தி.மு.க. அரசுக்கு ஒரு நீண்ட ஆன்மிக அறிவுரையை சசிகலா வழங்கியிருக்கிறார். கோவில் களில் கடைப்பிடிக்கப்படும் ஆன்மிக நடவடிக்கைகளை தி.மு.க. அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதில் தலையிட்டு அதை மாற்றக்கூடாது என்பது தான் சசியின் அட்வைஸ்.

"ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமியைப் பாதம் தூக்கிகள் எனப்படும் பிராமணர் கள்தான் தூக்கிவருவார்கள். ராமநாதபுரம் கோவிலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமணர்கள்தான் பூஜை செய்கிறார்கள். திருவொற்றியூர் வடிவுடை அம்மனுக்கு பூஜை செய்வது கேரளத்து நம்பூதிரிகள். திருநாகேசுவரம் கோவிலில் ஆடுபாம்பே என்கிற பாட்டைத்தான் வாசிப்பார்கள். திருப்பதி வெங்சடாசலபதிக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் மண் சட்டியில்தான் நைவேத்தியம் எனப்படும் உணவு வழங்கப்படும். சுவாமிகளது ஆடைகளை துவைப்பதற்கென்றே தனி ஆட்கள் உண்டு. இவையெல்லாம் வழி வழியாக நடக்கும் சங்கதிகள். சுதந்திரம் வாங்கியதிலிருந்து யாரும் இதில் தலையிட்டதில்லை. தி.மு.க. அரசும் இதில் தலையிடக்கூடாது'' என அட்வைஸ் செய்திருக்கிறார்.

sasi

Advertisment

சசிகலாவின் இந்தப் பேச்சு, "அவர் அ.தி.மு.க.வில் நுழைய பா.ஜ.க.வின் ஆதரவு தேவை. சசிகலாவின் மொழிகளில் குரு மூர்த்தி பேசியிருக்கிறார்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இது கிட்டத்தட்ட சாத்தான் வேதம் ஓதும் கதை. மகாமக குளத்தில் ஜெ.வும் சசியும் ஒருவருக்கொருவர் தண்ணீர் ஊற்றிக் குளித்தபோது, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தார்கள். அது எந்த வழி வழியாக வந்த சம்பிரதாயத்தின் அடிப்படையில் நடந்தது?

பழனி கோவிலின் மூலவராக இருந்த நவபாஷாண முருகர், வாஸ்து பிரகாரம் ஜெ.வின் ஆட்சிக்கு சரியில்லை என வேறொரு மூலவரை தயார் செய்து பிரதிஷ்டை செய்ய... ஜெ. ஆட்சிக்காலத்தில் சசிகலா அவருடன் இருக்கும்போது நடந்த முயற்சிகள் எந்தப் பாரம்பரிய விதிகளின்படி நடந்தது. ஸ்ரீரங்கத்தில் ஜெ. போட்டியிடுவதற்காக அந்த கோவிலில் நடந்த பல சடங்குகள், ஜெ. ஆட்சிக் காலத்தில் மீறப்பட்டன.

இவையெல்லாம் கோவில் விஷயத்தில் அரசு தலையிட்ட நிகழ்வு இல்லையா? என சசிகலாவின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு அ.தி.மு.க. வட்டாரங்களிலும் பகுத்தறிவாளர்கள் வட்டாரங்களிலும் எதிரொலிக்கிறது.

Advertisment

சசிகலா நீண்ட ஆன்மிக உரை நிகழ்த்தக் காரணம், தர்மபுர ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் நடத்த தீர்மானித்ததை எதிர்த்து நடந்த விவாதத்தின் விளைவாக நடந்தது.

"ஆதீனம் போன்ற சாமியார்கள் மட்டுமல்ல... யாரையும் நாங்கள் பல்லக்கில் தூக்கிக்கொண்டு கோவில் பிரகாரத்தில் வலம் வரமாட்டோம்'' என அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் கோவில் டிரஸ்ட்டுகளின் போர்டு நிர்வாகிகள் 27-09-2010 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதேபோல் 23-10-2010 அன்று தமிழ்நாடு கோவில் ஊழியர்கள் சங்கம், "தமிழக கோவில்களில் பல்லக்கில் நல்ல திடகாத்திரமான யாரையும் தூக்கிச் சுமக்கமாட்டோம்' என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து வேதவிலாசா ஆர்.லட்சுமி நரசிம்மா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை கமிஷனரை பார்ட்டியாக சேர்த்து வழக்கு போட்டார். அதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்து மதத்தில் பல பழக்கங்கள் இருந்திருக்கிறது. சதி என்ற பெயரில் உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை என்ற பெயரில் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கா தது, ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகராக பூஜை செய்யவேண்டும் என்பது போன்ற பல பழக்கங் கள் இருந்தன. அவற்றையெல்லாம் உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் மாற்றி அமைத்துள்ளன. அவை எதிலும் இவையெல்லாம் இந்து சமய பழக்கம் என்கிற வாதத்தை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை.

sss

தி.மு.க. தலைவர் கலைஞரும், கேரள பினராயி விஜயனும் நடைமுறைப்படுத்திய அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை கேள்வி கேட்டு பல வழக்குகள் தொடரப்பட்டன. அவை ஒன்றில்கூட தடையாணை பிறப்பிக்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற நடைமுறையை எதிர்த்து 127 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒவ்வொரு கோயிலையும் சேர்ந்த பிராமணர்கள் தொடுத்துள்ளனர்.

"இந்த நடைமுறை இந்து மதத்தின் பழக்க வழக்கங்களுக்கு எதிரானது' என வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம் அ.தி.மு.க. தலைவி என சொல்லிக்கொள்ளும் சசிகலா, தவறு என சொல்கிறாரா?'' என கேள்வி எழுப்புகிறார் பிரபல வழக்கறிஞர் நடராஜன்.

ஒருபக்கம் சசிகலாவுக்கு எதிர்ப்பு என்றாலும், தர்மபுர ஆதீனம் பல்லக்கில் பட்டனப்பிரவேசம் செய்வேன் என சொல்வதற்கும் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. மனிதனை மனிதன் கை ரிக்ஷாவில் வைத்து இழுக்கும் பழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. அதை எதிர்த்து 1999-ஆம் ஆண்டு "இந்த நடைமுறை தவறு' என சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்கள், தர்மபுர ஆதீனம் நல்ல உடல்நிலையில் இருப்பவர். அவரை இந்து மத சடங்கு என்ற பெயரில் தூக்கிச் சுமக்கத் தேவையில்லை என இந்து அறநிலையத் துறை சட்டம் 6(3)ஈ-படி ஏகப்பட்ட புகார்க் கடிதங்கள், இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் கையெழுத்துப் பெறும் போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கிறது.