தென்னாப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, சென்னையில் கலைஞரின் நலன் விசாரித்து வந்திருந்த, துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பாதுக்காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்டோரிடம் பேசியிருக்கிறார்.

bjp

கடந்த 3 நாட்களாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களோடு தமிழக அரசியல் குறித்து விவாதித்திருக்கிறார் மோடி. கலைஞரின் உடல்நிலை மற்றும் அவரது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கடந்த ஒரு வாரத்தில் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மத்திய உளவுத்துறையின் தகவல்கள் சீரியஸாக அலசப்பட்டிருக்கின்றன.

Advertisment

""வடமாநிலங்களில் பழைய வெற்றி கிடைக்காவிட்டால், இந்த முறை தென்னிந்தியாவில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது மோடி-அமித் ஷாவின் அஜெண்டா. அதில் தமிழகம்தான் ரொம்பவும் வீக் ஏரியா. 39 தொகுதிகளில் குறைந்தபட்சம் 20 இடங்களை கைப்பற்றியாக வேண்டும் என விரும்புகின்றனர். அதற்கு பா.ஜ.க.வுக்கு வலிமையான கூட்டணி தேவையாக இருக்கிறது. மக்களிடம் அதிருப்தியடைந்துள்ள அ.தி.மு.க.வை கடைசி சான்ஸாக வைத்திருக்கிறார் அமித் ஷா.

rajnathsinghஆரம்பத்திலிருந்தே தூண்டில் வீசியது தி.மு.க.வுக்குத்தான். மு.க.ஸ்டாலினோ அதனை ஏற்காததால், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை கழற்றிவிட அழுத்தம் கொடுக்கப்பட்டது. அத்துடன், ரஜினியை கையிலெடுத்து, அரசியல் கட்சியை துவக்க வைப்பது வரையிலான அசைன்மென்ட்டும் தொடர்கிறது. பா.ஜ.க. அலையன்ஸுக்கு இப்போது வரை பிடிகொடுக்காத ரஜினி, தேர்தல் முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்றே சொல்லி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில்தான், கலைஞரின் உடல்நிலையையும் அவரது குடும்பத்தினரையும் உன்னிப்பாக கவனித்து தினமும் ரிப்போர்ட் அனுப்பும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டது டெல்லி. அந்த ரிப்போர்ட் அடிப்படையில், கிடப்பில் வைக்கப்பட்டிருந்த அஜெண்டாவை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க.'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் இணைய முடியாமல் இருக்கும் மு.க.அழகிரியை மையமாக வைத்துத்தான் உளவுத்துறை வேலை செய்கிறது. மருத்துவமனையில் கலைஞர் அட்மிட்டாவதற்கு முன்பாக கோபாலபுரம் வந்த அழகிரி, கலைஞரின் உடல்நிலையில் கவனம் செலுத்தியதோடு, தனக்கான அரசியல் குறித்தும் ஸ்டாலின் தவிர்த்து மற்ற குடும்ப உறவுகளிடம் தீவிரமாக வலியுறுத்தியிருக்கிறார் என்றும், கட்சியில் அழகிரியை சேர்க்க குடும்ப உறவுகள் விரும்பினாலும் ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பேசப்படும், அழகிரி மகன் துரைதயாநிதிக்கு தி.மு.க. அறக்கட்டளையில் பொறுப்பு, பொருளாளர் பதவியில் அழகிரி போன்ற பேச்சுகளும் டெல்லி கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தனது கோரிக்கை நிறைவேறாவிட்டால், தி.மு.க.வையே தோற்கடிக்கவும் தயங்காத முடிவுகளை கலைஞர் ஆக்டிவ்வாக இருக்கும்போதே எடுத்த அழகிரி, தற்போது ஸ்டாலின் தன்னைப் புறக்கணித்தால் தனி பாதையில் பயணிக்க இருப்பதுபற்றி கோபமாக வெளிப்படுத்தியதாக உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், அழகிரியை வைத்து தி.மு.க.வை பலவீனப்படுத்தும் ஆலோசனைகள் டெல்லியில் நடந்து வருகின்றன.

Advertisment

காங்கிரசின் முந்தைய ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த அழகிரி, அப்போது ஏற்பட்ட கசப்பான பல அனுபவங்களால் காங்கிரசை வெறுத்தார். அதனால், 2014-ல் தேர்தலின் போது காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என கலைஞரிடம் சொன்னார். அதேசமயம், சில மாதங்களிலேயே கலைஞரின் கோபத்திற்குள்ளாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அழகிரி. 2016 சட்டமன்றத்தேர்தலின்போது, மக்கள் நலக்கூட்டணியின் வைகோ அவரை சந்தித்தார். பா.ஜ.க.வும் காய் நகர்த்தியது. "கலைஞர் தி.மு.க.' என்கிற பேரில் புதுக்கட்சியை துவக்க வைக்கவும் அவரிடம் பேசப்பட்டது. அப்போது அழகிரி சம்மதிக்கவில்லை. தற்போது, கலைஞரின் உடல்நிலையை வைத்து கணக்குப் போடும் பா.ஜ.க. தலைவர்கள், பழைய அஜெண்டாவை மீண்டும் கையிலெடுத்துள்ளனர். அழகிரியை தி.மு.க.வில் சேர்க்கவும், கட்சியில் அவருக்கான முக்கியத்துவமும் ஸ்டாலின் கொடுக்க மறுத்தால், ஸ்டாலின்-அழகிரி மோதலை வைத்து, தி.மு.க.வை உடைக்கும் திட்டங்கள் டெல்லியில் போடப்படுகின்றனவாம்.

பா.ஜ.க. மேலிட தொடர்பாளர்களிடம் பேசியபோது, ""சட்டமன்றத்துக்குள் 10 எம்.எல்.ஏ.க்களையாவது நுழைத்துவிட வேண்டுமென 2016 சட்டமன்றத்தேர்தலின்போது விரும்பினார் மோடி. அதற்காக, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. அதில் மோடிக்கு ரொம்பவே வருத்தம். அதையடுத்து, தி.மு.க. தலைமையால் நீக்கப்பட்டு, ஸ்டாலினோடு முரண்பட்டிருக்கும் அழகிரியை வைத்து தி.மு.க.வை உடைக்கலாம் என்பது. அதற்காக, சில திட்டங்கள் போடப்பட்டது உண்மைதான். ஆனால், நேரடி அரசியலில் கலைஞர் இருக்கும்வரை தி.மு.க.வை பலகீனப்படுத்திட முடியாது என அழகிரி தரப்பிலிருந்தே சொல்லப்பட்டதாலும், அதனை நிரூபிப்பதுபோல உளவுத்துறையின் அறிக்கையும் இருந்ததாலும் அத்திட்டம் அப்போது கைவிடப்பட்டது. தற்போது, அதற்கான யோசனைகள் டெல்லியில் விவாதிக்கப்படுகின்றன'' என்கின்றனர் மிக அழுத்தமாக.