சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவன ஆடிட்டர் பாஸ்கர்ராமனை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளது சி.பி.ஐ. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக இணைக்கப்பட்டிருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் 1980 மெகாவாட் அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை முந்தைய மன்மோகன்சிங் ஆட்சிக் காலக்கட்டத்தில் (2010) துவக்குகிறது தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற தனியார் சீன நிறுவனம். அப்போது, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராக இருந்தார் ப.சிதம்பரம்.
தல்வாண்டி சபோ நிறுவனம் தனது திட்டத்தைத் துவக்குவதற்காக சீனாவிலிருந்து பஞ்சாப்பிற்கு அழைத்து வரப்பட்ட நிபுணர்களுக் கும் தொழிலாளர்களுக்கும் முறைகேடாக விசா பெற கார்த்தி சிதம்பரம் உதவினார் என்பதும், இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கைமாறியது என்பதும் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. இதில் முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவன ஆடிட்டர் பாஸ்கர்ராமன், இரண்டாவது குற்றவாளி யாக கார்த்தி சிதம்பரம், தல்வாண்டிசபோ நிறுவன பிரதிநிதி விகாஸ் மக்காரியா, மும்பையை சேர்ந்த பெல் டூல்ஸ் லிமிடெட்டின் நிர்வாகி உள்ளிட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ.
மேலும், அடையாளம் தெரியாத சிலர் என்றும் ஒரு வரி சேர்த்துள்ளனர். 120 பி (குற்றச்சதி), 477 ஏ (கணக்குகளை பொய் யாக்குதல்), ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 8 மற்றும் 9 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் ப.சிதம் பரம், கார்த்தி சிதம்பரம், பாஸ்கர்ராமன் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய சென்னை, டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், ஒரிசா மாநிலங்களில் உள்ள அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் கடந்த 17-ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இதில் பல ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்படுகிறது.
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘’"ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நடந்துவரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தல்வாண்டி பவர் நிறுவனம் தனது அனல்மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை குறிப்பிட்ட காலத்தைக் கடந்து நிறுவத் துவங்குகிறது. இதற்கான கால தாமதத்திற்கான தண்டனை நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, சீனாவிலிருந்து பணியாளர்களை கூடுதலாக அழைத்து வர முயற்சித்தது அந்த நிறுவனம்.
இதற்காக, 263 திட்ட விசாக்களைப் பெற அனுமதிக்குமாறு நிறுவனத்தின் பிரதிநிதி மக்காரியா, உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் சமர்ப்பித்திருக்கிறார். ஒருமாத கால இடைவெளி யில் திட்ட விசாக்களின் உச்ச வரம்பை மீறி இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட விரோத விசாக்களை பெற உதவியதற்காக மும்பையிலுள்ள பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத் தின் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்காக அவரது நண்பர் பாஸ்கர்ராமனிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சத்தை ரொக்கமாக தல்வாண்டி சபோ பவர் நிறுவனம் தந்துள்ளது' என்று தெரிவிக்கிறது.
டெல்லியிலிருந்து சென்னை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 14 பேர், இரண்டு குழுக்களாகப் பிரிந்து ரெய்டை நடத்தி முடித்திருக்கிறார்கள். ரெய்டு நடந்த போது ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும், கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருந்துள்ளனர்.
ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், "என்னிடம் தரப்பட்ட எஃப்.ஐ.ஆரில் எனது பெயரில்லை. ரெய்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சோதனை நடத்தப்பட்ட தருணம் சுவாரஸ்யமானது'' என்கிறார். அதேபோல, கார்த்தி சிதம்பரமும், "எனக்கு எதிராக எத்தனை முறை சோதனை நடத்தினார்கள் என்றே தெரியவில்லை''’என்கிறார் நக்கலாக.
ஐ.என்.எஸ். மீடியா ஊழல் வழக்கில் ஏற்கனவே சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பாஸ்கர் ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு சில மாத கால சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் மூவரும் விடுதலையானார்கள். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் சிதம்பரம் குறி வைக்கப்பட்டது குறித்து அவரது தரப்பில் நாம் விசாரித்தபோது, "விசா முறைகேடு விவகாரத்தில் எந்த ஆதாரங்களும் சி.பி.ஐ.யிடம் இல்லை. அதனால் தான் எஃப்.ஐ.ஆரில் அழுத்தமாக எதையும் குறிப்பிட அவர்களால் முடியவில்லை. குறிப்பாக, பஞ்சாப்பிலுள்ள சீன நிறுவனம், மும்பையிலுள்ள கம்பெனிக்கு 50 லட்சத்தை செக்காக கொடுத்தார்களாம். அந்த மும்பை கம்பெனி, அதனை பாஸ்கர்ராமனுக்கு ரொக்கமாக தந்தார்களாம்.
50 லட்சம் செக்காக தரப்பட்டிருந்தால் மும்பை கம்பெனி வருமானவரி கட்டியிருப்பார்கள். அப்படியானால், கழிவு இல்லாமல் பாஸ்கர்ராம னிடம் எப்படி 50 லட்சத்தை ரொக்கமாக தர முடியும்? செக்கை பெற்றுக்கொண்டு ரொக்கமாக தந்த மும்பை கம்பெனி நிர்வாகி இப்போது உயிருடன் இல்லை என்கிறது சி.பி.ஐ. அப்படி யானால் அவர் எப்போது இறந்தார்? என்பதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை. பாஸ்கர்ராமனை தொடர்புபடுத்த ரொக்கம் என்பது புனையப்பட்டுள்ளது. பாஸ்கர்ராமன் அந்த 50 லட்சத்தை கார்த்தியிடம் தந்ததாக எந்த இடத்திலும் சி.பி.ஐ. குறிப்பிடவில்லை.
பாஸ்கர்ராமன் சிதம்பரத்திடம் பேசினார் என்கிறது எஃப்.ஐ.ஆர். ஆனால், எங்கே, எப்பொழுது என்று புகாரில் இல்லை. அதேபோல, இது தொடர்பான கோப்புகளை உள்துறை அமைச்சரோ, உள்துறை செயலாளரோ பார்த்த தாகவோ, கையெழுத்துப் போட்ட தாகவோ தனது புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிடவில்லை. அதே சமயம், அனுமதி தந்ததாக சொல்லப்படும் கோப்பில் கையெழுத்துப் போட்ட அதிகாரி, இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.
மேலும், உள்துறையைச் சேர்ந்த எந்த அதிகாரியிடமும் யாரும் சிபாரிசு செய்ததாகவோ, நிர்பந்தப்படுத்திய தாகவோ புகாரில் சின்ன தகவல் கூட இல்லை. இந்த நிலையில், செக்கை பெற்றுக்கொண்டு ரொக்கமாக தந்த மும்பை கம்பெனியின் உரிமையாளர் தற்போது உயிருடன் இல்லை என்கிற சி.பி.ஐ., எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்ட தகவல்களையெல்லாம் பிறகு யாரிடம் சேகரித்தார்கள்? ஆக, சிதம்பரத்தை குறிவைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்கள்.
இதன் பின்னணிகள் குறித்து மேலும் விசாரித்தபோது, "ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முதலில் கைது செய்யப் பட்டவர் பாஸ்கர் ராமன். சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம் பரத்துக்கு எதிராக எந்த வாக்குமூலத்தையும் அப்போதே தராத பாஸ்கர் ராமனா இப்போது வாக்குமூலம் தந்து விடப்போகிறார்? பாஸ்கர் ராமனிடமிருந்து தகவல்களைப் பெற சி.பி.ஐ. தலைகீழாக நின்றாலும் முடியாது.
ப.சிதம்பரத்தின் ராஜ்யசபா எம்.பி. காலம் முடிவடைகிறது. இனி நாடாளுமன்றத்துக்குள் நுழைய அவருக்கு வாய்ப்புக் கிடைக்காது என்றும், ஜூன் மாதத்தில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் சிதம்பரத்துக்கு எங்கேயும் சீட் கிடைக்காது என்றும் நினைத்தது ஒன்றிய மோடி அரசு. அதாவது, ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றத்துக்குள் சிதம்பரம் வந்துவிடக்கூடாது என எதிர்பார்த்தனர். ஆனால், காங்கிரசுக்கு 1 இடத்தை தி.மு.க. ஒதுக்கியது.
மோடிக்கும் அமித்ஷாவுக்கும் எதிராக காங்கிரசின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டுமாயின் ராஜ்யசபாவுக்குள் சிதம்பரம் செல்ல வேண்டும் என்று கருதி தி.மு.க. ஒதுக்கியுள்ள அந்த 1 இடத்தின் மூலம் சிதம்பரத்தை மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் அனுப்பி வைக்க சோனியா முடிவு செய்திருக்கிறார் என்பதாக ஒன்றிய அரசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகுதான் இந்த ரெய்டுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் சிதம்பரத்தின் இமேஜை டெமேஜ் ஆக்குவதுதான் ரெய்டின் நோக்கம். சமீபத்தில் நேபாளத்தில் ஒரு திருமண விழாவிற்கு சென்ற ராகுல்காந்தி, நேபாள நாட்டிற்கான சீன தூதரக பெண் அதிகாரியுடன் நெருக்க மாக இருக்கிறார் என சர்ச்சையை கிளப்பியது. தற்போது, சீனர்களை இந்தியாவுக்கு வரவழைக்க விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக வழக்கு பதிவு செய்கிறது மோடியின் சி.பி.ஐ. இந்தியாவுக்கு பகையாளியான சீனாவுடன் காங்கிரஸ் நெருக்கமாக இருக்கிறது என்பதைக் காட்டவே இப்படிப்பட்ட தந்திரங்களை கையாளுகிறது ஒன்றிய அரசு. ஆனால், என்ன ஆக்சன் எடுத்தாலும் சட்டத்தின் முன் மோடியும் அமித்ஷாவும் தோற்கடிக்கப்படுவார்கள்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.க்கள்.
ஆக, சிதம்பரம் மீண்டும் குறி வைக்கப்பட்டிருக்கும் விசா முறைகேடு விவகாரம் தேசிய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் காங்கிரசும் சிதம்பரமும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இதனால் கார்த்தியை கைது செய்து அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க காய்களை நகர்த்தி வருகிறது சி.பி.ஐ.