சிஸ்டம் சரியில்லை என்று சொன்னதன் மூலம் தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நேரடி அரசியலில் அவர் குதிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட சூழலில், தனது உடல் நிலையைச் சுட்டிக்காட்டி, ”அரசியல் எனக்கு ஒத்துவராது. தேர்தல் அரசியலைத் தாண்டி மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி, அரசியலில் நுழையாமலேயே அதற்கு முழுக்கு போட்டவர் ரஜினி.
அரசியல் நமக்கு ஒத்துவராது என்பதில் உறுதியாக இருந்த ரஜினி, கடந்த திங்கள்கிழமை தமிழக ஆளுநரை சென்னை ராஜ் பவனில் சந்தித்து அரசியல் பேசியிருக்கிறார். ராஜ்பவனிலிருந்து போயஸ்கார்டன் திரும்பியதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ஆளுநருடனான சந்திப்பு பற்றி கூறும்போது ’"நாங்கள் அரசியல் பேசினோம்' என்று சொல்லவும், தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மீண்டும் பற்ற வைக்கிறியே பரட்டை என்றெல்லாம் மீம்ஸ்கள் பறந்தன. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க அவர் கமிட் ஆகியிருப்பதால் அந்த படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த குண்டை வீசினார் என்கிற எதிர்மறை விமர்சனங்களும் எதிரொலித்தது. ஆளுநர்-ரஜினி சந்திப்பு குறித்து தி.மு.க. அலட்டிக்கொள்ளாவிட்டாலும் ராஜ்பவனில் நடந்து என்ன? என்பதை தெரிந்துகொள்ள ஆளும் கட்சியில் தொடங்கி சின்னச்சின்ன கட்சிகள் வரை ஆர்வம் காட்டின! இந்த நிலையில், இருவரின் சந்திப்பில் நடந்தவை என்ன என்பது குறித்து கவர்னர் மாளிகையான ராஜ்பவன், ரஜினி, டெல்லி ஆகிய மூன்று தரப்பிலும் நாம் விசாரித்தோம். அர சியல் ரீதியாக பல தகவல்கள் நமக்கு கிடைத்தன.
தமிழக கவர்னரை வைத்து தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பேரலல் கவர்மெண்ட்டை நடத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. தலைமை. அதனால் தமிழக பா.ஜ.க. மூலம் அரசியல் பணிகளை டெல்லி தீவிரப்படுத்தினாலும் சில முக்கிய அசைன்மெண்டு கள் ஆளுநரை வைத்தே கட்டமைக்கப்படுகிறது. அந்த வகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே மெல்ல மெல்ல சில காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது மோடி- அமித்ஷா கூட்டணி. அதில் மிக முக்கியமான காய்களில் ஒன்று ரஜினிகாந்த்.
ரஜினியை அழைத்து விவாதியுங்கள் என்று கடந்த வாரம் டெல்லியிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 4-ந் தேதி ரஜினியின் இல்லத்தை தொடர்புகொண்ட ராஜ்பவன், "கவர்னர் மாளிகை யில் நாளைக்கு (5-ந் தேதி) வரலெட்சுமி பூஜை இருக்கிறது. அதில் ரஜினி கலந்துகொள்ள வேண் டும் என கவர்னர் விரும்புகிறார்' என்று தகவல் தெரிவித்திருக்கிறது.
இந்த தகவல் ரஜினியிடம் சொல்லப்பட்ட போது, "வரலெட்சுமி பூஜைங்கிறது குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி. இங்கு வீட்டில் பூஜை இருப்பதால் குடும்பத்தினர் யாரும் வெளிநிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாது' என்று சொல்ல, ராஜ்பவனுக்கு அந்த தகவல் பாஸ் செய்யப்பட்டது. இதனையடுத்து, "சனிக்கிழமை வர இயலுமா?' என்று கவர்னரே தொடர்புகொண்டு கேட்க, சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் சென்னையில் ரஜினி இல்லை. டெல்லிக்கு அவர் செல்கிறார் என்பதை கவர்னருக்கு தெரியப்படுத்தி யது ரஜினியின் குடும்பம்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கொண் டாடப்படும் சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளவே ரஜினி அழைக்கப்பட்டிருந்தார். இது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரியும். ஆனால், அவர் வருவாரா என்பதை டெல்லி உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த சூழலில்தான், டெல்லிக்கு ரஜினி செல்வதற்கு முன்பு அவரை சந்திக்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார் கவர்னர் ரவி. ஆனால், அது நடக்கவில்லை. இந்த நிலையில், ரஜினியுடனான சந்திப்பு நடக்கவில்லை என்பதை யும், அவர் டெல்லிக்கு வருவதையும் பிரதமர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தினார் கவர்னர்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. அல்லாத அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். ரஜினியும் கலந்துகொள்ள, அன்றைய தினம் இரவு டெல்லியில் தங்கினார் ரஜினி. அப்போது, மோடியின் உத்தரவின் பேரில் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் ரஜினியை சந்தித்து, "தமிழக கவர்னர் உங்களை சந்திக்க விரும்புகிறார்' என்பதை சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு திரும்பினார் ரஜினி. அதையறிந்து அவரை தொடர்புகொண்டு பேசிய கவர்னர் ரவி, "உங்கள் இல்லத்துக்கு நாளை (திங்கள்கிழமை) மதியம் லஞ்ச்சுக்கு வரலாமென இருக்கிறேன்'' என்று சொல்ல, "நோ… நோ…என்னைத் தேடி நீங்கள் வருவது உங்கள் பதவிக்கு அழகாகாது. உங்களைப் பார்க்க நான் வருகிறேன்''’என்று சொன்னதோடு, கவர்னர் ரவியை ராஜ்பவனில் திங்கட்கிழமை சந்தித்தார் ரஜினிகாந்த். முதலமைச்சர், அரசின் உயரதிகாரிகள், வி.வி.ஐ.பி.க்கள் என ராஜ்பவனுக்கு யார் வந்தாலும் அவர்களை குறிப்பிட்ட பெரிய அறையில் சந்திப்பார் கவர்னர் ரவி. ஆனால், ராஜ்பவனுக்கு வந்த ரஜினியை அவரே வாசலுக்கு வந்து வரவேற்று தனது பிரத்யேகமான அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கவர்னர்.
இந்த சந்திப்பில் பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதைத் தொடர்ந்து, ’"என்னை சந்திக்க நீங்கள் விரும்பியது எனக்கு மகிழ்ச்சிதான். என்னை சந்திக்க நினைத்ததற்கு ஏதேனும் விசேஷம் இருக்கிறதா?''’என ரஜினி நேரடியாகவே கேட்க, ”"தமிழகத்தில் ஆன்மீக அரசியலை கொண்டு வருவது டெல்லியின் விருப்பம். திராவிட அரசியல் வீழ்ந்து வருவதாக டெல்லி நினைக்கிறது. அது உங்களுக்கும் தெரியும். சில விசயங்கள் என்னிடம் பகிரப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஆன்மீக அரசியலை முன்னெடுக்க நினைத்த உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன்''’என்று சொல்ல, வழக்கமான தனது ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்துள்ளார் ரஜினிகாந்த்.
தொடர்ந்து பேசிய கவர்னர், "பல யோசனை களுக்கு பிறகுதான், அரசியலுக்கு வருவதில் உறுதி யான முடிவை எடுத்தீர்கள். ஆனால், ஓவர்நைட் டில் வேண்டாம் என தீர்மானித்துவிட்டீர்களே, ஏன்?'' என்று கேட்க, "உடல்நிலை முக்கிய காரணமாக இருந்தாலும், அரசியல் நண்பர்கள் சிலர் சொன்ன விசயங்களில் உடன்பட வேண்டி யிருந்ததால் அந்த முடிவை எடுத்தேன்'' என்றிருக் கிறார் ரஜினி. அதனை ஆமோதித்த கவர்னர், "நீங் கள் வந்திருந்தால் அரசியலில் மாற்றம் வந்திருக் கும். என்னை பொறுத்தவரை, உங்களுக்கான வாய்ஸ் தமிழக மக்களிடம் இன்னும் இருக்கிறது''’என்றார்.
அதனை உன்னிப்பாக ரஜினி கவனிக்க, "உங்களையும் இளையராஜாவையும் எம்.பி.யாக்க டெல்லி விரும்பியது. நீங்கள்தான் வேண்டாம் என மறுத்துவிட்டீர்கள்''’என்று கவர்னர் சொல்ல, ’"அது நியமன பதவிதானே? அதை வைத்து மக்க ளுக்கு என்ன செய்துவிட முடியும்?'' என்று ரஜினி கேட்க, "நீங்கள் சம்ம தித்திருந்தால் மக்களை நேரில் சந்திக்கக்கூடிய எம்.பி. பதவியையே டெல்லியால் கொடுத் திருக்க முடியும்''’என்று விவரித்திருக்கிறார் கவர் னர். அதற்கு பதிலேதும் சொல்லாமல் மௌன மாக இருந்துள்ளார் ரஜினி.
மௌனத்தை கலைக்கும் விதத்தில் தொடர்ந்து பேசிய கவர்னர், "தேர்தல் அரசியலும், ஆட்சி நிர்வாகமும் கடல் மாதிரிதான். அதற்காகக்கூட நீங்கள் அரசியலுக்கு வராமல் தயங்கியிருக்கலாம். இப்பகூட நீங்கள் முடிவெடுத்தால் உங்களை பெருமைப்படுத்த டெல்லி தயாராகத்தான் இருக்கு. அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஆட்சி நிர்வாகம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநராக உங்களை நியமிக்க டெல்லி தயார்.
பாண்டிச்சேரி அரசின் நிர்வாகம் மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால், துணை நிலை ஆளுநர் பதவியில், ஆட்சி நிர்வாகம் குறித்து பல விசயங்களை நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். அதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். நிர்வாகத்தை முழுமை யாகத் தெரிந்துகொண்டாலே அரசியல் உங்களுக்கு எளிதாகிவிடும். 2024 தேர்தலில் நீங்கள் நேரடியாகவே அரசியல் களத்துக்கு வரலாம்.
கவர்னர் பதவியில் உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், உங்களை மத்திய அமைச்சராக்க வும் டெல்லி ரெடி. அமைச்சர் பதவியை வைத்து மக்களை சந்தியுங்கள்; அவர்களுக்கான அரசியலை செய்யுங்கள். அடுத்துவரும் ஒன்றரை வருடத்தில் மக்களுக்கும் உங்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டுவிடும். 2024 தேர்தலுக்குப் பிறகும் மத்தியில் மோடி ஆட்சி தான். அதிலும் நீங்கள் அமைச்சராகத் தொடர லாம். நீங்கள் நினைக்கும் ஆன்மீக அரசியலை தமி ழகத்தில் விதையுங்கள். 2026-ல் தமிழக பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருப்பீர்கள்.
இதிலும் விருப்பம் இல்லையெனில், தமிழக பா.ஜ.க.வின் தலைவராக உங்களை நியமிக்க டெல்லி தயார். நாடாளுமன்ற தேர்தலுக்குள் உங்களின் ஆன்மீக அரசியலை மக்களிடம் தெளிவு படுத்துங்கள். இதற்காக நீங்கள் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம். தலைவர் பதவியில் இருந்துகொண்டு உத்தர விடுங்கள்; மற்றதை டெல்லி கவனித்துக் கொள்ளும்'' என்று 3 ஆப்ஷன்களை முன் வைத்து ரஜினியிடம் பேசியுள்ளார் கவர்னர். ஆனால், இவைகளை எவ்வித சலனமுமில்லாமல் கேட்டுக்கொண்ட ரஜினி, இப்போதைக்கு ஜெயிலர் படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். அதனை சக்சஸாக முடித்துத்தர வேண்டும் என்பதுதான் என் யோசனை”என்று மட்டும் சொல்லிவிட்டு கவர்னரிடம் விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்.
ரஜினியிடம் கவர்னர் பேசிய 3 விசயங்களும் அவரை யோசிக்க வைத்திருக்கிறது. அதனால்தான், "கவர்னரிடம் அரசியல் பேசினேன்''’என்று பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் ரஜினி.
ராஜ்பவன் என்பது அரசின் நிர்வாக ரீதியாக விவாதிக்கும் களமாக இருந்ததை அரசியலை விவாதிக்கும் மாளிகையாக மாற்றி வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த சர்ச்சை ஒரு புறமிருக்க, பா.ஜ.க. விரிக்கும் வலையில் ரஜினி சிக்குவாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!