ஆதம்பாவாவின் தயாரிப்பில் "ஆன்டி இண்டியன்' படத்தை இயக்கியிருக்கிறார் "ப்ளு சட்டை' மாறன். சினிமா விமர்சனம் என்ற பேரில் எல்லா சினிமாக்களையும் வெளுத்து வாங்கிய மாறன், இயக்கியிருக்கும் படம், வெளிவரக் கூடாது என போடப்பட்ட தடைகள் ஏராளம்.
படத்தை முழுமையாக முடித்து, சென்சார் போர்டில் யூ/ஏ சான்றிதழை பெற விண்ணப்பித்தார் தயாரிப்பாளர் ஆதம்பாவா. சென்னையில் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர் கள், "ஆன்டி இண்டியன் பெயர் இந்திய தேசத்துக் கும் தேசபக்திக்கும் எதிராக இருக்கிறது... அதனால் படத்தின் பெயரை மாற்றுங்கள்' என்றனர்.
ஆதம்பாவாவும் ப்ளுசட்டை மாறனும், "படத்தின் பெயர் எந்த வகையில் தேசத்துக்கு எதிராக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துங்கள்'' என கேள்வி எழுப்பியதற்கு உறுப்பினர்களிட மிருந்து பதில் இல்லை. மாறாக, படத்துக்கு அப்படி பெயர் வைக்க உங்களிடம் என்ன காரணம் இருக்கிறது? என்று உறுப்பினர்கள் மிக கோப மாக கேட்க, "அரசியலுக்காக மதத்தை பயன் படுத்துவோரையும், மதத்தை வைத்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சூழ்ச்சிகளைச் செய்வோரையும், அதற்காக மக்களையே பலிகடா ஆக்குவோர்களையும்தான் ஆன்டி இண்டியன்னு சொல்கிறோம். படத்துக்கு இதுதான் சரியான டைட்டில். தலைப்பை மாற்ற முடியாது'' என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
"படத்தின் டைட்டிலை மாற்றினால் மட்டுமே அடுத்தகட்ட விவாதத்துக்கே செல்ல முடியும்; இந்த டைட்டிலை அனுமதிக்க முடியாது' என சான்றிதழ் தர மறுத்துவிட்டது சென்சார் போர்டு. வாரியத்தின் முடிவை எதிர்த்து பெங்களூரில் இருக்கும் ரிவைசிங் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை சென்னையி லேயே நடிகை கவுதமி விசாரிப்பதாக சொல்லப் பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்து விட்டு, பெங்களூரில் இயக்குநர் நாகபரணா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் படத்தை பார்த்தனர்.
படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டியினர், "படம் நல்லாருக்கு; பிரச்சனை இல்லை. ஆனா, சில காட்சிகளை கட் பண்ணிட்டா சர்டிஃபிகேட் தந்துடுறோம் என்று காட்சிகள், வசனங்கள் என 38 இடங்களில் கட் பண்ணச் சொல்லி வலியுறுத்தி னர். இயக்குநர் மாறன், 38 இடங்களை கட்பண்ணினா அப்புறம் படத்தில் என்ன இருக்கப்போகிறது? என்று மல்லுக்கட்டியதோடு, யூ/ஏ சான்றிதழ் தரமுடியாது எனில் ஏ சான்றிதழ் கொடுங்கள் என கேட்டார். ஆனாலும் 38 இடங்களையும் கட் பண்ணினால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று பிடிவாதம் காட்டியது ரிவைசிங் கமிட்டி. அதனை ஏற்க தயாரிப்பாளரும் இயக்குநரும் மறுத்ததால் நீதிமன்றத்துக்கு சென்றது இந்த விவகாரம்.
ரிவைசிங் கமிட்டி சொன்ன 38 கட்டுகள் என்ன? சென்சார் போர்டில் என்னதான் நடந்தது? என்று சென்சார் போர்டு மற்றும் சினிமா வட்டாரங்களில் விசாரித்தபோது,’"தலைப்பின் பேக் ட்ராப்பில் இருக்கும் அசோகா சக்ராவையும் இந்திய வரைபடத்தையும் நீக்க வேண்டும்' என கொடி பிடித்தது ரிவைசிங் கமிட்டி. "மேற்கண்ட இரண்டையும் சினிமாவில் பயன்படுத்தக் கூடாதுன்னு எந்த சட்ட விதிகளும் சொல்லலை' என விளக்கமளித்திருக்கிறார் இயக்குநர் மாறன்.
அதேபோல, படத்தின் முதல் பாதியில் 274-வது ஷாட்டில் வரும், "மதம்ங்கிறது ஜட்டி மாதிரி. பிடிச்சிருந்தா போட்டுக்கலாம், இல்லைன்னா, தூக்கி வீசிடலாம்' என்கிற வசன காட்சிகளை நீக்க வலியுறுத்தினர். அதற்கு தயாரிப்பாளரும் இயக்குநரும், "காட்சிக்கு இந்த வசனம் பொருத்தமா இருக்கிறதா? திணிக்கப்பட்டி ருக்கிறதான்னு கவனிங்க. திணிக்கப்பட்டிருக் குதுன்னு நீங்க நிரூபிச்சா அதை நீக்குகிறோம்' என வாதம் செய்ய... அதை பொருட்படுத்தாத ரிவைசிங் கமிட்டி, நீக்க வேண்டும் என பிடிவாதம் காட்டியபோது, "குறிப்பிட்ட எந்த மதத்திற்கு எதிராகவும் நாங்கள் அதை சொல்லவில்லை. நீங்கள் எதற்கு மதச்சாயம் பூசுகிறீர்கள்?' என எதிர்க்கேள்வி கேட்டதுடன், அதனை நீக்க ஒப்புக் கொள்ளவில்லை.
குரங்கு பொம்மைக்கு காவி துண்டு அணிந்திருப்பது பா.ஜ. க.வை சுட்டிக்காட்டுவ தாகக் கூறி நீக்கச் சொன்னபோது, "நாங்கள் அப்படி உருவகப்படுத்த வில்லை. குரங்கு பொம்மையை நீங்க ஏன் பா.ஜ.க.ன்னு நினைக் கணும்? காவி நிறம் பா.ஜ.க.விற்குத்தான் சொந்தமா? இதற்கு முன்பு வந்த எத்தனையோ படங்களில் காவி நிறம் காட்டப்பட்டுள்ளதே?' என்று விளக்கம் தந்தனர்.
"படத்தின் முதல் பகுதியில் 147, 149, 150 மற்றும் இரண்டாம் பகுதியில் 106, 144-52 ஆகிய ஷாட்களில் "கபாலி'ன்னு ஒரு கேரக்டர் வருது. நடிகர் ரஜினிதானே அந்த கேரக்டர். அதை அனுமதிக்க முடியாது. அதேபோல, "ராஜா'ன்னு ஒரு அரசியல்வாதி வர்றார். அவர் பா.ஜ.க. ஹெச்.ராஜாதானே? அதனால் இதையும் அனுமதிக்க முடியாது. ரெண்டையுமே நீக்குங்கள்'' என்று கோபமாக பேசினார்கள்.
அதைக்கேட்டு டென்ஷனான தயாரிப்பாள ரும் இயக்குநரும். "கபாலிங்கிறது பொதுவான ஒரு பெயர் சார். நடிகர் ரஜினிகாந்த் உயர்வானவர். அவர் நடிக்கும் பல படங்களில் அவரது கேரக்டர் பெயர்தான் படத்தின் டைட்டிலாகவே இருக்கும். அதற்காக அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்றோ, அந்த பெயர் சினிமாவில் பயன் படுத்தப்படாமல் இருக்கிறது என்றோ யாரும் சொல்ல முடியாது சார். அதே மாதிரி, ராஜான்னு நிறைய அரசியல் வாதிங்க இருக்காங்க. நீங்க ஏன் ஹெச்.ராஜான்னும் எடுத்துக்கணும்?' என்று வாதிட்டனர். இதுமட்டுமல்ல, "படத்தில் பல இடங்களில் வரும் சென்னை பாஷையின் கெட்ட வார்த்தைகளை நீக்க வேண்டும், மா.மு.க. மற்றும் அ.மு.தி.க. என்ற கட்சிகளின் பெயர்களை மாற்ற வேண்டும், 162-ல் இருந்து 165 வரையிலான காட்சிகளில் முதலமைச்சர் சொல்கிற வசனங்களை நீக்கவேண்டும், ஹிந்திக்கு எதிராக டீ கடை போஸ்டரில் காட்சிப்படுத்தும் 274 முதல் 279 வரை யிலான ஷாட்டின் காட்சிகளை நீக்க வேண்டும், படத்தின் மையக் கருவாக இருக்கும் இறந்த உடலை அடக்கம் செய்ய செல்லும் கூட்டத்தின் முன்பு டான்ஸ் ஆடும் இளைஞர்களின் கூட்டத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும், ஷாட் நெம்பர் 689, 690, 693-களில் வரும் சட்டம், கோர்ட், நீதிபதி வசனங்கள், ஷாட் நெம்பர் 598-ல் வரும் நோட்டா என்ற டயலாக், க்ளைமாக்சில் வரும் வன்முறையில் பெண்களை அடிக்கும் காட்சிகள் என இவைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்பது உள்பட 38 காட்சிகளை வெட்டி எறியுங்கள்' என சொன்னது ரிவைசிங் கமிட்டி.
ஆனால், அதனை ஏற்க மறுத்து அவை அனைத்திற்கும் நியாயமான விளக்கமளிக்கப் பட்டதை கமிட்டி ஏற்கவில்லை. இந்த சமயத்தில், ட்ரிபியுனல் என்ற அமைப்பே கலைக்கப்பட்டிருந்த தால் கோர்ட்டுக்கு சென்றார் தயாரிப்பாளர்'' என்று சென்சாரில் நடந்ததை சுட்டிக்காட்டினார்கள்.
சென்சார் போர்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களின் வாதங்களை அழுத்தமாக எடுத்து வைத்தது தயாரிப்பாளர் தரப்பு. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், சென்சார் போர்டின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, ”"திரைப்படங்களின் மூலம் காட்சிப் படுத்துவது அடிப்படை உரிமை. அந்த வகையில், ஒரு படத்தின் மீது தனது தனிப்பட்ட பார்வையை கமிட்டி திணிக்க முடியாது. கபாலி என்ற பெயரை ஏன், பயன்படுத்தக்கூடாது? அந்த பெயர் ஒரு நடிகரை குறிப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது. சென்சார் சான்றிதழ் கேட்டு தொடரப்பட்ட இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் தாக்கல் செய்யவேண்டும்''’என்று சென்சார் போர்டுக்கு உத்தரவு பிறப்பித்ததுடன் சென்சார் போர்டும், ரிவைசிங் கமிட்டியும் எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ததுடன் முறையாக ஒரு கமிட்டி அமைத்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அதன்படி, "ஆன்டி இண்டியன்' படத்தைப் பார்த்த மும்பையில் உள்ள புதிய கமிட்டியிடமும் தங்களின் விளக்கத்தையும் வாதத்தையும் முன்வைத்தார் இயக்குநர் மாறன். அதிலுள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டு, "மதம்ங்கிறது ஜட்டி மாதிரி' என்ற வசனத்தை "மியூட்' பண்ணுங்கள், படத்தின் துவக்கத்தில் "எந்த மதத்தையும் சாதியையும் குறிப்பிடவில்லை' என்ற டிக்ளரேசனை பெரிதாக காட்டவேண்டும் என்ற கண்டிஷனை மட்டும் விதித்து சர்ச்சைக்குரிய அனைத்து விசயங்களையும் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் அனுமதித்து யூ/ஏ சான்றிதழை வழங்கியிருக்கிறது புதிய கமிட்டி.
இறந்துபோன ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்படும் மதப் பிரச்சினைகளை அரசியல் நெடியுடன் சர்ச்சைக்குரிய பல காட்சி களை உள்ளடக்கியிருக்கிறது ஆன்டி இண்டியன். இதற்கு தடை விதித்து படத்தை முடக்க நினைத்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் மறைமுக ஆரிய சேட்டைகளின் முயற்சிகளை முறியடித்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது படக்குழு.