதனால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத் தைப் புண்படுத்துகிற வார்த்தைதான் அது. அதனால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அண்ணாமலை மீது பாய வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் அவர் கைது செய்யப்படுவது ஒன்றே தாழ்த்தப் பட்ட சமூகத்தின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த வர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் அவருக்கு நன்றாகவே தெரியும். தெரியாது என சொல்லி அவர் தப்பிக்க முடியாது. அதனால் தெரிந்தே செய்த குற்றமாகத்தான் கருத வேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷ்ன ரியை தனது வார்த்தைக்கு உதவியாக அழைக் கிறார் அண்ணாமலை. ஆனால், வன் கொடுமை தடுப்புச் சட்டம், இந்த மண்ணுக் கும் மண்ணில் நடக்கும் செயல்களுக்காக வும்தான் கொண்டுவரப்பட்டதே தவிர, டிக்ஷ்னரிக்காக இல்லை.
இதேபோல, 1995-ல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுப்பிரமணியசாமி, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இன்டர்நேஷனல் பறையா' என்று பயன்படுத்தினார். பறையர் சமூகம் போல இழிந்தவர் என்று பொருள்படும்படி பேசினார் சுப்பிரமணியசாமி. இதனைக் கண்டித்து முதல் குரல் எழுப்பியவன் நான். இதுகுறித்து சட்டமன்றத்தில் சுப்பிரமணியசாமியின் அந்த வார்த்தையை கண்டித்து பேசினேன். அது மட்டுமல்ல சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை கமிஷனரிடம் புகாரும் கொடுத்தேன். புகார் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். சுப்பிரமணிய சாமியை கைது செய்ய போலீஸ் தீவிரமானது. வாரண்டும் பிறப்பித்தனர்.
சுப்பிரமணியசாமியோ, கைது செய்யப் படுவதிலிருந்து தப்பிக்க, உச்சநீதிமன்றத்தை அணுகி, நான் தெரியாமல் அந்த வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன் என்று சொல்லி பகிரங்க மன்னிப்புக் கேட்டார். அதுமட்டுமல்ல, அந்த வார்த்தையை டிக்ஷ்னரியிலிருந்து நீக்கவேண்டும் என ஆக்ஸ்போர்ட் அத்தாரிட்டிகளுக்கு கடிதமும் எழுதினார் சுப்பிரமணியசாமி. ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது, அந்த வார்த்தையை நீக்க ஆக்ஸ்போர்ட் நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் என்னிடம் சொன்னார் அவர்.
அதனால் அன்றைக்கு சுப்பிரமணியசாமி பயன்படுத்தியதற்கும் இன்றைக்கு அண்ணாமலை பயன்படுத்தியதற்கும் பெரிய வேறுபாடில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதான் அவரது பதிவு. அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்பதே தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் எதிர்பார்ப்பு. தி.மு.க. அரசு அதனை செய்ய வேண்டும், இதேபோன்று ஒரு கருத்தை பிரதிபலித்ததற்காக தி.மு.க. எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.எஸ். பாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் பெற்றார் அவர். ஆக, அண்ணாமலை கைது செய்யப் பட வேண்டியவர். இல்லையெனில் அவரைப் போல பலரும் பேசுவதற்கு வாய்ப்பாகி விடும்''’என்கிறார் மிக இயல்பாக.
அண்ணாமலையின் பதிவையும் அதற்கான எதிர்வினையையும் தி.மு.க. அரசு உற்று கவனித்துவரும் நிலையில், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவனிடம் இது குறித்து கேட்டபோது,’அண்ணாமலை யின் பதிவை அவரது சொந்தக் கருத்தாக பார்க்கக்கூடாது; பா.ஜ.க. வின் கருத்தாகத்தான் பார்க்க வேண்டும். பா.ஜ.க.வின் முகமே இதுதான். வர்ணா சிரமத்தை நிலை நாட்டு வதற்காக, இட ஒதுக்கீட்டை அழிப்பதற் காகத்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளையும் பேச்சுக்களையும் பதிவு செய்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவு படுத்துவதுதான் பா.ஜ.க.வின் வாடிக்கை. அதனால்தான் தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஏற்பதில்லை. அமைதியான தமிழகத்தில் சர்ச்சைகளை உருவாக்கி குளிர் காய்வதுதான் அண்ணாமலையின் திட்டம். அதனை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டால் அது தவறு இல்லை'' என்கிறார் அழுத்தமாக.
இதற்கிடையே, அண்ணாமலையின் இந்த பதிவுக்கு எதிராக பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு தமிழக பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர் புகார் தெரிவித்திருக்கி றார்கள்.
இது குறித்து கமலாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, "அண்ணாமலை தனது இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி காண்ட்ரவர்சிகளை உருவாக்கி வருகிறார். இதனால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கட்சியை வளர்க்க படாதபாடுபட்டுக்கொண்டி ருக்கிறோம். இந்த சூழலில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை எதற்கு வம்புக்கு இழுக்க வேண்டும்? பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவதற்கு வார்த்தைகளா இல்லை? தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலம் கட்சியை வளர்க்க முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்கிற நிலை யில், அவர் மீது ஆக்ஷன் எடுக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏனென்றுதான் தெரிய வில்லை''’என்கிறார்கள்.
தி.மு.க. அரசுக்கு எதிராக, தான் வீசும் ஊழல் குண்டுகளின்போது, "முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் பார்க்க லாம்'’என்று சவால் விட்டிருந்தார் அண்ணா மலை. சில பல காரணங் களுக்காக அண்ணாமலையின் அந்த சவாலை புறந்தள்ளியது தி.மு.க. அரசு. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது என்று கவனிக்கின்றன தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் .
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரான நூபுர்சர்மா என்ற பெண்மணி, நபிகள் நாயகத்தைப் பற்றிய சர்ச்சை கருத்து வெளியிட்டதால், அரபு நாடுகளிலும் பிற நாடுகளிலும் பா.ஜ.க.வுக்கும் மோடிக்கும் எதிரான சமூக வலைத்தள அலை பரவியுள்ளது. அதனை சமாளிக்க, "நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்' என அறிக்கை கொடுத்துள்ளது பா.ஜ.க.
பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் முதல் தேசியத் தலைமைவரை ஒரே அலைவரிசையில் தான் செயல்படுகிறார்கள்.