நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் வானில் ரகசிய சந்திப்புகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த வகையில் லேட்டஸ்ட்டாக வெளிச்சத்திற்கு வந்த சந்திப்பு, பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரரான பிரகலாத்பாய் மோடி, தமிழகத்தில் நடத்தியது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
பொதுவாக நரேந்திரமோடி தனது குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுவதை விரும்பமாட்டார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபொழுதும் சரி, பிரதமர் ஆனபிறகும் சரி... அவரது குடும்ப உறுப்பினர்களை ஒரு வார்டு கவுன்சிலராகக்கூட நிற்க வைக்கவில்லை. இதுதான் மோடியைப் பற்றிய அபிப்பிராயம். அதற்கு நேர்மாறாக மோடியின் சகோதரர் பிரகலாத்பாய் மோடியின் தமிழக விஜயம் அமைந்திருக்கிறது.
செப்டம்பர் 17-ஆம் தேதி நரேந்திரமோடியின் பிறந்தநாளின் போது காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் பூஜை செய்வதற்காக பிரகலாத்பாய் மோடி 16-ஆம்தேதி குடும்ப உறுப்பினர் சகிதம் சென்னைக்கு வந்தார். மோடியின் சகோதரர் என்பதைத் தவிர எந்தவித அரசியல் சாசன அந்தஸ்தும் இல்லாத பிரகலாத்பாய்க்கு தமிழக அரசு புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையை ஒதுக்கிக் கொடுத்தது. அந்தக் கட்டடத்தில் தங்கும் முதல் வி.ஐ.பி. பிரகலாத்பாய் மோடிதான்.
குடும்பத்துடன் வந்த மோடியின் சகோதரர் நேராக காஞ்சிபுரம் கோயிலுக்குச் சென்றார். திரும்பி வந்ததும் முதல்வர் எடப்பாடி, மோடியின் சகோதரரை அவரது வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார். எடப்பாடியைச் சந்தித்தபிறகு 17-ஆம் தேதி காலை நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்காக திருப்பதிக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்த பிரகலாத்தை துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., விருந்தினர் மாளிகையில் சந்தித்தார். 18-ஆம் தேதி காலை அவரை இன்னொரு அ.தி.மு.க. வி.ஐ.பி. சந்தித்தார். அவர் சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகனான ஜெய்ஆனந்த். அதன்பின்பு டெல்லிக்கு விமானம் ஏறி பறந்துபோனார் மோடியின் சகோதரர்.
இந்த சந்திப்புகளின் முக்கியத்துவம் என்னவென டெல்லியில் கேட்டபோது... ""பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. அதை சமன்படுத்த மோடியின் சகோதரரை அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்திருக்கலாம்'' என்கிறார்கள். ஆனால், அந்த சந்திப்பின்போது உடனிருந்தவர்களோ வேறு மாதிரிச் சொல்கிறார்கள். ""எடப்பாடியைச் சந்தித்த பிரகலாத் மோடி, "நீங்கள் ஏன் இப்படி மக்கள் வெறுக்கும் முதல்வராகிப் போனீர்கள்?. தமிழகம் முழுவதும் உங்கள் மீது எதிர்ப்பு அலை வீசுகிறதே, ஏன்?' என கேட்டவரிடம், ""நான் அடிப்படையில் விவசாயி. விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கவனம் செலுத்திவருகிறேன். தமிழகம் முழுவதும் மழைக்காலங்களில் ஆறுகளில் வரும் நீரை சேமிக்க செக்டேம்களை கட்டவுள்ளேன். அந்த வேலை எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். நான் தமிழன் என்பதால் எனது ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார்கள். ஒருபோதும் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்யமாட்டேன்'' என எடப்பாடி உறுதியாகச் சொன்னார் என்கிறார்கள், அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
""ஓ.பி.எஸ்.ஸும், "நான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அந்தப் பதவியை நான் விட்டுத்தரமாட்டேன். அ.தி.மு.க. கட்சியை உடையாமல் பாதுகாப்பேன்' என்றதுடன், நிர்மலா சீதாராமன் டில்லியில் சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட அவமானம் உட்பட பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவில் ஏற்பட்ட விரிசலுக்கான காரணங்கள்பற்றி விளக்கியிருக்கிறார்'' எனச் சொல்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமானவர்கள். சசிகலா குடும்ப உறுப்பினரான திவாகரன் மகன் ஜெய்ஆனந்த்திடம் மிகவும் விரிவாகப் பேசினார் பிரகலாத்பாய் மோடி. "ஏன் சசிகலா நரேந்திர மோடிக்கு எதிரியானார்' என்பதுதான் அவர் ஜெய்ஆனந்த்திடம் கேட்ட கேள்வி.
""ஜெ. மறைந்தபோது வந்த மோடி அங்கிருந்தவர்களிடம், "நான் சசிகலாவிடம் ஒருமணி நேரம் பேசவேண்டும்' எனச் சொன்னார். மோடி பேச விரும்பும் தகவலை தினகரன், சசிகலாவிடம் சொல்லவில்லை. அதேபோல் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற மோடியின் பக்கத்திலிருந்து சசிகலாவிடம் பேச விரும்பியவர்களை தினகரன் அவமானப்படுத்தினார். அதனால் மோடிக்கும் சசிகலாவுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது எனச் சொன்னார் ஜெய்ஆனந்த்'' என்கிறார்கள் சந்திப்பின்போது உடனிருந்தவர்கள்.
பிரகலாத் மோடியிடம் பேசியவர்களோ நம்மிடம்... ""பிரகலாத் மிகச் சிறந்த அறிவாளி. அவர் தமிழகத்தைப் பற்றி பல புள்ளிவிவரங்களைச் சொல்கிறார். தமிழகத்தின் சாதிவாரியான கணக்கெடுப்புகளை வைத்துக்கொண்டு இந்தச் சமூகம் பா.ஜ.க.விற்கு சாதகம், இது பாதகம் என கணக்கிடும் பிரகலாத், "எந்தச் சமூகமாக இருந்தாலும் சாதிவாரியான ஓட்டு ஒருசில இடங்களில்தான் வெற்றிபெறும். தமிழகத்தில் சாதிகள் தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளிலும் செல்வாக்காக உள்ளன' எனச் சொல்கிறார். அவரது பேச்சுகளை ஆராயும்போது தமிழகத்தில் வன்னியர் சாதி அமைப்புகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவராகக் காணப்படுகிறார். "டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. கூட்டணிக்கு வந்துவிடுவார். அவருடன் நாங்கள் பேசி முடித்துவிட்டோம்' என்றே பிரகலாத் மோடி தன்னை சந்தித்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
பிரகலாத் மோடி, சசிகலாவை அக்கறையுடன் விசாரித்ததைப் பற்றி சசிகலாவிடம் ஜெய்ஆனந்த் தரப்பு சொல்லியுள்ளது. அதைக் கேட்ட சசிகலா, "தொடர்ந்து பிரகலாத்துடன் பேசுங்கள்' என சமாதானப் படலத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்தால், தினகரனை நீக்கிவிட்டு எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா ஒன்று சேர்வார்கள். அதற்காகத்தான் சசிகலா சொத்துகளையும் பணத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை இளவரசியின் மகன் விவேக்கிடம் கொடுத்துள்ளார். சசியை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி கவிழ்வதை அவர் விரும்பமாட்டார். சசிகலாவின் வருகையை எதிர்க்கும் பா.ஜ.க.வின் நிலையை மாற்றும் சந்திப்பாக பிரகலாத் மோடியுடனான சந்திப்புகள் அமையும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
-தாமோதரன் பிரகாஷ்