அ.தி.மு.க. -பா.ஜ.க. உறவு மாற்றாந்தாய் மனப்பான்மை உறவாக மாறிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வை நம்பவில்லை.. பா.ஜ.க. அ.தி.மு.க.வை நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுகிறது. 

கடந்தமுறை அ.தி.மு.க., பா.ஜ.க.வை விட்டு வெளியே வந்ததற்கு முன்னாள் பா.ஜ.க. மா.த.தான் காரணம் என அ.தி.மு.க. சொன்னது. இப்பொழுது அப்படி எதுவும் காரணம் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க. கவனமாக காய் நகர்த்துகிறது. எடப்பாடி தொடங்கியுள்ள ‘"மக்களைக் காப்போம்'’ என்கிற பிரச்சாரப் பயணத்தின் ஒவ்வொரு அசைவிலும் பா.ஜ.க. பங்கெடுக்கிறது. இனி அ.தி.மு.க. நடத்தும் அனைத்துப் போராட் டங்களிலும் பா.ஜ.க. பங்கெடுக்கும் என நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்    தான் ஆட்சி.. ஆனால் அ.தி.மு.க.விலிருந்து யார் முதல்வர் ஆவார் என்பதை சொல்லமாட்டோம். அ.தி.மு.க.விலிருந்து முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்போம் என பூடகமாக எடப்பாடிக்கு செக் வைத்து அமித்ஷா பேட்டியளித்த பிறகு ‘எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்’ என நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகவே அறிவித்தார். இந்த இரண்டு கருத்துக்களே அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை சந்தேகக் கண்ணுடன் அனைவரையும் பார்க்க வைக்கிறது. 

Advertisment

சமீபத்தில் பா.ஜ.க.வின் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பூத் கமிட்டி கூட்டத்தை முன்னாள் அ.தி.மு.க.காரரான ஜெ.பி. என்கிற  ஜெயப்பிரகாஷ் கூட்டியிருந்தார். பா.ஜ.க.வின் மையக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளாமல் ஜெ.பி. கூட்டிய இந்த பூத் கமிட்டி கூட்டம் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இந்த ஜெ.பி. தமிழக காங்கிரசின் முக்கியத் தலைவர்  ஒருவருக்கு நெருக்கமானவர். இந்த தலைவருக்கு சொந்தமான நிலம் ஒன்றை ‘கிறிஸ்டி புட்’ என்கிற பிரபல நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வாங்கிக் கொடுத்தார்.. அறுநூறு கோடி அளவிற்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தார் என அமலாக்கத்துறை வழக்கு ஒன்று ஜெ.பி. மீது நிலுவையில் உள்ளது. 

bjp

அப்படிப்பட்ட அந்த ஜெ.பி. பா.ஜ.க.வின் மேடை யில் அமரவைக்கப்பட்டு, பூத் கமிட்டி தொடர்பாக ஒரு மணி நேரம் பா.ஜ.க. வினருக்கு வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டது முன்னாள் பா.ஜ.க. மா.த.வின்  திருவிளை யாடல் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். 

Advertisment

முன்னாள் அ.தி. மு.க.காரரான ஜெ.பி., தி.மு.க. அமைச்சர் களுக்கும் நெருக்க மானவர். இவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரவேண்டும் என எடப்பாடியின் பேச்சைக் கேட்டு நயினார் நாகேந்திரன் சிபாரிசு செய்திருக்கிறார் என பா.ஜ.க.வின் மத்திய தலைமைக்கு புகார்கள் பறந்து கொண்டிருக் கின்றன. 

அ.தி.மு.க.வில் சீட் கேட்பவர்கள் பா.ஜ.க.வின் தயவை நாடுவதற்கு நயினார், நாகேந்திரனை தொடர்பு கொள்கிறார்கள். பழைய அ.தி.மு.க.காரரான  நயினார் அ.தி.மு.க.விலும் கோலோச்சுகிறார் என்கிற குற்றச்சாட்டை நயினாருக்கு எதிராக கட்டி விட்டுள்ளார்கள் பா.ஜ.க.வினர். "என்னை யாரும் மதிப்பதில்லை, நான்  வணக்கம் போட்டால் கூட பதில் வணக்கம் போடுவதில்லை'’ என நயினார் நாகேந்திரன் மேடையிலேயே புலம்பத் தொடங்கியுள்ளார். 

இதற்கிடையே அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேலுமணி, எடப்பாடிக்கு எதிராக என்னை முதல்வர் ஆக்குங்கள் என பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். நயினார் மேல் எழும் புகார்களால் அவர் அனுப்பிய நிர்வாகிகள் பட்டியலை அங்கீகரிக்காமல் இந்த நிர்வாகிகள் பட்டியல் நயினார், முன்னாள் பா.ஜ.க. மா.த., கேசவ விநாயகம் ஆகியோர் ஆடும் திருவிளையாடல் என பா.ஜ.க. தலைமை அந்தப் பட்டியலை நிறுத்தி வைத்துள்ளது. மறுபக்கம் எடப்பாடிக்கு எதிராக வேலுமணிக்கு கொம்பு சீவிவிடும் வேலையில் அமித்ஷாவும் பியூஷ் கோயலும் மும்முரமாக இருக்கிறார்கள். ஒருபக்கம் பா.ஜ.க. சிதைந்த நிலையில் நிற்கிறது. மறுபக்கம் அ.தி.மு.க.வில் குழப்பம் நீடிக்கிறது. இந்த இரண்டையும் தாண்டி, நான் கட்சியை பலப்படுத்துவேன் என யாத்திரை துவங்கி விட்டார் எடப்பாடி. அவரை ஆதரிக்க மனமில்லாமல் தனது தமிழக வருகையை கேன்சல் செய்துவிட்டார் அமித்ஷா. 

கூட்டணியாக ஓடிக்கொண்டிருப்பது, பா.ஜ.க. தனக்கு சரியாக வராவிட்டால் கடைசிக் கட்டத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது என அ.தி.மு.க. முடிவெடுத்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. கவனமாக உள்ளது. அதற்காக விஜய்யை மிரட்டி, எப்படியாவது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்குள் அவரை இழுத்து வருவது என பா.ஜ.க. காய் நகர்த்திக் கொண்டி ருக்கிறது. கூட்டணியில் அ.தி.மு.க.வை சிறுமைப்படுத்த பா.ஜ.க. இந்த நகர்வுகளை திட்டமிட்டுள்ளது. அதையும் தாண்டி பா.ஜ.க. கூட்டணியை விட்டு அ.தி.மு.க. வெளியேறு மானால் வேலுமணி மூலம் கட்சியை உடைப்பது என பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது. இப்படியாக அ.தி.மு.க.வுக்கு ஸ்கெட்ச் போட்டபடியே அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி பயணிக்கிறது என்கிறார்கள் விசயமறிந்த வட்டாரத்தினர்.