தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. தேர்தல் களம் குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தமிழகம் தழுவிய கட்சிக் கட்டமைப்பை வைத்திருக்கும் ம.ம.க., 2 தொகுதிகளில் திருப்தியடைந்துவிட்டதா?
ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி போட்டி யிட்டபோது (2013) அவரை ஆதரித்து வாக்களித்ததிலிருந்தே தி.மு.க. கூட்டணியில் தொடர்ச்சியாக இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுக்கு வலிமையான கட்டமைப்பும் வாக்கு வங்கியும் இருக்கிறது. அதற்கேற்ப தொகுதிகளைப் பெறவேண்டும் என கட்சியின் தலைமை செயற்குழு எனக்கு வலியுறுத்தியிருந்தது. அதன்படி தி.மு.க. தலைவரிடம் நாங்கள் பேசினோம். ஆனால், இந்தமுறை அதிக இடங்களில் தி.மு.க. போட்டியிட நின
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. தேர்தல் களம் குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தமிழகம் தழுவிய கட்சிக் கட்டமைப்பை வைத்திருக்கும் ம.ம.க., 2 தொகுதிகளில் திருப்தியடைந்துவிட்டதா?
ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி போட்டி யிட்டபோது (2013) அவரை ஆதரித்து வாக்களித்ததிலிருந்தே தி.மு.க. கூட்டணியில் தொடர்ச்சியாக இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுக்கு வலிமையான கட்டமைப்பும் வாக்கு வங்கியும் இருக்கிறது. அதற்கேற்ப தொகுதிகளைப் பெறவேண்டும் என கட்சியின் தலைமை செயற்குழு எனக்கு வலியுறுத்தியிருந்தது. அதன்படி தி.மு.க. தலைவரிடம் நாங்கள் பேசினோம். ஆனால், இந்தமுறை அதிக இடங்களில் தி.மு.க. போட்டியிட நினைப்பதையும், கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி "இந்த முறை 2 தொகுதிகளைப் பெறுங்கள்; அடுத்தடுத்த தேர்தல்களில் நீங்கள் விரும்புகிறபடி தொகுதிகள் கிடைக்கும்' என கேட்டுக்கொண்டது தி.மு.க. அதற்கான காரணங்களும் நியாயமானவைகளாக இருந்தன. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி யால் சமூக நீதி, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி உள்ளிட்ட பல்வேறு கொள்கை களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவைகள் பாதுகாக்கப்பட தி.மு.க. ஆட்சிக்கு வருவது அவசியம். அதனால், தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவும், கூட்டணியை வலிமைப்படுத்தவும் தீர்மானித்ததால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம்.
குறைந்த தொகுதிகளை ஏற்பதற்குப் பதில் கூட்டணியிலிருந்து விலகியிருக்கலாம் என்கிற அதிருப்திகள் ம.ம.க.தொண்டர்களிடம் எதிரொலிக்கிறதே?
மிகக் குறைவான தொகுதிகள் என்பதில் கட்சித் தொண்டர்களுக்கு வருத்தம், ஆதங்கம் இருப்பது உண்மைதான். ஆனால், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல்களையும், அ.தி.மு.க.- பா.ஜ.க.வால் சூழ்ந்துள்ள ஆபத்துகளையும் விரிவாக அவர்களிடம் தெளிவுபடுத்தியிருக் கிறேன். அதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு விரிவான கடிதமும் எழுதியிருக்கிறேன். இந்த விளக்கத்தில் தொண்டர்கள் திருப்தியடைந் திருப்பதால் இப்போது எந்த ஆதங்கமும் வருத்தமும் இல்லை.
தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டுமென்பதற்காக தோழமைக் கட்சிகள் போட்டியிடும் எண்ணிக்கையை குறைப்பது ஆரோக்கியமானதா?
கூட்டணிக் கட்சிகளின் வலிமையை தி.மு.க. குறைத்து மதிப்பிடவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. முதுகில் சவாரிசெய்து எப்படியேனும் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்த தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயம் தான். அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டால் தான் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற முடியும். அப்படிப்பட்ட வெற்றி கிடைக்கிறபோதுதான் பா.ஜ.க.வின் ஆள் தூக்கும் திட்டத்தை முறியடிக்கவும் முடியும். பல மாநிலங்களில் பா.ஜ.க. செய்யும் அரசியல் அச்சுறுத்தல்களும் சித்துவிளையாட்டுகளும் நமக்கு தெரிந்ததுதானே! தமிழகத்திலும் அது நடந்துவிடக் கூடாது.
முதலமைச்சர் எடப்பாடியின் சமீபத்திய புதிய அறிவிப்புகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் தி.மு.க.வின் வெற்றியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்கிறார்களே?
இது தேர்தல் நேரத்து கோஷம் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் அ.தி.மு.க. அரசின் அறிவிப்புகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கைகளால் பல ஆயிரம் தொழில்கள் மூடப்பட்டுவிட்டன ; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கிடக்கிறது; இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்; தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது; அதிகரித்து வரும் பெட்ரோலிய பொருட்களின் விலையால் விலைவாசி உயர்வு ஆகாயத்தைத் தொடுகிறது. இவைகளால் உருவான கோபம்தான் மக்களிடம் வெடித்துக்கொண்டிருக்கிறது. அதனால், 170-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. கூட்டணி ஜெயிக்கும்.
கமல் தலைமையில் ஒரு கூட்டணி, தினகரனின் தனிஆவர்த்தனம் போன்றவைகளால் அ.தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் தி.மு.க.வுக்கு கிடைக்காமல் பிரிவதற்கு வாய்ப் பிருக்கிறதா?
இது முக்கியமாக ஆராயப்படவும் கவனிக்கப்படவும் வேண்டிய விசயம்தான். தமிழக மக்களின் முடிவுகளில் எப்போதும் ஒரு தெளிவு இருக்கும். அதாவது, தங்கள் வாக்குகளை எப்போதும் வீணடிக்க மாட்டார்கள். அந்த வகையில் ஆளும்கட்சி மீதான அதிருப்தியாளர்கள், நடுநிலை வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் என்கிற இந்த 3 பிரிவினரும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கும் கட்சிக்கும் அதன் கூட்டணிக்குமே வாக்களிப்பார்கள். அதனால், தி.மு.க. கூட்டணியைத் தவிர்த்து வேறு கட்சிகள் மீது அவர்களின் பார்வை திரும்பாது. இதுதான் கள நிலவரம்!.