பா.ஜ.க. நாகை மாவட்டத் தலைவருக்குச் சொந்தமான கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவியை வீட்டுக்கு அழைக்கும் அத்துமீறல் ஆடியோ வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது.
நாகையை அடுத்துள்ள புத்தூர் கடைவீதியில் பா.ஜ. கட்சியின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்குச் சொந்தமான கார்த்திகேயா நர்சிங் கல்லூரி இயங்கிவருகிறது. கல்லூரியை கார்த்திகேயனின் மனைவி திருமலா ராணிதான் நிர்வகித்துவரு கிறார். இவருக்கு நாகை மாவட்டத்திலுள்ள முக்கிய அதிகாரிகள், வி.ஐ.பி.களோடு நெருக்கம் அதிகம். இந்த நர்சிங் கல்லூரியில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து படிக்கும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி இருக்கிறது.
இங்கு உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவந்த வெளிப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ், மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சக மாணவிகள் கார்த்திகேயனின் மனைவி திருமலாராணியிடம் பலமுறை கூறியுள்ளனர். அவரோ "இதெல்லாம் இந்த காலத்துல சகஜம், ஜாலியா எடுத்துக்கிட்டு என்ஜாய் பண்ணுங்க'' என கூறிவிட்டுச் சென்றுவிடுவாராம். இதனை சாதகமாக்கிக்கொண்ட ஆசிரியர் சதீஷ் பல மாணவிகளிடம் சில்மிஷ வேலையைக் காட்டியிருக்கிறார்.
இந்தச் சூழலில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவி ஒருவரிடம், "உன் மீது புகார் வந்திருக்கு விசாரிக்கணும், ஹாஸ்டல்ல விசாரிக்க முடியாது... உடனே வீட்டுக்குக் கிளம்பி வா''’என அழைத்திருக்கிறார் சதீஷ். அதிர்ச்சியடைந்த மாணவி, "நான் காலேஜுக்கு வரேன், வீட்டுக்கெல்லாம் வரமாட்டேன் சார்''’என பயத்துடன் நடுங்கியபடியே கூறியிருக்கிறார். மது போதையும், காமவெறியும் தலைக்கேறிய நிலையில் பேசிய சதீஷ் விடாப்பிடியாக, "உடனே கிளம்பி வர்ற...''’எனக் கூற, எப்படியாவது இந்த காமப்பிசாசிடமிருந்து தப்பிக்க எண்ணிய மாணவியோ, "எனக்கு மாதவிடாய் சார். ரத்தப்போக்கு அதிகமா இருக்கு'’ எனக்கூறி சமாளிக்கமுயன்றிருக்கிறார். புரிந்துகொள்ளாத சதீஷ், "வலி மாத்திரை போட்டுட்டல்ல, பரவாயில்லை நான் பார்த்துக் கிறேன் வா?''’என அழைத்திருக்கிறார். இந்த சம்பவத்தில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி நடந்த சம்பவங்களை தனது தோழிகளிடம் கூறி அழுததோடு, வேறு வழியின்றி பெற்றோர்களிட மும் கூறி அழுதுள்ளார்.
ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் நாகை மாலியிடம் முறையிட்டிருக்கின்றனர். அந்த ஆடியோக்களைக் கேட்டு ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., நாகை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
இதற்கிடையில் நர்சிங் கல்லூரி மாணவிகள் ஒன்று கூடி கல்லூரியின் வளாகத் திற்குள்ளேயே டிசம்பர் 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதுவரை பிரச்சனை யின் வீரியம் புரியாமலிருந்த கார்த்திகேயன், அவசர அவ சரமாக வந்து போராட்டத் திலிருந்த கல்லூரி மாணவி களிடம் சமரசத்தில் ஈடுபட் டார். இதையும் ரகசியமாக படம்பிடித்த மாணவிகள் அந்தக் காட்சியையும் வெளியிட்டனர்.
கலெக்டர் உத்தரவுப் படி சமூக நலத்துறை அதிகாரி தமிமுன் ஷா தலை மையிலான அதிகாரிகள் கல்லூரிக்குச் சென்று பாதிக் கப்பட்ட மாணவி உள் ளிட்ட 23 மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்ட னர். மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தைக் கொண்டு நாகை டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சதீஷை கைது செய்துள்ளனர்.
என்ன நடந்தது என மாணவிகள் சிலரிடம் ரகசியமாகப் பேசினோம். "உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கொடுக்கிறேன்கிற பெயரில் கண்ட இடங்களில் தொடுவார். பலமுறை மேடத்திடம் கூறியிருக் கிறோம். அவரோ அலட்சியமாகக் கடந்துவிடுவார். இது மாணவிகள் படிக்கும் கல்லூரியாக இருந்தாலும் பெரும்பாலும் ஆண்களைத்தான் வேலைக்கு வச்சிருக்காங்க. தற்போது பிரச்சினையில் இருக்கிற மாணவி பாய்பிரண்ட்டோடு இருக்கும் வீடியோவை வைத்துக்கொண்டு உடற் பயிற்சி ஆசிரியர் மிரட்டி வீட்டுக்கு அழைத்திருக்கிறார். மாணவிகளை ரகசியமாகப் படம்பிடித்து அதைக் காட்டியே பிளாக்மெயில் பண்ணு வது அவர் வழக்கம். அவர் முன்பு வேலைபார்த்த இடங்களிலும் இது போல பெண்கள் விஷயத்தில் விரட்டி விட்டிருக்காங்க. சதீஷ் சாரோட மனைவி அவரோட நடவடிக்கை பிடிக்காம தனியா இருக்காங்க. கல்லூரியில் நிறைய தவறு நடக்குது சார். எங்களால வெளியே சொல்ல முடியல''” என்கிறார்கள். கல்லூரியைப் பற்றி நன்கு தெரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர், “"15 வருடத்திற்கு முன்னாடியே இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் வந்துச்சு. அன்று முதல் இன்றுவரை அந்த கல்லூரியில் தொடர்ந்து ஏதாவது ஒரு தவறு நடந்துகொண்டுதான் இருக்கிறது''’என்கிறார் ஆதங்கமாக. மாவட்ட ஆட்சியர் தம்புராஜு, "தகவல் கிடைத்த அடுத்தநொடியே விசாரணைக்கு சமூக நலத்துறை அதிகாரிகளை அனுப்பினோம் அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி ஆசிரியர் சதீஷை கைது செய்துள்ளோம்''’என்கிறார்.
கல்லூரி நிர்வாகி திருமலாராணியிடம் கேட்டோம், "அதெல்லாம் ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்ல. பேசி முடிச்சிட்டோம்... எல்லாம் சரியாயிடுச்சி''’என்கிறார் சர்வசாதாரணமாக.
_______________
இறுதிச்சுற்று
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்!
தி.மு.க. இலக்கிய அணியின் ஆலோசனைக் கூட்டம், அணியின் செயலாளர் வி.பி.கலைராஜன் தலைமையில் கடந்த 14-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பாகக் கூடியது. அதில், புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து சுடச்சுடத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, "முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிதாக ஒரு பல்கலைக் கழகத்தைத் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றும், இல்லையெனில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கோ அல்லது பழமை வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கோ அவரது பெயரைச் சூட்டவேண்டும்' என்றும் சிறப்புத் தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.