"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் களம் திகுதிகுன்னு இருக்கு. இந்த நிலையில் சட்டமன்றம் வேற கூடுது.''”

Advertisment

"ஆமாம்பா, ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு குறிக்கோளோட, சட்டமன்றம் கூடுவதை எதிர்பார்க்குதே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்டமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுகிற நிலையில், இந்தக் கூட்டத்தில் கரூர் விவகாரம் அதிகம் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.  அதை எதிர்கொள்ள ஆளும்தரப்பும் தயாராகவே இருக்கிறதாம். இந்த சட்டமன்றக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்கள் பற்றிய நிதி கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, பேரவையின் ஒப்புதலும் பெறப்பட இருக்கிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, ஒருசில மாவட்ட ஆட்சியர் உட்பட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சர்கள் சிலர் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருக்கிறார்களாம். அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்த அவர், அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகிவிட்டார் என்கிறார்கள். எனவே  விரைவில் அதிகாரிகள் மாற்றம் நடக்க இருக்கிறது என்கிறது கோட்டைத் தரப்பு.''” 

"தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடம் சீட் தொடர்பான அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்களே?''”

Advertisment

"தி.மு.க. கூட்டணி விரிவடையும் என்றும் அதில் தே.மு.தி.க.வும் பா.ம.க.வின் ஒரு பகுதியும் இணையும் என்றும், சீட் நெருக்கடியையும் நாங்கள் எங்களுக்குள் அட்ஜஸ் செய்துகொள்வோம் என்றும் தி.மு.க. சீனியரான டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லியிருப்பது, அந்தக் கூட்டணியிலேயே விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தி.மு.க., சீட் விசயத்தில் கூட்டணிக் கட்சிகளிடம் கறாரைக் காட்டிவரும் நிலையில், இப்படி புதிய கட்சிகளை இணைத்துக் கொண்டால் மேலும் தங்களுக்கு சீட் நெருக்கடி வருமோ? என்கிற அச்சம் அவர்கள் மத்தியில் பரவியிருக் கிறதாம். இப்போதே கூட் டணி வலுவாகத்தான் இருக்கிறது. இதில் புதிய கட்சிகள் நமக்குத் தேவை யில்லை என்கிற குரலும் அவர்கள் மத்தியில் இதனால் எழத் தொடங்கியிருக்கிறது.''”

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் ஐ.நா.சபை வரை போயிருக்கிறதே?''”

rang

"ஆமாங்க தலைவரே, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சில மாதங்களுக்கு முன்பு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மாஸ்டர் பிரைனாக இருந்தவர் நாகேந்திரன். இந்த விவகாரத்திலும் கைதானார். இந்த சூழலில் கடந்த 9 ஆம் தேதி உடல்நலக் குறைவால் அவர் மரணமடைந்தார். அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கு 12ஆம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து,  ஏராளமான போலீசார் பாதுகாப்பிற் காகக் குவிக்கப்பட்டனர். ஒரு கொலைக்குற்றவாளி யின் உடல் அடக்கத்துக்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பா? என்கிற குரல்கள், பல தரப்பிலும் எதிரொலித்தது. இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை பற்றி ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப் பட்டிருக்கிறது. அப்போது, இந்தப் படுகொலை விவகாரத்தில் பொறுப்பில் இருப்பவர்களும், தோழமையாக இருப்பவர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக குரல் கொடுத்திருக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.''

"பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக எடப்பாடி நீதிமன்றத்தை நாடவிருக்கிறார் என்கிறார்களே?''”

"கரூர் சம்பவத்திற்குப் பிறகு பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது குறித்து தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒருவித குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. எடப்பாடி, இப்போது, தனது பிரச்சாரப் பயணங்களை எல்லாம் கேன்சல் செய்திருக்கிறார். காவல்துறை தரப்பில் அவருக்கு அனுமதி அளிக்கப் படவில்லையாம். காவல்துறையோ, மைதானங்களில் கூட்டங்களை நடத்துமாறு கூறுகிறதாம். ஆனால், அப்படி செய்தால் அதிக கூட்டம் வராது என்று எடப்பாடி கருதுகிறாராம். அதனால் ரோட் ஷோ பாணியிலேயே தன் பிரச்சாரத்தை நடத்த விரும்பும் எடப்பாடி, இதற்காக சிறப்பு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாட விரும்புகிறார் என்று அவர் தரப்பினர் கூறுகின்றனர்.''”

"பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கிய பா.ஜ.க. நயினாரும் திணறுகிறார்  போலிருக் கிறதே?''”

"மதுரையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் பிரச்சாரத்தை ஆரம்பித்த நிகழ்ச்சிக்கு, அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக வெறும் ஆயிரம்பேர் அளவிற்கே கூட்டம் கூடியதாம். இதில் அவர் அதிர்ந்துபோயிருக்கிறார். அதேபோல், அவர் இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு அழைத்த பா.ஜ.க.வின் டெல்லி தலைவர்களான ஜே.பி.நட்டா உட்பட எவரும் வரவில் லையாம். இந்த நிலை யில், நயினார் நிகழ்ச்சி யின்போது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூக்களைத் தூவ ஏற்பாடு செய்திருந்த அவர் மகன் பாலாஜி நயினாரை, கடைசி நேரத்தில் ‘"இந்த நிகழ்ச்சிக்கு இதுதான் குறைச்சல்'’என்றபடி தடுத்துவிட்டாராம் நயினார். இதற்கிடையே மாஜி பா.ஜ.க.வின் மாநில தலைவர், தன் செல்வாக்கை மீண்டும் காட்ட டெல்லியின் ஒத்துழைப்பை தன் அரசியல் குருவான பி.எல்.சந்தோஷ் மூலம் முயன்றாராம். ஆனால் பீகார் தேர்தலில் பிசியாக இருக்கும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதில் கவனம் செலுத்தவில்லையாம். இதற்கிடையே தனது கூட்டத்திற்கு அதிக மக்கள் திரளாததாலும், எப்படி கூட்டத்தைக் கூட்டுவது என்கிற குழப்பம் இருப்பதாலும் தனது பிரச்சாரத்தை நயினார் ரத்துசெய்யவிருப்பதாகவும் ஒரு தகவல் அவர்பக்கமிருந்தே வருகிறது.''” 

"பா.ஜ.க.  நயினாரை, ’நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் சந்திச்சிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அதிரடிப் பேச்சாளரான காளியம் மாள், விஜய்யின் த.வெ.க.விலோ, தி.மு.க.விலோ ஐக்கியமாகிவிடலாம்னு ஆழம் பார்த்திருக்கார். ஆனால் அங்கெல்லாம் பாஸிட்டிவ்வான பதில் அவருக்குக் கிடைக்கலையாம். அதையடுத்து பா.ஜ.க. பக்கம் தன் பார்வையைத் திருப்பிய காளியம்மாள், அதன் மாநிலத் தலைவர் நயினாரை நெல்லை ஓட்டல் ஒன்றில் சந்திச்சிருக்கார். அப்ப அவரிடம், பா.ஜ.க.வில் இணையும் தன் விருப்பத் தை அவர்  சொல்ல, நயினாரோ "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, விரைவில் நல்ல பதிலா சொல்றோம்'னு  சொல்லி, அவரை அனுப்பியிருக்கிறார். அதிரடிப் பேச்சாளர் என்பதாலும் இவர் சீமானின் வளர்ப்பு என்பதாலும், இவரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள நயினார் தயங்குகிறாராம். இந்த சந்திப்பு முடிந்ததும் அங்குள்ள நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்ற காளியம்மாள், "சீக்கிரம் அரசியலில் ஒரு வழிய காட்டப்பா'ன்னு   நெல்லையப்பரிடம் கோரிக்கை மனுவைப் போட்டுவிட்டுப் புறப்பட்டிருக்கிறார்.''”

"காங்கிரஸில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிரான புகார் குரல்கள் எழுந்திருக்கிறதே?''”

"தமிழகத்தில் வாக்குத் திருட்டை கண்காணிக்குமாறு தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் மேலிடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்தப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக காங்கிரஸைச் சேர்ந்த விஜயன், ஜோதி, ராஜேந்திரன், குமார், அசோகன் ஆகிய ஐவர் கொண்ட குழுவை சமீபத்தில் செல்வப்பெருந்தகை நியமித் தார். இது கதர்ச்சட்டைகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து புகார் சொல்லும் அவர்கள், ‘"இந்தக் கமிட்டியில் நியமிக் கப்பட்டிருக்கும் குமாரும் அசோகனும்  கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் செல்வப்பெருந்தகையால் மாற்றுக் கட்சியிலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இப்போது கட்சிக்கு வந்தவர்களை அவர் கமிட்டியில் போட்டதற்குக் காரணம், தன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகத்தான். அவர்களை எதிர்ப்பதால் நாங்கள் சமூக ரீதியாக எதிர்க்கிறோம் என்று கருதக்கூடாது. அதே சமூகத்தைச் சேர்ந்த சீனியர்களை சேர்த்திருந்தால் நாங்கள் அமைதியாக இருந்திருப்போம். கட்சிக்காக உழைப்பவர் களையும், சீனியர்களையும் மட்டம்தட்டும் விதத்திலேயே செல்வத்தின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இவரது ஆதரவாளரான குமார் என்பவர், தேர்தலுக்கு சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி வசூல்வேட்டை நடத்துகிறார். இதையெல்லாம் நாங்கள் வேடிக்கை பார்க்கவேண்டுமா?'’என்று ஆவேசமாகக் கேட்பதோடு, டெல்லிக்கும் புகார் அனுப்பிவருகிறார்கள்.''”

"தனியார் பேருந்துகள், தீபாவளிச்சாக்கில் கட்டணக் கொள்ளையில் இறங்கிடுச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, தீபாவளி  நெருங்குவதை சாக்காக்கி, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் விடப்படுகிற பேருந்துகளின் கட்டணத்தை இஷ்டத்துக்கும் வைத்து வசூலிக்கிறார்கள். வழக்கமாக 600 ரூபாய்க்கு செல்லும் தூரங்களுக்கு 3,000 ரூபாய் வரை டிக்கெட் விலையை உயர்த்துகின்றனர். இப்படி ஒரு பக்கம் கொள்ளையும் சுரண்டலும் நடக்கும் நிலையில் அரசுத் தரப்போ, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் இதுபற்றியெல்லாம் தனியார் பேருந்துகள் கவலைப் படவில்லை. ’இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனியார் பேருந்துகளின் முன்பதிவை அரசு போக்குவரத்துக் கழகமே எடுத்து நடத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இவரது கோரிக்கைக்கு பொதுமக்களிடம் ஏக வரவேற்பு கிடைத்துவருகிறது.’''

"த.வெ.க. பிரமுகர் ஒருவர், நீதிபதியை சமூக வலைத்தளத்தில் அவதூறாக விமர்சித்த விவகாரம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கே?''”

rang2

"விஜய்யின் த.வெ.க. கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.எம். நிர்மல் குமார், சமூக வலைத்தளங்களில்  நீதிபதி குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார். அவருடைய பதிவுகளைப் பார்த்து டென்ஷனான தி.மு.க. ஐ.டி. விங்கில் பணியாற்றிவரும் குரும்பப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்  என்பவர்   சாணார்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார், நிர்மல்குமாரை தொலை பேசியில்  தொடர்பு கொண்டு, உங்கள் மீது புகார் ஒன்று வந்திருக்கிறது. அதை விசாரிக்கவேண்டும் என்று அழைத்து, அவரை ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டார்கள். இதைப் பார்த்த த.வெ.க. தரப் பினர், முகநூலில் தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர் கள் தமிழ் மாதவன், சிவக்குமார், நோயல் வினித் ராஜ், ஜாபர் அலி  ஆகியோர், எங்கள் நிர்மல் குமாரையும், அவர்களது குடும்பத்தாரையும் அவதூறாக திட்டியிருக்கிறார்கள். எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று புகார் கொடுத்தனர். இருதரப்பும் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால், அங்கே பரபரப்பு எகிறியது. த.வெ.க. தரப்பு அங்கு கூடுவதற்கு, பக்கத்து ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. மாஜி மந்திரி நத்தம் விசுவநாதன்தான் காரணமாக இருக்கிறார் என்று கூறுகிறது காவல்துறை தரப்பு.''”

"பொதுமக்களின் ஆதங்கங்களோடு, தமிழக கிராமசபைக் கூட்டங்கள் நடந்திருக்கே?''”

"தமிழகம் முழுவதும் சமீபத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடந்தன. இது அரசு நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதுடன், மக்களின் குறைகளைக் கேட்டு அங்கேயே தீர்வு காண்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கித்தரும் கூட்டமாகும். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல் செய்தால், அதை இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்ட முடியும். இந்த கிராமசபைக் கூட்டங்களில், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மாவட்ட ஆட்சியர்களும் அவர்களின் கீழுள்ள அதிகாரிகளும் கவனம் செலுத்தவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், பெரும்பாலான கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள், மக்களின் குறைகளைக் காது கொடுத்துக்கூட கேட்பதில்லை என, குற்றச்சாட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கலந்துகொண்டார். ஒரு சிலரிடம் மட்டும் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, பலரிடம் கோரிக்கை மனுக்களை வாங்காமல் அவர் சென்றிருக்கிறார்.  அப்படிப்பட்ட மனுக்களில், சாலியமங்கலம் பகுதியில் பாம்புத் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துவருவதாக, மக்கள் தயாரித்த மனுவும் அடங்கும். இதனால் அப்பகுதி மக்கள் கலெக்டர் மீது எரிச்சலடைந்திருக்கிறார்கள். கலெக்டர் போனதும், பி.டி.ஓ.விடம் அந்த மனுக்களை எல்லாம் கொடுத்துவிட்டு அவர்கள் ஆவேசமாக வெளியேறினார்களாம்.''” 

"விஜய் கரூருக்கு செல்ல நாள் குறித்துவிட்டாராமே?''”

rang1

"கடந்த மாத இறுதியில் கரூரில் நடந்த மிகப்பெரிய அசம்பாவிதத்திற்குப் பிறகு, எதையும் கண்டுகொள்ளாமல் பனையூர் வீட்டுக்குள் புகுந்து, சைலன்ட் மோடுக்குச் சென்ற நடிகர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கூட, நிவாரணத்  தொகையைக் காலம் தாழ்த்தியே அறிவித்தார். பிறகு, கரூர் சென்றாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதால், எந்த அரசியல் தலைவரும் இதுவரை கேட்காத வகையில், ஏகப்பட்ட டிமாண்டுகளுடன் தனக்குப் பாதுகாப்பு தரும்படி டி.ஜி.பி.யிடம் அவர் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஒரு வழியாக வரும்  17ஆம் தேதி தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக, அங்கே ரெட்டிபாளையத்தில் இருக்கும் எக்ஸ் எம்.எல்.ஏ. வடிவேலுக்குச் சொந்தமான கே.ஆர்.வி. மெரிடியன் என்ற ஓட்டலையும், தாந்தோணி மலை பகுதியில் உள்ள எஸ்.கே.பி. மஹால் என்ற திருமண மண்டபத்தையும் லோக்கல் த.வெ.க. நிர்வாகிகள் பார்வையிட்டுள்ள னர். இந்த இரண்டு இடங்களில்  ஒன்றை த.வெ.க.வின் மேல்மட்ட நிர்வாகிகள் டிக் அடித்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களை அங்கு நேரில் வரவழைத்து, மிகவும் பாதுகாப்பாக இருந்துகொண்டு, அவர் களுக்கு நிவாரணத்தொகை வழங்கவிருக் கிறாராம் விஜய்.''”

"ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதி தனியார் சர்க்கரை ஆலை விவகாரம் திருச்சி காவல்துறை போலீசார் வாயில அவலா மெல்லப்படுதே?''”

"ஆமாங்க தலைவரே, இந்தப் பகுதியில 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல் பட்டுவந்த தனியார் சர்க்கரை ஆலை நட்டத்தைச் சந்தித்ததால், முருகனின் கையிலிருக்கும் ஆயுதத்தை தனது பெயராகக்கொண்ட பொறுப்புள்ளவரின் மகன் தனது மை நிறுவனத்தின் மூலம் அந்த சர்க்கரை ஆலையின் நிலத்தை மட்டும் ஏலத்தில் எடுத்தார். அதிலுள்ள இரும்பு மற்றும் இயந்திரப் பொருட்களை ஆந்திராவைச் சேர்ந்த ஐமேக்ஸ் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. ஆந்திர நிறுவனம் இயந்திரப் பொருட்களை அங்கிருந்து எடுத்தால் மட்டுமே, ஆலை நிலத்தை சுத்தப்படுத்தி அதை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால், ஆந்திர நிறுவனமோ ஆலையில் இயந்திரங்களையும், கழிவுகளையும் அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு காலம்தாழ்த்தி வந்தது. சட்டசபைத் தேர்தலும் நெருங்கி வர்றதால, சட்டச் சிக்கலில்லாமல் பிரச்சினையை முடிக்க நினைத்த மகன், இயந்திரங்களையும், ஸ்கிராப்களையும் ஆந்திர நிறுவனத்திற்குத் தெரியாமல் அகற்றி, கரூரிலுள்ள தனக்கு வேண்டிய ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆந்திர நிறுவனம், தங்களுக்கு உரிமையான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்          புள்ள இரும்புப் பொருட்களை மை நிறுவனம் அபகரித்துவிட்டதாக சம்பந்தப்பட்ட ஆலையின் எல்லைக்குட்பட்ட ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தது. குஷியான ஜீயபுரம் காக்கிகள் விவகாரத்தை எஸ்.பி.யின் கவனத்திற்கு கொண்டுசெல்ல, ‘"கவலைப்படாதீங்க. கமுக்கமா முடிச்சிடலாம்' என உத்தரவாதமளித்த அந்த உயர்மட்ட அதிகாரிகள், ஆந்திர நிறுவனத் திடமிருந்து 80 ஸ்வீட் பாக்ஸ்களை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டு, ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி. என பலரும் பங்கு பிரிச்சுக்கிட்டதா பரபரப்பாகப் பேசிவருகின்றனர் திருச்சி மாவட்ட காவல்துறையினர்.''” 

"புதிய டி.ஜி.பி. விவகாரத்தில் ஏதேதோ செய்தியெல்லாம் பரவுகிறதேப்பா?''”

"தமிழக புதிய டி.ஜி.பி. நியமன விவகாரத்தில், தன்னை டி.ஜி.பி.யாக நியமிக்கக் கோரி காவல்துறை அதிகாரி சீமா அகர்வால் வழக்கு தொடர விருப்பதாக ஒரு தகவல் பரவிவருகிறது. இது குறித்து நாம் விசாரித்தபோது, சீமாவின் மகள் அமெரிக்காவில் படிக்கிறாராம். அவருக்குத் தமிழகத்தில் திருமணத்தை செய்து வைக்கவேண்டும் என்றும், மிச்சமிருக்கும் பதவி நாட்களை சிக்கலில்லாமல் கழிக்கவேண்டும் என்றும் சீமா கருதுகிறாராம். அதனால் அவர் பதவி குறித்து வழக்குப்போடும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள். அதேசமயம், மற்றொரு அதிகாரியான சந்தீப்ராய் ரத்தோர், டி.ஜி.பி. ஆவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இப்போது பொறுப்பு டி.ஜி.பி.யாக இருக்கும் வெங்கட்ராமனையே டி.ஜி.பி.யாகத் தொடரவைப்பதே அரசின் விருப்பம் என்றும் சொல்கிறார்கள்.''”

rang3

"வர்ற 2026 ராஜ்யசபா தேர்தல்ல அ.தி.மு.க.வோட மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல்ல சரவணப்பெருமாள் நிச்சயம்னு பேச்சு அடிபடுதே?''”

"ஆமாங்க தலைவரே, 2013-ல அம்மா இருக்கும் போதே மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பெயர்கள்ல இவரோட பெயர் அடிபட்டுது. அப்புறம் 2025-ல அ.தி.மு.க. சார்புல மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல்ல எடப்பாடி இவர் பெயரை அறிவிப்பார்னு எதிர்பார்ப்பு நிலவுச்சு. அப்ப இவருக்கு ராஜேந்திரபாலாஜி ஆதரவும் வலுவா இருந்துச்சு. ஆனா கடைசி நேரத்துல இன்பதுரை பெயர் அறிவிக்கப்பட்டு அந்த வாய்ப்பு நழுவுச்சு. பல கட்சிகளிலிருந்து அழைப்பு வந்தபோதும், தாய் கழகத்தில்தான் நீடிப்பேன் என அந்த வாய்ப்புகளையெல்லாம் மறுத்து வந்தவர். கட்சியில் நீண்டகாலப் பங்களிப்புக்காகவும் அவரது வ.உ.சி. ரத்ததான கழகத்தின் பங்களிப்புக்காகவும் கவனிக்கப்பட்டு வரும் சரவணப்பெருமாளின் பெயர் 2026-ல மாநிலங்களவைத் தேர்தலின்போது நிச்சயம் இடம்பெறும்னு அ.தி.மு.க.வுக்குள்ளேயே வலுவான பேச்சு அடிபடுது.''’

’"நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன். நமது கடந்த நக்கீரன் இதழில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், தொலையுணர்வுத் துறையின் இணைப் பேராசிரியர் ரமேஷ் மீதும், பொருளாதார துறையின் பேராசிரியர் எஸ்.கணேசன் மீதும் மாணவிகள் கொடுத்த சில்மிஷப் புகாரின் அடிப்படையில், அங்குள்ள விசாகா கமிட்டி, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியது. அவர்கள் கொடுத்த புகார் மனுவினையும் பெற்றுக் கொண்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிரடியாக சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் இருவருக்கும் கட்டாய ஓய்வைக் கொடுத்து,  அவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்தே துரத்தியிருக்கிறதாம் பல்கலைக்கழகம். நக்கீரன் எடுத்த முயற்சியால் தான் வில்லன்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்று உற்சாகமாகச் சொல்கிறது பாதிக்கப் பட்டவர்கள் தரப்பு. கடந்த இதழில் எஸ்.கணே சன் என்பதற்குப் பதிலாக எல்.கணேசன் என்று தவறாக பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.''”

_______________
இறுதிச்சுற்று!

அக்.14 சட்டமன்றம்!

rangbox

தமிழக சட்டமன்றத் தின் குளிர்காலக் கூட்டத் தொடர் 14-ந் தேதி செவ் வாய்க்கிழமை கூடுகிறது. இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதைத் தீர்மானிக்க,  சட்டமன்றத்தின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை திங்கள்கிழமை (13-ந் தேதி)  நடத்தினார் சபாநாயகர் அப்பாவு.  கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில், "இந்த கூட்டத் தொடரை 4 நாட்கள் நடத்துவது என முடிவு செய்திருப்பதாக' அப்பாவு தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தின் முதல்நாளில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கும் இரங்கல் வாசிக்கப்படும் எனவும் தெரிவித்தார் அப்பாவு. இதற்கிடையே, கரூர் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் சம்பவத்தை சட்டமன்றத்தில் அரசியலாக்க அ.தி.மு.க. -பா.ஜ.க.வினர்  திட்ட மிட்டிருப்பதாகத் தெரிகிறது.    

   -இளையர்