டிகர்கள் ரஜினி, விஜய் ரசிகர்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக பா.ஜ.க.வில் நடத்தப்படும் குறுக்குவழி முயற்சிகள், அவர்களின் ரசிகர்களிடம் கடுப்பை உருவாக்கியுள்ளன.

பா.ஜ.க. தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி வாழ்த்து தெரிவித்தனர்' என்பதோடு, அதில் "நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார்' எனக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, வேலூரிலுள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம், "உங்கள் தலைவர் எனக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்... எனக்கு ஓட்டுப் போடுங்கள்'' எனக் கேட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

v

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்களின் மனநிலை என்னவென்று அறிய, முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "எங்கள் தலைவர் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்து இளைஞரணி, மகளிரணி உருவாக்கப்பட்டது. பூத் கமிட்டியெல்லாம் அமைக்கப்பட்டது. கட்சி இனி இல்லை எனத் தலைவர் அறிவித்ததுமே இளைஞரணி, மகளிரணி கலைக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களின் நிர்வாகிகள் அதிருப்தி யாகி மன்றத்திலிருந்து வெளியேறி தி.மு.க., அ.தி.மு.க. என வெவ்வேறு கட்சிகளில் இணைந்தனர். மற்ற மாவட்ட நிர்வாகிகள், இப்போதும் மன்றப் பணிகளைத் தொடர்கிறார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக வேலை செய்யவேண்டு மென்று மாவட்ட நிர்வாகிகளிடம், கீழ்மட்ட மன்றப் பொறுப்பாளர்கள் கேட்டனர். தலைவர் பெயரைச் சொல்லி வேலூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு கேட்க முயற்சிக்கும் தகவல் தலைவருக்கும் சென்றது. "அவரவர் விருப்பப்படி வாக்களிக்கட்டும், யாருக்கும் மன்றத்தில் ஆதரவு இல்லை எனச் சொல்லச்சொல்லி தகவல் சொன்னார். யாருக்கு வேண்டுமாலும் வேலை செய்யுங்கள், ஓட்டுப் போடுங்கள், அது உங்கள் விருப்பம். எந்த இடத்திலும் மன்றத்தின் கொடியையோ, தலைவரின் பெயரையோ பயன்படுத்தக்கூடாது எனச் சொல்லிவிட்டோம். ஏ.சி.எஸ். எப்படியாவது வெல்வதற்காக தலைவரின் பெயரைப் பயன்படுத்துகிறார்'' என்றார்.

சில மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ள நடிகர் விஜய், "நமது இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். அதற்கான உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்துங்கள், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் கட்சிக் கொடி போன்றவற்றை முடிவு செய்துகொள்ளலாம்' என அறிக்கை வெளியிட்டுவிட்டு சினிமா சூட்டிங்கில் இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி விஜய் வெளியிட்டதுபோல் சமூக ஊடகத்தில் ஒரு அறிக்கை சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியை யார் கருத்தில்கொண்டு செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை, பா.ஜ.க. பிரமுகர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. "இது போலியானது, விஜய் அப்படியொரு அறிக்கையே வெளியிடவில்லை' என்கிறார்கள் விஜய் மன்றத்தினர்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விஜய் ரசிகர்களின் நிலைப்பாடு என்ன என விசாரித்தோம். "தேர்தல் களத்தை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார் தளபதி விஜய். மத்தியில் யார் ஆட்சி வரும் எனத் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் அடிக்கடி விசாரித்தபடியே இருக்கிறார். தமிழ்நாடு தேர்தல் களம் எப்படி இருக்கிறது, யார், யார் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் எனக்கேட்டு வருகிறார். நான்கு அணிகள் களத்தில் இருக்கிறது, தி.மு.க. கூட்டணி பலமாக இருக்கிறது. 35 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் எனச் சொல்லப்பட்டது. அவருக்கு தெரிந்த சில வேட்பாளர் களின் பெயர்களை சொல்லி, அவர்கள் வெற்றி பெறு வார்களா எனக்கேட்டார். அமைச்சர் உதயநிதியின் தேர்தல் பிரச்சாரம், அவருக்கு கூடும் கூட்டம், அவர் குறித்து மக்களின் கருத்துக்கள் என்னவென்பதை தனது மன்ற நிர்வாகிகள் மூலமாகவும், தனது ஆலோசனைக் குழுவிடமும் அடிக்கடி கேட்டறிகிறார். பா.ஜ.க. தலைமை யிலிருந்து தங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்க வேண்டும் என விஜய்க்கு நெருக்கடி தருகின்றனர். அவர் அமைதி காக்கிறார். அதனாலேயே அவர் பெயரில் போலியாக அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்'' என்றனர் விஜய்க்கு நெருக்கமான வட்டத்தினர்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட் டச் செயலாளர் பர்வேஷிடம் கேட்டபோது, "தேர்தல் பணிகள் குறித்து தலைமையிலிருந்து எங்க ளுக்கு இதுவரை எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதனால் நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக வேலை செய்யாமல் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்துக்கிறோம். எங்கள் தளபதி விஜய் யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறாரோ அவருக்கு வாக்களிப்போம். அவர் பெயரில் உலாவரும் தகவல் பொய்யானது, நாங்கள் ஏமாறமாட்டோம்'' என்றார். விஜய் ரசிகர்கள் இளைஞர்கள் என்பதால் அந்த வாக்குகளைப் பெறுவதற்காக போலி அறிக்கையைத் தயாரிக்குமளவுக்கு இறங்கியிருப்பது தெரிகிறது!