தமிழக பா.ஜ.க. வில் பொறுப்பாளர் பதவிப் பட்டியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கின் றன. பட்டியல் வரவர, கிரிமினல், சீனியாரிட்டி குற்றச்சாட்டுகளும் பின்னாலேயே தொடர்ந்து வருகின் றன. பா.ஜ.க.வின் மாநில பிற்படுத்தப் பட்டோர் நலப் பிரிவுத் தலைவராக செம்மரக்கடத்தல் மன்னன் வெங்கடேசன், பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செய லாளராக சீட்டிங் இளவரசன் ஹரீஷ், சேலத்தில் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வெங்கடேசன் ஆகியோரை பா.ஜ.க. நிர்வாகிகளாக நியமித்ததில் தமிழக பா.ஜ.க.வில் சலசலப்பு ஏற்பட்டதால், மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்திவருகிறது பா.ஜ.க. தேசியத் தலைமை. இந்நிலையில், மாற்றுக் கட்சியிலிருந்து பா.ஜ.க.விற்கு வந்து பதவி வாங்கியவர்களை நீண்டகால பா.ஜ.க. தொண்டர்கள் மதிப்பதில்லை என்றும், நீண்டகால பா.ஜ.க.வினர் மீண்டும் பதவிக்கு வந்ததும், சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.விற்கு வந்தவர்களை விரட்டுகிறார்கள் என்றும் புகைச்சல் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவராக இரண்டாவது முறையாக ஜீவானந்தத்தை நியமித்துள்ளது பா.ஜ.க. தலைமை. மாவட்ட அளவிலான பதவிகளில் அடுத்தடுத்த பலரை நியமித்து பட்டியல் வெளியிட்டு வருகிறார் மாவட்டத் தலைவர். திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் குழுக்களில் மாவட்டத் தலைவரைக் கடுமையாகத் திட்டியுள்ளனர் சில பா.ஜ.க.வினர். மாவட்டத் தலைவரை விமர்சனம் செய்த முன்னாள் மா.செ. சிவசங்கர் நம்மிடம், "திருவண்ணாமலையில் பா.ஜ.க.வுக்கு கட்சி அலுவலகம் கட்ட இடம் வாங்கப்பட்டது. அந்த இடத்துக்கு வழங்கப் பட்ட தொகையில் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் உட்பட சிலர் கூட்டுச் சேர்ந்து நில உரிமையாளரிடம் ஒரு தொகை, கட்சித் தலைமையிடம் ஒரு தொகையைச் சொல்லி தேசியத் தலைமையை ஏமாற்றியுள்ளார்கள். அதேபோல், சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. வேட் பாளரும், இப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரு மான எ.வ.வேலுவிடம், சாதிப் பாசத்தில் ஜீவானந்தம் சமரசமானதாகக் கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற் காக என் பதவியைப் பறித்துவிட்டார். பா.ஜ.க.வில் ரெட்டியார்களை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு அவர் சார்ந்த நாயுடு சமுதாயத்துக்கு மட்டும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்கள். ரெட்டியார் சமுதாயம் இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாகவுள்ள கட்சிப் பிரமுகரான ரெட்டியிடம் முறையிட்டபோது அவரும் கண்டுகொள்ளவில்லை'' என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்து ஜீவானந்தத்திடம் கேட்டபோது, "அலுவலகம் கட்ட காண்ட்ராக்ட் எடுத்தவர்கள், அங்கே பொருட்களை வைத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த காலத்தில் கட்சியில் 11 மாநில துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்டத் துணைத் தலைவர்கள், செயலாளர்கள் பதவிகள் நிரப்பப்பட்டன. கட்சி விதிப்படி. 8 பதவிகள் தான் தரவேண்டும். இப்போது கட்சிப் பதவியில் யார், யார் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆன்லைன் போர்ட் வழியாகத் தேசியத் தலை மை பதிவு செய்யச்சொல்லியுள்ளதால் பதவிகள் எண் ணிக்கை குறைந்துள்ளது. கட்சியில் அனைத்து சாதியினருக் கும் முக்கியத்துவம் தரவேண்டும், பேரன்பாடியிலும் அப்படித்தான் முக்கியத்துவம் தந்து பதவிகளை தலைமை நியமித்துள்ளது. என்மீது தலைமைக்கு புகார் சென்றுள்ளது, அவர்கள் விசாரிப்பார்கள் அப்போது உண்மை தெரியவரும்'' என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தரையர், யாதவர், உடையார், ரெட்டியார் சமுதாய இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் அதிகளவில் ஐக்கியமாகினர். அவர்களுக்கு முக்கிய பதவிகள் தந்ததும் தங்கள் பகுதியில் தீவிரமாக இயங்கி கட்சி யை வளர்த்தனர். சமீபத்தில் வெளியிடப் பட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில், முத்தரையர், யாதவர், உடையார் சமூகத் தைச் சேர்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு மற்ற கட்சிகளைப்போல் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தந்துள்ள னர். "கட்சியை வளர்த்தது நாங்க... ஆனால் இப்போ எங்களை ஒதுக்கிட்டு பதவிகளை அவங்களுக்குத் தந்தா என்ன நியாயம்?' என புதுக்கோட்டை பா.ஜ.க.வில் கோபக் குரல்கள் எழுந்தன. இதனைச் சரிக்கட்ட, சாதாரண பொறுப்புகளைத் தந்து தங்கள் சமூகத்தை ஒதுக்கியுள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பா.ஜ.க.வில் நிர்வாகரீதியாக 65 மாவட்டங்கள் உள்ளன. அதில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டத் தலைவர்கள் பிற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர்கள். இது நீண்டகால பா.ஜ.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கடுப்பாக்கியுள்ளது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவராக போளூர் ஏழுமலை நியமிக்கப் பட்டுள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. எனப் பயணமாகிவிட்டு பா.ஜ.க.வுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தவ ருக்கு பா.ஜ.க.வில் மாவட்டத் தலைவர் பதவியா? அவருக்குக் கீழ நாங்க வேலை செய்யணுமா? எனக் கேள்வியெழுப்பி அவருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என மாவட்ட முன்ளாள் துணைத்தலைவர் கோபி தலைமையில் ஆரணி நகரில் கூட்டம் போட்டுள்ளார்கள். இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "15, 20 ஆண்டுகளாகச் சொந்தப் பணத்தைப் போட்டு கட்சியை வளர்த்தவங்களைப் பதவியி லிருந்து நீக்கிவிட்டு, நேற்று கட்சிக்கு வந்தவர்களுக்குப் பதவிகளைத் தந்துள்ளார் ஏழுமலை. நான் நிறைய செலவு செய்வேன் எனக்கூறி தலைவர் பதவியை வாங்கியவர், இப்போது பிற நிர்வாகிகளை செலவு செய்யச்சொல்வது, கட்சிப் பெயரைச் சொல்லி வசூல் நடத்துவது என்ன நியாயம்? அதனால்தான் தனித்து இயங்குவதாக முடிவு செய்துள்ளோம்'' என்றார்.
பா.ஜ.க. கோட்டப் பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, "தமிழிசை, முருகன், அண்ணாமலை எனத் தொடர்ச்சியாக மாநிலத் தலைவராக வந்தவர்கள், பணமிருந்தால் பதவி, செலவு செய்கிறவர்களுக்குப் பதவி எனக் கழகங்களின் பார்முலாவை பின்பற்றி பதவி தந்தார்கள். அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டு இருந்தாலும் அதைக் கண்டுகொள்வதில்லை. இதனால் பலரும் இங்கே சேர்ந்தார்கள். இதனால் கட்சியின் மேல்மட்டத்தில் பிராமணர்கள் டாமினேஷன் குறைத்தது. இது, கட்சியிலுள்ள பிராமண சமுதாயத் தலைவர்களைக் கடுப் பாக்கியது. மேல்மட்டத் தில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர் கள் என இரண்டு அணி யாகப் பிரிந்து உள்ளுக் குள் மோதிக்கொண்டு இருக்கிறார்கள். மாவட்ட அளவில், தீவிர பா.ஜ.க.வினர், பிற கட்சியிலிருந்து பா.ஜ.க. வுக்கு வந்தவர்கள் என இரண்டு அணியாகத் தமிழகம் முழுவதும் உள்ளனர். பாரம்பரிய பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள், பிற கட்சி யிலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர்களை டம்மி யாக்குகிறார்கள். பிற கட்சியிலிருந்து வந்து மாவட்டத் தலைவரான வர்கள், பழைய பா.ஜ.க. நிர்வாகிகளை ஒதுக்கு கிறார்கள். இதனால் ஒவ்வொரு மாவட்டத் திலும் 3 கோஷ்டி, 4 கோஷ்டி என உருவாகி, காங்கிரஸ் கோஷ்டிகள் போல் எங்கள் கட்சி மாறிவருகிறது' என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதா ஸ்ரீகாந்த். பா.ஜ.க.வின் மாநில மகளிரணிச் செயலாளராக இருந்தவர், மாநில மகளிரணி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கி நகரில் 6 இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தார். இந்த பேனரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட் டச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நகரத் தலைவர் படம் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திர மடைந்த அறந்தாங்கி நகர பா.ஜ.க. தலைவர் ரமேஷ், தனது ஆதரவாளர்கள்மூலம் கவிதா ஸ்ரீகாந்த் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அறந்தாங்கி கட்டுமாவடிமுக்கம் பெட்ரோல் பங்க் அருகே வைத்திருந்த பிளக்ஸ் பேனரை ரமேஷ் அகற்றிக்கொண்டிருந்தபோது அவரிடம். "ஏன் பிளக்ஸ் பேனரை அகற்றுகிறீர்கள்?'' எனக் கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ் "பேனரில் மாவட்டச் செயலாளர் மற்றும் நகரத்தலைவர் படம் போடல, அதனால் அகற்று கிறோம்'' எனக் கூறியுள்ளார்.
"நீ யாரு பேனரை அகற்ற?'' என்று ஸ்ரீகாந்த் கேட்க, "நான் நகரம்டா'' என்று ரமேஷ் சொல்ல, "நான் மாநிலம்டா'' என்று ஸ்ரீகாந்த் சொல்லிக்கொண்டே தான் வைத்திருந்த பைக் சாவியால் ரமேஷ் முகத்தில் குத்தியுள்ளார். இதில் காய மடைந்த ரமேஷ், சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் சேர்ந்தார். இருதரப்பும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளது. இருதரப்பின் மோதல் வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.
கட்சியை வளர்ப்பதாகக் கூறி கோஷ்டிகளை வளர்க் கிறது பா.ஜ.க!