"அ.தி.மு.க.வில் அனைத்து விதமான பரபரப்பு நிறைந்த காட்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இரண்டு தொண்டர்கள் ஒன்று சேர்ந்தால் அடுத்து கட்சி நிலை என்னாகும்? எடப்பாடி தலைவராக நீடிப்பாரா மாட்டாரா... சசிகலா என்ன செய்வார்?' எனப் பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டிய சூழல் மற்றும் எடப்பாடி யின் பிரமாண்டமான சுற்றுப்பயணம் இவற் றையெல்லாம் மீறி அ.தி.மு.க.வின் தலைமை, அதன் ஸ்திரத்தன்மை குறித்த விவாதம் கட்சிக் காரர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. இவை அனைத்துக்கும் காரணம்.. ‘2026 சட்டப் பேரவை தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழகத்தின் அடுத்த முதல்வர் அ.தி.மு.க. விலிருந்து தேர்ந்தெடுக் கப்படுவார்’ என அமித்ஷா அளித்த பேட்டிதான்.
அமித்ஷாவை வேலுமணி, ஆதி ராஜா ராம், அரக்கோணம் ரவி உட்பட மேலும் சிலர் சந்தித்ததும் பரபரப்பாக பேசப்படுகின்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகுதான் அமித்ஷா, எடப்பாடியின் பேரைக் குறிப்பிடாமல் அ.தி.மு.க.விலிருந்து முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பொத்தாம் பொதுவாக அறிவிப்பு வெளியிட்டார். நள்ளிர வில் வேலுமணி தலைமையில் குஜராத்துக்கு பறந்த அ.தி.மு.க. டீம் அமித்ஷாவை சந்தித்தது. அமித்ஷாவின் சிறப்புப் பேட்டி அங்கிருந்து டைப் செய்யப்பட்டு பா.ஜ.க.வுக்கு சாதகமான தினசரியில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக சென்னை ‘லீலா பேலஸ்’ ஓட்டலில் தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தினார் வேலுமணி. 20 க்கும் மேற்பட்ட அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் எடப்பாடியை அ.தி.மு.க.வின் பொதுச் செய லாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எப்படி நீக்கு வது என விவாதிக்கப் பட்டது. பா.ஜ.க. வுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதல் இரண்டரை வருடம் வேலுமணி முதல்வராகவும், அடுத்ததாக பா.ஜ.க. முதல்வர் இரண்டரை வருடம் என மகராஷ்டிரா பாணியில் தமிழகத்தின் ஷிண்டேவாக வேலுமணி உருவாகி நின்றதைப் பார்த்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதிர்ந்து போனார்கள். இந்த தகவலை அவர்களே எடப்பாடிக்கும் சொன்னார்கள்.
அதற்கு முன்பு வேலுமணிக்கும், எடப் பாடிக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. அமித்ஷாவின் இந்த பேட்டி யால் டென்ஷனான எடப்பாடியிடம் பியூஸ் கோயல், அமித்ஷா, ஜக்கி வாசுதேவ் ஆகியோர் உட்பட பலர் மிரட்டும் தொனியில் பேசியுள் ளார்கள். இதனால் கடுப்பான எடப்பாடி உளுந்தூர்பேட்டை கட்சி பொதுக் கூட்டத்தில், "எந்தக் கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.. அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கும்.. கூட்டணி ஆட்சி இல்லை'' என வீராவேசமாகப் பேசினார். அத்துடன் அமித்ஷா தமிழகத்திற்கு வரும் இம்மாத முதல் வாரத்தில் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணத்தையும் எடப்பாடி அறிவித்தார். அதற்குப் பிறகும் வேலுமணி அடங்கவில்லை. வேலுமணியுடன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் சேர்ந்து கொண்டார். சசிகலா, திவாகரன், ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோருடன் சேர்ந்து கட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் வேட்பாளராக வேலுமணி வருவது மற்றும் எடப்பாடியை கட்சியை விட்டு நீக்குவது சம்பந்தமாக தொடர்ச்சியாக வேலுமணி பேசிவருகிறார். எடப்பாடிக்கு எதிராக வெளிப்படையான போர் ஒன்றையே வேலுமணி அறிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க.வில் உள்ள சாதாரண தொண்டர்கள் மத்தியிலும் எடப்பாடிக்கு எதிராகவே வேலுமணி பேசி வருகிறார். இது அ.தி.மு.க.வில் பெரிய குழப்பத்தையும் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது. எடப்பாடி தலைவராக நீடிக்க வேண்டும் என்றால் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற சூழல் அ.தி.மு.க.வில் உருவாகி உள்ளது. அதற்கு பதில் கொடுக்கும் வகையில் வேலுமணி ‘அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரை இணைக்க வேண்டும். அ.தி.மு.க.வை ஒற்றுமைப் படுத்தாவிட்டால் வரவிருக்கும் 2026 தேர்தலில் கட்டாயம் அ.தி.மு.க. படுதோல்வியடையும் என்பதோடு, அவர் முதலமைச்சராக வேண்டுமென மற்றவர்களைப் புறக்கணிக்கிறார் எடப்பாடி. இந்தநிலை நீடித்தால் அ.தி.மு.க. அழிந்துவிடும்’ என ஒரு வலுவான பிரச்சாரத்தை கட்சிக்குள் வேலுமணி நடத்திவருகிறார்.
“தி.மு.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை இந்த உட்கட்சிக் குழப்பம் முடக்கியுள்ளது. நான்தான் அ.தி.மு.க. தலைவர் என நிரூபிக்க எடப்பாடி போராடி வருகிறார். பா.ஜ.க. இல்லாமல் எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் ஆதரவு எடப்பாடிக்கு இல்லை. பா.ஜ.க. விரும்பும் ஒரே அ.தி.மு.க. தலைவர் நான்தான் என வேலுமணி பிரச்சாரம் செய்து வருகிறார். இதைப் பார்த்த உண்மை யான அ.தி.மு.க.வினர் வேலுமணியை விட்டு விலகத் தொடங்கியுள்ளார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் அ.தி.மு.க. -பா.ஜ.க. ஆதரவு அணி, அ.தி.மு.க. -பா.ஜ.க. எதிர்ப்பு அ.தி.மு.க., என கட்சி பிளவுபட்டு நிற் கிறது. அ.தி.மு.க.வை உடைத்து மகாராஷ்டிரா ஷிண்டே பாணியில் தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும். முடிந்தால் முதல்வர் பதவியை பா.ஜ.க. பெறவேண்டும் என வேலுமணி மூலம் கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறது பா.ஜ.க. என்கிறது’அ.தி.மு.க. வட்டாரங்கள்.