பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள், தேசத்தந்தை காந்தியடிகளுக்கு எதிராகப் பேசுவது, கோட்சேவை உயர்த்திப் பேசுவது, தங்கள் கட்சிக்கு எதிரானவர்களை தேச விரோதிகளென்று முத்திரை குத்துவது, இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுவது, மசூதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதை பா.ஜ.க. தலைமையும் கண்டிக்காமல், கண்டுங்காணாமல் ஊக்குவித்தே வந்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்திய இராணுவ உயரதிகாரியையே, தீவிரவாதிகளோடு இணைத்துப்பேசி, எதிர்க்கட்சிகளின், நீதிமன்றங்களின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார் ஒரு பா.ஜ.க. அமைச்சர்!
காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை, பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் விளக்கினர். இந்திய ராணுவத்தின் செயல்பாடு
பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள், தேசத்தந்தை காந்தியடிகளுக்கு எதிராகப் பேசுவது, கோட்சேவை உயர்த்திப் பேசுவது, தங்கள் கட்சிக்கு எதிரானவர்களை தேச விரோதிகளென்று முத்திரை குத்துவது, இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுவது, மசூதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதை பா.ஜ.க. தலைமையும் கண்டிக்காமல், கண்டுங்காணாமல் ஊக்குவித்தே வந்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்திய இராணுவ உயரதிகாரியையே, தீவிரவாதிகளோடு இணைத்துப்பேசி, எதிர்க்கட்சிகளின், நீதிமன்றங்களின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார் ஒரு பா.ஜ.க. அமைச்சர்!
காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை, பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் விளக்கினர். இந்திய ராணுவத்தின் செயல்பாடு குறித்து, இரு பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்ததை, பெண்கள் இப்படியான உயர்ந்த நிலைக்கு வந்திருப்பதை நாடே பெருமிதத்துடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்தது.
இந்நிலையில், மத்திய பிரதேச பா.ஜ.க. அரசில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்புவகிக்கும் குன்வார் விஜய் ஷா, இந்தூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, கர்னல் சோபியா குரேஷி ஓர் இஸ்லாமியர் என்பதை மனதில்வைத்து, அவரை பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளின் சகோதரி என்று ஒப்பிட்டது பலத்த சர்ச்சையைக் கிளப்பி யிருக்கிறது. அவர் பேசும்போது, "நம் சகோதரிகளின் குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளுக்கு, அவர்களின் சமூகத்தை சேர்ந்த சகோதரியையே ராணுவ விமானத்தில் அனுப்பி, நம் பிரதமர் மோடி பதிலடி கொடுத்து விட்டார்'' என்று இந்திய ராணுவ அதிகாரியை, இஸ்லாமியரென்ற காரணத்துக் காக தீவிரவாதிகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கர்னல் சோபியா பற்றி, மலிவான, வெட்கக்கேடான கருத்துக்களை விஜய் ஷா தெரிவித்துள்ளார். அவரை உடனடியாக பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் பிரதமர் மோடி நீக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, பா.ஜ.க. அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “"நான் பேசியதை சிலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். ஜாதி, மதத்தைக் கடந்து, நம் தேசத்துக்கு சகோதரி சோபியா பெருமை சேர்த்துள்ளார். அவர், நம்முடைய சொந்த சகோதரியை விட, பெரிதும் மதிக்கப்படுகிறார். ராணுவத் தையும், சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன். அவரை அவமதிப்பது பற்றி, கனவில் கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை. எனினும், நான் பேசிய வார்த்தைகள் சமூகத்தையும், மதத்தை யும் புண்படுத்தியிருந்தால், 10 முறை கூட மன்னிப்பு கேட்பதற்கு நான் தயாராக இருக் கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் ஷாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அவருக்கு எதிராக, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஜய் ஷா ஏற்கெனவே 2013ஆம் ஆண்டில் சர்ச்சையாகப் பேசி தனது அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். சமீ பத்தில்கூட, போலீஸ் அதிகாரிகள் தனக்கு சல்யூட் அடிப்பதில்லை எனக்கூறி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இவரது சர்ச்சைப்பேச்சு விவகாரத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், அனுராதா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அந்த அமர்வானது, "அமைச்சர் குன்வார் விஜய் ஷா மீது உடனடியாக காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென் றால் டி.ஜி.பி. மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றதோடு, "இதுபோன்ற கருத்துக்கள் மிகவும் ஆபத்தானது. இழிவானது. ராணுவ அதிகாரியை தீவிரவாதிகளின் சகோதரி எனக்கூறி பிரிவினைவாதத்தைத் தூண்டியுள்ளார்.
இதனால் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதிக்கப்படும். ராணுவத்தின் பணி நேர்மை, துணிச்சல், பாதுகாப்பு, தியாகம் ஆகியவற்றை மதரீதியாகக் கொச்சைப்படுத்துவதாக அவரது பேச்சு உள்ளது. அவர் நேரடியாக கர்னல் ஷோபியா குரேசியை மேற்கோள் காட்டு வதும் புலப்படுகிறது. அவர்மீது உடனடியாக வழக்குப் பதிந்துவிட்டு, நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் விஜய் ஷா உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றமோ, இதுகுறித்து விசாரிக்கத் தடையில்லை எனக் கூறி, அமைச்சரின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இப்படி பேசுவது ஏற்புடையதல்ல என்று கண்டித்தது. மேலும், எஃப்.ஐ.ஆரில், அவர்கூறிய சர்ச்சைக் கருத்தை முழுமையாகப் பதிவுசெய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ஷா மீது பா.ஜ.க.வினரும் அதிருப்தி தெரிவித்துள்ளதால், அவர்மீது பா.ஜ.க. தலைமை நடவடிக்கை எடுக்குமென்று தெரிகிறது. மதவாதத்தை கண்மூடித்தனமாக ஆதரித்ததால், அதன் மோசமான பின்விளைவை பா.ஜ.க. எதிர்கொண்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறாரகள்.