"இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்டவிரோதமாக வருவாய்த்துறை, காவல்துறை அகற்றியது' எனும் சொற்களுடன், அகற்றப்பட்ட சிலை புகைப்படங்களுடன் புதிய ப்ளக்ஸ் பேனரை, அதே இடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவரால் திறந்து வைக்கப்பட அக மகிழ்ந்துள்ளனர் பெரியார் உணர்வாளர்கள்.
திருமயம் பெல் நிறுவனத்தில் பணி யாற்றிய வந்த இளங்கோவன், காரைக்குடி கோட்டையூரில் புதிய இல்லம் ஒன்றைக் கட்டி, புதுமனை புதுவிழா நாளான 29-01-2023 அன்று இல்லத்தில் நூலகம் ஒன்றையும், வீட்டின் சுற்றுச்சுவரில் மார்பளவு பெரியார் சிலை ஒன்றையும், தான் சார்ந்த திராவிடர் விடுதலை இயக்கத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்து வைப்பதாக அறிவித் திருந்தார். இந்நிலையில், கோட்டையூரில் வசிக் கும் பா.ஜ.க. இளைஞ ரணி துணைத்தலைவர் பாண்டித்துரை தன்னு டைய உறவினரான காரைக்குடி தாசில்தார் கண்ணனுக்கும் பள்ளத்தூர் காவல் ஆய்வாள ருக்கும் "இந்த ஊரில் சிலை கூடாது...' எனும் நெருக்கடியை உருவாக்க... திறப்புவிழாவுக்கு முந்தையநாளில், இளங்கோவனை அழைத்த பள்ளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின், "வீட்டின் காம்பவுண்ட் சுவரில் பெரியார் சிலை வைக்கக்கூடாது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கின்றது' எனக் கூறி சிலை திறப்பிற்கு அனுமதி மறுத்த நிலையில், "இது என்னுடைய பட்டா நிலம். சிலை திறப்பதில் என்ன தவறு..?' என வாதிட்டு வெளியேறியிருக்கின்றார்.
"சனிக்கிழமையன்று இளங்கோவன் இல்லத்திற்கு வந்த பள்ளத்தூர் ஆய்வாளர், தேவ கோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறையினருடன், காரைக்குடி தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் "தந்தை பெரியார் சிலை இங்கு வைக்கக் கூடாது' என வாதிட்டனர். "சொந்த இடத்தில் சிலை வைத்துக்கொள்ளலாம்' என சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் கிடைத்த நீதிமன்ற உத்தரவைக் காண்பித்து, சிலை வைக்க அனுமதி கேட்டோம். அனுமதி இல்லை என்கின்ற வார்த்தையைத்தான் ஆக்ரோஷமாக கூறினாரே தவிர, நாங்கள் கூறி யதை காதில் வாங்க வில்லை. அவருடைய எண்ணம் தந்தை பெரியாரின் சிலையை அங்கு வைக்கக்கூடாது என்பதே. இதற்காக அவர் கர்நாடகா அரசின் உத்தரவை இங்கு காண்பித்தார். "சார்... நம்ம அரசு தமிழ் நாடு அரசு. கர்நாடகா இல்லை' என்பதை எடுத்துக் கூறியும், அவரும் தாசில்தார் கண்ணனும் அடங்கவில்லை. இறுதியாக "சிலை இருக்கட்டும். முறைப்படி இந்த வீட்டின் பட்டாவைக் காண்பித்து புதிதாக நீதிமன்ற உத்தரவு வாங்கி வருகின்றோம். அதுவரை சிலை மூடியே இருக்கட்டும்' என எடுத்துக் கூறியும் அதிகாரிகள் சிலையை அறுத்து எடுத்து சென்றதுதான் மிச்சம்'' என்றார் திராவிடர் கழக காரைக்குடி மா.செ. வைகறை.
அறுவை இயந்திரத்தைக் கொண்டு மார்பளவு சிலையை அறுக்க முற்பட்ட நிலையில், "எங்களுடைய தந்தை சிலையை அறுப்பதா..?' என அறுவை இயந்திரத்திற்கான மின்சாரத்தை அருகில் வசிப்பவர்கள் வழங்க வில்லை. விடாப்பிடியாக ஜெனரேட்டரை பயன்படுத்தி சிலையை அறுத்து அங்கிருந்து எடுத்து சென்றது காவல்துறையும், வருவாய்த் துறையும். "இந்த கொடூரத்திற்காகவா பந்தோ பஸ்து வந்தேன்' என தலையிலடித்து சென்ற போலீஸ்காரரை சிலாகிக்கின்றனர் பொது மக்கள். இவ்வளவு களேபரத்திற்கு இடையே ஞாயிறன்று நடைபெற்ற புதுமனை புகுவிழாவில், முன்பே திட்டமிட்டிருந்தப்படி நூலகத்தை திறந்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் "இந்த இடத்தில்தான் பெரியார் சிலை திறந்து வைக்கப்படவிருந்தது. காவல்துறையும், வருவாய்த்துறையும் அகற்றிவிட்டது'' என்கின்ற வாசகங்களுடனான ப்ளக்ஸ் பேனரை திறந்து வைத்தார்.
"இது இப்படியிருக்க, காம்பவுண்டுக்குள் சிலை வைக்க அனுமதி தேவையில்லை. காம்பவுண்ட் மீது சிலை வைத்தால் அனுமதி வேண்டும்'என வாதங்கள் சமூக வலைத்தளத்தில் எழுந்த நிலையில்... சிலை திறக்க முறைப்படி அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியுள்ளது இளங் கோவன் தரப்பு. இதேவேளையில், கர்நாடகா மாநில அரசின் உத்தரவை மேற்கோள் காட்டிய தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமாரையும், காரைக்குடி தாசில்தார் கண்ணனையும் இடமாற்றம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
-நா.ஆதித்யா